Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெலிஸ் பவளப் பாறை உலக ஆஸ்தி

பெலிஸ் பவளப் பாறை உலக ஆஸ்தி

பெலிஸ் பவளப் பாறை உலக ஆஸ்தி

மெக்சிகோவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

“கலாச்சார அல்லது இயற்கை ஆஸ்திகளில் ஏதேனும் ஒன்று சிதைந்துபோனாலோ சீரழிந்துப்போனாலோ அது உலக ஆஸ்திகளுக்கே ஏற்பட்ட ஒரு மாபெரும் இழப்பு. . . . எனவே, உலகப் புகழ்பெற்ற தனிச்சிறப்பு வாய்ந்த கலாச்சார அல்லது இயற்கை ஆஸ்திகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.” ​—⁠ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் (UNESCO) உலக ஆஸ்தி ஒப்பந்தம்.

இதற்கு இசைவாக, 1996-⁠ல் ‘பெலிஸ் பாரியர்-ரீஃப் ரிஸர்வ் ஸிஸ்டம்’ உலக ஆஸ்திகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இவ்வாறு, பெருவிலுள்ள மச்சு பிச்சு, ஐக்கிய மாகாணங்களிலுள்ள கிராண்ட் கேனியன் போன்ற மற்ற உலக அதிசயங்களுக்கு இணையான அந்தஸ்தைப் பெற்றது. “உலகப்புகழ்பெற்ற தனிச்சிறப்பு வாய்ந்த” இடமாக இது ஏன் கருதப்படுகிறது?

பாதுகாக்கப்பட வேண்டிய ஓர் ஆஸ்தி

ஆஸ்திரேலியாவின் கிரேட் பாரியர் பவளப்பாறைக்கு அடுத்து பெலிஸ் பாரியர் பவளப்பாறைதான் உலகிலேயே உயிருள்ள மிகப்பெரிய பவளப்பாறை. மேற்கு அரைக்கோளத்திலேயே இதுதான் நீளமானது. யுகாடன் தீபகற்பத்தையும் மத்திய அமெரிக்க நாடான பெலிஸின் கரையோரத்தில் பெரும்பாலான பகுதியையும் ஒட்டியிருக்கும் இந்தப் பவளப்பாறை 300 கிலோமீட்டர் தூரம்வரை நீண்டுக்கிடக்கிறது. இந்த ‘பெலிஸ் பாரியர் ரீஃப் ரிசர்வில்’ இருப்பதெல்லாம் தொடர்ச்சியான பவளப்பாறைகள்தானா? இல்லை. சுமார் 450 சின்னஞ்சிறிய தீவுகளும், கண்ணைக் கவரும் உப்பங்கழிகளைச் சூழ்ந்த வண்ணம் வட்ட வடிவில் மூன்று பவளத்தீவுகளும் உள்ளன. இந்த ரிசர்வில் ஏழு கடல்பகுதிகளும் உள்ளன; இவை மொத்தமாக 960 சதுர கிலோமீட்டர் இடத்தை உள்ளடக்குகின்றன; இவை உலக ஆஸ்திகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முக்கியமாகப் பாதுகாக்கப்படுகின்றன.

உலகிலுள்ள 25 சதவிகித கடல்வாழ் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இந்தப் பவளப்பாறைகளே வீடாக இருக்கின்றன. அப்படியென்றால் இவற்றை நிச்சயம் பாதுகாக்க வேண்டும்தானே! சொல்லப்போனால், பல்வகை உயிரினங்களுக்கு தஞ்சமளிப்பதில் வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பது இந்தப் பவளப்பாறை சூழியல் அமைப்புகளே! ஆனாலும், இந்தப் பவளப்பாறைகள் அழிவை எதிர்நோக்கியிருக்கின்றன. காரணம், மனிதர்கள் பலவிதங்களில் கடல்நீரை மாசுபடுத்துகிறார்கள்; சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தையும் கட்டுக்குள் வைப்பதில்லை. மீன்களை உயிரோடு பிடிக்க சயனைடு எனும் கொடிய நச்சுப்பொருளை பவளப்பாறைகளில் பீய்ச்சி அடிப்பது போன்ற நாசகரமான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் பவளப்பாறைகள் அழியும் ஆபத்தில் இருக்கின்றன என்றும் இப்படிப்பட்ட நாசகரமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் இன்னும் 20-லிருந்து 40 வருடங்களுக்குள் நம்முடைய பூமியிலுள்ள 70 சதவிகித பவளங்கள் அழிந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

