Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓரினச்சேர்க்கை —எப்படித் தவிர்க்கலாம்?

ஓரினச்சேர்க்கை —எப்படித் தவிர்க்கலாம்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ஓரினச்சேர்க்கை—⁠எப்படித் தவிர்க்கலாம்?

“எனக்கு 12 வயதாக இருந்தபோது என்கூடப் படித்த ஒரு பெண்ணிடம் எனக்கு ஒரே மோகம். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களின் வரிசையில் நானும் சேர்ந்துவிடுவேனோ என்ற கவலையும் குழப்பமும் எனக்கு ஏற்பட்டது.”​—⁠அனா. a

“இளைஞனாக இருக்கையில் ஆண்களைப் பார்க்கும்போது ஏற்பட்ட வேட்கையை எதிர்த்து பெரிதும் போராடினேன். அது எதார்த்தமான ஆசை இல்லை என்பதை உள்ளூர அறிந்திருந்தேன்.”​—⁠ஓலெஃப்.

“ஓரிரு முறை நானும் என் தோழியும் முத்தமிட்டிருக்கிறோம். பையன்களையும் எனக்குப் பிடிக்கும். அதனால், ஈரினச் சேர்க்கை பழக்கம் எனக்கும் இருக்குமோ என நினைத்தேன்.”​—⁠செரா.

எதையும் ஏற்றுக்கொள்ளும் இன்றைய மனப்பான்மை, அநேக இளசுகளின் மனதில் ஓரினச்சேர்க்கையில் என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆவலைத் தூண்டிவிட்டிருக்கிறது. தன்னோடு படிக்கும் பெண்களில் பலர் ஓரினப்புணர்ச்சியில், ஈரினப் புணர்ச்சியில், அல்லது இருபாலரோடும் உறவு வைத்துக்கொள்வதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பதைப் பற்றி 15 வயது நிரம்பிய பெக்கீ சொல்கிறாள். தன்னுடைய பள்ளியிலும் இதே நிலைதான் என 18 வயது கிறிஸ்டாவும் சொல்கிறாள். “என்கூடப் படிப்பவர்களில் இருவர் உடலுறவு கொள்ள எனக்கு அழைப்பு விடுத்தனர். அதில் ஒருத்தி, ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்வது எப்படியிருக்கும் என்பதை நான் பார்க்க விரும்புகிறேனா என்று கேட்டு எழுதினாள்” என்று அவள் கூறுகிறாள்.

ஒத்த பாலினத்தவர் உடலுறவில் ஈடுபடுவது வெளிப்படையாகக் காட்டப்படுவதால், நீங்கள் ஒருவேளை இவ்வாறு கேட்கலாம்: ‘ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுவது உண்மையிலேயே தவறா? ஒத்த பாலினத்தவர் மேல் எனக்கு மோகம் ஏற்பட்டால் என்ன செய்வது? எனக்கு ஓரினச்சேர்க்கை பழக்கம் இருப்பதை இது அர்த்தப்படுத்துகிறதா?’

ஓரினச்சேர்க்கையைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார்?

இன்று பெரும்பாலோர், ஏன் பாதிரிகளும்கூட ஓரினப்புணர்ச்சிப் பழக்கம் தவறான ஒன்றல்ல என்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்த விஷயத்தில் பைபிள் சொல்வது தெளிவாக இருக்கிறது. யெகோவா தேவன் ஆணையும் பெண்ணையும் படைத்தார் என்றும் கணவனும் மனைவியும் தங்களுக்கு இடையில் மட்டுமே பாலியல் ஆசைகளைத் திருப்தி செய்துகொள்ள வேண்டுமென்பதே அவருடைய நோக்கம் என்றும் பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:27, 28; 2:24) ஆகவே, ஓரினப்புணர்ச்சிப் பழக்கத்தை பைபிள் கண்டனம் செய்வதில் ஆச்சரியமேதுமில்லை.​—ரோமர் 1:26, 27.

