Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அறிவொளியூட்டிய அரசர்

அறிவொளியூட்டிய அரசர்

அறிவொளியூட்டிய அரசர்

ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

பதிமூன்றாம் நூற்றாண்டில் வன்முறை உச்சத்தை எட்டியிருந்தது. மதவெறி தலைவிரித்தாடியது. கொடூரமான கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணைகளிலும் உயிரைக் குடிக்கும் சிலுவைப் போர்களிலும் ஐரோப்பா மூழ்கியிருந்தது. இரத்தக் கறைப்படிந்த இந்தச் சகாப்தத்திலும் ஸ்பானிய அரசர் ஒருவர் உலகிற்கு அறிவொளியூட்ட ஆர்வத்துடன் செயல்பட்டார். அவர்தான் பத்தாம் அல்ஃபோன்ஸோ. மாமேதை அல்ஃபோன்ஸோ என்றும் அவர் அறியப்படுகிறார்.

இந்த அரசர், கலாச்சார மாற்றங்கள் ஏற்படுவதற்கு காரணமாய் இருந்தார் என்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த மாற்றங்கள், 13-ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி என்று சில சமயங்களில் அழைக்கப்படுகின்றன. தூர தேசங்களிலிருந்து புதுமையான அறிவுப் புதையல்களை இவர் ஸ்பெயினுக்குக் கொண்டுவந்தார். முக்கியமாக, கலை, சரித்திரம், சட்டம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இவருக்கு ஆர்வம் இருந்தது. இது, ஸ்பெயினிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் கலாச்சார முன்னேற்றம் ஏற்பட பெரிதும் உதவியது. ஆனால், அதைவிட முக்கியமாக, கல்வியைப் பரப்புவதற்கு அவர் எடுத்த முயற்சிகள், கடவுளுடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளைப் படிப்பதற்குத் தூண்டுகோலாக அமைந்தன.

அல்ஃபோன்ஸோ ஒரு கல்வி அமைப்பை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். அதில் யூத, இஸ்லாமிய, “கிறிஸ்தவ” கல்விமான்கள் ஒன்றாகச் சேர்ந்து பணியாற்ற முடிந்தது. அவர்களுடைய பணிக்கு உதவும் விதத்தில் ஒரு நூலகத்தை உருவாக்கினார், அதற்கு நிதி உதவியும் அளித்தார். அது உலகின் முதல் தேசிய நூலகங்களில் ஒன்றாக இருந்தது.

சட்டம், விஞ்ஞானம், சரித்திரம் ஆகியவற்றோடு தொடர்புடைய பலதரப்பட்ட புத்தகங்களை எழுதி, தொகுப்பதில் அல்ஃபோன்ஸோகூட மும்முரமாக ஈடுபட்டார். அதோடு, இலக்கியம், கவிதை ஆகியவற்றை ஊக்குவித்தார். அதில் அவர் சிறந்து விளங்கியதை அவருடைய பிரபல கான்டிகாஸ் கவிதைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. a கால்யாகோ (காலிஷியா) மொழியில் அவை எழுதப்பட்டிருந்தன. அம்மொழி அக்காலத்தின் உணர்ச்சிகரமான பாடல்களை இயற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

மொழிபெயர்ப்பாளர்களின் குழு

அல்ஃபோன்ஸோ தன் சொந்த செலவில் மொழிபெயர்ப்பாளர்களுக்காக டொலீடோவில் ஒரு குழுவை அமைத்தார். “மொழிபெயர்ப்பாளர்களையும் அவர்கள் மொழிபெயர்க்க வேண்டிய புத்தகங்களையும் அரசர் தேர்ந்தெடுத்தார் . . . மொழிபெயர்ப்புகளைத் திருத்தி எழுதினார், அறிவுப்பூர்வமான கலந்துரையாடல்களை ஊக்குவித்தார், அதோடு, இன்னும் புதுபுது ஆய்வுக்கட்டுரைகளைத் தயாரிக்கவும் நிதியுதவி அளித்தார்” என லா எஸ்க்வாலா டி ட்ராடுக்டோரஸ் டி டோலேதோ (டொலீடோவில் மொழிபெயர்ப்பாளர்களின் குழு) என்ற புத்தகம் விளக்குகிறது.

