Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவத்தின் எதிர்காலம் என்ன?

கிறிஸ்தவத்தின் எதிர்காலம் என்ன?

கிறிஸ்தவத்தின் எதிர்காலம் என்ன?

உலகிலுள்ள அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறிவிடுவார்களா அல்லது கிறிஸ்தவம் மறைந்துவிடுமா? இருள்சூழ்ந்த இவ்வுலகில் கிறிஸ்தவம் இன்னமும் சுடர்விட்டுப் பிரகாசிக்கிறதா அல்லது கறைபடிந்து மங்கிவிட்டதா? இக்கேள்விகள் இன்றுவரை நம் மனதைக் குடைகின்றன.

இயேசு, தாம் கிறிஸ்தவத்தின் விதையை விதைத்த உடனே சாத்தான் என்ற ஓர் எதிரி அதில் தலையிடுவான் என்பதை ஓர் எளிய உவமையின்மூலம் விளக்கினார். (மத்தேயு 13:24, 25) எனவே, இயேசுவின் ஊழியத்திற்குப் பிறகு வந்த முதல் சில நூற்றாண்டுகளில் கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக் காரணம், வெறுமனே சமுதாயச் சூழ்நிலையல்ல. அது ஓர் எதிரியின் சதி, சாத்தானின் செயல். இன்று கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் முன்பு செய்த தவறுகளையே தொடர்ந்து செய்து வருகின்றன. அதனால் அதன் விளைவுகளை அனுபவிக்கின்றன.​—2 கொரிந்தியர் 11:14, 15; யாக்கோபு 4:4.

கிறிஸ்தவத்தின் மீது ஓர் மறைமுக தாக்குதல்

தம்முடைய போதனைகள் திரித்துக் கூறப்படும் என இயேசு முன்னறிவித்தார். அவர் சொன்னார்: “பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.” அந்தச் சத்துரு செய்த அநியாயத்தை வீட்டெஜமானிடம் வேலைக்காரர்கள் சொல்லி, களைகளைப் பிடுங்கிப் போடுவதற்கு அனுமதி கேட்டபோது ஆச்சரியகரமாக, அவர் இவ்வாறு சொன்னார்: “வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.”​—⁠மத்தேயு 13:24-30.

இயேசு தாமே விளக்கினபடி, இந்த உவமையில் கோதுமையை விதைத்த அந்த மனிதன் இயேசுவிற்கு அடையாளமாக இருக்கிறான். அவன் விதைத்த அந்த விதை உண்மைக் கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்துகிறது. கோதுமை மத்தியில் களைகளை விதைத்த அந்த எதிரி ‘பிசாசிற்கு’ அடையாளமாக இருக்கிறான். அந்தக் களைகள், தங்களை கடவுளுடைய ஊழியர்களென உரிமைபாராட்டும் நியாயமற்ற விசுவாசதுரோகிகளை அடையாளப்படுத்துகின்றன. (மத்தேயு 13:36-42) மேற்கொண்டு நடக்கவிருக்கும் விஷயங்களைப்பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் கூடுதல் தகவலை அளித்திருக்கிறார். அவர் சொன்னார்: “நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.”​—அப்போஸ்தலர் 20:29, 30.

கிறிஸ்தவத்தில் கலப்படம்

இயேசுவின் உவமையும் பவுலின் தீர்க்கதரிசனமும் நிறைவேறினவா? ஆம், நிச்சயம் நிறைவேறின. லட்சிய வேட்கையுள்ள மனிதர்கள் இயேசு ஸ்தாபித்த சபையை தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்து சுயநலமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். இயேசு தம் சீஷர்களிடம், ‘நீங்கள் உலகத்தாரல்ல’ என்று சொல்லியிருந்தார். (யோவான் 15:19) இருந்தாலும், பதவி ஆசைபிடித்த மனிதர்கள் தேசத்தின் ஆட்சியாளர்களோடு கூட்டு சேர்ந்துகொண்டு தேசத்தால் ஆதரிக்கப்பட்ட சர்ச்சுகளை உருவாக்கினார்கள். அதனால் சர்ச்சுகள் அதிகாரத்தையும் ஆஸ்தியையும் குவித்தன. இந்த சர்ச்சுகள் “மாறுபாடானவைகளைப்” போதித்தன. உதாரணத்திற்கு, தேசத்தை வணங்கும்படி போதித்தன. தேசத்திற்காகப் போரிட்டு தங்கள் உயிரை தியாகம் செய்யும்படியும் போதித்தன. அதனால், கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொண்டவர்கள், புனிதப் போர்களில் ஈடுபட்டு விசுவாசிகளல்லாத மக்கள் என தாங்கள் கருதினவர்களைக் கொன்றார்கள். அதுமட்டுமல்ல, போருக்குச் சென்று தங்கள் மதத்தைச் சேர்ந்த தங்களுடைய சொந்த “சகோதரர்களை” கொன்றார்கள். அவர்கள் நிச்சயம் கிறிஸ்தவ நடுநிலைமையையும் வகிக்கவில்லை, பிறரிடம் அன்புகூர வேண்டும் என்ற கட்டளைக்கும் கீழ்ப்படியவில்லை.​—மத்தேயு 22:37-39; யோவான் 15:19; 2 கொரிந்தியர் 10:3-5; 1 யோவான் 4:8, 11.

பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டின சர்ச்சுகள் வெளி வேஷமே போட்டிருக்கின்றன என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால்தான், நாம் முந்தின கட்டுரையில் பார்த்தபடி, சர்ச்சுகள் தொடர்ந்து தனித்தனி பிரிவுகளாகப் பிரிந்துவிடுகின்றன, அரசியலில் ஈடுபடுகின்றன, மேலும் கடவுளுடைய சட்டங்களை நிராகரிக்கின்றன. இவையெல்லாம் சாத்தான் விதைத்த பொய்க் கிறிஸ்தவத்தின் கனியே அல்லாமல், நிச்சயம் உண்மைக் கிறிஸ்தவத்தின் கனியல்ல. இந்தப் பொய் மதத்திற்கு என்ன ஆகப் போகிறது? இயேசு தமது உவமையில் சொன்னபடி, வெறுமனே ஆதரவு கிடைக்காத காரணத்தால் அது அழிந்துவிடாது. முதலில் அது நியாயந்தீர்க்கப்பட்டு, பிறகு அழிக்கப்படும்.

உண்மைக் கிறிஸ்தவர்கள் இருளில் பிரகாசிக்கிறார்கள்

என்றாலும், பொய்க் கிறிஸ்தவத்தின் ‘களைகள்’ சேகரிக்கப்பட்டு அழிக்கப்படுவதற்கு முன்பு இன்னொரு காரியமும் நடக்க வேண்டுமென்று இயேசுவின் உவமை கூறுகிறது. பல நூற்றாண்டுகளாக பொய்க் கிறிஸ்தவமாகிய களைகள் ஓங்கி வளர்ந்து உண்மைக் கிறிஸ்தவமாகிய ‘கோதுமையை’ கிட்டத்தட்ட மறைத்தேவிட்டன. ஆனால், “அறுப்புக்காலத்தில்” கோதுமையும் களைகளும் பிரித்தெடுக்கப்படும் என இயேசு குறிப்பிட்டார். அந்த ‘அறுப்புக்காலம்’ ‘உலகத்தின் முடிவைக்’ குறிப்பதாக அவர் கூறினார். அந்தச் சமயத்தில், “நீதிமான்கள் . . . சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள்” என்றும் அவர் சொன்னார். (மத்தேயு 13:39-43) முதலாம் உலக யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து நாம் உலகத்தின் முடிவு காலத்தில் வாழ்ந்துவருகிறோம் என்பதாக அத்தாட்சி காட்டுகிறது. அந்த யுத்தம் நடந்து இப்போது 90 வருடங்கள் உருண்டோடிவிட்டன. (மத்தேயு 24:3, 7-12) இயேசு தீர்க்கதரிசனமாகக் கூறிய உவமையின் இந்தப் பாகமும் நிறைவேறிவிட்டதா?

உண்மைக் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவமண்டல ‘களைகளிலிருந்து’ பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். உண்மையான கடவுளாகிய யெகோவாவைப்பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்ள உதவுவதன்மூலம் யெகோவாவின் சாட்சிகள், ‘சூரியனைப் போலப் பிரகாசிக்கிறார்கள்.’ அவருடைய தராதரங்களை அவர்கள் மாற்றுவதில்லை. மாறாக, சாட்சிகளாய் ஆகிறவர்கள் பைபிளிலுள்ள கிறிஸ்தவ நியமங்களின்படி வாழ்வதற்குப் பொதுவாக தங்கள் வாழ்க்கையில் எண்ணற்ற மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய கூட்டங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை. அதற்குப் பதிலாக, பைபிளை இலவசமாகக் கற்றுத்தருகிறார்கள். பைபிளை ஆராய்ந்து படிப்பதன்மூலம் தாங்கள் வெளிக்காட்ட வேண்டுமென்று கற்றுக்கொண்ட நல்ல குணங்களை மற்றவர்களிடம் காண்பித்து, அன்போடும் சிநேகபாவத்தோடும் பழகுகிறார்கள். கடவுள் தம் ஆதி நோக்கத்தின்படி, இந்தப் பூமியை பூங்காவனப் பரதீஸாக மாற்றி அதில் சாந்த குணமுள்ளவர்களைக் குடியிருக்க வைப்பார் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் முதலாவதாக, மகா பாபிலோன் என பைபிளில் சொல்லப்படுகிற பொய் மதத்தின் தீய செல்வாக்கிலிருந்து இந்தப் பூமி சுத்திகரிக்கப்பட வேண்டும். பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி, யெகோவா வெகு சீக்கிரத்தில் அந்த மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறார்.​—மத்தேயு 5:5; வெளிப்படுத்துதல் 18:9, 10, 21.

கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள், பொய் மதத்தின் பொய்யான பழக்க வழக்கங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு உண்மையான கிறிஸ்தவ வணக்கம் பூமியில் வாழும் அனைவரையும் ஒன்றுபடுத்தும். இயேசு விதைத்த உண்மைக் கிறிஸ்தவத்திற்கு அது எப்பேர்ப்பட்ட ஓர் அருமையான எதிர்காலம்! சமாதானம் சூழ்ந்த பூமியில் ஏதேனிய பரதீஸ் தோட்டம் மீண்டும் நிலைநாட்டப்படும். அப்போது உலகில் எந்தப் பொய் மதமும் இருக்காது, எந்தக் குழப்பமும் மீண்டும் எழாது!

[பக்கம் 7-ன் படம்]

“அவனுடைய சத்துரு வந்து, . . . களைகளை விதைத்துவிட்டுப் போனான்.” ​—⁠மத்தேயு 13:25

[பக்கம் 8, 9-ன் படங்கள்]

யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு வரும்படி உங்களைக் கனிவுடன் அழைக்கிறோம். பைபிளிலுள்ள விஷயங்கள் அங்கு இலவசமாகக் கற்பிக்கப்படும்

[பக்கம் 9-ன் படம்]

“கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்.”​—⁠மத்தேயு 13:⁠30