Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உறங்கும் ராட்சதனின் நிழலில் வாழ்தல்

உறங்கும் ராட்சதனின் நிழலில் வாழ்தல்

உறங்கும் ராட்சதனின் நிழலில் வாழ்தல்

எரிமலைகள் காலங்காலமாக புரியாப் புதிராகவே இருந்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கும் அவை திடீரென ஒருநாள் கண்ணுக்கு விருந்தளிக்கும் விதத்தில் விழித்தெழுகின்றன, உயிர்களைக் காவுகொள்கின்றன. எரிமலை வெடிக்கும்போது சில நிமிடங்களில் ஊர்ப்புறங்களைப் பாழாக்கி ஜீவராசிகளைக் கபளீகரம் செய்துவிடுகிறது.

எரிமலைகள் ஆபத்தானவை என்பதில் யாருக்குமே சந்தேகம் கிடையாது. கடந்த 300 ஆண்டுகளில் மட்டுமே லட்சக்கணக்கானோரின் உயிரை அவை விழுங்கியிருக்கின்றன. சொல்லப்போனால், நம்மில் பெரும்பாலானோர் இத்தகைய உறங்கும் ராட்சதர்களிடமிருந்து கண்காணாத தூரத்தில் வாழ்கிறோம். ஆனால், லட்சக்கணக்கானோர் செயல்படுகிற எரிமலைகளின் அருகே வாழ்கிறார்கள். உதாரணமாக, ஈக்வடாரின் தலைநகரான கவிடோவுக்குச் சற்றுத் தொலைவில் வடமேற்கு திசையில் பீச்சீன்சா எரிமலை அமைந்துள்ளது. மெக்சிகோ நகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் போபகாடபெடல் மலை உள்ளது; அஸ்தெக் மொழியில் இதற்கு “புகையும் மலை” என்று அர்த்தம். நியுஜிலாந்திலுள்ள ஆக்லாந்து, இத்தாலியுள்ள நேபிள்ஸ் போன்ற நகரங்கள் எரிமலையில் அல்லது அதன் அடிவாரத்தில் அமைந்துள்ளன. மொத்தத்தில், பூமிக்கடியில் உள்ள விசைகள் ஆக்ரோஷமாக குமுறி, உறங்குகிற இந்த ராட்சதர்களை எந்த நிமிடமும் தட்டியெழுப்பும் அபாயகரமான சூழ்நிலையில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள்.

அபாயகரமான ராட்சதன்

நேபிள்ஸ் நகரத்தின் குடிமக்கள் சுமார் 3,000 ஆண்டுகளாக வெசுவியஸ் மலைக்கு அருகே குடியிருக்கிறார்கள். இந்த மலை நேபிள்ஸிலிருந்து வெறும் 11 கிலோமீட்டர் தொலைவில் வீற்றிருக்கிறது. உண்மையில் இது பண்டைய சாம்மா எரிமலையின் வாயிலிருக்கும் ஒரு கூம்புதான். உலகிலுள்ள மிக ஆபத்தான எரிமலைகளில் இந்த வெசுவியஸும் ஒன்று. இதன் அடிப்பாகம் கடல் மட்டத்திற்கு கீழே இருப்பதால், நம் கண்ணுக்குத் தெரிவதைவிட மிகப் பெரிய மலையாக இருக்கிறது.

வெசுவியஸ் மலை எரிமலை வெடிப்புகளுக்குச் சரித்திரப் புகழ் பெற்றது. பொ.ச. 79-⁠ல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு மிகப் பிரபலமானது; அப்போது, பாம்ப்பே, ஹெர்குலேனியம் நகரங்கள் சின்னாபின்னமாயின. அதுமுதற்கொண்டு, 50-⁠க்கும் மேற்பட்ட தடவை அது தன் கோரமுகத்தைக் காட்டியிருக்கிறது. 1631-⁠ல் ஏற்பட்ட நாசகரமான வெடிப்பில் சுமார் 4,000 பேர் கொல்லப்பட்டார்கள். அச்சமயத்தில்தான் “லாவா” என்ற பெயர் புழக்கத்திற்கு வந்தது. இது லாபி என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. அதன் அர்த்தம் “சரிதல்” என்பதாகும்; சீறியெழுந்த எரிமலைக் குழம்பு வெசுவியஸின் செங்குத்தான சரிவுகளில் பாய்ந்தோடி வழியிலிருந்த அனைத்தையும் அடித்துக்கொண்டு சென்றதை இது பொருத்தமாகவே விவரித்தது.

