Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மதுபானங்களைக் குடிப்பதே தவறா?

மதுபானங்களைக் குடிப்பதே தவறா?

பைபிளின் கருத்து

மதுபானங்களைக் குடிப்பதே தவறா?

“திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.” நீதிமொழிகள் 20:1-⁠ல் காணப்படும் இந்த வார்த்தைகள், மதுபானங்களைக் குடிப்பதே தவறென அர்த்தப்படுத்துகின்றனவா? சிலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். கூடுதலான ஆதாரமாக, அளவுக்கு மீறி மதுபானம் குடித்ததால் விளைந்த மோசமான காரியங்களைப் பற்றிய பைபிள் பதிவுகளைக் காட்டுகிறார்கள்.​—ஆதியாகமம் 9:20-25.

அதோடு, அளவுக்கு அதிகமாக மதுபானம் குடிப்பது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அது, கல்லீரல் கரணை நோய் போன்ற வியாதிகளையும், மரணத்தை விளைவிக்கும் விபத்துகளையும், அத்துடன், ஆஸ்தியை அழிப்பது, குடும்பத்தாரைக் கஷ்டப்படுத்துவது, பிறவாக் குழந்தைக்குத் தீங்கிழைப்பது போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. ஒருவேளை, இத்தகைய கொடூரமான பாதிப்புகளாலேயே, “மதுபானம் குடிப்பது ஒழுக்க நெறிகளுக்கு முரணானதாக அநேக மதப் பிரிவுகள் கற்பித்தன” என்று த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கருத்து தெரிவிக்கிறது. அப்படியென்றால் மதுபானங்களைக் குடிப்பது ஒழுக்கங்கெட்ட செயலா? எந்த மதுபானத்தையும் கொஞ்சம்கூட குடிக்கவே கூடாதென பைபிள் கட்டுப்பாடு விதிக்கிறதா?

பைபிள் என்ன சொல்கிறது?

மனம்போல் மதுவைக் குடிப்பதால் வரும் பாதிப்புகளைக் குறித்து பைபிள் எச்சரிப்பது உண்மையே. ‘துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாதீர்கள்’ என எபேசியர் 5:18 புத்திமதி சொல்கிறது. அதேபோல, “மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே. குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்” என நீதிமொழிகள் 23:20, 21 அறிவுரை கூறுகிறது. மேலும், “சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ!” என்று ஏசாயா 5:11 குறிப்பிடுகிறது.

அதேசமயத்தில், மிதமாகக் குடிப்பதால் கிடைக்கும் சந்தோஷம், பயன்கள் ஆகியவற்றைப் பற்றியும்கூட பைபிள் சொல்கிறது. உதாரணத்திற்கு, ‘மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசம்’ கடவுளுடைய பரிசுகளில் ஒன்று என சங்கீதம் 104:15 குறிப்பிடுகிறது. நல்ல செயல்களைச் செய்வதால் கிடைக்கும் பலனைக் குறிப்பிடுகையில், “உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி” என்பதாக பிரசங்கி 9:7 சொல்கிறது. திராட்சரசம், அதாவது ஒயின் குடிப்பதன் மருத்துவ பயனை அறிந்தவராக, தீமோத்தேயுவிடம் பவுல், “இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்” என்று சொன்னார். (1 தீமோத்தேயு 5:23) ஒருவருடைய துயரத்தைத் தணிக்கும் தன்மை மதுபானத்திற்கு இருக்கிறதென பைபிள் குறிப்பிடுகிறது.​—நீதிமொழிகள் 31:6, 7.

மதுபானங்களைக் குடிக்கவே கூடாதென பைபிள் கட்டுப்பாடு விதிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், எக்கச்சக்கமாக குடிப்பதையும் குடித்து வெறிப்பதையும் அது நிச்சயமாகவே கண்டனம் செய்கிறது. எனவே, கட்டுப்பாடில்லாமல் ‘[நிறைய] மதுபானத்தை’ குடிக்க வேண்டாமென கிறிஸ்தவ கண்காணிகளுக்கும், உதவி ஊழியர்களுக்கும் முதிர்வயதுள்ள பெண்களுக்கும் பவுல் அறிவுரை சொன்னார்; ‘கொஞ்சம் திராட்சரசம்’ மட்டுமே குடிக்கும்படி தீமோத்தேயுவுக்கு அவர் புத்திசொன்னார். (1 தீமோத்தேயு 3:2, 3, 8; தீத்து 2:2, 3) ‘குடிவெறியர்’ ‘தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பது’ இல்லையென எல்லா கிறிஸ்தவர்களுக்கும் நினைப்பூட்டப்படுகிறது.​—1 கொரிந்தியர் 6:9, 10; பொது மொழிபெயர்ப்பு.

குடிவெறியைப் பெருந்தீனியுடன் பைபிள் சம்பந்தப்படுத்தி இந்த இரண்டையும் தவிர்க்கும்படி புத்திமதி சொல்கிறது என்பது கவனத்தில் வைக்க வேண்டிய விஷயமாகும். (உபாகமம் 21:20) இந்தப் புத்திமதி, நாம் துளிகூட மதுபானம் குடிக்கக்கூடாதென அர்த்தப்படுத்துகிறதென்றால், உணவு சாப்பிடுவதே தவறென்றும் அர்த்தப்படுத்த வேண்டும், அல்லவா? மாறாக, போதை தலைக்கேறுகிற அளவு அதிகமாய் குடிப்பதையும் மூக்குமுட்ட அதிகமாய் சாப்பிடுவதையும் பைபிள் கண்டிக்கிறது, அளவோடு குடிப்பதையோ சாப்பிடுவதையோ அது கண்டிப்பதில்லை.

