Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் டேட்டிங் செய்ய தயாரா?

நான் டேட்டிங் செய்ய தயாரா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

நான் டேட்டிங் செய்ய தயாரா?

“ஸ்கூல் படிக்கும்போது யாரையாவது டேட்டிங் செய்யவில்லை என்றால் உங்களிடத்தில் ஏதோ குறை இருப்பதுபோல் நீங்கள் நினைக்கலாம்!”​—⁠பிரிட்டனி.

“டேட்டிங் செய்வதற்கான அழுத்தத்தை நான் நிறையவே எதிர்ப்படுகிறேன். அதுமட்டுமல்ல என்னைச் சுற்றி அழகான பையன்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்.”​—⁠விட்னி.

◼ ஒரு பையனும் பொண்ணும் கைப்பிடித்துக்கொண்டு வகுப்பறைக்கு வெளியே இருக்கும் வராந்தாவில் நடை பழகுவதைப் பார்க்கிறீர்கள். எப்படி உணருகிறீர்கள்?

கண்டுகொள்ளவே மாட்டேன்

பொறாமை லேசாக எட்டிப்பார்க்கும்

பொறாமை பொங்கி எழுகிறது

◼ ஃபிரெண்ட்ஸ்கூட சினிமாவுக்குப் போயிருக்கிறீர்கள். அவர்கள் எல்லாரும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்துவிடுகிறார்கள், உங்களைத் தவிர! எப்படி உணருகிறீர்கள்?

கண்டுகொள்ளவே மாட்டேன்

பொறாமை லேசாக எட்டிப்பார்க்கும்

பொறாமை பொங்கி எழுகிறது

◼ உங்களுடைய உயிர்த் தோழன்/தோழி சமீபத்தில் ஒருவரைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறான்/ள், இப்போது டேட்டிங் போகிறான்/ள். எப்படி உணருகிறீர்கள்?

கண்டுகொள்ளவே மாட்டேன்

பொறாமை லேசாக எட்டிப்பார்க்கும்

பொறாமை பொங்கி எழுகிறது

“பொறாமை லேசாக எட்டிப்பார்க்கும்,” “பொறாமை பொங்கி எழுகிறது” என்ற இந்த இரண்டு பெட்டிகளில் ஒன்றை நீங்கள் ‘டிக்’ செய்திருக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் மட்டுமே இப்படி உணருவதில்லை. டேட்டிங் செய்வது சாதாரணமாகக் கருதப்படுகிற இடங்களில் உள்ள அநேக இளைஞர்களும் இவ்விதமாகவே உணருகிறார்கள். “உங்களுடைய சிநேகிதிகள் எல்லாருக்குமே பாய் ஃபிரெண்ட்ஸ் இருக்கும்போது உங்களுக்கும் மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கையில் எதையோ இழந்துவிட்டதைப்போல் சில சமயங்களில் நீங்கள் உணரலாம்” என்று 14 வயதான ஈவெட் கூறுகிறாள்.

உங்கள் மனதுக்குப் பிடித்த ஒருவருடன், உங்களை உயிருக்கு உயிராய் நேசிக்கும் ஒருவருடன் இருக்க வேண்டும் என்ற தூண்டுதல் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியலாம். “கேர்ல் ஃபிரெண்ட்ஸ் இருக்க வேண்டும் என்ற ஆசை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. அந்த ஆசைக்குக் கடிவாளம் போடுவது கடினமாக இருக்கிறது!” என்று ஒரு டீனேஜ் பையன் சொல்கிறான். சிலர் சின்ன வயசிலேயே டேட்டிங் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். உதாரணத்திற்கு, டைம் பத்திரிகை எடுத்த ஒரு சுற்றாய்வில், 13 வயது பிள்ளைகளில் 25 சதவீதத்தினர் ஏற்கெனவே “டேட்டிங்” செய்ய ஆரம்பித்திருப்பது தெரியவந்தது. அது டேட்டிங் செய்வதற்குரிய வயது என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பற்றி என்ன? டேட்டிங் செய்ய தயாராக இருக்கிறீர்களா? இந்தக் கேள்விக்குப் பதில் அளிப்பதற்கு முன் முக்கியமான ஒரு கேள்வியைக் குறித்து சிந்திப்பது அவசியம்.