பைபிளில் உள்ளவை இந்தக் காலத்துக்கு ஒத்துவராது எனப் பலரும் சொல்லலாம் என்பது உண்மைதான். உதாரணமாக, 14 வயதான மாகன் இவ்வாறு உறுதியாகச் சொல்கிறாள்: “பைபிளிலுள்ள சில விஷயங்கள் இந்தக் காலத்துக்கு ஒத்தே வராது.” ஆனால், சிலர் ஏன் சீக்கிரமாக இந்த முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்? ஏனென்றால் பைபிளுடைய கருத்து அவர்களுடைய கருத்துடன் பெரும்பாலும் ஒத்துப்போகாததாலேயே. தாங்கள் எதை நம்ப விரும்புகிறார்களோ அதற்கு எதிரானதை பைபிள் போதிப்பதால் அவர்கள் கடவுளுடைய வார்த்தையை ஒதுக்கித் தள்ளுகிறார்கள். பைபிளில் உள்ளவை இந்தக் காலத்துக்கு ஒத்துவராது என்ற கருத்து ஒருதலைப்பட்சமானது. அதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளியே வரும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. உண்மையில் யெகோவா தேவனுடைய கட்டளைகள் நம்முடைய நன்மைக்கானவையே என்ற நிஜத்தை நாம் உணரும்படி அவருடைய வார்த்தையில் அவரே நம்மை ஊக்குவிக்கிறார். (ஏசாயா 48:17, 18) அது நியாயமானதே. நம் படைப்பாளரைவிட வேறு யார்தான் நம்மை நன்றாய் அறிந்திருக்க முடியும்?

ஓர் இளைஞராக பலவித உணர்ச்சிகள் உங்களுக்கு இருக்கலாம். ஒத்த பாலினத்தவர்மேல் மோகம் ஏற்படுவதாக நீங்கள் உணர்ந்தால் என்ன செய்வது? அப்படியானால், உங்களுக்கு ஓரினப்புணர்ச்சிப் பழக்கம் இருப்பதாக அது அர்த்தப்படுத்துமா? இல்லை. நீங்கள் “இளமையின் மலரும் பருவத்தில்” இருப்பதால் தானாகவே பாலியல் உணர்ச்சிகள் உங்களுக்குள் கிளர்ந்தெழுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். (1 கொரிந்தியர் 7:36, NW) கொஞ்ச காலத்திற்கு ஒத்த பாலினத்தவர்மேல் உங்களுடைய கண் இருக்கலாம். ஆனால், இதுபோன்ற கவர்ச்சி உங்களுக்கு ஓரினப்புணர்ச்சிப் பழக்கமிருப்பதாக அர்த்தப்படுத்தாது. உண்மையில் இதுபோன்ற ஆசைகள் காலப்போக்கில் மறைந்துவிடுமென்றே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், ‘இது போன்ற ஆசைகள் முதலில் எவ்வாறு மனதில் எழுகின்றன?’ என்றும்கூட நீங்கள் கேட்கலாம்.

ஓரினப்புணர்ச்சி மரபணுக்களிலேயே வேரூன்றியிருப்பதாக சிலர் கூறுகின்றனர். மற்றவர்களோ இது வளர்த்துக்கொள்ளப்படும் பழக்கம் என்று சொல்கின்றனர். ஓரினப்புணர்ச்சிப் பழக்கம், “பிறவிக்குணமா வளர்ப்பா” என்று விவாதம் செய்வதற்கு இந்தக் கட்டுரை எழுதப்படவில்லை. உண்மையில், ஒரேவொரு காரணத்தால்தான் அந்தப் பழக்கம் ஏற்படுகிறதென நாம் முடிவுகட்டிவிட முடியாது. பெரும்பாலும் மற்ற பழக்கங்களைப் போலவே ஓரினப்புணர்ச்சிப் பழக்கமும் சிக்கலான பல காரணங்களால் ஏற்படுகிறது.

