Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா?

சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா?

பைபிளின் கருத்து

சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா?

சாத்தான் என்ற ஒருவன் இல்லவே இல்லை என்கிறார்கள் நவீன கல்விமான்கள் சிலர். அதெல்லாம் வெறும் மனித கற்பனையே எனச் சொல்கிறார்கள். இந்தக் கருத்து ஒன்றும் புதிதல்ல. “தான் இல்லையென நம்மை நம்ப வைப்பதே பிசாசின் படுமோசமான சூழ்ச்சி” என்று எழுதினார் 19-ஆம் நூற்றாண்டுக் கவிஞர், ஷார்ல் பையர் போட்லாயர்.

சாத்தான் நிஜமான ஆளா? அப்படியென்றால், அவன் எப்படித் தோன்றினான்? உலகத்தை உலுக்கியெடுக்கும் பிரச்சினைகளுக்குப் பின்னால் மறைந்திருப்பது அவன்தானா? அவனுடைய தீய செல்வாக்குகளிலிருந்து நீங்கள் எவ்வாறு தப்பிக்கலாம்?

பைபிள் என்ன சொல்கிறது?

சாத்தான் என்பவன் நிஜமான ஓர் ஆள் என்பதாகவே பைபிள் சொல்கிறது; அவன் காணக்கூடாத ஆவி மண்டலத்தில் இருப்பதாக அது குறிப்பிடுகிறது. (யோபு 1:6) அவனுடைய பொல்லாத, மூர்க்கமான குணங்களைப் பற்றியும் அவனுடைய கெட்ட செயல்களைப் பற்றியும் அது நமக்குச் சொல்கிறது. (யோபு 1:13-19; 2:7, 8; 2 தீமோத்தேயு 2:26) அதுமட்டுமல்ல, கடவுளுடனும் இயேசுவுடனும் அவன் பேசிய விஷயங்களையும் அது பதிவு செய்து வைத்திருக்கிறது.​—யோபு 1:7-12; மத்தேயு 4:1-11.

அவன் எப்படி மிக மோசமான ஜீவியாக மாறினான்? கடவுள், மனிதனைப் படைப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே சர்வசிருஷ்டிக்கும் ‘முந்தின பேறான’ தம் மகனைப் படைத்தார். அவரே பிறகு இயேசு என அழைக்கப்பட்டார். (கொலோசெயர் 1:15) அதன் பிறகு தேவதூதர்கள் எனப்படும் ‘தேவபுத்திரரை’ படைத்தார். (யோபு 38:4-7) அவர்கள் அனைவரும் பரிபூரணர்களாகவும் நீதிமான்களாகவும் இருந்தார்கள். ஆனால், அவர்களில் ஒரு தூதன் சாத்தானாக மாறிவிட்டான்.

அந்தத் தூதன் படைக்கப்பட்டபோது சாத்தான் என அழைக்கப்படவில்லை. அது அவனுக்குக் கிடைத்த பட்டப்பெயரே. மூல கிரேக்க மொழியின்படி அதன் அர்த்தம், “எதிரி; பகைவன்; குற்றஞ்சாட்டுபவன்” என்பதாகும். அந்தத் தூதன் கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதால் சாத்தான் என அழைக்கப்பட்டான்.

அந்த ஆவி சிருஷ்டி கடவுள்மீது பகையையும் பொறாமையையும் வளர்த்துக்கொண்டான். மற்றவர்கள் தன்னை வணங்க வேண்டுமென விரும்பினான். கடவுளுடைய முதல் பேறான மகனாகிய இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது அவரையும் சாத்தான் விட்டுவைக்கவில்லை. அவர் தன்னை ‘வணங்கும்படி’ செய்ய முயன்றான்.​—மத்தேயு 4:9; பொது மொழிபெயர்ப்பு.

சாத்தான் “சத்தியத்திலே நிலைநிற்கவில்லை.” (யோவான் 8:44) அவன் கடவுளைப் பொய்யராகக் குற்றஞ்சாட்டினான், ஆனால் உண்மையில் அவன்தான் பொய்யன். ஏவாளிடம், அவள் கடவுளைப்போல் ஆக முடியும் என்று ஆசைகாட்டினான்; ஆனால், கடவுளாக இருக்க வேண்டுமென்ற ஆசை அவனுக்குத்தான் இருந்தது. தந்திரமான வழிகளில் தன் சுயநல ஆசையை அவன் தீர்த்துக்கொண்டான். கடவுளைவிட தன்னை ஏவாள் உயர்வாக நினைக்கும்படி செய்தான். சாத்தானுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் ஏவாள் அவனையே தன் கடவுளாக ஏற்றுக்கொண்டாள்.​—ஆதியாகமம் 3:1-7.