‘பெலிஸ் பாரியர் ரீஃப் ரிசர்வ் ஸிஸ்டமில்’ கெட்டியான பவளங்களில் 70 இனங்களும், மென்மையான பவளங்களில் 36 இனங்களும் 500 வித்தியாசமான மீன் இனங்களும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அழியும் ஆபத்திலுள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கும் இந்த ரிசர்வ் ஸிஸ்டம் தஞ்சம் அளிக்கிறது. அவற்றில் சில: பெருந்தலைக் கடலாமைகள், பச்சை கடலாமைகள், பருந்தலகு கடலாமைகள், மானட்டீ (கடல் பசு), அமெரிக்க முதலை ஆகியவையே. இப்படிப் பல்வகை நீர்வாழ் உயிரினங்களுக்கு அடைக்கலம் தந்து அசத்துகிற இந்த பெலிஸ் பவளப்பாறையைக் குறித்து பவளப்பாறை ஆய்வாளரான ஜூலியன் ராபின்ஸன் இவ்வாறு கூறுகிறார்: “இந்த பெலிஸ் பாரியர் ரீஃப் ரிசர்வ் ஸிஸ்டம் ஆய்வாளர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பல அரிய வாய்ப்புகளை வாரிவழங்குகிறது. . . . இயற்கையின் அழகைப் பருகுவதற்கு எஞ்சியுள்ள சொற்ப இடங்களில் இதுவும் ஒன்று, ஆனால் இதற்கும் ஆபத்து காத்திருக்கிறது.”

இந்த பெலிஸ் பாரியர் ரீஃப் பெரும் ஆபத்தை எதிர்ப்படுகிறது. எப்படியெனில், வண்ணமயமாக காட்சியளித்த பவளங்கள் சாயமிழந்து வெளுத்துப்போகும் (coral bleaching) ஆபத்தில் உள்ளன. (26-ஆம் பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.) மிட்ச் சூறாவளி தாக்கிய சமயத்தில் 1997-லும் 1998-லும் பவளப்பாறைகள் பெருமளவு சாயமிழக்க ஆரம்பித்தன. இதன் விளைவாக, அந்தப் பாறைகள்மீது கம்பளமாக படர்ந்திருந்த உயிருள்ள பவளங்களில் 48 சதவிகிதம் அழிந்துவிட்டதாக நேஷனல் ஜியோக்கிராஃபிக் நியூஸ் அறிக்கை சொல்கிறது. இந்த அழிவுக்கு என்ன காரணம் என்பதன் பேரில் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. என்றாலும், பவளப்பாறை விஞ்ஞானி மெலனி மெக்ஃபீல்ட் இவ்வாறு சொல்கிறார்: “பவளப்பாறை நிறமிழப்பதற்கு முக்கிய காரணம், கடலின் வெப்பநிலை அதிகரிப்பதே. . . . புறஊதா கதிர்களும் இதற்குக் காரணம், இவை இரண்டும் சேர்ந்து மிக மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன.” என்றாலும், ஒரு சந்தோஷ செய்தி: பெலிஸ் பவளப்பாறை கொஞ்ச கொஞ்சமாகச் சீரடைந்து வருகிறது. a

ஆழ்கடல் அற்புதம்

பளிங்கைப் போல் பளபளக்கும் பெலிஸ் ரீஃப் ஸிஸ்டமின் தண்ணீர், முக்குளிப்பவர்களையும், நீர்மூழ்கிக் கவசமணிந்து ஆழ்கடலில் நீந்துபவர்களையும் வசீகரிக்கிறது. அது சராசரியாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் கொண்டிருக்கிறது. இந்தப் பவளப் பாறையில் 90 சதவிகிதம் இன்னும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படாமலேயே இருக்கிறது. அம்பர்கிரிஸ் தீவிலுள்ள சான் பெட்ரோ நகரத்திலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலேயே இந்தப் பவளப்பாறை இருப்பதால் அங்கிருந்து செல்வது சுலபம். சான் பெட்ரோவிலிருந்து தென்கிழக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவில் ஹோல் சான் மெரைன் ரிசர்வ் உள்ளது. இந்த ரிசர்வில் எட்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவுடைய தோட்டத்தை தண்ணீருக்கடியில் காண முடிகிறது. இங்கு பவளப்பாறையினூடே ஒரு கால்வாய் செல்வதைப் பார்க்க முடிகிறது.

