Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவம் தோல்வி அடைந்துவிட்டதா?

கிறிஸ்தவம் தோல்வி அடைந்துவிட்டதா?

பைபிளின் கருத்து

கிறிஸ்தவம் தோல்வி அடைந்துவிட்டதா?

உலக மக்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் தங்களை கிறிஸ்தவர்கள் என அழைத்துக் கொள்கிறார்கள். என்றபோதிலும், முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு இன்று இவ்வுலகம் தனித்தனி நாடுகளாக பிரிந்து கிடக்கிறது; என்றுமில்லாத அளவுக்கு வன்முறையின் கோரப்பிடியிலும் சிக்கித் தவிக்கிறது. அப்படியானால், இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த கிறிஸ்தவத்தில்தான் ஏதோ குறை உள்ளது என அர்த்தமா? அல்லது, பெரும்பாலான மக்கள் கிறிஸ்துவின் போதனைகளை கடைப்பிடிக்கும் விதத்தில் குறைபாடு உள்ளதா?

இயேசு உண்மையிலேயே எதைக் கற்றுக் கொடுத்தார் என்பதையும் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு எப்படிப்பட்ட மாதிரியை வைத்தார் என்பதையும் இக்கட்டுரை கலந்தாராயும். பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருக்கிறவர்களின் மத்தியில் நிலவுகிற கருத்துகள் கிறிஸ்துவின் போதனைகளுடன் எவ்விதத்தில் முரண்படுகின்றன என்பதையும் இக்கட்டுரையில் காணலாம்.

“கலப்பட” கிறிஸ்தவம்

கிறிஸ்து மரித்து கிட்டத்தட்ட நானூறு வருடங்களுக்குள், அவர் போதித்த கிறிஸ்தவத்துக்கு நேர்மாறான ஒரு கிறிஸ்தவ மதத்திற்கு ரோம பேரரசு பேராதரவு அளித்தது. அதுவரை ஒதுக்கிவைக்கப்பட்ட அதன் அங்கத்தினர்கள் விரைவிலேயே ரோமர்களின் அரசியலிலும், சமுதாயத்திலும் பெரும் புள்ளிகளாக வலம் வரத் துவங்கினர். அவர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த கடவுளுடைய ராஜ்யம் இப்போது வந்துவிட்டது என்று போதிப்பதன் மூலம் அகஸ்டினும், மற்ற சர்ச் தலைவர்களும் இந்த மாற்றத்தை வரவேற்றனர். அரசியலிலும் மதத்திலும் புதிதாக தங்களுக்குக் கிடைத்த இந்தச் செல்வாக்கைக் கொண்டுதான் கடவுள் பூமியில் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவார் என்பதாக இந்த தலைவர்கள் போதித்தனர். இவ்வாறு, உலக விவகாரங்களைச் சரிசெய்வதில் மனித முயற்சி முக்கியம் என்று வலியுறுத்தினர்.

இதன் விளைவாக, ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய சமுதாயத்திலுள்ள அரசியல் அமைப்பில் பங்கு வகிக்க வேண்டும் என்பதாக அநேகர் நம்பத் துவங்கினர். அவ்வாறு செய்வதற்கு, சில சமயங்களில் ஒரு கிறிஸ்தவர் தான் வாழும் சமுதாயத்தின் விருப்பத்திற்கு முதலிடம் கொடுத்து தன்னுடைய நம்பிக்கைகள் சிலவற்றை பின்னுக்குத் தள்ளிவிட வேண்டும் என்பதாக பெரும்பாலோர் நம்புகின்றனர். உதாரணமாக, அநேகர் இயேசு போதித்த அன்பையும் சமாதானத்தையும் பற்றி வாயளவில் பேசிவிட்டு, அதேசமயத்தில் கொடிய போர்களையும் ஆதரிக்கிறார்கள். இதே காரணத்துக்காகத்தான் சர்ச்சுகளும் அடக்கி ஒடுக்குகிற ஆட்சியாளர்களை ஆதரிக்கின்றன; அதே சமயத்தில் தங்களுடைய சர்ச் அங்கத்தினர்களை கடவுளுடைய ராஜ்யத்துக்காக ஜெபிக்கும்படியும் ஊக்குவிக்கின்றன.

