Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“பாட்டிகள் தினத்தை நீங்கள் கொண்டாடுகிறீர்களா?”

“பாட்டிகள் தினத்தை நீங்கள் கொண்டாடுகிறீர்களா?”

“பாட்டிகள் தினத்தை நீங்கள் கொண்டாடுகிறீர்களா?”

அது சில்லென்ற குளிர்காலத்தின் ஒரு காலைப்பொழுது. போலந்தில் வசிக்கும் நட்டாலியா என்ற 16 வயது பெண் ரயிலுக்காகக் காத்திருந்தாள். அப்போது, இரண்டு உள்ளூர் செய்தித்தாள் நிருபர்கள் அவளை அணுகி இவ்வாறு கேட்டனர், “பாட்டிகள் தினத்தை நீங்கள் கொண்டாடுகிறீர்களா?”

பாட்டிகள் தினம், தாத்தாக்கள் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம், ஆசிரியர் தினம் ஆகியவை போலந்தில் விசேஷ நாட்கள். பொதுவாக இளம்பிள்ளைகள் வாழ்த்து அட்டைகளைச் செய்து கொடுப்பதன் மூலம் பாட்டிகள் தினத்தையும் தாத்தாக்கள் தினத்தையும் கொண்டாடுகிறார்கள். பெரிய பிள்ளைகள் அன்பளிப்புகளையோ பூச்செண்டுகளையோ தாத்தா பாட்டிகளுக்கு வழங்குகிறார்கள்.

மேலே இருக்கிற கேள்வி நட்டாலியாவிடம் கேட்கப்பட்டபோது, முதலில் அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் மனதிற்குள்ளேயே ஜெபம் செய்தபிறகு, அவள் நிருபர்களிடம் “நான் ஒரு யெகோவாவின் சாட்சி, பாட்டிகள் தினத்தைக் கொண்டாடுவதில்லை” என்று கூறினாள். அந்த நிருபர்கள் ஆச்சரியப்பட்டனர். நட்டாலியா புன்முறுவலோடு மேலும் இவ்வாறு கூறினாள்: “என்னுடைய பாட்டியோடுதான் நான் இருக்கிறேன், அதனால் எப்பொழுது வேண்டுமானாலும் அவங்களுக்கு பூச்செண்டுகளைக் கொடுக்க முடியும், அவங்களோடு பேச முடியும், அவங்க காட்டுகிற பாசத்திற்கு ஒவ்வொரு நாளும் நன்றி சொல்ல முடியும். வருஷத்துக்கு ஒருமுறைதான் அவங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமா என்ன?”

சிந்தனையைத் தூண்டும் இந்தப் பதில் நிருபர்களைக் கவர்ந்தது, உங்களையும்கூட கவரலாம். அடுத்த நாள் காலையில் நட்டாலியா சொன்ன வார்த்தைகளும் அவளுடைய புகைப்படமும் செய்தித்தாளில் வெளிவந்திருந்தன.

உங்கள் நடத்தை பற்றியும் நம்பிக்கைகள் பற்றியும் கேட்கப்படும்போது, குறிப்பாக, எதிர்பாராமல் கேட்கப்படும்போது விளக்குவதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா என உங்களை நீங்களே கேட்டுக்கொள்வதற்கு இந்த உதாரணம் உங்களைத் தூண்டுகிறது, அல்லவா? கடவுளை உண்மையாக வணங்குபவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளுக்கான காரணத்தைச் சொல்லத் தயாராக இருப்பதன் மூலமும் முடிந்தபோதெல்லாம் அப்படிச் செய்வதற்கு விருப்பமுள்ளவர்களாக இருப்பதன் மூலமும் கடவுளுக்கு மகிமை சேர்க்கின்றனர்.​—1 பேதுரு 3:⁠15.