முக்குளிப்பதற்கு உலகிலேயே மிகச் சுவாரஸ்யமான இடம், ‘ப்ளு ஹோல்.’ உலக ஆஸ்திகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிற இந்த இடம் ரிசர்வ் ஸிஸ்டம்கீழ் பாதுகாக்கப்படுகிறது. பெலிஸ் நாட்டிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லைட்ஹவுஸ் ரீஃபில் இது அமைந்திருக்கிறது. பிரான்சு நாட்டைச் சேர்ந்த சாக்கிவ் காஸ்டியு எனும் கடல் ஆய்வாளர், 1970-⁠ல் கலீப்ஸோ என்ற தனது ஆய்வு கப்பலில் பயணம் மேற்கொண்டபோது இந்த ப்ளூ ஹோலைக் கண்டுபிடித்தார். அதுமுதல் அது பிரபலமாகிவிட்டது. நீள-பச்சை வண்ணக் கடலில் ஆழ்ந்த நீள நிறத்திலிருக்கும் ஒரு பள்ளமே இந்த ப்ளூ ஹோல். அது சுண்ணாம்பினாலான பெரும் பள்ளம். அதைச் சுற்றி உயிருள்ள பவளங்கள் இருக்கின்றன. அந்தப் பள்ளத்தின் குறுக்களவு சுமார் 300 மீட்டர். ஆழமோ 120 மீட்டருக்கும் அதிகம். பார்க்கப்போனால், கடலின் நீர்மட்டம் ஏறுவதற்கு முன் இது ஒரு வறண்ட அடிநிலக்குகையாக இருந்தது. அதன் கூரை பிற்காலத்தில் சிதைந்துபோய் இந்த ப்ளூ ஹோல் உருவானது. அந்தக் குகையின் சுவர்கள் கிட்டத்தட்ட செங்குத்தாக 35 மீட்டர் ஆழம்வரைச் செல்கின்றன. குகையிலுள்ள பாறை விளிம்புகளில் இருந்து பெரிய பெரிய தொங்கூசிப் பாறைகள் கீழ்நோக்கி தொங்கிக்கொண்டிருக்கின்றன. கடலுக்கடியில் 60 மீட்டர் ஆழத்தில் இருப்பவை எல்லாம் பளிச்சென தெரிகின்றன. கண்கொள்ளாக் காட்சி அது! சுறா மீன்களைத் தவிர வேறு உயிரினங்களை அங்கு அதிகமாகக் காண முடிவதில்லை. ஸ்கியூபா டைவர்கள் இந்த இடத்தில் முக்குளிக்கையில் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். அனுபவமில்லாதவர்களுக்கு அங்கு ஆபத்து காத்திருக்கிறது. எனவே, அந்தப் பள்ளத்திற்குள் முக்குளிப்பவர்கள் தண்ணீருக்குள் இருந்து மெதுவாக மேலே வருவது நல்லது. இருந்தாலும், நீர்மூழ்கிக் கவசம் அணிந்து தெளிவான நீரிலுள்ள பவளப்பாறைகளுக்கு அருகே நீந்துவது இனிமையான அனுபவமாக இருக்கும்.

இதனருகே ஏழு உலக ஆஸ்திகளில் ஒன்றான ஹாஃப் மூன் கே உள்ளது. சிவப்பு கால்களையுடைய பூபி என்ற அரிய கடல் பறவைக்கு இந்தச் சுந்தரத் தீவே சரணாலயம். 98 வித்தியாசமான இனங்களைச் சேர்ந்த வேறு பறவைகளும் இங்கு குடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எழில் மிகுந்த வண்ணப் பவளங்களால் மூடப்பட்டிருக்கிற ஹாஃப் மூன் கே வாலின் ஆழம் தண்ணீருக்கு அடியில் 1,000 மீட்டர்வரைச் செல்கிறது. முக்குளிப்பவர்கள் அதன் அழகைக் கண்டு வியந்துபோகாமல் இருக்கமுடியாது.

இந்தப் பெலிஸ் பாரியர் ரீஃப்பிற்கு ஒரு சின்ன சுற்றுலாப் பயணம் சென்று வந்தோம். இயற்கையின் இந்தப் பொக்கிஷத்தைக் பின்வரும் தலைமுறைகளும் பார்த்து பூரிப்படைய அதைப் பாதுகாப்பது முக்கியம்தானே! அதை இழப்பது “உலக ஆஸ்திகளுக்கே ஏற்பட்ட ஒரு மாபெரும் இழப்பு” என்பதில் சந்தேகமேயில்லை.

