Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கழுதைகள் இல்லாமல் கைகால் ஓடுமா?

கழுதைகள் இல்லாமல் கைகால் ஓடுமா?

கழுதைகள் இல்லாமல் கைகால் ஓடுமா?

எத்தியோப்பியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் எத்தியோப்பியா 16-வது இடத்தை வகிக்கிறது. அதன் தலைநகரான அடிஸ் அபாபாவில் கழுதை நீண்டகாலமாகவே போக்குவரத்தின் முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. பொதுவாக கழுதைகள் வழிகளை நன்கு அறிந்திருக்கின்றன. எங்கே போகவேண்டுமோ அங்கே சரியாகப் போய்ச்சேர்ந்துவிடுகின்றன. அதனால் அநேக வாகன ஓட்டுநர்கள் அதற்கேற்றபடி ஓட்டுவதற்குப் பழகியிருக்கிறார்கள். கழுதைகள் போக்குவரத்து நெரிசலுக்குப் பயப்படுகிறதுமில்லை, பின்னே திரும்பிப் பார்ப்பதுமில்லை. கழுதைகள் பெரிய பாரங்களைச் சுமந்து செல்கையில் வாகன ஓட்டிகளுக்குப் பிரச்சினையாக இருக்கின்றன. கரிக்கட்டைகள், எருவட்டிகள் என கழுதை சுமந்து செல்லும் எந்தப் பாரத்திலும் மோதிக்கொள்ளாமல் இருக்கவேண்டுமென்றால், நீங்கள் பாதையைவிட்டு விலகிக்கொள்வதே நல்லது!

எத்தியோப்பியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு 12 பேருக்கு ஒரு கழுதை என சுமார் 50 லட்சம் கழுதைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான எத்தியோப்பியர்கள் ஒதுக்குப்புறமான மலையுச்சிகளில் வாழ்கின்றனர். இந்த மலைகள் ஆழமான பெரும் பள்ளங்களால் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பெரிய மத்திய பீடபூமியின் பகுதிகள் எண்ணற்ற சிற்றாறுகளால் பிரிக்கப்பட்டுள்ளன. பாலங்கள் கட்டுவதோ இந்தப் பகுதிகளுக்கு தளம்போடாத சாலைகள் அமைப்பதோகூட எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் கூடுதல் பாரமாகவே இருக்கும். அதனால் பொறுமையான சுபாவம்படைத்த, இடறிவிழாத கால்களையுடைய கழுதை, போக்குவரத்திற்கு மிகச் சிறந்த கருவியாக இருக்கிறது.

எத்தியோப்பியாவின் வறண்ட, வெப்பமான தாழ்நிலங்களிலிருந்து உயரமான மலைப்பகுதிகள் வரைக்கும் கிட்டத்தட்ட எல்லா சீதோஷ்ண நிலைகளையும் கழுதையால் சமாளிக்க முடியும். மேலும் செங்குத்தான மலைச்சரிவுகளிலும், குறுகிய நடைபாதைகளிலும், கற்கள் நிறைந்த நதிப்படுகைகளிலும், சேறுநிறைந்த பாதைகளிலும் இன்னும் மற்ற கரடுமுரடான நிலப்பகுதியிலும் இலாவகமாகப் பயணிக்க கழுதையே மிகப்பொருத்தமான வாகனம். குதிரையோ ஒட்டகமோ போகமுடியாத இடத்திற்கும் கழுதையால் போக முடியும். பொருள்களை ஏற்றிச்செல்ல லட்சக்கணக்கான மக்களுக்கு, இதுவே முக்கிய போக்குவரத்துச் சாதனமாக இருக்கிறது; குறிப்பாக நகரங்களில், வாகனங்கள் செல்ல முடியாத இடங்களில் வசிப்பவர்களுக்கு உதவியாக இருக்கிறது.

கழுதைகளால் வளைவுநெளிவுகள் நிறைந்த பாதைகளில் பயணிக்க முடியும். அதோடு வேலியிடப்பட்ட குறுகலான பாதைகளிலும் அவற்றால் செல்லமுடியும். விலை உயர்ந்த டயர்கள் அவற்றுக்குத் தேவையில்லை, வழுக்கும் நிலப்பகுதிகளிலும் பெரும்பாலும் பிரச்சினைகள் இல்லை. எல்லாவிதமான வடிவங்களிலும் அளவுகளிலும் உள்ள சுமைகளை அவை சுமக்கின்றன, வீடுகள் எங்கிருந்தாலும் பொருள்களைக் கொண்டு சேர்க்கின்றன. பொறுமையிழந்த ஓட்டுநர்கள் ‘ஹார்னை’ ஓயாமல் அழுத்திக்கொண்டே . . . இருக்கையில், கழுதைகள் போக்குவரத்து நெரிசலில் வழிகளைக் கண்டுபிடித்து சுலபமாகச் சென்றுவிடுகின்றன. அவை தவறான முனையிலிருந்து ஒருவழிப் பாதையில் நுழையும்போது ஒரு போலீஸ்காரர்கூட அவற்றின்மீது அபராதம் விதிக்க நினைக்க முடியாது. அதோடு ‘பார்க்கிங்’ செய்யும் பிரச்சினையும் அதற்குக் கிடையாது. ஒரு கழுதை சுமார் 50 டாலர்களுக்கு (சுமார் ரூபாய் 2,400) விற்கப்படலாம். ஆனால் வாகனப் போக்குவரத்திற்கு ஆகும் செலவைக் கணக்கிட்டால் இதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவே!

