Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எதிர்பாராத சந்திப்பு

எதிர்பாராத சந்திப்பு

எதிர்பாராத சந்திப்பு

னும் என் நண்பர்களும் ஹவாய் தீவுக்குச் சொந்தமான மாவி தீவுக்குச் செல்ல ஆர்வமாய் காத்திருந்தோம். முக்கியமாய், 3,055 மீட்டர் உயரமுள்ள ஹாலேயக்காலா எரிமலையின் உச்சியிலிருந்து காலை கதிரவன் துயிலெழும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுகளிக்க ஆசைப்பட்டோம். அது மனதைக் கொள்ளை கொள்ளும் இனிய அனுபவம் என்பதாக கேள்விப்பட்டிருந்தோம். நாங்கள் தங்கியிருந்த காபாலுயா என்ற இடத்திலிருந்து அத்தீவின் மறுமுனைக்குச் செல்ல விடியலுக்கு முன்னரே இரண்டு மணிக்கு எழுந்ததுதான் சற்றுச் சிரமமாக இருந்தது. மலை உச்சியை அடைய செங்குத்தான பாதை வழியாக காரில் பயணித்தோம். இருள் கலையாத, பொழுது புலராத வேளையில் எங்கள் கார் மட்டும்தான் அந்தச் சாலையில் ஏகாந்தமாய் செல்லுமென நினைத்திருந்தோம். ஆனால், நிஜமோ அதற்கு எதிர்மாறாக இருந்தது! மலை உச்சியை நோக்கி வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் வரிசையாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன; அந்த வாகனங்களின் வரிசையில் எங்கள் வாகனமும் சங்கமித்தது. நாங்கள் மலை உச்சியை அடைந்தபோது, ஓரளவு குளிராகத்தான் இருந்தது. ஆனால், அதைச் சமாளிக்க போர்வைகளைக் கையோடு எடுத்து வந்திருந்தோம்.

காலை ஆறு மணியளவில் சூரிய உதயத்தைக் காண நூற்றுக்கணக்கானோர் பொறுமையோடு காத்திருந்தார்கள். அங்கிருந்த அனைவருமே அந்தக் கண்கொள்ளாக் காட்சியை விழிகளில் படம்பிடிக்கவும், கேமராவில் படம் எடுக்கவும் ஆசை ஆசையாய் காத்திருந்தோம். அந்த நேரம் பார்த்து, கொஞ்சமும் எதிர்பாராத விதமாக எரிமலை வாயின் அருகே மேகக்கூட்டம் திரண்டு வருவதைக் கண்டு திகைத்து நின்றோம். கடவுளின் கைவண்ணத்தைப் படமெடுப்பதற்கான வாய்ப்பு கைநழுவியது. பசிபிக் பெருங்கடலுக்கு அருகே உள்ள மலைகளில் மேகங்கள் திரண்டு வருவதற்கான வாய்ப்பு எப்போதுமே இருக்கிறது. எங்களுடைய ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு சூரிய ஒளியின் வெப்பத்தில் மேகங்கள் மெதுவாக கலைந்து செல்வதற்காகப் பொறுமையுடன் காத்திருந்தோம். திடீரென்று, மற்றொரு அதிசயம் நிகழ்ந்தது! மேகங்கள் கலைந்ததால், எரிமலை வாயின் பரந்த காட்சியின் அழகைக் கண்குளிரப் பார்க்க முடிந்தது; அதில் குறுக்கும் நெடுக்குமாக ஏதோ நடந்து சென்ற சுவடுகள் தென்பட்டன. இதைப் பார்த்ததே எங்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது.

திடீரென்று, ஒரு வினோதமான சத்தத்தைக் கேட்டோம்; கோழி கொக்கரிப்பது போன்ற தெளிவான சத்தத்துடன் தொடங்கி “சக்கர், சக்கர்” என்று ஒலித்தது. இந்தக் குரல் வந்த திசையில் பார்த்தோம். அங்கே, கௌதாரி இனத்தைச் சேர்ந்த அழகிய யுரேஷியப் பறவையான சக்கர் (chukar) நின்று கொண்டிருந்தது. அதன் லத்தீன் பெயர் அலெக்டோரிஸ் சக்கர். பெரும்பாலும் இனப்பெருக்க காலத்தைத் தரையில் கழிக்கும் இந்தப் பறவை அங்கேயே கூடுகட்டி குஞ்சு பொரிக்கிறது. எங்களைப் பார்த்தவுடன் பறந்து செல்வதற்குப் பதிலாக அந்த இடத்திலிருந்து ஓடிச் சென்றது.

அழகிய மாவி தீவில் இந்தப் பறவை வந்தது எப்படி? சக்கர் பறவைகள் அத்தீவைச் சேர்ந்தவை அல்ல, அவை அங்கே கொண்டு வரப்பட்டிருக்கின்றன. வட அமெரிக்க கண்டத்தில் இந்தப் பறவைகளை வளர்த்து, பிறகு வேட்டையாடுவதற்காக இவற்றைக் காட்டில் விட்டுவிடுகிறார்கள். மனிதர்களைக் கண்டு அஞ்சி ஒளிகிற இந்தப் பறவையை மிக அருகில் பார்ப்பதற்காவது வாய்ப்பு கிடைத்ததே என்று எண்ணி மகிழ்ந்தோம்.​—⁠அளிக்கப்பட்டது.