டொலீடோ குழுவைச் சேர்ந்த கல்விமான்கள் முதலில் அரபிக் மொழியில் இருந்த பல புத்தகங்களை மொழிபெயர்த்தார்கள். கிரேக்கு, இந்தியா, பெர்சியா, சிரியா ஆகிய நாடுகளின் முக்கிய புத்தகங்களை இஸ்லாமிய கல்விமான்கள் ஏற்கெனவே அரபிக் மொழியில் மொழிபெயர்த்திருந்தார்கள். இந்த அறிவுக் களஞ்சியம் கணிதம், வானவியல், சரித்திரம், புவியியல் ஆகிய துறைகளில் தொடர்ந்து முன்னேற இஸ்லாமிய கல்விமான்களுக்கு உதவியது. எனவே, டொலீடோ பள்ளியின் மொழிபெயர்ப்பாளர்கள் அரபிக் மொழியில் இருந்த முக்கிய புத்தகங்களை லத்தீன், ஸ்பானிய மொழிகளில் மொழிபெயர்ப்பதன் மூலமாக இந்த அறிவுக் களஞ்சியத்தைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்தார்கள்.

டொலீடோ கல்விமான்களின் சாதனைகளைப் பற்றிய செய்தி மற்ற நாடுகளுக்கும் பரவியது. அதனால் வட ஐரோப்பாவின் பல்கலைக்கழகங்களிலிருந்து மாமேதைகள் டொலீடோவுக்கு திரண்டு வந்தார்கள். இவையெல்லாமே ஐரோப்பாவின் விஞ்ஞான, இலக்கிய முன்னேற்றங்களில் முக்கியப் பங்கு வகித்தன. பார்க்கப்போனால், இந்த மாபெரும் மொழிபெயர்ப்பு பணி, ஐரோப்பாவின் மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது.

டொலீடோ மொழிபெயர்ப்பாளர்கள் செய்த முயற்சியின் விளைவாக, மருத்துவர்களால் கேலன், ஹிப்போக்ரட்டஸ் ஆகியோர் எழுதிய மருத்துவ புத்தகங்களையும் அவசென்னா என்பவர் கேனன் ஆஃப் மெடிசின் என்ற புத்தகத்தையும் படிக்க முடிந்தது; இந்தப் புத்தகமே 17-ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் முக்கிய மருத்துவப் பாடப்புத்தகமாக விளங்கியது. அதுமட்டுமல்ல, டொலீடோ கல்விமான்கள், டாலமி எழுதின புத்தகங்களையும் அரபு திரிகோணக் கணிதம், வானவியல் அட்டவணைகள் ஆகியவற்றின் பேரில் அல்-குவாரிஸ்மி எழுதின புத்தகங்களையும் மொழிபெயர்த்திருந்ததால் அவை வானவியலாளர்களுக்கு உதவியாக இருந்தன. b

எல்லா மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் அந்த மொழிபெயர்ப்புகள் இருக்க வேண்டும் என்று அல்ஃபோன்ஸோ விரும்பினார். இவருடைய தூண்டுதலே விஞ்ஞானம், இலக்கியம் சம்பந்தப்பட்ட கருத்துகளை ஸ்பானிய மொழியில் விளக்க வழிசெய்தது. முன்பு லத்தீன் மொழி மட்டுமே அதற்குப் பயன்படுத்தப்பட்டதால், அதுவே கலாச்சார மொழியாகக் கருதப்பட்டது. ஆனால், அல்ஃபோன்ஸோவின் மொழிபெயர்ப்பு திட்டம் அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது.