தலைநகரில் கழுதைகள்

காலையில், பெரும்பாலும் 25 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திலிருந்து ஆயிரக்கணக்கான கழுதைகள், 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட அடிஸ் அபாபாவுக்கு வருகின்றன. குறிப்பாக வாராந்தர சந்தை நாட்களான புதன், சனிக்கிழமைகள் சுறுசுறுப்பாக இருக்கும். அங்கு செல்வதற்கு மூன்று மணிநேரம்வரை பயணம் செய்ய வேண்டியிருப்பதால் விடியலுக்கு முன்பே புறப்படவேண்டியிருக்கிறது. சிலசமயங்களில் கழுதைகளின் சொந்தக்காரர்கள் அவற்றோடு நடந்து வருவார்கள், ஆனால் பலசமயங்களில், அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க அவற்றின் பின்னே ஓடிவருவார்கள்.

தானியம், காய்கறி, விறகு, சிமெண்ட், கரிக்கட்டை ஆகியவற்றின் மூட்டைகள், அதோடு சமையல் எண்ணெய் நிரப்பப்பட்ட தகர டப்பாக்கள், பீர் அல்லது சோடா ‘பாட்டில்கள்’ அடுக்கிவைக்கப்பட்ட பெட்டிகள் போன்றவற்றையே அவை பொதுவாகச் சுமந்து செல்கின்றன. சில கழுதைகள் 90 கிலோ அல்லது அதற்கும் அதிகமான எடையுள்ள சுமைகளைச் சுமக்கின்றன. மூங்கில் அல்லது தைலமரக் கம்புகள் போன்ற பாரங்கள் இருபுறமும் நீள வாக்கில் கட்டப்படுகின்றன. கழுதைகள் அவற்றைத் தரையில்பட இழுத்துச் செல்கின்றன. பெரிய வைக்கோல் கட்டுகள் அல்லது அழுத்திக்கட்டப்பட்ட காய்ந்த புல்லுக்கட்டுகள் பார்க்க அழகாய் பாரமேற்றப்பட்டிருப்பதால் அவற்றின் கீழே கழுதைகள் கிட்டத்தட்ட காணாமலே போய்விடுகின்றன.

காலையில் சந்தைக்குப் போகிற வழியில் கனமான பாரங்களைச் சுமந்துகொண்டு, கழுதைகள் வேகமாகச் செல்கின்றன. விற்பனையெல்லாம் முடிந்து, அவற்றின் சுமைகள் போனபிறகு, மிகவும் சாவகாசமாக நடந்து வீடு திரும்புகின்றன. சாலையோரத்தில் நின்று அங்குள்ள தாவரங்களை மேய்கின்றன. ‘விடுமுறை நாட்களில்கூட’ தண்ணீர் எடுத்து வருவது, விறகு சுமப்பது போன்ற தினசரி வேலைகள் செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. அவை இரவலாகக் கொடுக்கப்படுகின்றன அல்லது வாடகைக்கு விடப்படுகின்றன. ஒரே உரிமையாளரின் கீழிருக்கிற பல கழுதைகள் தொழில் சார்ந்த போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படுகின்றனவாம்! சில இடங்களில் பார வண்டிகளை இழுக்கக் கழுதைகளை உபயோகிக்கின்றனர், அதோடு, பெரிய அளவில் உள்ள நான்கு சக்கர வண்டிகளை இழுத்துச் செல்வதற்கு ஒரு ஜோடிக் கழுதைகளைப் பயன்படுத்துகின்றனர்.

