‘தூய பெற்றோருக்குப் பிறந்தவன்’
‘தூய பெற்றோருக்குப் பிறந்தவன்’
பிரேசிலிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
“தூய பெற்றோரான கதிரவனுக்கும் கடலுக்கும் பிறந்ததாக” உப்பு குறிப்பிடப்படுகிறது. ஆம், சூரிய வெப்பத்தைப் பயன்படுத்திக் கடல்நீரை ஆவியாக்குவதன் மூலம் தயாரிக்கப்படும் உப்பின் விஷயத்தில் இது உண்மையாயிருக்கிறது.
பிரேசில் நாட்டின் வடகிழக்குக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ரியூ கிராண்டி டூ நார்டி மாகாணம் உப்புத் தொழிற்சாலைகளுக்குப் பிரபலமானது. வெப்பமான சீதோஷ்ணம், குறைந்த மழை, தொடர்ந்து வீசும் வறண்ட காற்று ஆகியவை சேர்ந்து அந்தப் பகுதியை, சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி உப்புத் தயாரிப்பதற்கு மிகப் பொருத்தமான பகுதியாக ஆக்குகின்றன. பிரேசிலின் சுமார் 95 சதவிகித சுத்திகரிக்கப்படாத உப்பும் சுத்திகரிக்கப்பட்ட உப்பும் இங்கிருந்தே பெறப்படுகின்றன. இந்த உப்புத் தொழிற்சாலைகளில் ஒன்று, சிறிய துறைமுக நகரான ஆரேய ப்ராங்கா நகராட்சியில் அமைந்துள்ளது.
உப்புத் தொழிற்சாலைக்கு ஒரு விஜயம்
கடல் நீரை ஆவியாக்குவதன் மூலம் உப்புத் தயாரிக்கும் தொழிற்சாலைகள், வழக்கமாக பரந்த பகுதியாக இருக்கும். ஆரேய ப்ராங்காவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆரேய ப்ராங்காவுக்குச் செல்லும் நெடுஞ்சாலை வழியாகப் பயணிப்பவர்கள் உப்புத் தயாரிப்பு பரந்த நிலப்பகுதியில் நடப்பதைப் பார்த்து திகைத்துப் போகிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்திருக்கும் உப்புப் பாத்திகளிலுள்ள கடல்நீர் அதிகாலை சூரிய ஒளிபட்டு பளபளக்கிறது. உப்புத் தயாரிக்கப்படும் இந்தப் பகுதியின் கிட்டத்தட்ட 90 சதவீதம், கடல்நீரை ஆவியாக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
எஞ்சியிருக்கும் பகுதி, உப்பை படிவங்களாக்கப் பயன்படுத்தப்படுகிறது.உப்புப் போர்வையால் மூடப்பட்டிருக்கும் அந்த முழு பகுதியுமே சூரிய ஒளியில் பிரகாசிக்கிறது. எனவே, இதுபோன்ற சுற்றுப்பயணத்திற்கு கூலிங் கிளாஸ்கள் அவசியம். உப்புத் தயாரிப்பதில் ஆரம்பப்படி, வரிசையாய் வெட்டப்பட்டுள்ள ஆழமில்லா குளங்களில் கடல்நீரைப் பாய்ச்சுவதாகும். இந்தக் குளங்கள் கரைகளாலும் மரக் கதவுகளாலும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்று 67 குளங்கள் உள்ளன. சுட்டெரிக்கும் சூரியனும், காற்றும் ஒவ்வொரு வினாடிக்கும் 650 லிட்டர் தண்ணீரை ஆவியாக்குகின்றனவாம்! என்றாலும் கடல்நீர் முழுவதுமாக ஆவியாகி உப்பாக மாறுவதற்கு சுமார் 90 முதல் 100 நாட்கள் வரை ஆகின்றன.
நீர் ஆவியாகும்போது சோடியம் குளோரைடை விட்டுச் சென்றாலும்கூட அதில் கால்சியம் கார்பனேட், கால்சியம் சல்ஃபேட், மக்னீசியம் சல்ஃபேட் ஆகியவையும், இன்னும் மற்ற உப்புகளும் சிறிதளவு உள்ளன. குளங்களின் அடியில் படிந்திருக்கும் இந்த உப்புகள் பல்வேறு நேரங்களில் கடல்நீரிலிருந்து பிரிக்கப்படுகின்றன.
இந்தக் குளங்களிலிருந்து, கெட்டியான உப்புநீர் 20 அறுவடைப் பாத்திகளுக்குக் கடத்தப்படுகிறது. இந்தப் பாத்திகள் சிலவற்றில் கடல்நீர் கிட்டத்தட்ட முழுவதும் ஆவியாகி, உப்பை மலைபோல் விட்டுச் செல்கிறது. அந்த உப்பை வெட்டி டிரக்குகளில் ஏற்றுவதற்காக ஒரு பெரிய உப்பு அறுவடை இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த டிரக்குகள் தானியக் களஞ்சியத்தைப் போல் இருக்கும் ஒரு களஞ்சியத்திற்கு உப்பைக் கொண்டு சேர்க்கின்றன. இந்தக் களஞ்சியத்தில் உப்புக் கழுவப்படுகிறது. தண்ணீர் நீக்கப்பட்ட பிறகு, சுத்தமான தண்ணீரில் மறுபடியும் அலசப்படுகிறது.
