Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நானொரு ‘மனந்திருந்திய மைந்தன்’

நானொரு ‘மனந்திருந்திய மைந்தன்’

நானொரு ‘மனந்திருந்திய மைந்தன்’

மெராஸ் வில்லியம் சன்டே சொன்னபடி

பிறந்தது முதலே கடவுளை நேசிப்பதற்குப் போதிக்கப்பட்டேன்; ஆனால், 18 வயதானபோது அடங்காமல், வீட்டை விட்டு வெளியேறினேன். இயேசுவின் உவமையில் வரும் கெட்ட குமாரனைப் போல 13 வருடங்கள் வாழ்ந்தேன். (லூக்கா 15:11-24) போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டேன், கிட்டத்தட்ட என் வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டேன். எனது வாழ்க்கை திசைமாறிய விதத்தையும், பின்னர் மனந்திருந்திய விதத்தையும் சொல்கிறேன், கேளுங்கள்.

சத்தியத்தில் இருந்த கிறிஸ்தவப் பெற்றோருக்கு 1956-⁠ஆம் வருடத்தில் பிறந்தேன். ஒன்பது பிள்ளைகளில் நான் இரண்டாவது பிள்ளை. நாங்கள் நைஜீரியாவின் தென்மேற்கிலிருந்த ஈலேஷா நகரத்தில் வசித்தோம். என் அப்பா கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்தவர்; ஆனால், 1945-⁠ல் அவருடைய அப்பாவின் சகோதரர் ஹார்ப் ஆஃப் காட் a என்ற புத்தகத்தை இவருக்குக் கொடுத்தார். அதை வாசித்ததும் யெகோவாவின் சாட்சிகளுடன் அப்பா கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தார். அவர் 1946-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றார், சீக்கிரத்திலேயே அம்மாவும் முழுக்காட்டுதல் பெற்றார்.

சின்ன வயதில் யெகோவாமீது எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருந்தேன், என் அப்பா அம்மாவோடு சேர்ந்து எப்படி பக்திவைராக்கியமாக ஊழியத்தில் கலந்துகொண்டேன் என்பது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. என் அப்பா எனக்கு பைபிள் படிப்பு நடத்தினார். சில சமயத்தில், ஆலிஸ் ஒபாரா என்ற சகோதரியும் எனக்குப் படிப்பு நடத்தினார்; இவருடைய கணவர் எங்கள் பகுதியில் பயணக் கண்காணியாகச் சேவை செய்தார். நான் முழுநேர ஊழியனாய் ஆக வேண்டுமென அப்பா அம்மா ஆசைப்பட்டார்கள். எனினும், முதலில் நான் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டுமென அம்மா ஆலோசனை கூறினார்.

இருந்தாலும், பதினாறு வயதில் உயர்நிலைப் பள்ளிக்குப் போக ஆரம்பித்த உடனே, பைபிள் நியமங்களை மதித்து நடக்காத பள்ளி மாணவர்களுடன் புத்தியில்லாமல் சகவாசம் வைத்துக்கொண்டேன். அது எவ்வளவு பெரிய மடத்தனம்! சீக்கிரத்திலேயே புகைபிடிக்க ஆரம்பித்தேன், ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபட்டேன். கிறிஸ்தவ கூட்டங்களில் கொடுக்கப்படும் புத்திமதிக்கும் என்னுடைய புதிய வாழ்க்கை முறைக்கும் ஒத்துவராது என உணர்ந்தேன்; எனவே, கூட்டங்களுக்குப் போவதையும் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொள்வதையும் நிறுத்திவிட்டேன். என் அப்பா அம்மாவுக்கு ஒரே மனவேதனை, ஆனால் மற்றவர்களைப் பற்றி நான் துளியும் கவலைப்படவில்லை.

வீட்டை விட்டு வெளியேறினேன்

உயர்நிலைப் பள்ளியில் கால்வைத்து இரண்டே வருடத்தில், வீட்டை விட்டு வெளியேறி பக்கத்திலிருந்த நண்பர்களுடன் சேர்ந்து வசிக்க ஆரம்பித்தேன். சில சமயங்களில் எங்கள் வீட்டுப் பின்புறமாகத் திருட்டுத்தனமாய் உள்ளே நுழைந்து, கையில் கிடைக்கிற உணவுப்பொருள்களை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவேன். மனவேதனை தாளாத அப்பா, திருந்தி வருவேன் என்ற நம்பிக்கையில் பள்ளிக் கட்டணம் கட்டுவதை நிறுத்திவிட்டார்.