“டேட்டிங்” செய்வது என்றால் என்ன?

◼ குறிப்பிட்ட எதிர்பாலார் ஒருவருடன் அடிக்கடி நீங்கள் வெளியே போகிறீர்கள்.

நீங்கள் டேட்டிங் செய்கிறீர்களா? □ஆம் □இல்லை

◼ எதிர்பாலாரில் ஒரு குறிப்பிட்ட ஃபிரெண்டுக்கு ஒரு நாளைக்கு பல முறை எஸ்எம்எஸ் அனுப்புகிறீர்கள் அல்லது ஃபோன் செய்கிறீர்கள்.

நீங்கள் டேட்டிங் செய்கிறீர்களா? □ஆம் □இல்லை

◼ எதிர்பாலார் ஒருவருடன் நீங்கள் இரகசியமாகப் பழகுகிறீர்கள். அது உங்கள் பெற்றோருக்குத் தெரியாது. அவர்களிடம் சொன்னால் திட்டுவார்கள் என்பதால் இதைப் பற்றி அவர்களிடம் மூச்சே விடுவதில்லை.

நீங்கள் டேட்டிங் செய்கிறீர்களா? □ஆம் □இல்லை

◼ ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்திருக்கும்போது நீங்களும் குறிப்பிட்ட அந்த எதிர்பாலாரும் எப்போதுமே தனியாக போய்விடுகிறீர்கள்.

நீங்கள் டேட்டிங் செய்கிறீர்களா? □ஆம் □இல்லை

ஒருவேளை முதல் கேள்விக்கு நீங்கள் சுலபமாகப் பதில் சொல்லியிருப்பீர்கள். ஆனால், அடுத்து வந்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல சற்று யோசித்திருப்பீர்கள். உண்மையில், டேட்டிங் செய்வது என்றால் என்ன? உங்கள் கவனமெல்லாம் ஒரு நபர்மீது பதிந்திருக்க, அவருடைய கவனமும் உங்கள்மீது பதிந்திருக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் இந்தக் கட்டுரையில் டேட்டிங் என குறிப்பிடுகிறோம். மற்றவர்களுடன் இருக்கும்போது அல்லது தனியாக இருக்கும்போது, ஃபோனில் அல்லது நேரில், எல்லார் முன்பாக அல்லது இரகசியமாக, நீங்களும் எதிர்பாலாரான உங்கள் ஃபிரெண்டும் பேசி பழகுகையில் உங்கள் இருவருக்கும் இடையே ஒரு ‘காதல் அலை’ பாய்ந்தால் அதுதான் டேட்டிங்.

சரி, டேட்டிங் செய்ய நீங்கள் தயாரா? முதலில் மூன்று கேள்விகளை ஆராயலாம். பிறகு நீங்களே தீர்மானிக்கலாம்.

உங்கள் உள்நோக்கம் என்ன?

பல கலாச்சாரங்களில் டேட்டிங் என்பது ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு உகந்த வழியாகக் கருதப்படுகிறது. ஆனால், சரியான உள்நோக்கத்துடனேயே டேட்டிங்கில் ஈடுபட வேண்டும். ஓர் ஆணும் பெண்ணும் ஏற்ற மணத்துணைவர்களாக இருப்பார்களா என்பதைத் தீர்மானிக்கும் நோக்கத்துடனே அதில் ஈடுபட வேண்டும். ஏன்?