அல்ஃபோன்ஸைன் பைபிள்

இப்படி ஏராளமான புத்தகங்களை மொழிபெயர்த்ததால் டொலீடோ மொழிபெயர்ப்பாளர்கள் அபார அனுபவத்தைப் பெற்றார்கள். ஆகவே, பைபிளின் சில பாகங்களை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்கும்படி அவர்களிடம் அல்ஃபோன்ஸோ சொன்னபோது அனுபவம் அவர்களுக்குக் கைக்கொடுத்தது. ஸ்பானிய மொழி புதுப் பொலிவையும், புது வார்த்தைகளையும் பெறும் என்று நினைத்து, பைபிள் மொழிபெயர்ப்பை அரசர் ஊக்குவித்தார் என்பதாக ஸ்பானிய சரித்திராசிரியரான குவான் டி மார்யானா சொல்கிறார். இத்தகைய ஆரம்ப கால பைபிள் மொழிபெயர்ப்பு ஸ்பானிய மொழியின் வளர்ச்சிக்கு வித்திட்டது என்று தாராளமாகச் சொல்லலாம்.

மனிதர்களுக்கு அறிவுரை புகட்டுவதற்கு எழுதப்பட்ட மதிப்புமிக்க புத்தகமாக பைபிளை அந்த அரசர் கருதினார். க்ரோனிகா டி எஸ்பான்யா என்ற புத்தகத்தின் முன்னுரையில் அவர் இவ்வாறு எழுதினார்: “உலகத்தின் படைப்பு, முற்பிதாக்களின் சரித்திரம், . . . கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் முன்னறிவிக்கப்பட்ட வருகை, அவருடைய மரணப் பாடுகள், உயிர்த்தெழுதல், பரலோகத்திற்குச் சென்றது ஆகியவற்றைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் படிப்பதன் மூலம் நாம் பயனடையலாம்.”

ஜெனரல் இஸ்டோரியா என்று அவர் பெயர்சூட்டிய மாபெரும் இலக்கிய படைப்பின் தயாரிப்பையும் அவர் மேற்பார்வை செய்தார். அதில் எபிரெய வேதாகமத்தின் சில புத்தகங்கள் ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன. (பிறகு கிரேக்க வேதாகமத்தின் சில புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டு அதில் சேர்க்கப்பட்டன.) அல்ஃபோன்ஸைன் பைபிள் (பிப்பிளியா அல்ஃபோன்ஸினா) என்று அழைக்கப்படும் இந்த அற்புதப் படைப்பு இடைக்காலங்களில் வெளியிடப்பட்ட பைபிள்களிலேயே மிகப் பெரியதாகும். அது பல முறை நகலெடுக்கப்பட்டிருக்கிறது. அதில் சில புத்தகங்கள் போர்ச்சுகீஸ், காடாலன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.

அல்ஃபோன்ஸோ விட்டுச்சென்ற ஆஸ்திகள்

அல்ஃபோன்ஸோவின் காலத்தைச் சேர்ந்த இடைக்கால கையெழுத்துப்பிரதிகள், ஆன்மீக இருள் சூழ்ந்த அந்தச் சகாப்தத்திலும் வேதவாக்கியங்களின் ஒளி அணையாதபடி பார்த்துக்கொண்டன. இந்த மொழிபெயர்ப்புகள், மற்ற மொழிகளிலும் பைபிளை மொழிபெயர்க்க தூண்டுகோலாய் அமைந்தன. இதற்கு அடுத்து வந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஸ்பானிய மொழி பைபிளின் மற்ற மொழிபெயர்ப்புகளும் வெளியிடப்பட்டன.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அச்சு இயந்திரத்தின் உதவியாலும் ஸ்பெயினிலும் ஐரோப்பாவின் மற்ற நாடுகளிலும் 16-வது நூற்றாண்டு பைபிள் மொழிபெயர்ப்பாளர்களின் அயராத உழைப்பினாலும் அல்ஃபோன்ஸோவும் அவர் காலத்து மக்களும் ஆரம்பித்து வைத்த பணி முன்னேறியது. கடைசியாக, ஐரோப்பா முழுவதிலுமுள்ள மக்கள் தங்கள் சொந்த மொழியில் பைபிளின் பிரதியைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பத்தாம் அல்ஃபோன்ஸோவின் ஆட்சிக்காலத்தில் போர்களும் போராட்டங்களும் பெருமளவில் நடந்திருந்தாலும் கல்வியைப் பரப்ப அவர் எடுத்த முயற்சி, கடவுளுடைய வார்த்தையை மக்கள் கற்றுக்கொள்ள வழிசெய்தது.