ஆனால் அந்தச் சமயம் பார்த்து, படிப்புக்கான உதவித்தொகை எனக்கு வழங்கப்பட்டது. அந்த உதவித்தொகையை வழங்கியவர் ஸ்காட்லாந்திலிருந்து அதை அனுப்பி வைத்தார்; சில சமயங்களில் பொருள்களையும் பணத்தையும் எனக்குப் பரிசாக அனுப்பி வைத்தார். இதற்கிடையில், என் அண்ணனும் தம்பியும்கூட யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவுகொள்வதை நிறுத்திவிட்டிருந்தார்கள்; இதெல்லாம் ஒட்டுமொத்தமாக என் அப்பா அம்மாவுக்குச் சொல்ல முடியாத வேதனையைத் தந்தது. திருந்தி விடும்படி கண்ணீரோடு அம்மா என்னிடம் எத்தனையோ முறை கெஞ்சியிருக்கிறார். அதைப் பார்க்க எனக்குக் கஷ்டமாக இருந்தாலும் என் பாதையை நான் மாற்றிக்கொள்ளவில்லை.

பெருநகரங்களில்

1977-⁠ல் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும், லாகோஸ் நகரத்திற்குச் சென்றேன், வேலை கிடைத்தது. அதன்பின் சீக்கிரத்திலேயே, சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்தேன், வாடகை டாக்ஸி ஒன்று வாங்கினேன். இப்போது கையில் பணம் தாராளமாய் புரண்டதால் கடத்தி வரப்பட்ட போதைப் பொருள்களை உபயோகிக்க ஆரம்பித்தேன், நைட் கிளப்புகளிலும் விபசார விடுதிகளிலும் பணத்தை வாரி இறைத்தேன். சீக்கிரத்திலேயே எனக்கு லாகோஸ் நகர வாழ்க்கை சலிப்புத்தட்டிவிட்டது; 1981-⁠ல் லண்டன் நகருக்குச் சென்றேன். அங்கிருந்து பெல்ஜியம் நாட்டிற்குச் சென்றேன்; அங்கு பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொண்டேன், ரெஸ்டராண்டில் பகுதிநேர வேலை செய்தேன். எனினும் கார்களையும் எலெக்ட்ரானிக் சாதனங்களையும் நைஜீரியாவுக்கு அனுப்பி வைப்பதில் பெரும்பாலான நேரத்தைச் செலவழித்தேன்.

என்னை சந்திக்கவும் எனக்கு பைபிள் படிப்பு நடத்தவும் யாரையாவது அனுப்பும்படி பெல்ஜியத்திலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அப்பா கடிதம் எழுதினார். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் என் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பைபிள் படிக்க எனக்கு விருப்பமில்லையென சொல்லி திருப்பி அனுப்பிவிட்டேன். ஒரு சர்ச்சுக்குச் செல்ல ஆரம்பித்தேன்; மத ஆராதனைக்குப் பிறகு சாப்பாடு, குடி, பல்வேறு விளையாட்டுகள் என எல்லாம் அங்கு நடந்தன.

போதைப் பொருள் கடத்தல்காரனாக

1982-⁠ல் விலையுயர்ந்த, ஆடம்பர கார் ஒன்றை நைஜீரியாவுக்கு அனுப்பி வைத்தேன். அதை இறக்கும்போது சுங்க இலாகாவில் எந்தப் பிரச்சினையும் வராதிருப்பதற்காக நானே நேரில் நைஜீரியாவுக்குச் சென்றேன். சுங்க வரி ஆவணம் போலியானது என்பதை நைஜீரியாவின் சுங்க இலாகா கண்டுபிடித்ததால், சுமார் 40 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டேன். என் அப்பா என்னை ஜாமீனில் எடுத்தார். என்மீது தொடரப்பட்ட அந்த வழக்கை தீர்ப்பதற்கு எனக்குப் பணம் தேவைப்பட்டதால், வேறு சில பொருள்களோடு கிலோ கணக்கில் கஞ்சாவையும் வாங்கிக்கொண்டு பெல்ஜியம் திரும்பினேன். சுங்க வரி ஆவண மோசடியில் குற்றமற்றவன் என விடுதலை செய்யப்பட்ட பிறகு, போதைப் பொருள் கடத்தலில் இறங்கினேன்.