இந்தப் போலி கிறிஸ்தவம் இயேசு ஸ்தாபித்த மதம் அல்ல. மாறாக, இது மக்களாகவே ஏற்படுத்திக்கொண்ட ஒரு மதம்; இதைத்தான் கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் பெரும்பாலோர் கடைப்பிடிக்கின்றனர். இன்று, கிறிஸ்தவ மண்டலத்திலுள்ள எல்லா பிரிவுகளிலும் பரவலாக பைபிள் நியமங்கள் புறக்கணிக்கப்படுவதை பார்க்கும்போதே இந்தப் போலிக் கிறிஸ்தவம் தோல்வியடைந்துவிட்டது என்பது நமக்குத் தெரிகிறது.

இயேசு உண்மையில் எதைக் கற்பித்தார்?

உண்மையில், இயேசு, ‘[தாம்] உலகத்தானல்லாததுபோல,’ தம்மைப் பின்பற்றுகிறவர்களும் ‘உலகத்தாராய் இருக்கக்கூடாது’ என்று சொன்னது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். (யோவான் 17:15, 16) இயேசு ஏன் தம்முடைய சீஷர்களிடம் இத்தகைய நிலைநிற்கையை எடுக்கும்படி சொன்னார்? இந்தக் கேள்விக்கு, “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” இயேசுவின் பிரியமான சீஷனாகிய அப்போஸ்தலன் யோவான் பதிலளித்தார்.​—1 யோவான் 5:⁠19.

எனவே, இந்தப் பூமியை நீதியும் நியாயமுமுள்ள இடமாக மாற்றியமைப்பதற்கு எந்த மனித அமைப்புகளையும் அல்ல, மாறாக, கடவுளுடைய பரலோக ராஜ்யத்தையே எதிர்நோக்கியிருக்கும்படி கிறிஸ்துவின் போதனைகள் நம்மை ஊக்குவிக்கின்றன. (மத்தேயு 6:10) தம்முடைய நாளிலிருந்த சமுதாய அமைப்பில் தலையிடுவதற்கான நாட்டம் இயேசுவிடம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. அரசியல் பதவியை ஏற்கவும் அவர் ஒரேயடியாக மறுத்துவிட்டார். (யோவான் 6:15) பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வன்முறையைக் கையாளுவதையும்கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. (மத்தேயு 26:50-53; யோவான் 18:36) இயேசு அரசியல் சாசனத்தையோ, தனிநபர் உரிமைகளை வலியுறுத்தும் சட்டத்தொகுப்பையோ ஏற்படுத்திச் செல்லவில்லை. தம்முடைய நாளில் நிலவிய அரசியல் பிரச்சினைகளில் அவர் எந்தவொரு பக்கத்தையும் ஆதரிக்கவில்லை. உதாரணமாக, அடிமைகளின் உரிமைகளுக்காக போராடுகிற புரட்சியாளராகவும் அவர் ஆகவில்லை; ரோமர்களுக்கு எதிராக போராடிய யூதர்களோடும் அவர் சேர்ந்துகொள்ளவில்லை.