[அடிக்குறிப்பு]

a புவிச்சூட்டினால் கடல்நீரின் வெப்பம் அதிகரிப்பதை பெலிஸ் நாட்டு மக்களால் தடுத்து நிறுத்த முடியாதுதான். ஆனால், ‘பெலிஸ் பாரியர் ரீஃப் ஸிஸ்டம்’ உலக ஆஸ்திகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால் அதனை பாதுகாப்பதில் அவர்கள் அதிக முனைப்புடன் ஈடுபடுகிறார்கள்.

[பக்கம் 26-ன் பெட்டி/படங்கள்]

பவளப்பாறை நிறமிழத்தல்

பவளப்பாறை என்பது மாமிசத் தின்னியான பவளப் பாலிப்புகளால் ஆன காலனிகள். இந்தப் பாலிப்புகளின் மேலுள்ள தோல் கால்சியம் கார்பனேட்டால் அதாவது, சுண்ணாம்புக்கல்லினால் ஆனது. அதனால் அது கெட்டியாக இருக்கும். இறந்துபோன பாலிப்புகளின் எலும்பு கூடுகளின் மீதே இந்த உயிருள்ள பவளங்கள் வளருகின்றன. கண்ணுக்கு தெரியாத பாசிகள் (zooxanthellas), பவளப் பாறைகளிலுள்ள பவளங்களின் திசுக்களில் ஒட்டிக்கொண்டு, பரஸ்பர பகிர்ந்துண்ணும் வாழ்க்கையை வாழ்கின்றன. பாலிப்புகளுக்குத் தேவையான பிராணவாயுவையும் போஷாக்குகளையும் கொடுத்துவிட்டு, பாலிப்புகள் வெளியிடும் கரியமிலவாயுவை இந்த நுண்ணுயிரிகள் எடுத்துக்கொள்கின்றன. தண்ணீரின் தட்பவெப்பம் மாறும்போதெல்லாம், அதாவது, அதிகமாகும்போதெல்லாம் பாலிப்புகள் பாசிகளை வெளியே விடுவதால் க்ளோரோஃபில் நிறமியை இழந்து வெளுத்துப் போகின்றன. இந்நிலையில் பாலிப்புகள் பலமிழந்திருப்பதால் நோய்களுக்கு சுலபமாக இரையாகி இறந்துவிடுகின்றன. என்றாலும், இந்தப் பவளப் பாறைகள் தாக்குப்பிடிக்கும் சக்தி மிகுந்தவை. ஆகவே, அவற்றை அழியாமல் பாதுகாத்தால் அவை மறுபடியும் புத்துயிர் பெறும்.

[படத்திற்கான நன்றி]

பின்னணி: Copyright © 2006 Tony Rath Photography - www.trphoto.com

[பக்கம் 23-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மெக்சிகோ

பெலிஸ்

கரீபியன் கடல்

பசிபிக் பெருங்கடல்

[பக்கம் 23-ன் படம்]

300 கிலோமீட்டர் நீண்டுகிடக்கும் பெலிஸ் பவளப்பாறையின் செயற்கைக்கோள் படம்

[பக்கம் 24-ன் படம்]

சுந்தரத் தீவு

[படத்திற்கான நன்றி]

©kevinschafer.com

[பக்கம் 24-ன் படம்]

பருந்தலகு கடலாமை

[பக்கம் 24, 25-ன் படம்]

சுண்ணாம்புக்கல்லால் ஆன குகை சிதைந்து, லைட் ஹவுஸ் ரீஃபில் ‘ப்ளூ ஹோல்’ தோன்றியது

[படத்திற்கான நன்றி]

©kevinschafer.com

[பக்கம் 25-ன் படம்]

500 வித்தியாசமான மீன் இனங்களுக்கு பெலிஸ் பவளப்பாறை தஞ்சமளிக்கிறது

[படத்திற்கான நன்றி]

உள்படம்: © Paul Gallaher/Index Stock Imagery

[பக்கம் 23-ன் படங்களுக்கான நன்றி]

செயற்கைக்கோள் படம்: NASA/The Visible Earth (http://visibleearth.nasa.gov/); முக்குளிப்பவர்கள்: © Paul Duda/Photo Researchers, Inc.

[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]

Copyright © Brandon Cole