இப்படி ஒருசமயம் பயணம் செய்கையில் நெதர்லாந்து நாட்டில் கைதுசெய்யப்பட்டேன். குடியேற்ற அதிகாரிகள் என்னை நாட்டைவிட்டு வெளியேற்றி, நைஜீரியா செல்லும் விமானத்தில் அனுப்பி வைத்தார்கள். திரும்பும் வழியில் போதைப் பொருள் கடத்தல்காரர்களைச் சந்தித்தேன்; இந்தத் தொழிலில் நாங்கள் கூட்டாளிகள் ஆனோம். 1984, ஜனவரி மாதத்தில் ஆப்பிரிக்காவிலுள்ள இன்னொரு நாட்டிற்கு குடிமாறினேன். அங்கு பேசப்பட்ட மொழியான பிரெஞ்சு மொழி எனக்குத் தெரிந்திருந்ததால் சீக்கிரத்திலேயே போலீஸார், படைவீரர்கள், குடியேற்ற அதிகாரிகள் என எல்லாரையும் நண்பர்களாக்கிக் கொண்டேன். இதனால், ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள கஞ்சாவை அந்நாட்டில் நாங்கள் இறக்குமதி செய்தோம்.

கைதானதும் சிறைவாசமும்

திரும்பவும் பிரச்சினையில் வசமாக மாட்டிக்கொண்டேன். என் சரக்குகள் அந்நாட்டு விமானநிலையம் வந்திறங்கியதும் எங்கும் சிக்காமல் பத்திரமாய் அவை என் கையில் கிடைப்பதற்கு ஒரு படைத் தளபதியை ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால், அவர் தாமதமாக வந்ததால் நான் கைதுசெய்யப்பட்டேன். ஆயுதப் படைப் போலீஸார் என்னை அடித்து, உதைத்து, படுமோசமாக சித்திரவதை செய்ததில் நான் நினைவிழந்தேன். அவர்கள் என்னை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்று நான் இறந்துவிடுவேன் என்று நினைத்து, அங்கேயே விட்டுவிட்டார்கள். ஆனால் பிழைத்துக்கொண்டேன், பின்னர் குற்றவாளியாய் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.

சிறைக்குப் போனபோது என் வீட்டைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஒரு நண்பனிடம் ஒப்படைத்திருந்தேன். அவனோ, நான் சிறையிலிருந்து விடுதலை பெற்று வருவதற்குள், என் சொத்துபத்துகள் எல்லாவற்றையும் விற்று பணமாக்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டான். வயிற்றுப்பிழைப்புக்காக மீண்டும் கஞ்சா விற்க ஆரம்பித்தேன். இருந்தாலும், பத்து நாட்களுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டு, மூன்று மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டேன். விடுதலை ஆனபோது, வியாதிப்பட்டு கிட்டத்தட்ட சாகிற நிலையில் இருந்தேன். எப்படியோ ஒருவழியாக, லாகோஸுக்குத் திரும்பினேன்.

மீண்டும் “தொழிலுக்கு”

லாகோஸில் இருக்கையில் என் தொழில் ரீதியான கூட்டாளிகள் சிலரைச் சந்தித்தேன்; நாங்கள் இந்தியாவுக்குப் போய் சுமார் 6,00,000 டாலர் மதிப்புள்ள ஹெராயின் என்ற போதைப் பொருளை வாங்கினோம். தற்போது மும்பை என்றழைக்கப்படும் நகரான பாம்பேயிலிருந்து சுவிட்சர்லாந்துக்கும், பிறகு போர்ச்சுகலுக்கும், கடைசியில் ஸ்பெயினுக்கும் சென்றோம். நாங்கள் ஒவ்வொருவரும் கொழுத்த லாபம் சம்பாதித்துக்கொண்டு வெவ்வேறு மார்க்கமாக லாகோஸ் போய்ச் சேர்ந்தோம். 1984-⁠ன் பிற்பகுதியில் இறக்குமதி ஆகியிருந்த போதைப் பொருள்களை விற்றேன். பத்து லட்சம் டாலரை சம்பாதித்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட வேண்டுமென்பது என் ஆசைக் கனவாய் இருந்தது.