நூற்றாண்டுகளாக, வெசுவியஸ் குமுறிக்கொண்டே இருக்கிறது. 1944-⁠ல் இரண்டாம் உலகப் போரின்போது அது வெடித்தது; அப்போது அங்கு வந்த நேச நாட்டுப் படைகளை சாம்பல் மழை வரவேற்றது. மாஸா, சான் செபாஸ்டியானோ போன்ற அருகிலிருந்த பட்டணங்களும் “ஃப்யூனீக்யூலீ, ஃப்யூனீக்யூலா” என்ற இத்தாலிய கிராமியப் பாடலில் குறிப்பிடப்படும் புகழ் பெற்ற ஃப்யூனீக்குலர் ரயில் வண்டி, அதாவது கேபிளில் இயங்குகிற மலைச்சரிவு வண்டியும் சாம்பலுக்கடியில் புதைந்தன.

இன்று, நேபிள்ஸ்வாசிகள் தங்களுக்கு மிக அருகிலிருக்கும் ஆபத்தைச் சட்டைசெய்வதாக தெரியவில்லை. சுற்றுலாப் பயணிகள் சரித்திரப் புகழ் பெற்ற இடங்களையும் கட்டடக்கலையின் வரலாற்றுச் சின்னங்களையும் ஆச்சரியத்துடன் கண்டுகளிக்கிறார்கள். கடைகண்ணிகளிலும், கஃபேக்களிலும் பரபரப்பாக வியாபாரம் நடக்கிறது. நேபிள்ஸ் வளைகுடாவில் ஆங்காங்கே புள்ளிகள் வைத்தாற்போல் பாய்மரக் கப்பல்கள் பயணிக்கின்றன. வெசுவியஸ் பார்வையாளர்களின் கவனத்தைச் சுண்டியிழுக்கும் இடமாக திகழ்கிறது; அபாயகரமான உறங்கும் ராட்சதனாக அல்ல, ஆனால் அமைதியான நண்பனாகவே பெரும்பாலும் கருதப்படுகிறது.

ஆக்லாந்து​—⁠எரிமலைகளின் நகரம்

நியுஜிலாந்திலுள்ள துறைமுக நகரமாகிய ஆக்லாந்தில் எரிமலைக் குன்றுகள் ஆங்காங்கே இருக்கின்றன. சொல்லப்போனால், அங்குள்ள பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் 48 எரிமலைக் குன்றுகளின் நடுவே வசிக்கிறார்கள். எரிமலைகளின் சீற்றத்தால் உருவான தீவுகளில் பண்டையகால எரிமலை வெடிப்புகள் ஏற்படுத்திய பள்ளத்தாக்குகள் இரண்டு துறைமுகங்களாகப் பயன்படுகின்றன. பளிச்சென்று கண்ணில்படுகிற தீவு 600 வயதான ராங்கிடோடோ; அது வெசுவியஸைப் போன்றே சமச் சீரான அமைப்பில் கடலிலிருந்து மேலெழுந்துள்ளது. இத்தீவு பிறந்த சமயத்தில், அருகிலிருந்த மயோரி கிராமம் சாம்பலில் புதைந்துபோனது.

ஆக்லாந்துவாசிகள் அங்குள்ள எரிமலைகளைச் சமாளித்து வாழ கற்றிருக்கிறார்கள். மவுங்காகீகீ என்ற எரிமலைக் கூம்பு, இன்று ஒரு பொதுப் பூங்காவாகவும் ஆட்டுப் பண்ணையாகவும் விளங்குகிறது; இது ஆக்லாந்தின் நடுவில் வீற்றிருக்கிறது. சில எரிமலைகள் இன்று ஏரிகளாக, பூங்காக்களாக, விளையாட்டு மைதானங்களாக இருக்கின்றன. ஓர் எரிமலை கல்லறையாகவும் பயன்படுத்தப்படுகிறது. கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளைக் கண்டுகளிப்பதற்காக பலர் எரிமலைச் சரிவுகளில் குடியிருக்க விரும்புகிறார்கள்.

