Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தோட்டக்காரரின் தோழரைச் சந்திப்போமா? புள்ளிவண்டு

தோட்டக்காரரின் தோழரைச் சந்திப்போமா? புள்ளிவண்டு

தோட்டக்காரரின் தோழரைச் சந்திப்போமா? புள்ளிவண்டு

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கண்ணைப்பறிக்கும் வண்ணத்திலுள்ள இச்சின்னஞ்சிறு வண்டு பிரிட்டனில் சீமாட்டிப் பறவை (ladybird) என அழைக்கப்படுகிறது. வட அமெரிக்காவில் இதன் பெயர் சீமாட்டிப் பூச்சி (ladybug) அல்லது சீமாட்டி வண்டு (lady beetle). இதேபோல மற்ற நாடுகளிலும் அதை வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர். வண்டுகளை எல்லாருக்குமே பிடிக்கும் என சொல்லமுடியாது; இருந்தபோதிலும், புள்ளிவண்டுகள்மீது மக்களுக்கு ஒரு தனிப்பிரியம் இருக்கத்தான் செய்கிறது. பிள்ளைகள் அவற்றிடம் வசீகரிக்கப்படுகின்றனர்; தோட்டக்காரர்களும், உழவர்களும் அவற்றை இருகரம் நீட்டி வரவேற்கின்றனர். இவற்றிற்கு மட்டும் ஏன் இத்தகைய அமோக வரவேற்பு?

அமோக வரவேற்பு​—⁠எதற்காக?

தோட்டக்காரரின் தோழரான இச்சிறு வண்டுகளின் பெரும்பாலான இனங்களுக்கு செடிப்பேன்களை (இடப்பக்கம் காட்டப்பட்டுள்ளது) தின்பதென்றால் கொள்ளைப் பிரியம்; மெல்லுடலைக் கொண்ட சின்னஞ்சிறு பூச்சிகளான செடிப்பேன்கள் செடிகொடிகளையும் பயிர்பச்சைகளையும் நாசம் செய்கின்றன. சில முதிர்ந்த புள்ளிவண்டுகள் தங்களுடைய வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான செடிப்பேன்களை கபளீகரம் செய்துவிடுகின்றன; இவற்றின் முட்டைப்புழுக்களும் தின்பதில் சளைத்தவை அல்ல. புள்ளிவண்டுகளின் உணவுப் பட்டியலில் செடிப்பேன்கள் மட்டுமல்ல, பயிர்களை நாசம் செய்கிற மற்ற வகை பூச்சிகளும் உள்ளன. அதோடு, சிலவகை வண்டுகள் செடிகளை சேதப்படுத்துகிற பூஞ்சக்காளான்களையும் சப்புகொட்டிக் கொண்டு தின்கின்றன. தோட்டக்காரர்களும், உழவர்களும் புள்ளிவண்டுகளுக்கு அமோக வரவேற்பு கொடுப்பதற்கான காரணமே இதுதான்!

1800-களின் இறுதியில், பஞ்சுமெத்தை செதில் பூச்சிகள் (cottony-cushion scale insects) ஆஸ்திரேலியாவிலிருந்து ஐக்கிய மாகாணங்களிலுள்ள கலிபோர்னியாவுக்குள் எதேச்சையாக கொண்டு செல்லப்பட்டன. ஆனால், இந்தப் பூச்சிகள் எக்கச்சக்கமாகப் பெருகியதால், அங்கிருந்த எலுமிச்சை பழவகை தோட்டங்கள் அனைத்துமே அழிந்துவிடும் நிலை ஏற்பட்டதுமல்லாமல் அதை நம்பியிருந்த தொழிற்சாலைகளையும் இழுத்து மூடும் அபாயம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் இந்தச் செதில் பூச்சிகளால் பயிர்களுக்கு எந்த ஆபத்துமில்லை என்பதை அறிந்த பூச்சியியல் வல்லுநர் ஒருவர், அதன் இயற்கை எதிரியைத் தேடி அங்குச் சென்றார். வெடாலியா என்ற ஒருவகை புள்ளிவண்டுகளே அவற்றின் இயற்கை எதிரி என்பதைக் கண்டறிந்தார். சுமார் 500 வண்டுகள் கலிபோர்னியாவுக்கு அனுப்பப்பட்டன; இதனால் ஒரு வருடத்திற்குள் இந்தச் செதில் வண்டுகள் பூண்டோடு அழிந்துபோயின. அந்தப் பழத்தோட்டங்களும் காப்பாற்றப்பட்டன.