1986-⁠ல் என்னிடமிருந்த எல்லா பணத்தையும் கொடுத்து கலப்படமற்ற ஹெராயினை லாகோஸில் வாங்கினேன். அதை வேறொரு நாட்டுக்கு எடுத்துச் சென்றேன்; ஆனால் பேராசை பிடித்த ஒரு வியாபாரியின் கையில் அது சிக்கிக்கொண்டதால் அவன் எனக்குச் சல்லிக்காசுகூடக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டான். என் உயிருக்குப் பயந்துகொண்டு, என்ன நடந்தது என்பதை யாரிடமும் சொல்லாமல் லாகோஸுக்குத் திரும்பினேன். என் பணத்தையெல்லாம் இழந்து, உணர்ச்சி ரீதியில் பாதிக்கப்பட்டு ஒரேயடியாய் இடிந்துபோய்விட்டேன். முதன்முறையாக, உட்கார்ந்து வாழ்க்கையின் நோக்கத்தை எண்ணிப் பார்க்க ஆரம்பித்தேன். ‘ஒரு சமயம் ஓஹோவென இருக்கிறேன், இன்னொரு சமயம் ஒன்றுமில்லாமல் தவிக்கிறேன்; எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம்?’ என கேட்டுக்கொண்டேன்.

கடவுளிடம் திரும்பினேன்

இதன் பிறகு சீக்கிரத்திலேயே ஒருநாள் இரவு உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபித்தேன். மறுநாள் காலையில் பார்த்தால், வயதான தம்பதியர் என் கதவைத் தட்டிக்கொண்டு நின்றார்கள்! அவர்கள் யெகோவாவின் சாட்சிகள். அவர்கள் சொல்வதைப் பொறுமையாய் கேட்டேன், ஒரு பத்திரிகையை அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டேன். “என் அப்பா அம்மாகூட யெகோவாவின் சாட்சிகள்தான். ஆலிஸ் ஒபாரா என்ற சகோதரி எனக்கு பைபிள் படிப்பு நடத்தி வந்தார்” என விளக்கினேன்.

அந்த வயதானவர் பெயர் பி. கே. அக்பானிஃபே. அவர், “ஒபாரா தம்பதியரை எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் லாகோஸில், நைஜீரிய கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறார்கள்” என்றார். அவர்களைப் போய் பார்க்கும்படி இந்தத் தம்பதியர் என்னை ஊக்கப்படுத்தினார்கள். ஒபாரா தம்பதியரைச் சந்தித்தது எனக்கு உற்சாக டானிக்காக இருந்தது. அதன் பிறகு, சகோதரர் அக்பானிஃபே எனக்கு பைபிள் படிப்பு நடத்த ஆரம்பித்தார்; தறிகெட்டுப்போன என் வாழ்க்கையில் மளமளவென்று மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தேன். அது எனக்கு எளிதாய் இருக்கவில்லை, ஏனெனில் நீண்ட காலம் போதைப் பொருள்களை உபயோகித்து வந்திருந்ததால் அதை சட்டென்று விட்டுவிடுவது கடினமாய் இருந்தது. எனினும், ஒழுக்க சுத்தத்தோடு வாழத் தீர்மானித்தேன்.

ஆனால், எத்தனை எத்தனை சோதனைகள், அழுத்தங்கள்! என் நண்பர்கள் என சொல்லிக்கொண்டவர்கள் அடிக்கடி என் வீட்டுக்கு வந்து அவர்களுடைய வசீகர வலையில் என்னை சிக்கவைக்க முயற்சி செய்தார்கள். கொஞ்ச காலத்திற்கு நான் பழையபடி புகைபிடிக்கவும் ஒழுக்கக்கேடாக நடக்கவும் ஆரம்பித்தேன். என் இதயத்தில் இருந்ததையெல்லாம் கொட்டி கடவுளிடம் ஜெபித்தேன். சத்தியத்தில் இல்லாத என் நண்பர்களே நான் பாதை மாறிப் போகக் காரணமாய் இருந்ததால் இப்போதும் அவர்களால் எனக்கு உதவ முடியாது என்பதை விரைவில் உணர்ந்துகொண்டேன். ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு நான் லாகோஸைவிட்டு வெளியேற வேண்டுமென உணர்ந்தேன். ஆனால், ஈலேஷாவிலுள்ள என் வீட்டுக்குத் திரும்பிப் போக வெட்கப்பட்டேன். எனினும், வீட்டுக்குத் திரும்பி வரட்டுமா என்று கேட்டு, கடைசியில் என் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் கடிதம் எழுதினேன்.