காரணம் எதுவாக இருந்தாலும்சரி, ஓரினப்புணர்ச்சிப் பழக்கத்தை பைபிள் கண்டனம் செய்கிறது என்பதுதான் முக்கியம். எனவே, ஒத்த பாலினத்தவர் மீதுள்ள ஆசையை எதிர்த்துப் போராடும் ஒருவர், அந்த ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளாதிருக்கும் இலட்சியத்தை வைக்கலாம். உதாரணத்திற்கு ஒரு நபர் ‘மூர்க்கமுள்ளவராக’ இருக்கலாம். (நீதிமொழிகள் 29:22) ஒருகாலத்தில் அவர் கோபாவேசத்துடன் நடந்துகொண்டிருக்கலாம். என்றாலும் பைபிளைப் படித்த பிறகு, சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணருபவராக அவர் மாறிவிடுகிறார். அவருக்குள் கோபம் எப்பொழுதுமே தலைதூக்காது என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. என்றாலும், கோபாவேசத்தைப் பற்றி பைபிள் சொல்வதை அவர் அறிந்திருப்பதால், தன்னுடைய உணர்ச்சிகளுக்கு அடிபணியாமல் அவற்றை அடக்குகிறார். இது, ஒத்த பாலினத்தவர்களிடம் ஈர்க்கப்பட்டிருக்கிற, ஆனால் இப்போது ஓரினப்புணர்ச்சி பற்றி பைபிள் சொல்வதை அறிந்திருக்கிற ஒருவருக்கும் பொருந்துகிறது. இப்பொழுதும் தகாத ஆசை எப்போதாவது எட்டிப் பார்க்கலாம். என்றாலும், பைபிள் அறிவுரைக்குச் செவிகொடுப்பதன் மூலம் அந்த ஆசைக்கு அடிபணிவதை அவர் தவிர்க்க முடியும்.

ஒத்த பாலின ஆசைகள் மனதில் வேர்விட்டு வளர்ந்திருக்கலாம் என்பது உண்மைதான். ஆனாலும், அப்படிப்பட்ட தவறான ஆசைகள் ஆழமாக வேரூன்றி இருந்தாலும் பிடுங்கியெறிய முடியாதவை அல்ல என்பதில் நிச்சயமாயிருங்கள். (1 கொரிந்தியர் 9:27; எபேசியர் 4:22-24) நீங்கள் எப்படி வாழ விரும்புகிறீர்கள் என்பது உங்களுடைய கைகளில் இருக்கிறது. (மத்தேயு 7:13, 14; ரோமர் 12:1, 2) உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று இந்த உலகம் சொன்னாலும், உண்மையில் உங்களுடைய உணர்ச்சித் தூண்டுதலை உங்களால் கட்டுப்படுத்த முடியும் அல்லது அதைச் செய்வதிலிருந்து விலகியாவது இருக்க முடியும்.

தவறான பழக்கங்களை ஒதுக்கித்தள்ளுங்கள்

ஓரினப்புணர்ச்சிப் பழக்கங்களை நீங்கள் எப்படித் தவிர்க்கலாம்?

முதலாவது உங்கள் கவலைகளையெல்லாம் ஜெபத்தில் யெகோவாவிடம் வைத்துவிடுங்கள், ‘அவர் உங்களை விசாரிக்கிறவரென்பதை’ நம்புங்கள். (1 பேதுரு 5:7; சங்கீதம் 55:22) “எல்லாப் புத்திக்கும் மேலான” சமாதானத்துடன் யெகோவா உங்களைப் பலப்படுத்த முடியும். அது, “உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் காத்துக்கொள்ளும்,” தவறான ஆசைகளுக்கு அடிபணிந்துவிடாதிருக்க “இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியைக்” கொடுக்கும். (பிலிப்பியர் 4:7; 2 கொரிந்தியர் 4:7, NW) “எப்பொழுதெல்லாம் என் எண்ணங்கள் என்னை அலைக்கழிக்கின்றனவோ அப்பொழுதெல்லாம் நான் ஜெபிக்கிறேன்; யெகோவா என்னைப் பலப்படுத்துகிறார். அவருடைய உதவியின்றி இந்தப் பழக்கத்தை என்னால் விட்டொழித்திருக்க முடியாது. ஜெபம் என்னுடைய உயிர்நாடி!” என்று ஈரினப் புணர்ச்சி பழக்கத்தில் விழுந்துவிடும் பயத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்த செரா சொல்கிறாள்.​—சங்கீதம் 94:18, 19; எபேசியர் 3:20.