இறுதியாக, படகில் உப்பு ஏற்றப்பட்டு ஆரேய ப்ராங்காவிற்கு அருகே செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவு துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது. நகரத்திலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற இந்தத் தீவுத் துறைமுகம் கடலில் கட்டப்பட்டிருக்கிறது. இந்தத் தீவு செவ்வக வடிவத்தில் உள்ளது. அது கிட்டத்தட்ட 92 மீட்டர் அகலமும் சுமார் 166 மீட்டர் நீளமும் கொண்டது. 1 லட்சம் டன் உப்பைச் சேமித்து வைக்குமளவுக்கு அது பெரியது. அங்கிருந்து கன்வேயர் பெல்ட் ஒன்று உப்பைக் கடலில் உள்ள ஒரு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. அங்கேயிருந்து கப்பல்களில் ஏற்றப்பட்டு, பிரேசிலின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
பல பயன்களையுடைய ஜீவப்பொருள்
நம்முடைய உடலுக்கு மிகக் குறைந்தளவே உப்பு தேவைப்பட்டாலும், அது மக்களுடைய மற்றும் மிருகங்களுடைய உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. பொதுவாக, உணவுக்கு ருசி சேர்க்கும் ஒரு வெள்ளைப் பொருள்தானே என அதை நாம் சாதாரணமாக எடைபோட்டுவிடலாம். ஆனால் ரசாயனம், நெசவு, உலோகம் எனப் பல தொழிற்சாலைகளில் அது பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஏராளமான ரசாயனங்களைத் தயாரிக்கவும் உப்பு பயன்படுத்தப்படுகிறது; அதோடு சோப்பு தயாரிக்கவும், பொருள்களைப் பளபளப்பாக்கவும், எனாமல் பூச்சுத் தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகிறது. இன்றைக்கு, உப்பின் அறியப்பட்ட பயன்பாடு 14,000-க்கும் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறதே!
உப்பு உற்பத்தி என்றும் வற்றாது. ஒரு கன கிலோமீட்டர் கடல்நீரில் மட்டுமே 12 கோடி டன் உப்பு, அதாவது நாம் பயன்படுத்துகிற சோடியம் குளோரைடு உப்பு இருக்கிறதாம்! கடந்த காலங்களில் இது சுலபமாகக் கிடைக்கும் பொருளாக இருக்கவில்லை. உதாரணமாக, பூர்வ சீனா நாட்டில் தங்கத்திற்கு அடுத்து உப்பு மட்டுமே அதிக மதிப்புள்ளதாக இருந்தது. பைபிள், உப்பைப் பற்றி பல இடங்களில் குறிப்பிடுகிறது அதோடு அதன் பல்வேறு பயன்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு சில சமயங்களில் உப்பு தேய்க்கப்பட்டது; ஒருவேளை அதற்கு மருத்துவக் குணமும் நோய்க்கிருமியை அழிக்கும் திறனும் இருந்ததால் அவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம். (எசேக்கியேல் 16:4) மேலும் பைபிள், உப்பை அடையாள அர்த்தத்திலும் பயன்படுத்துகிறது. உதாரணமாக, இயேசு தம்முடைய சீஷர்கள், ‘பூமிக்கு உப்பாயிருக்கிறார்கள்’ என்று சொன்னார். அவர்கள் மற்றவர்களுடைய உயிரைப் பாதுகாக்க முடிந்ததை இயேசு இதன் மூலம் குறிப்பிட்டார். ஏனெனில், உயிரளிக்கும் செய்தியை அவர்கள் சொன்னார்கள்; (மத்தேயு 5:13) மேலும் நிரந்தர தன்மைக்கும், நிலையான தன்மைக்கும் உப்பு அடையாளச் சின்னமாக ஆனது. இதனாலேயே “உப்பு உடன்படிக்கை” மாறாத ஒப்பந்தமாகக் கருதப்பட்டது.—எண்ணாகமம் 18:19, NW.
ஆரேய ப்ராங்காவிலுள்ள உப்புத் தொழிற்சாலைக்கு நாங்கள் சென்றது உப்பு எவ்வளவு இன்றியமையாதது, பயனுள்ளது என்பதை இன்னும் அதிகத் தெளிவாக கிரகித்துக்கொள்ள உதவியது. சரித்திரம் முழுவதும் அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. “தூய பெற்றோரான கதிரவனுக்கும் கடலுக்கும் பிறந்த” இந்தப் பொருள் ஏகமாய் கிடைப்பதற்காக உண்மையிலேயே நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
[பக்கம் 16-ன் படம்]
படிவமாகும் ஓர் உப்புப் பாத்தியில் உப்பு அறுவடை இயந்திரம்
[பக்கம் 16-ன் படம்]
உப்பு, சுத்திகரிக்கப்படுவதற்கு முன்னால்
[பக்கம் 16, 17-ன் படம்]
உப்பை கழுவி, அலசி, சேமிக்கும் பகுதி