தாராளமாய் திரும்பி வரலாம் என அப்பா சொன்னார்; பண விஷயத்தில் உதவி செய்வதற்கு என் அண்ணனும் முன்வந்தார். எனவே, என் அப்பா அம்மாவை விட்டு வெளியேறி பத்து வருடங்கள் கழித்து மீண்டும் வீடு திரும்பினேன். அன்பான வரவேற்பைப் பெற்றேன். “யெகோவாவே உமக்கு நன்றி!” என அம்மா உணர்ச்சிபொங்கக் கூறினார். அன்று மாலையில் வீடு திரும்பிய அப்பாவும், “யெகோவா உனக்கு உதவுவார்” என்று சொன்னார். குடும்பமாக நாங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்தபோது யெகோவாவிடம் அவர் ஜெபம் செய்தார்; யெகோவாவின் சித்தத்தைச் செய்ய நான் இப்போது திரும்பி வந்திருப்பதால் எனக்கு உதவும்படி அவரிடம் கேட்டார்.

வீணாக்கிய வருடங்களை ஈடுகட்ட

மீண்டும் பைபிள் படிக்க ஆரம்பித்து, நல்ல முன்னேற்றம் செய்தேன்; ஏப்ரல் 24, 1988-⁠ல் முழுக்காட்டுதல் பெற்றேன். உடனடியாக ஊழியத்தில் அதிக மும்முரமாய் ஈடுபட்டேன். நவம்பர் 1, 1989-⁠ல் பயனியராக, முழுநேர பிரசங்கியாக ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். 1995-⁠ல் நைஜீரியாவில் நடைபெற்ற ஊழியப் பயிற்சிப் பள்ளியின் பத்தாவது வகுப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பைப் பெற்றேன். பிறகு, ஜூலை 1998-⁠ல் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளைச் சந்திக்கிற பயணக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். சந்தோஷமான விஷயம் என்னவென்றால், ஒரு வருடம் கழித்து ரூத் என்பவளைக் கண்டுபிடித்தேன்; அவள் என் மனைவியானாள், பயண ஊழியத்திலும் உதவியாய் இருக்கிறாள்.

என் குடும்பத்திலிருந்த மற்றவர்களும் ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் செய்தார்கள். யெகோவாவைச் சேவிப்பதை நிறுத்திவிட்டிருந்த என் அண்ணன் மீண்டும் மெய் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு முழுக்காட்டுதல் பெற்றார். நாங்கள் மனந்திரும்பி வந்ததை அப்பா பார்த்ததைக் குறித்து எனக்குச் சந்தோஷம். 1993-⁠ல், 75 வயதில் இறக்கும்வரை சபையில் அவர் உதவி ஊழியராக உற்சாகத்துடன் சேவை செய்தார். ஈலேஷாவில் அம்மா பக்திவைராக்கியத்தோடு யெகோவாவுக்கு சேவை செய்து வருகிறார்.

கொள்ளை கொள்ளையாய் சம்பாதிக்க ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என 16 நாடுகளுக்குப் பயணம் செய்திருந்தேன். ஆனால், அநேக வேதனைகளால் என்னையே உருவக் குத்திக் கொண்டதுதான் மிச்சம். (1 தீமோத்தேயு 6:9, 10) கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கையில், என் ஆரம்ப கால வாழ்க்கையில் பல வருடங்களை போதைப் பொருள்களிலும் ஒழுக்கக்கேட்டிலும் வீணடித்திருப்பதை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறேன். யெகோவா தேவனையும் என் குடும்பத்தாரையும் எந்தளவு நோகடித்திருக்கிறேன் என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன். என்றாலும், இதுவரை உயிரோடு இருப்பதற்கும், புத்தி தெளிந்து திருந்தி வந்ததற்கும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருந்து எப்போதும் அவருக்குச் சேவை செய்ய வேண்டுமென்பதே என் தீர்மானம்.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, தற்போது அச்சிடப்படுவதில்லை.

[பக்கம் 13-ன் படம்]

அடங்காத இளைஞனாக

[பக்கம் 15-ன் படம்]

நான் முழுக்காட்டுதல் எடுத்த நாளில்

[பக்கம் 15-ன் படம்]

என் மனைவி ரூத்துடன்