இரண்டாவது கட்டியெழுப்பும் ஆன்மீக விஷயங்களால் உங்கள் மனதை நிரப்புங்கள். (பிலிப்பியர் 4:8) தினமும் பைபிளை வாசியுங்கள். நற்காரியத்திற்காக உங்கள் மனதையும் இருதயத்தையும் செதுக்கிச் சீரமைக்கும் அதனுடைய வல்லமையை ஒருபோதும் குறைவாக மதிப்பிடாதீர்கள். (எபிரெயர் 4:12) 1 கொரிந்தியர் 6:9, 10; எபேசியர் 5:3 ஆகிய வசனங்களும் பைபிளிலுள்ள பிற வசனங்களும் நான் சீர்படுவதற்குப் பெரிதும் உதவின. எப்பொழுதெல்லாம் தவறான ஆசைகள் எழுந்தனவோ அப்பொழுதெல்லாம் இந்த வசனங்களைப் படித்தேன்” என்று ஜேஸன் என்ற இளைஞன் கூறுகிறான்.

மூன்றாவது தவறான எண்ணங்களுக்கு மட்டுமே எண்ணெய் வார்க்கும் ஆபாசத்தையும் ஓரினப்புணர்ச்சிப் பழக்கத்தைத் தூண்டும் எந்தக் காரியத்தையும் ஒதுக்கித்தள்ளுங்கள். b (சங்கீதம் 119:37; கொலோசெயர் 3:5, 6) மேலும் சில திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் ஓரினப்புணர்ச்சி என்பது மாறுபட்ட ஒரு வாழ்க்கை முறைதான் என்ற எண்ணத்தை வளர்க்கின்றன. “இந்த உலகத்தின் கேவலமான சிந்தனை என் மனதைக் கெடுத்தது; பாலியல் பற்றிய குழப்பத்தை அதிகரிக்கச் செய்தது. இப்பொழுது ஓரினப்புணர்ச்சிப் பழக்கத்திற்கு வழிசெய்யும் எதையும் அல்லது யாரையும் அறவே விலக்குகிறேன்” என்று சொல்கிறாள் அனா.​—நீதிமொழிகள் 13:20.

நான்காவது நம்பகமான நபரை நாடுங்கள். அவரிடமோ அவளிடமோ உங்களுடைய எண்ணங்களை மனந்திறந்து சொல்லுங்கள். (நீதிமொழிகள் 23:26; 31:26; 2 தீமோத்தேயு 1:1, 2; 3:10) ஓலெஃப் என்பவர் ஒரு கிறிஸ்தவ மூப்பரின் உதவியை நாடினார்; “அவருடைய ஆலோசனை மிகவும் பலனுள்ளதாயிருந்தது. ரொம்ப நாட்களுக்கு முன்பாகவே அவரிடம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்று நினைத்தேன்” என்று கூறுகிறார்.

மனந்தளர்ந்து விடாதீர்கள்!

‘உங்களுக்கு எவ்விதமான பாலியல் ஆசைகள் இருக்கின்றனவோ, அவற்றை அனுபவிப்பதில் தவறே இல்லை, நீங்கள் எப்படியோ அப்படியே இருங்கள்’ என்று சிலர் சொல்லுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதைவிடச் சிறந்த விதத்தில் உங்களால் இருக்க முடியுமென்று பைபிள் சொல்கிறதே! உதாரணமாக, முற்காலத்தில் ஓரினப்புணர்ச்சிக்காரர்களாக இருந்த பூர்வ கிறிஸ்தவர்கள் சிலர் தங்களை மாற்றிக்கொண்டார்கள் என்று அது சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:9-11) நீங்களும் இந்தப் போராட்டத்தில் வெற்றிபெற முடியும்; தற்போது அந்தப் போராட்டம் உங்கள் மனதில் மட்டுமே நடந்தாலும்கூட.