மரியாதைக்கு உகந்தவை

கழுதைகளைப் பராமரிக்க அதிக கஷ்டப்பட வேண்டியதில்லை. அவற்றிற்குத் தேவையான உணவை அவையே தேடிக்கொள்கின்றன, கிட்டத்தட்ட எல்லாவற்றையுமே சாப்பிடுகின்றன. நன்றாய் கவனித்துக்கொள்ளும்போது கழுதைகள் தங்கள் எஜமானர்களிடம் ஒட்டிக்கொள்கின்றன. குதிரைகளைவிட இவை புத்திசாலிகளாகக் கருதப்படுகின்றன. வழிகளை நினைவு வைத்திருப்பதில் இவற்றுக்கு அபாரத் திறமை இருக்கிறது. துணைக்கு யாருமில்லாமலேயே எட்டு கிலோமீட்டருக்கும் அதிக தூரத்திலிருந்து இவற்றால் நீரை எடுத்துக்கொண்டு வரமுடியும், ஏற்றியிறக்க இங்கேயும் அங்கேயும் யாராவது ஒருவர் இருந்தால் மட்டும் போதும். கழுதைகளுக்கு மணிகளும் கட்டப்பட்டிருக்கலாம், மக்கள் அந்தச் சத்தத்தைக் கேட்டு அவை வருவதை அறிந்துகொண்டு, தண்ணீரை இறக்கி வைத்துக்கொள்கிறார்கள்.

கழுதைகள் கடின உழைப்பாளிகளாக இருந்தாலும், அளவுக்கதிகமாக பாரமேற்றப்படும்போதும், ஓய்வு தேவை என்று நினைக்கும்போதும் தங்கள் எஜமானர்களுக்கு அதை தெரியப்படுத்துகின்றன. இந்த மாதிரியான சூழ்நிலைகளிலும், வலி கொடுக்கும் விதத்தில் பாரமேற்றப்பட்டிருக்கையிலும் அவை அப்படியே கீழே படுத்துவிடுகின்றன. இந்தச் சமயங்களில் எஜமானர்கள் அவற்றைத் தவறாகப் புரிந்துகொண்டு, திட்டவோ அடிக்கவோ செய்கின்றனர். பைபிளில் உள்ள இதுபோன்ற ஒரு சம்பவம் ஒருவேளை உங்கள் நினைவுக்கு வரலாம்.​—எண்ணாகமம் 22:20-31.

உண்மையில் கழுதைகள் கவனிக்கப்படுவதற்கும் பராமரிக்கப்படுவதற்கும் தகுதியானவையே. கழுதைகள்மீது சுமைகள் சரியாக வைக்கப்படாத நிலையில் அவை அசைந்துகொண்டே இருக்கும்போது ஆபத்தை விளைவிக்கலாம். எப்படியெனில், கழுதைகள் பள்ளத்திற்குள் விழுந்து கால்கள் ஒடிந்துபோகலாம். புண்கள், பலவிதமான உண்ணிகள், கால்வீக்கம், நிமோனியா இன்னும் மற்ற பிரச்சினைகள் இந்தக் கடுமையான சுமைதாங்கிகளைப் பலவீனமடையச் செய்கின்றன. இதன் காரணமாக, அடிஸ் அபாபாவுக்கு அருகிலுள்ள டெப்ரஸேட் என்ற நகரத்தில் நவீன கழுதை மருத்துவமனை நிறுவப்பட்டுள்ளது. இங்கு கணிப்பொறிகள், சிகிச்சை அறைகள், கழுதை இருக்குமிடத்திற்கே சென்று சிகிச்சையளிக்கும் வாகனங்கள் ஆகிய வசதிகள் இருக்கின்றன. கழுதைகளுக்காக ஒரு நல்ல அறுவை சிகிச்சை அறையும்கூட உள்ளது. இதன் மூலம், 2002-⁠ல் சுமார் 40,000 கழுதைகளுக்குப் பல்வேறு விதமான மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முற்பிதாவான ஆபிரகாம் தன் கழுதையுடன் மலைப்பாதையைக் கடந்து மோரியா மலைக்குச் சென்றார். (ஆதியாகமம் 22:3) இஸ்ரவேல் தேசத்தின் நீண்ட சரித்திரம் முழுவதும், கழுதை அன்றாட வாழ்க்கையின் பாகமாக இருந்தது. வெற்றி பவனியுடன் எருசலேமுக்குள் நுழைந்த இயேசு கிறிஸ்துவும்கூட கழுதையின் மேல்தான் ஏறிவந்தார்.​—மத்தேயு 21:1-9.

எத்தியோப்பியாவிலும் கழுதை நீண்ட சரித்திரத்தைக் கொண்டுள்ளது. இங்கே, மக்களுடைய வாழ்க்கையில், அவை இன்றும் முக்கியமாகக் கருதப்படுகின்றன. பல வருடங்களாக டிரக்குகளின் மாடல்களும் கார்களின் மாடல்களும் மாறியிருக்கின்றன. ஆனால், கழுதையின் ‘மாடல்’ மட்டும் இன்னும் மாறவேயில்லை. கழுதைகள் நிச்சயம் மரியாதைக்கு உகந்தவையே!

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

‘கழுதைகள் சரணாலயம்,’ Sidmouth, Devon, UK