‘கன்னிகைப் பருவத்தை’ பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. அந்தப் பருவத்தில் பாலுணர்வு ஆசைகளும் காதல் உணர்வுகளும் உச்சத்தில் இருக்கும் என்பதாக அது கூறுகிறது. (1 கொரிந்தியர் 7:36) நீங்கள் இன்னும் ‘கன்னிகைப் பருவத்தில்’ இருக்கையில் எதிர்பாலார் ஒருவருடன் நீங்கள் நெருங்கிப் பழகுவது உங்கள் ஆசைகளை உசுப்பிவிடும். கலாத்தியர் 6:7-⁠ல் காணப்படும் வார்த்தைகளில் பொதிந்துள்ள ஞானத்தைக் கசப்பான முறையில் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அது சொல்வதாவது: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”

உங்களுடைய நண்பர்களில் சிலர் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லாமலேயே டேட்டிங் செய்யலாம். அவர்களுக்கு ஒரு பாய் ஃபிரெண்ட் அல்லது கேர்ல் ஃபிரெண்ட் கிடைத்துவிட்டால் தலையில் ஏதோ கிரீடம் வைத்தது போல் நினைக்கலாம். அது சமுதாயத்தில் தங்கள் சுய மதிப்பை கூட்டுவதாகக் கருதலாம். இப்படிப்பட்ட காரணங்களுக்காக ஒருவருடைய உணர்ச்சிகளோடு விளையாடுவது கொடூரமானது. இப்படிப்பட்ட உறவுகள் விரைவில் முறிந்துவிடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. “டேட்டிங் செய்யும் அநேக இளைஞர்கள் ஓரிரு வாரங்களில் பிரிந்துவிடுகிறார்கள். உறவுகளை தற்காலிக ஒப்பந்தமாக அவர்கள் நினைப்பதால் அது திருமணத்திற்கு அல்ல, ஆனால் பிரிவுக்கே வழிநடத்துகிறது” என்று இளம் பெண் ஹெதர் கூறுகிறாள்.

பொழுதுபோக்கிற்காக டேட்டிங் செய்வது, அதாவது, ஜாலிக்காக ஒரு பாய் ஃபிரெண்ட் அல்லது கேர்ல் ஃபிரெண்ட் வேண்டும் என்பதற்காக மட்டுமே டேட்டிங் செய்வது, துயரக் கடலில் தள்ளலாம். எரிக் என்பவனின் உதாரணத்தைக் கவனியுங்கள். 18 வயதில் அவன் ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகினான். அவனுடைய கள்ளமற்ற நெஞ்சம் அதை நட்பாகவே நினைத்தது. ஆனால், அந்தப் பெண் அதை வெறும் நட்பாகக் கருதவில்லை என்பதை அவன் சீக்கிரம் புரிந்துகொண்டான். “ஐயோ! இவ்வளவு சீக்கிரம் அவளுக்கு என்மீது காதல் ஏற்படும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வந்ததாக நினைத்தேன்!” என்று எரிக் கூறுகிறான்.

நன்கு மேற்பார்வை செய்யப்படும் நிகழ்ச்சிகளில் எதிர்பாலாருடன் பழகுவதில் தவறேதுமில்லை என்பது உண்மைதான். ஆனால், டேட்டிங்கை பொறுத்தவரை, உங்கள் கன்னிகைப் பருவம் கடந்த பிறகு, திருமணத்தைப்பற்றி யோசிப்பதற்குத் தயாராகும்வரை காத்திருப்பது மிகச் சிறந்தது. செல்சி என்ற இளம் பெண் அதை உணர்ந்திருக்கிறாள். அவள் சொல்கிறாள்: “பொழுதுபோக்குக்காக டேட்டிங் செய்யலாமே என சில சமயங்களில் நான் நினைப்பேன். ஆனால், டேட்டிங் செய்யும் நபர்களில் ஒருவர் அதனை சீரியஸாகவும் இன்னொருவர் விளையாட்டாகவும் எடுத்துக்கொள்கையில் அது நிச்சயம் பொழுதுபோக்காக இருக்க முடியாது.”

உங்கள் வயது என்ன?

எந்த வயதில் ஓர் இளைஞர் டேட்டிங் செய்ய ஆரம்பிக்கலாம்? .......

◼ உங்கள் அப்பாவையோ அம்மாவையோ அல்லது இருவரையும் கேளுங்கள், அவர்கள் சொல்லும் வயதை எழுதிக்கொள்ளுங்கள்........