[அடிக்குறிப்புகள்]

a கான்டிகாஸ் என்பவை கவிஞர்களால் பாடப்பட்ட இடைக்காலக் கவிதை தொகுப்புகள்.

b அல்-குவாரிஸ்மி என்பவர் பெர்சியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற கணிதவியலாளர். இவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் அல்ஜீப்ராவை அறிமுகப்படுத்தினார். அதோடு, இந்தியக் கணிதக் கோட்பாடுகளான அரபு எண்களின் பயன்பாடு, பூஜ்யத்தின் பயன்பாடு, கணிதத்தின் அடிப்படை கூறுகள் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தினார். இவருடைய பெயரின் அடிப்படையிலேயே “அல்கரிதம்” என்ற பதம் தோன்றியது.

[பக்கம் 14-ன் பெட்டி/படம்]

ஆரம்பகால ஸ்பானிய பைபிள் மொழிபெயர்ப்புகள்

பைபிளின் பாகங்களை முதன்முதலில் ஸ்பானிய மொழியில் மொழிபெயர்த்து தன் புத்தகத்தில் சேர்த்தது பத்தாம் அல்ஃபோன்ஸோ அல்ல. அதற்கு சில வருடங்களுக்கு முன்பே டொலீடோ பள்ளியைச் சேர்ந்த ஹெர்மானஸ் அலிமானஸ் என்ற மொழிபெயர்ப்பாளர் எபிரெய மொழியிலிருந்த சங்கீதப் புத்தகத்தை ஸ்பானிய மொழிக்கு நேரடியாக மொழிபெயர்த்திருந்தார். அதுமட்டுமல்ல, 13-⁠ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிப்ளியா மிடீவல் ரோமான்ஸிடா ப்ரீஅல்ஃபோன்ஸினா (ப்ரீ-அல்ஃபோன்ஸைன் மிடீவல் ரோமான்ஸ் பைபிள்) மொழிபெயர்க்கப்பட்டது. (இடப்புறம் உள்ள படத்தைக் காண்க.) இதுவே மிகப் பழமையான, முழு ஸ்பானிய பைபிள் என்று அறியப்படுகிறது. சிறிது காலம் கழித்து பத்தாம் அல்ஃபோன்ஸோவின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட பைபிள் மொழிபெயர்ப்புக்கு இது உதவியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த ப்ரீ-அல்ஃபோன்ஸைன் பைபிளைக் குறித்து தாமஸ் மான்ட்காமரி என்ற கல்விமான் இவ்வாறு சொல்கிறார்: “இந்த பைபிளை மொழிபெயர்த்தவர் மிகத் துல்லியமாகவும் நயமாகவும் மிக அழகாக மொழிபெயர்த்திருக்கிறார். இந்த மொழிபெயர்ப்பு லத்தீன் பதிப்பை மிகக் கவனமாகப் பின்பற்றியிருக்கிறது. லத்தீன் சொற்களை அதிகமாகப் பயன்படுத்தாமல் லத்தீன் மொழியை நன்கு அறியாத மக்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் அதன் மொழிநடை எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது.”

[படத்திற்கான நன்றி]

பைபிள்: Patrimonio Nacional. Real Biblioteca de El Escorial

[பக்கம் 12, 13-ன் படம்]

மாட்ரிட்டில் உள்ள ஸ்பானிய தேசிய நூலகத்தின் நுழைவாயிலில் பத்தாம் அல்ஃபோன்ஸோவின் சிலை

[பக்கம் 13-ன் படங்கள்]

டொலீடோவிலிருந்து வந்த மொழிபெயர்ப்பாளர்களும் அரசரும் (மேலே); அரசருடைய எழுத்தர்கள் (கீழே); “பிப்பிளியா அல்ஃபோன்ஸினா”வில் லூக்கா சுவிசேஷம் (கடைசியில்)

[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]

பத்தாம் அல்ஃபோன்ஸோவின் சிலையைத் தவிர மற்ற எல்லா படங்களும்: Oronoz