Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வியாதியிலிருந்து விடுதலை!

வியாதியிலிருந்து விடுதலை!

வியாதியிலிருந்து விடுதலை!

இறந்த பிறகு பரலோகத்திற்குப் போனால்தான் வலியிலிருந்தும் வியாதியிலிருந்தும் விடுதலையென அநேகர் நம்புகிறார்கள். உண்மையில், இப்படிப்பட்ட பிரபலமான நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான ஒரு நம்பிக்கையை மனிதர் அனைவருக்கும் பைபிள் அளிக்கிறது; அதுதான் பூங்காவன பரதீஸ் பூமியில் வாழ்க்கை. (சங்கீதம் 37:11; 115:16) அந்தச் சமயத்தில் பூரண ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் முடிவில்லா வாழ்க்கையும் கிடைக்குமென பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.

நாம் ஏன் வியாதிப்பட்டு இறந்துபோகிறோம்? வியாதியில்லா உலகம் எப்படி வரும்? இக்கேள்விகளுக்கு பைபிள் பதில் அளிக்கிறது.

◼ வியாதிக்கான உண்மையான காரணம் நம் முதல் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் பூரண ஆரோக்கியமான உடலுடன் படைக்கப்பட்டார்கள். (ஆதியாகமம் 1:31; உபாகமம் 32:4) பூமியில் சதாகாலமும் வாழும் விதத்தில் படைக்கப்பட்டார்கள். கடவுளுக்கு எதிராக அவர்கள் வேண்டுமென்றே கலகம் செய்த பிறகு அவர்கள் வியாதிப்பட ஆரம்பித்தார்கள். (ஆதியாகமம் 3:17-19) கடவுளுடைய அதிகாரத்தை ஒதுக்கித் தள்ளியதன் மூலம், தங்களுடைய பரிபூரண ஜீவனுக்குக் காரணரான படைப்பாளருடன் இருந்த உறவைத் துண்டித்துக்கொண்டார்கள். அவர்கள் குறைபாடுள்ளவர்களாய் ஆனார்கள். கீழ்ப்படியாமல் போனால் என்ன சம்பவிக்குமென கடவுள் எச்சரித்திருந்தாரோ அதுவே நடந்தது; அவர்கள் வியாதிப்பட்டு, இறந்தார்கள்.​—ஆதியாகமம் 2:16, 17; 5:5.

ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு எதிராகக் கலகம் செய்த பிறகு, அபூரணத்தை மட்டுமே தங்கள் சந்ததியினருக்கு விட்டுச்செல்ல முடிந்தது. (ரோமர் 5:12) முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டபடி, வழிவழியாய் வரும் சில கோளாறுகள் வியாதிக்கும் மரணத்திற்கும் பங்களிப்பதாக இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஏகப்பட்ட ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, சமீபத்தில் விஞ்ஞானிகளின் ஒரு தொகுதி பின்வரும் முடிவுக்கு வந்தது: “உயிர் எனும் இயந்திரம் செயல்பட ஆரம்பித்ததுமே உடல் தன்னை அழித்துக்கொள்ளும் வேலையைத் தொடங்கிவிடுகிறது என்பது மறுக்க முடியாத உயிரியல் உண்மையாகும்.”

◼ மனித முயற்சியால் அல்ல வியாதியை எதிர்த்துப் போராடுவதில் விஞ்ஞானம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது. எனினும், வியாதிக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது பெரும் சிக்கல் வாய்ந்ததாய் இருப்பதால் விஞ்ஞானத்தால் அதை முற்றும் முழுமையாக ஒழித்துக்கட்ட முடியவில்லை. கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளை நன்கு அறிந்திருப்பவர்களுக்கு இது ஆச்சரியத்தை அளிப்பதில்லை. ஏனெனில், “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.​—சங்கீதம் 146:3.

மேலும், “மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்” என்றும் பைபிள் சொல்கிறது. (லூக்கா 18:27) வியாதிக்கான காரணத்தை அடியோடு நீக்க யெகோவா தேவனால் முடியும். அவர் நம்முடைய நோய்கள் எல்லாவற்றையும் குணப்படுத்திவிடுவார். (சங்கீதம் 103:3) பரிசுத்த ஆவியின் தூண்டுதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தை இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”​—வெளிப்படுத்துதல் 21:3, 4.