இருந்தபோதிலும், இயேசு மக்களைப் பற்றியோ அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியோ அக்கறையற்றவராக இருந்தார் என்று இது அர்த்தப்படுத்தவில்லை. ஒருவரோடொருவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறித்து எக்கச்சக்கமான விஷயங்களைப் போதித்தார். வரிகளைச் செலுத்துவதில் நேர்மையாக இருக்கும்படி உற்சாகப்படுத்தினார்; அதோடு அரசாங்க அதிகாரிகளுக்கு அடங்கி நடப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். (மத்தேயு 22:17-21) கஷ்டப்படுகிறவர்களுடைய நலனில் உள்ளார்ந்த அக்கறையைக் காட்டுவது எப்படி என்பதைக் குறித்தும் போதித்தார். மற்றவர்களை எவ்வாறு கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும், பிறருடைய நிலையில் நம்மை வைத்து பார்ப்பது எப்படி என்றும், மன்னிப்பு, இரக்கம் ஆகிய குணங்களை எவ்வாறு காட்ட வேண்டும் என்றும் கற்பித்தார். (மத்தேயு 5-7 அதிகாரங்கள்) கடவுளையும் அயலாரையும் நேசிக்க வேண்டும் என்பதே இயேசுவின் போதனைகளின் மையக் கருத்து என்பது நாம் நன்கறிந்த விஷயம்தான்.​—மாற்கு 12:30, 31.

இன்று உண்மைக் கிறிஸ்தவம்

அப்படியானால், இயேசுவை உண்மையாக பின்பற்றும் ஒருவர் எப்படி நடந்துகொள்வார்? இயேசு செய்ததையே அவரும் செய்வார். நாட்டின் சட்டங்களுக்கு உண்மையுடன் கீழ்ப்படிவார், அதே சமயத்தில், அரசியல் விவகாரங்களிலும் நடுநிலை வகிப்பார். (யோவான் 12:47, 48) எப்பேர்ப்பட்ட எதிர்ப்பு வந்தாலும் பைபிள் நியமங்களை விட்டுக்கொடுக்கமாட்டார். (1 பேதுரு 2:21-23) அதே சமயத்தில், தன்னைச் சுற்றியுள்ளவர்களுடைய பிரச்சினைகளைக் கண்டுங்காணாமல் இருந்துவிடமாட்டார். அதற்கு மாறாக, உண்மைக் கிறிஸ்தவர் பிறருடைய நலனில் இயேசுவைப் போலவே உள்ளார்ந்த அக்கறைக் காட்டுவார். (மாற்கு 6:34) கிறிஸ்துவின் போதனைகளைப் புரிந்துகொள்ளவும் அதன்படி வாழவும் மற்றவர்களுக்கு உதவுவார்; இவ்வாறு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ மற்றவர்களுக்கு உதவுவதற்கு தன்னுடைய நேரம், சக்தி, திறமை ஆகியவற்றைப் பயன்படுத்துவார்.​—யோவான் 13:⁠17.

இதற்கு இசைவாகவே, தங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் இயேசுவைப் போலவே நடந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் இன்று முயலுகிறார்கள். அமைதியானவர்களாக, சட்டத்திற்கு கீழ்ப்படிகிற குடிமக்களாக இருக்கிறபோதிலும், அவர்கள் இந்த உலகின் பாகமாக இருப்பதில்லை. இயேசுவைப் போலவே, இன்று பொதுவாக காணப்படுகிற வன்முறையிலும், அரசியல் சர்ச்சைகளிலும் அவர்கள் பங்கெடுக்க மறுக்கிறார்கள். உலகிலுள்ள பிரச்சினைகளை கடவுளுடைய ராஜ்யம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஆணித்தரமாக நம்புகிறார்கள். உண்மைக் கிறிஸ்தவம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிசெய்கிறது; அதோடு அதன் அங்கத்தினர்களின் மத்தியில் ஒற்றுமை நிலவச் செய்கிறது. (யோவான் 13:34, 35) உண்மைக் கிறிஸ்தவம் நிச்சயம் தோல்வி அடையவில்லை.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ கிறிஸ்தவர்கள் அரசியலில் தலையிட வேண்டுமா?​—⁠யோவான் 6:⁠15.

◼ பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதை இயேசு ஆதரித்தாரா? ​—⁠மத்தேயு 26:50-53.

◼ உண்மைக் கிறிஸ்தவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம்?​—⁠யோவான் 13:34, 35.

[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]

EL COMERCIO, Quito, Ecuador