ஆக்லாந்தில் மயோரி இனத்தவர் ஆரம்பத்தில் குடியேறினார்கள், 180 ஆண்டுகளுக்கு முன்பாக ஐரோப்பியர்கள் குடியேறினார்கள். அப்போது, ஒருகாலத்தில் இது எரிமலையாக இருந்ததைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. மாறாக, அங்கே குடியிருக்க இடம் இருந்ததாலும், அதுவும் கடலுக்கு அருகில் இருந்ததாலும், அதோடு மண் வளமானதாக இருந்ததாலுமே குடியேறினார்கள். எரிமலைப் பகுதி வளமான பூமி என்பது உலகின் மற்ற இடங்களைப் பொறுத்ததிலும்கூட உண்மையாக இருக்கிறது. உதாரணமாக, இந்தோனேஷியாவில் நெற்பயிர்கள் செழிப்பாய் வளருகிற சில இடங்கள் செயல்படுகிற எரிமலைகளுக்கு அருகில் உள்ளன. மேற்கு ஐக்கிய மாகாணங்களில் அமோக விளைச்சல் தரும் நிலங்கள் பெரும்பாலும் எரிமலைகள் இருந்த பகுதிகளாக இருக்கின்றன. சாதகமான சூழ்நிலையில், எரிமலை சீறியெழுந்த ஒரு வருடத்திற்குள், லாவா போர்த்திய நிலத்தில் புல்பூண்டுகள் முளைக்கின்றன.

முன்னெச்சரிக்கை தகவலறிவிப்பு மையங்கள்

‘எரிமலைக்கு அருகே குடியிருப்பது ஆபத்தானது, அல்லவா?’ என சிலர் கேட்கலாம். ஆம், மிக ஆபத்தானதுதான். ஆனால், நிலநடுக்கங்களையும் எரிமலை சீற்றங்களையும் விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கிறார்கள். உதாரணமாக, நேபிள்ஸ், ஆக்லாந்து உட்பட, உலகெங்குமுள்ள செயல்படும் எரிமலைகளை யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஜியாலஜிக்கல் சர்வே என்ற அமைப்பு கண்காணித்து வருகிறது. அதோடு, நேபிள்ஸிலும் ஆக்லாந்திலும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டால் அவசரகால நடவடிக்கை எடுப்பதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. செயற்கைக்கோளின் உதவியுடன் 24 மணிநேரமும் செயற்படும் குளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் (GPS), நில அதிர்வுமானிகளின் பின்னல்வலைகள் (seismometer networks) ஆகியவற்றைப் பயன்படுத்தி வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பு எரிமலைக் குழம்பின் (magma) அசைவையும் நிலத்தடி அசைவுகளையும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடிகிறது.

வெசுவியஸ் எந்நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இத்தாலிய அதிகாரிகள் மட்டுக்குமீறிய எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, 1631-⁠ல் ஏற்பட்டதைப் போன்று மீண்டும் வெடித்தால் அதைச் சமாளிப்பதற்கும் அவசரகால திட்டங்களை வகுத்திருக்கிறார்கள். எரிமலை வெடிப்பதற்கு முன்னரே ஆபத்தான பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கவும் அவர்களை வெளியேற்றவும் முடியும் என்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆக்லாந்து நிலப் பகுதியை மோனோஜெனிடிக் எரிமலைப் பகுதி (monogenetic volcanic field) என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். அதாவது, ஏற்கெனவே அங்குள்ள ஓர் எரிமலை வெடிப்பதற்குப் பதிலாக வேறொரு இடத்தில் புதிதாக ஓர் எரிமலை உருவாகலாம். நாட்கணக்காக, வாரக்கணக்காக நீடிக்கிற நிலநடுக்கங்களுக்குப் பிறகே இப்படிச் சம்பவிக்கலாம் என்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். முன்னரே கிடைக்கிற இத்தகைய எச்சரிப்புவிடுக்கும் அறிகுறிகள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைவதற்கு போதுமான அவகாசத்தை அளிக்கின்றன.