◼ நீங்கள் என்ன செய்ய வேண்டும் வரவிருக்கும் வியாதியில்லா உலகில் வாழ விரும்பினால் நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை இயேசு கிறிஸ்து திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். அவர் இவ்வாறு சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”​—யோவான் 17:3.

கடவுளைப் பற்றியும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் போதனைகளைப் பற்றியும் பைபிளிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். நம் வாழ்க்கையை இப்போதே மேம்படுத்திக்கொள்ள உதவும் நடைமுறை ஆலோசனையும் அதில் அடங்கியிருக்கிறது. அதோடுகூட, கீழ்ப்படிதலோடு தம்மை வணங்குவோருக்கு வேதனையில்லா உலகைக் கொண்டுவரப்போவதாக கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிறார். ஆம், ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாதிருக்கும்’ வருங்கால வாழ்வை கடவுள் உங்களுக்கு அளிக்கவிருக்கிறார்!​—ஏசாயா 33:24.

[பக்கம் 11-ன் பெட்டி/படங்கள்]

ஆரோக்கியத்தைப் பற்றிய சமநிலையான கருத்து

உயிருக்கு மரியாதை காட்டும்படி பைபிள் ஊக்குவிக்கிறது. யெகோவாவின் சாட்சிகள், தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள சிரத்தை எடுப்பதன் மூலம் அதற்கு மரியாதை காட்டுகிறார்கள். போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது, புகைபிடிப்பது போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களை அவர்கள் தவிர்க்கிறார்கள். மது அருந்துவதிலும், உணவு சாப்பிடுவதிலும்கூட அளவோடு இருக்கும்படி கடவுள் தம்மை வணங்குபவர்களிடம் எதிர்பார்க்கிறார். (நீதிமொழிகள் 23:20; தீத்து 2:2, 3) இந்த நடைமுறையான அறிவுரைகளைப் பின்பற்றுவதோடு போதுமான ஓய்வும் உடற்பயிற்சியும் சேர்ந்து பல வியாதிகள் வருவதைத் தாமதப்படுத்தலாம் அல்லது வியாதிகளே வராமல் தடுக்கலாம். வியாதியால் அவதிப்படுகிறவர்களுக்கு நம்பகமான, நல்ல மருத்துவ நிபுணர்களின் உதவி தேவைப்படலாம்.

நியாயத்தன்மையோடும் ‘தெளிந்த புத்தியோடும்’ இருக்கும்படி பைபிள் ஊக்குவிக்கிறது. (தீத்து 2:12, NW; பிலிப்பியர் 4:5) இவ்விஷயத்தில் இன்று பலர் சமநிலை இழந்திருக்கிறார்கள், எப்படியாவது குணமடைந்துவிட வேண்டுமென்று மருந்துகளைத் தேடி அலைவதில் ஒரேயடியாய் மூழ்கிவிட்டிருக்கிறார்கள்; விசுவாசம் இல்லாதவர்களாய், கடவுளோடுள்ள உறவைப் புறக்கணிக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறார்கள். தீங்கு விளைவிக்கிற, சந்தேகத்திற்குரிய சிகிச்சை முறைகளை சிலர் முயன்று பார்க்கிறார்கள். இன்னும் சிலர், பயனற்ற அல்லது தீங்கையே விளைவிக்கக் கூடிய சிகிச்சை முறைகளுக்காக அல்லது மருந்துகளுக்காகத் தங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயமாக்குகிறார்கள்.

பூரண ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான காலம் இன்னும் வரவில்லை என்பதுதான் நிஜம். வியாதியே இல்லாத காலத்திற்காக நீங்கள் காத்திருக்கும் இந்தச் சமயத்தில், ஆரோக்கியத்தைப் பெறும் முயற்சியில் சமநிலையோடிருக்க பைபிளில் காணப்படும் ஞானமும் நியாயத்தன்மையும் உங்களுக்கு உதவலாம்.