இயேசு என்ன செய்தார்?

‘தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி’ கிறிஸ்து ‘நமக்கு மாதிரியை’ வைத்தார் என அப்போஸ்தலன் பேதுரு சொல்கிறார். மேலும், “அவர் பாவஞ்செய்யவில்லை” என்றும் சொல்கிறார். (1 பேதுரு 2:21, 22) அப்படியென்றால், மதுபானங்களை இயேசு எப்படிக் கருதினார்? உதாரணத்திற்கு, தண்ணீரை திராட்சரசமாக மாற்றிய அவருடைய முதல் அற்புதத்தை எடுத்துக்கொள்வோம். தண்ணீரை எத்தகைய திராட்சரசமாக இயேசு மாற்றினார்? அற்புதம் நடந்ததால் கிடைத்த திராட்சரசத்தைப் பற்றி மணமகனிடம் ‘பந்திவிசாரிப்புக்காரன்’ வெகுவாய் பாராட்டிப் பேசினார். “எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்த பின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே” என்று சொன்னார்.​—யோவான் 2:9, 10.

பஸ்கா பண்டிகையின்போது திராட்சரசம் குடிப்பது அந்த ஆசரிப்பின் ஓர் அம்சமாய் இருந்தது; கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆரம்பித்து வைத்தபோது இயேசு திராட்சரசத்தைப் பயன்படுத்தினார். திராட்சரசமிருந்த பாத்திரத்தை எடுத்து தம் சீஷர்களுக்குக் கொடுத்தபோது, “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார். சீக்கிரத்தில் இறந்துபோகவிருப்பதை அறிந்தவராக, “இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லை” என்றும் சொன்னார். (மத்தேயு 26:27, 29) ஆம், இயேசு திராட்சரசம் குடித்தார் என்பது மக்களுக்குத் தெரிந்திருந்தது.​—லூக்கா 7:34.

நாம் என்ன செய்ய வேண்டும்?

மதுபானங்களைக் குடிப்பதை பைபிள் தடைசெய்யவில்லை என்பது உண்மைதான்; அதற்காக நாம் கட்டாயமாகக் குடிக்க வேண்டுமென்று அது அர்த்தப்படுத்துவதில்லை. ஒருவர் குடிக்காமல் இருப்பதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, ஒருகாலத்தில் குடிக்கு அடிமைப்பட்டிருந்தவர், ஒரேவொரு கிளாஸ் குடித்தால்கூட அது தன்னை எந்தளவு பாதிக்கும் என்பதை அறிந்து குடிக்காதிருக்கிறார். கர்ப்பிணிப் பெண், தன் வயிற்றில் சுமக்கும் சிசுவுக்கு தீங்கு ஏற்பட்டுவிடக்கூடாதென குடிக்காதிருக்கலாம். ஒரு டிரைவர், தன் உயிருக்கு அல்லது மற்றவர்களுடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமலிருக்க குடிக்காதிருப்பார்; ஏனெனில் மதுபானம் குடிப்பது, சரியாக நிதானிக்க முடியாதபடியும், உடனடியாக செயல்பட முடியாதபடியும் செய்துவிடும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.

குடிப்பதை ஒருவருடைய மனசாட்சி கண்டனம் செய்கிறதென்றால் அத்தகையவர்கள் இடறிவிடாதிருப்பதற்கும்கூட ஒரு கிறிஸ்தவர் குடிக்காதிருக்கலாம். (ரோமர் 14:21) அவர் வெளி ஊழியத்தில் கலந்துகொள்ளும்போது மதுபானங்களைக் குடிக்காதிருப்பது ஞானமான செயலாகும். பூர்வ இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த நியாயப்பிரமாணத்தில், ஆசாரியர்கள் ஆலயத்தில் சேவை செய்யும்போது, ‘திராட்சரசத்தையும் மதுவையும் குடிப்பது’ தடைசெய்யப்பட்டிருந்தது கவனிக்க வேண்டிய விஷயமாகும். (லேவியராகமம் 10:9) மேலும், மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ள அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நாடுகளில் வசிக்கும் ஒரு கிறிஸ்தவர் அந்நாட்டின் சட்டத்திற்குக் கீழ்ப்படிவார்.​—ரோமர் 13:1.

குடிப்பதா வேண்டாமா அல்லது எவ்வளவு குடிப்பது என்பதெல்லாம் அவரவருடைய சொந்த தீர்மானமாக இருந்தாலும், மிதமாகக் குடிப்பதையே பைபிள் சிபாரிசு செய்கிறது. “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என்று அது சொல்கிறது.​—1 கொரிந்தியர் 10:31.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ மதுபானம் குடிப்பது சம்பந்தமாக பைபிள் என்ன எச்சரிக்கிறது?​—⁠1 கொரிந்தியர் 6:9, 10.

◼ இயேசு கிறிஸ்து மதுபானம் குடித்தாரா?​—⁠லூக்கா 7:⁠34.

◼ புசிப்பது, குடிப்பது ஆகிய காரியங்களில் மெய்க் கிறிஸ்தவர்களை எது வழிநடத்துகிறது?​—⁠1 கொரிந்தியர் 10:⁠31.