ஆபத்தை மனதில் வைத்து செயல்படுதல்

எரிமலைகளைக் கண்காணிப்பது முக்கியமான பணியாக இருந்தாலும், கொடுக்கப்படும் எச்சரிப்புகளை அசட்டை செய்தால் இப்படிக் கண்காணிப்பதெல்லாம் பயனற்றதாகிவிடும். 1985-⁠ல் கொலம்பியாவிலுள்ள ஆர்மேரோவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு நேவாடோ டெல் ரூயிஸ் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற எச்சரிக்கை கிடைத்தது. சுமார் 50 கிலோமீட்டருக்கு அப்பால் எரிமலை குமுறியது; அது சந்தேகத்துக்கு இடமில்லாமல் வரவிருக்கும் ஆபத்தைச் சுட்டிக்காட்டியது. இருந்தபோதிலும், ஒன்றும் நடக்காது, அமைதியாக இருங்கள் என்பதாக நகரத்தில் இருந்தவர்களிடம் சொல்லப்பட்டது. ஆனால், வழிந்தோடிய சேற்றில் நகரமே மூழ்கிவிட்டது; அதில் சிக்கிய 21,000-⁠க்கும் அதிகமானோர் இறந்தார்கள்.

இத்தகைய பேரழிவுகள் அரிதாவே நிகழ்ந்தபோதிலும், எரிமலை வெடிப்புகள் சம்பவிக்காத அமைதியான காலங்கள் கூடுதலான ஆராய்ச்சிக்கும் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு, தொடர்ச்சியான கண்காணிப்பும், போதியளவு தயாரிப்பும், இதுபற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் உறங்குகிற ராட்சதனின் நிழலில் வாழ்பவர்கள் எதிர்ப்படுகிற அபாயத்தைக் குறைக்க உதவும்.

[பக்கம் 16-ன் பெட்டி/படம்]

தயாராக இருங்கள்!

இயற்கை பேரழிவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள ஆபத்துக்களைக் குறித்து அறிந்திருங்கள். குடும்பத்தார் வெவ்வேறு இடங்களில் இருந்தால், அவர்களை எங்கே சந்திப்பது என்பதையும் உங்கள் இருப்பிடத்தை யாரிடம் தெரிவிப்பது என்பதையும் முன்கூட்டியே திட்டமிடுங்கள்; உணவு, தண்ணீர், முதலுதவிப் பெட்டி, உடை, ரேடியோக்கள், நீர்புகாத ஃபிளாஷ்லைட்டுகள், கூடுதலான பாட்டரிகள் போன்றவற்றை நெருக்கடி நேரத்தில் பயன்படுத்த கைவசம் வைத்திருங்கள். பல நாட்களுக்கு உதவும் விதத்தில் தேவைக்கு அதிகமாகவே வைத்திருங்கள்.

[பக்கம் 15-ன் படம்]

வெசுவியஸின் முக்கிய எரிமலைவாயின் அருகில் நடந்துசெல்லும் பார்வையாளர்கள்

[படத்திற்கான நன்றி]

©Danilo Donadoni/Marka/age fotostock

[பக்கம் 15-ன் படம்]

நேபிள்ஸ், இத்தாலி; பின்னணியில் வெசுவியஸ் மலை

[படத்திற்கான நன்றி]

© Tom Pfeiffer

[பக்கம் 15-ன் படம்]

பொ.ச. 79-⁠ல் பாம்ப்பே, ஹெர்குலேனியம் நகரங்களை அழித்த படுபயங்கரமான எரிமலை வெடிப்பைச் சித்தரிக்கிற ஓவியரின் கைவண்ணம்

[படத்திற்கான நன்றி]

© North Wind Picture Archives

[பக்கம் 16-ன் படம்]

ஆக்லாந்திலுள்ள பல எரிமலை தீவுகளில் ஒன்றான ராங்கிடோடோ

[பக்கம் 16, 17-ன் படங்கள்]

மேலே மற்றும் வலது: போபகாடபெடல் மலை, மெக்சிகோ

[படங்களுக்கான நன்றி]

AFP/Getty Images

Jorge Silva/AFP/Getty Images

[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]

USGS, Cascades Volcano Observatory