புள்ளிவண்டின் வாழ்க்கைச் சுழற்சி

வசீகரமான இச்சிறு வண்டின் உடல் உருண்டையாக அல்லது நீள் உருளையாக, அரைக்கோள வடிவத்தில் இருக்கும். என்னதான் அகோரப் பசியுடன் பெருந்தீனி தின்றாலும், பெரும்பாலான வகை புள்ளிவண்டுகளின் நீளம் வெறும் 12 மில்லிமீட்டர்தான். இறக்கை மூடிகள் எனப்படும் கடினமான, பளபளப்பான முன் சிறகுகள் அதன் அடிப்பகுதியிலிருக்கும் மென்மையான பறக்கும் சிறகுகளை பாதுகாக்கின்றன; இந்த முன் சிறகுகளில்தான் வண்ண வண்ண வடிவங்கள் இருக்கின்றன. பறக்கும்போது அதன் முன் சிறகுகள் விரிந்து மேலே தூக்கிக் கொள்கின்றன. பெரும்பாலும் இவை சிவப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருப்பதாகத்தான் வர்ணிக்கப்படுகின்றன. இருந்தாலும்கூட, உண்மையில் இவற்றின் கிட்டத்தட்ட 5,000 வகைகள் ஒவ்வொன்றும் விதவிதமான நிறங்களையும் புள்ளிகளையும் கொண்டிருக்கின்றன. சில வண்டுகள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் கரும்புள்ளிகளுடன் காணப்படுகின்றன. மற்றவை கருமை நிறத்தில் செம்புள்ளிகளுடன் உள்ளன. சிலவற்றில் புள்ளிகளே இருப்பதில்லை. இன்னும் சிலவற்றில், செஸ்போர்டு வடிவத்தை அல்லது கோடுகளைக் காணலாம்.

வண்டு இனங்கள் பலவற்றின் ஆயுட்காலம் ஒருவருடம்தான். முதிர்ந்த வண்டுகள் குளிர்காலத்தில் வறண்ட, பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தூக்கத்தில் முடங்கிவிடுகின்றன. வெயில் திரும்பியவுடன் துயிலெழுந்து செடிப்பேன்கள் நிறைந்த தாவரங்களைத் தேடி பறந்து செல்கின்றன. இணைசேர்ந்த பிறகு, பெண்வண்டு மஞ்சள் நிறத்தில் கொத்து கொத்தாக மிகச்சிறிய முட்டைகளை (வலதுபக்கம் காட்டப்பட்டுள்ளது) இடுகிறது; செடிப்பேன்கள் ஏராளமாக இருக்கும் இலையின் அடிப்பரப்பில் அவற்றை இடுகிறது. ஒவ்வொரு முட்டையிலிருந்தும் ஆறு கால்களையுடைய முட்டைப்புழு வெளியே வரும்; அது பார்ப்பதற்கு கொடிய குட்டி முதலையைப் போல (இடதுபக்கம் காட்டப்பட்டுள்ளது) இருப்பதால், இதுவா வளர்ந்து புள்ளிவண்டாகிறது என நினைக்கத் தோன்றும். இந்த முட்டைப்புழுக்கள் செடிப்பேன்களைத் தின்பதிலேயே பொழுதைக் கழிப்பதால், சீக்கிரம் அதன் உடல் பருத்து, தோல்சட்டை இறுக்கமாகிவிடும்; பல தடவைகள் தோலுரித்த பிறகு, ஒரு செடியோடு ஓட்டிக்கொண்டு, கூட்டுப்புழுவாக தன்னைச் சுற்றி கூடுகட்டிக் கொள்ளும். கூட்டுக்குள்ளே, முட்டைப்புழுக்கள் வளர்ந்து, பிறகு வண்டாக வெளியே வரும். ஆரம்பத்தில் மங்கலான நிறத்தில் மென்மையாக இருக்கும் இந்த வண்டு, உடல் கடினமாகும்வரை அந்தச் செடியிலேயே ஒட்டிக் கொள்ளும். அதன் தனித்தன்மை வாய்ந்த வண்ண வடிவங்கள் ஒரு நாளிலேயே தோன்றிவிடும்.