நீங்கள் எழுதின வயது உங்கள் அப்பா அம்மா சொன்னதைவிட குறைவாக இருக்கலாம். கூடவும் இருக்கலாம்! ஒருவேளை தங்களையே நன்றாகப் புரிந்துகொள்ளும்வரை டேட்டிங் செய்வதைத் தள்ளிப்போடும் அநேக இளைஞர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். சட்டப்படி திருமணம் செய்வதற்கான வயதை ஏற்கெனவே எட்டியிருந்தபோதிலும் ஸான்ட்ரா எனும் இளம் கிறிஸ்தவப் பெண் அதைத்தான் செய்யத் தீர்மானித்திருக்கிறாள். அவள் இவ்விதமாகச் சொல்கிறாள்: “டேட்டிங் செய்யும் சமயத்தில் இன்னொருவர் உங்களைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறீர்கள். ஆனால் உங்களைப்பற்றி உங்களுக்கே தெரியாதபோது இன்னொருவர் தெரிந்துகொள்ள வேண்டுமென நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?”

17 வயது டான்யெல் அப்படித்தான் நினைக்கிறாள். அவள் இவ்விதமாகச் சொல்கிறாள்: “எனக்குக் கணவராக வரப்போகிறவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும்? இதைப்பற்றி இரண்டு வருடத்திற்கு முன்பு யோசித்திருந்தால் எதையெல்லாம் எதிர்பார்த்திருப்பேனோ அதெல்லாம் இப்போது முற்றிலும் மாறியிருக்கின்றன. சொல்லப்போனால், இப்போதும்கூட டேட்டிங் செய்ய நான் தயாராக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இரண்டு, மூன்று வருடங்களுக்கு நான் மாறாமலே இருந்தால், அப்போது நான் டேட்டிங் செய்வதைப்பற்றி யோசிப்பேன்.”

திருமணத்திற்குத் தயாரா?

டேட்டிங் என்பது திருமணத்திற்கு படிக்கல்லாக இருப்பதால் உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்வது அவசியம்: ‘கணவனாக, மனைவியாக, ஏன், தகப்பனாக, தாயாக ஆகும்போது என் பொறுப்புகளை என்னால் சரிவர செய்ய முடியுமா?’ அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? பின்வருபவற்றைக் கவனியுங்கள்.

உறவுகள். உங்கள் பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் எவ்வாறு நடத்துகிறீர்கள்? அடிக்கடி அவர்கள்மீது எரிந்துவிழுகிறீர்களா? உங்களுடைய கருத்தை தெரியப்படுத்தும்போது கடுஞ்சொற்களை உதிர்த்தோ கிண்டலாக பேசியோ அவர்கள் மனதை நோகடிக்கிறீர்களா? இந்த விஷயத்தில் உங்களைப்பற்றி அவர்கள் என்ன சொல்வார்கள்? உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை நீங்கள் நடத்தும் விதம் மணத்துணையை எவ்வாறு நடத்துவீர்கள் என்பதைக் காட்டுகிறது.​—எபேசியர் 4:31, 32.

பண விஷயம். பணத்தை நீங்கள் எப்படி செலவழிக்கிறீர்கள்? எப்போதும் கடன் வாங்குகிறீர்களா? உங்களால் நிரந்தரமாக ஓர் இடத்தில் வேலை செய்ய முடிகிறதா? இல்லையென்றால், ஏன்? அதற்கு வேலை காரணமா? அல்லது முதலாளி காரணமா? அல்லது உங்களிடம் உள்ள மோசமான குணம் காரணமா? உங்களுடைய பணத்தையே உங்களால் சரிவர நிர்வகிக்க முடியாவிட்டால் உங்களுக்கென ஒரு குடும்பம் வரும்போது என்ன செய்வீர்கள்?​—1 தீமோத்தேயு 5:8.