அத்தகைய ஆசைகள் உங்களைச் சதா வாட்டிவதைத்தால் மனந்தளர்ந்து விடாதீர்கள் அல்லது உங்களால் திருந்தவே முடியாதென்று முடிவுகட்டி விடாதீர்கள். (எபிரெயர் 12:12, 13) சில சமயங்களில் தவறான மனச்சாய்வுகளோடு நாம் எல்லாருமே போராடுகிறோம். (ரோமர் 3:23; 7:21-23) தவறான ஆசைகளுக்கு நீங்கள் இணங்க மறுக்கும்போது நாளடைவில் அவை சுவடிதெரியாமல் மறைந்துவிடலாம். (கொலோசெயர் 3:5-8) எல்லாவற்றிற்கும் மேலாக, யெகோவாவின் உதவியை நாடுங்கள். அவர் உங்களை நேசிக்கிறார். எது உங்களைச் சந்தோஷப்படுத்துமென்றும் அறிந்திருக்கிறார். (ஏசாயா 41:10) ஆம்,கர்த்தரை நம்பி நன்மைசெய்; . . . அவர் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.”​—சங்கீதம் 37:3, 4.

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . .” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்

சிந்திப்பதற்கு

◼ ஓரினச்சேர்க்கை பழக்கத்தை கடவுள் ஏன் கண்டனம் செய்கிறார்?

◼ ஒத்த பாலினத்தவரிடம் ஈர்க்கப்படுவதை எதிர்த்து நீங்கள் போராடி வந்தால் என்ன செய்யலாம்?

◼ நீங்கள் ஒத்த பாலியல் தூண்டுதலை எதிர்த்துப் போராடி வந்தால் யாரிடம் மனந்திறந்து பேசலாம்?

[அடிக்குறிப்புகள்]

a பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

b பிரபலமாகி வரும் ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது. இதைப் பின்பற்றும் ஆண்கள் விசேஷமாக தங்களுடைய தோற்றத்திற்கே அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்த வாழ்க்கை முறை ஓரினப்புணர்ச்சிப் பழக்கத்துக்கும் இயல்பான உடலுறவுக்கும் வித்தியாசமில்லாதபடி செய்துவிட்டிருக்கிறது. ஓர் ஆதாரப்பூர்வ விளக்கத்தின்படி, ‘இந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுகிற ஒரு நபர், வெளிப்படையாகவே ஓரினப்புணர்ச்சி, இயல்பான புணர்ச்சி அல்லது ஈரினப் புணர்ச்சிப் பழக்கமுள்ளவராக இருக்கிறார், ஆனால் அவருக்கு அது ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் அவர் தன்மீதே மோகம் கொண்டவர், தனக்குச் சந்தோஷம் கொடுக்கும் அனைத்துப் புணர்ச்சிகளுமே அவருக்கு முக்கியம்.’ இந்த வாழ்க்கைமுறை ஏன் பிரபலமாயிற்று என்பதைப் பற்றி என்ஸைக்ளோப்பீடியா ஒன்று இவ்வாறு சொல்கிறது: “இன்றைய சமுதாயத்தில் ஓரினப்புணர்ச்சிப் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதேசமயத்தில் ஓரினப்புணர்ச்சியைச் சமுதாயம் ஒதுக்கித்தள்ளின காலம் மலையேறிவிட்டது, ஆண்களின் குணங்களைப்பற்றிய மனப்பான்மையும் உண்மையில் மாறிவிட்டது.”

[பக்கம் 30-ன் படம்]

முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவரின் உதவியை நாடுங்கள்