வண்ணங்களுடன் பளபளக்கும் புள்ளிவண்டைக் கண்டு அதன் எதிரிகள் ஒதுங்கிச் செல்ல பழகிக்கொள்கின்றன. இவ்வண்டு தன்னை தின்னவரும் எதிரியைக் கண்டவுடனே தன்னுடைய உடலின் இணைப்புகளிலிருந்து மஞ்சள் நிறத்தில், கடும் நாற்றமடிக்கிற, சகிக்க முடியாத சுவையுடைய ஒருவித திரவத்தை வெளியிடுகிறது. இரை வேட்டையாட வரும் பறவைகளோ சிலந்திகளோ முதல் தடவை பட்ட அவஸ்தையை ஒருபோதும் மறப்பது கிடையாது; இந்தப் பூச்சியின் பளிச்சிடும் நிறத்தைப் பார்த்தாலே அதுதான் அவற்றின் நினைவுக்கு வரும்.

தொல்லை கொடுக்கும் புள்ளிவண்டு

பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஆரம்பத்தில் உபகாரம் செய்த ஒருவகை புள்ளிவண்டு, இப்போது உபத்திரவம் கொடுக்கத் துவங்கியுள்ளது. பலவர்ண ஆசிய புள்ளிவண்டு என்றும் அழைக்கப்படும் ஹார்லிக்வன் புள்ளிவண்டு, வடகிழக்கு ஆசியாவிலுள்ள அதன் தாயகத்தில் மற்ற வகையான புள்ளிவண்டுகளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறது. இது செடிப்பேன்களையும், தாவரங்களுக்கு கெடுதி விளைவிக்கிற மற்ற வகையான பூச்சிகளையும் அகோரப்பசியுடன் தின்பதால், வட அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சமீபத்தில் கொண்டு செல்லப்பட்டது. இதனால், அவ்விடத்தைச் சேர்ந்த புள்ளிவண்டுகளின் நிலைமை இப்போது பரிதாபத்திற்குரியதாக ஆகிவிட்டது; ஏனென்றால் கொஞ்சம்கூட மிச்சம் வைக்காமல் எல்லா உணவையும் இந்த ஹார்லிக்வன் புள்ளிவண்டே தின்றுவிடுகிறது. அதுமட்டுமா, அதைக் கட்டுப்படுத்த இயற்கை எதிரிகளும் இல்லை; இதனால், அதற்குப் பிடித்தமான உணவு வகைகள் எல்லாவற்றையும் காலி செய்த பிறகும், பசிவெறி அடங்காமல் உள்ளூர் புள்ளிவண்டுகளையும் மற்ற பயனுள்ள பூச்சிகளையும் பிடித்துத் தின்னத் துவங்குகிறது. சிலவகை புள்ளிவண்டுகள் ஒரேயடியாக அழிந்துவிடும் அபாயத்தை உணர்ந்த பூச்சியியல் வல்லுநர்கள் அவற்றின் எதிர்காலத்தை எண்ணி கவலைப்படுகின்றனர். பழுத்துத் தொங்கும் பழத்தையும்கூட விட்டுவைக்காமல் பேராசையோடு தின்பதாலும், குளிர்காலப் பனியிலிருந்து தப்பித்துக்கொள்ள இலையுதிர் காலத்திலேயே வீடுகளுக்கு திரளாக படையெடுப்பதன் காரணமாகவும் இந்த ஹார்லிக்வன் வண்டு கெட்ட பெயரை சம்பாதித்துள்ளது.