ஆன்மீகம். நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரா? அப்படியென்றால், உங்களுடைய ஆன்மீகக் குணங்கள் என்னென்ன? கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும், ஊழியத்தில் ஈடுபடுவதற்கும், கிறிஸ்தவ கூட்டங்களில் பங்குகொள்வதற்கும் நீங்கள் ஆர்வம் காட்டுகிறீர்களா? நீங்கள் ஆன்மீக ரீதியில் பலமுள்ளவர்களாக இல்லாவிட்டால் உங்கள் மணத்துணையை எவ்வாறு பலப்படுத்த முடியும்?​—2 கொரிந்தியர் 13:5.

மேற்குறிப்பிடப்பட்டவை, நீங்கள் டேட்டிங் செய்வது பற்றியோ திருமணத்தைப் பற்றியோ நினைத்தால் சிந்திப்பதற்குரிய விஷயங்களில் சில. இதற்கிடையில், நல்ல நோக்கத்துடன் பலர் கூடிவருகையில் நீங்கள் எதிர்பாலாருடன் பழகலாம். எதிர்காலத்தில் நீங்கள் டேட்டிங் செய்ய திட்டமிட்டால், உங்களை நீங்கள் நன்றாக புரிந்துகொண்டிருப்பீர்கள், வருங்கால மணத்துணையிடம் எதையெல்லாம் எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் நன்றாக அறிந்திருப்பீர்கள்.

குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்

இதைப் பற்றிய கூடுதல் தகவல்களை, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் 13-26 பக்கங்களில் காணலாம்.

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்

சிந்திப்பதற்கு

◼ நல்ல நோக்கத்துடன் எல்லாரும் சேர்ந்திருக்கும் என்ன சூழ்நிலைகளில் நீங்கள் எதிர்பாலாருடன் பழகலாம்?

◼ நீங்கள் நல்ல மணத்துணையாக இருப்பதற்கு எந்த முக்கியமான குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

[பக்கம் 28-ன் பெட்டி/படங்கள்]

உங்கள் வயதை ஒத்த சிலரின் கருத்துகள்

சில சமயங்களில் டேட்டிங் செய்யும் ஜோடிகளை ஏன், திருமணமான தம்பதிகளைப் பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கும். பொழுதுபோக்குக்காக டேட்டிங் செய்யக் கூடாது. அப்படிச் செய்வது, ஒருவருடைய உணர்ச்சிகளோடு விளையாடுவதாய் இருக்கும். நீங்கள் பழகும் நபர் உங்களுக்குப் பொருத்தமானவர் தானா என்பதைத் தெரிந்துகொள்ளவே டேட்டிங் செய்யப்படுவதாக நான் நினைக்கிறேன்.”​—⁠ப்ளேன், 17.

நீங்கள் உண்மையிலேயே விரும்பும் ஒரு நபரை டேட்டிங் செய்வதற்கு ஒத்திகை பார்க்கும் விதத்தில் பையன்களோடு டேட்டிங் செய்வது சரியல்ல என்று நான் நினைக்கிறேன். அது மற்றவர்களுடைய மனதை ரணமாக்கிவிடும்.”​—⁠செல்சி, 17.

நீங்கள் டேட்டிங் செய்வதற்கு முன்பு திருமண வயதை எட்டியிருக்க வேண்டும் என்பது என் கருத்து. இல்லாவிட்டால், அது நீங்கள் ஸ்கூலில் படித்துக்கொண்டே வேலை பார்ப்பதற்காக இன்டர்வியூக்குச் செல்வது போல் இருக்கும். அப்படியே உங்களுக்கு வேலை கிடைத்தாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையே.”​—⁠ஸான்ட்ரா, 21.

[பக்கம் 30-ன் பெட்டி]

பெற்றோருக்கு ஒரு குறிப்பு

இன்றோ நாளையோ உங்கள் பிள்ளைகள் டேட்டிங் விவகாரத்தை எதிர்ப்படப்போவது நிச்சயம். “நான் சும்மா இருந்தாலும் பெண்கள் டேட்டிங் போக கூப்பிடுகிறார்கள். ‘அட, இப்போது என்ன செய்வது?’ என்று குழம்பிப்போய் நிற்கிறேன். அவர்களில் சிலர் ரொம்ப அழகாக இருப்பதால் அவர்கள் கேட்கும்போது வரவில்லை என்று சொல்வதற்கு கஷ்டமாக இருக்கிறது!” என்று ஃபிலிப் சொல்கிறான்.