மற்ற சில வகையான புள்ளிவண்டுகள் தீங்குவிளைவிக்கிற பூச்சிகளைத் தின்பதற்கு மாறாக, முக்கியமான பயிர்வகைகளை தின்று விடுகின்றன. ஆனாலும், மகிழ்ச்சிகரமாக, பெரும்பாலான புள்ளிவண்டு இனங்கள் தோட்டக்காரர்களுக்கு சந்தோஷத்தைத் தருகின்றன.

புள்ளிவண்டை வரவேற்க . . .

உங்கள் தோட்டத்தில் புள்ளிவண்டுகள் உலா வருவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் தோட்டத்தில் இயற்கையாக வளருகிற பூச்செடிகளில் தேனும் மகரந்தமும் ஏராளமிருப்பதால், வண்டுகள் அவற்றால் கவரப்பட்டு வரும். மண்டிக்கிடக்கும் களைகளும், ஆழமற்ற பாத்திரத்திலுள்ள தண்ணீரும் அவற்றைச் சுண்டியிழுக்கும். கூடுமானவரை, இரசாயன பூச்சிக்கொல்லிகளைத் தவிருங்கள். செடியிலோ தரையிலோ இருக்கும் காய்ந்த சருகுகள் குளிர்கால தூக்கத்துக்கு சொகுசான படுக்கை விரிப்புகளாக அவற்றிற்கு பயன்படக்கூடும். உங்கள் தோட்டத்தில் தென்படுகிற முட்டைகளையோ பூச்சிகளையோ நசுக்கிப்போடாதீர்கள். அப்படிச் செய்தால், ஒருவேளை புள்ளிவண்டின் எதிர்காலச் சந்ததியை நீங்கள் அழித்துவிட்டிருப்பீர்கள்.

கெடுதியான பூச்சிக்கொல்லிகளுக்கு பதிலாக கவர்ச்சிகரமான இச்சிறு பூச்சிகள் இருந்தாலே போதும், உங்கள் தோட்டத்தை நாசமாக்கும் பூச்சிப் புழுக்கள் பெருகாமல் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் புள்ளிவண்டுகளை கவனித்துக் கொண்டால், அவை உங்களுக்கு கைமாறு செய்யும். அவை நம் படைப்பாளருடைய ஞானத்துக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு; அதைத்தான் சங்கீதக்காரன் இவ்விதமாக தெரிவித்தார்: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.”​—சங்கீதம் 104:⁠24.

[பக்கம் 16-ன் படங்களுக்கான நன்றி]

மேலே: © Waldhäusl/Schauhuber/Naturfoto-Online; இடப்புறமிருக்கும் இரண்டும்: Scott Bauer/Agricultural Research Service, USDA; நடுவில்: Clemson University - USDA Cooperative Extension Slide Series, www.insectimages.org; முட்டைகள்: Bradley Higbee, Paramount Farming, www.insectimages.org

[பக்கம் 17-ன் படங்களுக்கான நன்றி]

இடப்பக்கம்: Jerry A. Payne, USDA Agricultural Research Service, www.insectimages.org; இடமிருந்து இரண்டாவது: Whitney Cranshaw, Colorado State University, www.insectimages.org; இடமிருந்து மூன்றாவது: Louis Tedders, USDA Agricultural Research Service, www.insectimages.org; இடமிருந்து நான்காவது: Russ Ottens, The University of Georgia, www.insectimages.org; இலைமீது புள்ளிவண்டுகள்: Scott Bauer/Agricultural Research Service, USDA