பெற்றோராக நீங்கள் உங்கள் டீனேஜ் பிள்ளைகளிடம் டேட்டிங் பற்றி பேசுங்கள். அது மிகச் சிறந்ததாக இருக்கும். இந்தக் கட்டுரையைப் பயன்படுத்தி நீங்கள் ஏன் பேசக்கூடாது? பள்ளியிலும் சரி கிறிஸ்தவ சபையிலும் சரி உங்கள் மகனோ மகளோ இது சம்பந்தமாக எதிர்ப்படும் சவால்களைக் குறித்து அவர்களிடம் கேளுங்கள். சில சமயங்களில் இந்த விஷயத்தைப்பற்றி நீங்கள் ‘வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோது, வழியில் நடக்கிறபோது’ என சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பேசலாம். (உபாகமம் 6:6, 7) அது எந்தச் சமயமாக இருந்தாலும் “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.​—⁠யாக்கோபு 1:19.

உங்கள் மகனோ மகளோ எதிர்பாலார் ஒருவரை விரும்புவதாகச் சொன்னால், உணர்ச்சிவசப்படாதீர்கள். “நான் ஒரு பையனைக் காதலிப்பது அப்பாவுக்குத் தெரிந்தபோது அவர் ரொம்ப அப்செட் ஆகிவிட்டார்! நான் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறேனா என்றெல்லாம் அவர் என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுத்துவிட்டார். ஆனால், அப்படிச் செய்தால் அந்த உறவை தொடருவதற்கும் பெற்றோரின் வார்த்தைகளைத் தவறென நிரூபிப்பதற்குமே இளம் இரத்தம் துடிக்கும்!” என்று ஒரு டீனேஜ் பெண் சொல்கிறாள்.

வீட்டில் டேட்டிங் பற்றி பேச்சே எடுக்க முடியாது என்று உங்கள் டீனேஜ் பிள்ளைகள் நினைத்தால் ஏதேனும் விபரீதம் நடக்கக்கூடும்: உங்கள் மகளோ மகனோ உங்களுக்குத் தெரியாமல் எதிர்பாலார் ஒருவருடன் பழகலாம், பிறகு இரகசியமாக டேட்டிங் செய்யலாம். “பெற்றோர் உணர்ச்சிவசப்பட்டு நடந்துகொள்ளும்போது பிள்ளைகள் தங்கள் உறவை இன்னும் மூடிவைக்கத்தான் பார்ப்பார்கள். அவர்கள் நிறுத்தமாட்டார்கள், பதிலாகத் திருட்டுத்தனமாக பழகுவார்கள்” என்று ஒரு பெண் சொல்கிறாள்.

இப்படி உணர்ச்சிவசப்படுவதற்குப் பதிலாக, இந்த விஷயத்தைப் பற்றி பிள்ளைகளிடம் வெளிப்படையாக பேசினால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். 20 வயதான ஓர் இளம் பெண் இவ்வாறு சொல்கிறாள்: “என் பெற்றோர் டேட்டிங் விஷயத்தைப் பற்றி எப்போதும் வெளிப்படையாக பேசுவார்கள். நான் யாரை விரும்புகிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொள்வது முக்கியம், அது நல்லது என்று நினைக்கிறேன்! என் அப்பா அந்த நபருடன் பேசுவார். என் அப்பா, அம்மா தங்கள் மனதில் இருப்பதையும் என்னிடம் சொல்வார்கள். பொதுவாக, அந்த உறவு டேட்டிங் அளவுக்கு போவதற்கு முன்பே அந்த நபர் எனக்கு ஏற்றவர்தானா இல்லையா என்பதை நான் தீர்மானித்துவிடுவேன்.”

[பக்கம் 29-ன் படம்]

பொருத்தமான சூழலில் பலர் கூடிவருகையில் எதிர்பாலாருடன் பழகுவது நன்மையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கலாம்.