கலகத்தைக் கிளப்பிவிட்டதன் மூலம், நல்லவனாக இருந்த தூதன் தன்னைச் சாத்தானாக மாற்றிக்கொண்டான். கடவுளுக்கும் சரி மனிதருக்கும் சரி, அவன் எதிரியாகவும் விரோதியாகவும் இருக்கிறான். இந்தக் கெட்ட தூதனுக்கு “பிசாசு” என்ற பட்டப்பெயரும் உண்டு. மூல கிரேக்க மொழியில் இதன் அர்த்தம், “பழிதூற்றுபவன்.” பாவத்தின் தலைவனான இந்தத் தூதன், காலப்போக்கில் மற்ற தூதர்கள் மீதும் செல்வாக்கு செலுத்தினான். இப்படியாக, அவர்களையும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமற் போகும்படி செய்து தன்னுடைய கலகத்தில் சேர்த்துக்கொண்டான். (ஆதியாகமம் 6:1, 2; 1 பேதுரு 3:19, 20) அந்தத் தூதர்கள் மனிதரின் நிலைமையை மேம்படுத்தவில்லை. மாறாக, அவர்கள் சாத்தானுடைய சுயநல வழிகளையே பின்பற்றினதால், ‘பூமி கொடுமையினால் நிறைந்துவிட்டது.’​—ஆதியாகமம் 6:11; மத்தேயு 12:24.

சாத்தானின் செல்வாக்கு எந்தளவு சக்திவாய்ந்தது?

ஒரு குற்றவாளி, தன்னை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று நினைத்து, தன் கைரேகையைக் குற்றம் நடந்த இடத்திலிருந்து அழித்துவிடலாம். என்றாலும், போலீஸ்காரர்கள் வந்து பார்க்கையில், குற்றம் நடந்திருப்பதால் கண்டிப்பாக அதன்பின் ஒரு குற்றவாளி இருக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்கிறார்கள். அவ்வாறே, முதல் ‘கொலைபாதகனான’ சாத்தான், தன்னை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என நினைக்கிறான். (யோவான் 8:44; எபிரெயர் 2:14) ஏவாளிடம் பேசினபோது ஒரு சர்ப்பத்திற்குப் பின் மறைந்திருந்து பேசினான். இன்றும் மறைவாக இருக்கவே முயற்சி செய்கிறான். தான் படுதந்திரமாகச் செல்வாக்கு செலுத்துவதை மக்களிடமிருந்து மறைப்பதற்காக “அவிசுவாசிகளாகிய . . . அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.”​—2 கொரிந்தியர் 4:4.

என்றாலும், நாம் வாழ்கிற இவ்வுலகின் சீர்கேட்டிற்குக் காரணம் குற்றம் செய்வதில் கூர்மதி பெற்ற சாத்தானே என்று இயேசு கூறினார். அவனை இந்த “உலகத்தின் அதிபதி” என்று அவர் அழைத்தார். (யோவான் 12:31; 16:11) “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்று” அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். (1 யோவான் 5:19) ‘மாம்சத்தின் இச்சையையும், கண்களின் இச்சையையும், ஜீவனத்தின் பெருமையையும்’ அவன் மிகத் திறமையாகப் பயன்படுத்தி, ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிறான்.’ (1 யோவான் 2:16; வெளிப்படுத்துதல் 12:9) பெரும்பான்மையான மனிதவர்க்கம் அவனுக்குத்தான் கீழ்ப்படிகிறது.

ஏவாளைப் போலவே, சாத்தானுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் அவனைத் தங்கள் கடவுளாக ஆக்கிக்கொள்கிறார்கள். ஆகவே சாத்தான், ‘இப்பிரபஞ்சத்தின் தேவனாக’ இருக்கிறான். (2 கொரிந்தியர் 4:4) அவனுடைய ஆட்சியினால், பாசாங்கும் பொய்யும், போர்களும், இம்சையும் நாசமும், குற்றச்செயலும் பேராசையும் ஊழலுமே விளைவடைகின்றன.

அவனது செல்வாக்கிலிருந்து தப்புவது எப்படி?

“தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்” என்று பைபிள் எச்சரிக்கிறது. ஏன்? ஏனெனில், “உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” (1 பேதுரு 5:8) இந்த வசனம் எச்சரிப்பூட்டுவதாய் இருந்தாலும், தெளிந்த புத்தியில்லாதவர்களே அதாவது, விழிப்புடன் இராதவர்களே சாத்தானால் ‘மோசம்போக்கப்படுவார்கள்’ என்று உறுதியும் அளிக்கிறது.​—2 கொரிந்தியர் 2:11.

அதனால், சாத்தான் என்பவன் நிஜமான ஆள் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதோடு, கடவுள் ‘நம்மைச் சீர்ப்படுத்தவும்’ ‘நம்மைச் ஸ்திரப்படுத்தவும்’ அனுமதிக்க வேண்டும். நாம் அப்படிச் செய்வதன் மூலம், ‘[சாத்தானை] எதிர்த்து நின்று’ கடவுள் பக்கமாக இருக்கலாம்.​—1 பேதுரு 5:9, 10.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ சாத்தான் எப்படித் தோன்றினான்?​—யோபு 38:4-7; யோவான் 8:44.

◼ சாத்தான் இவ்வுலகின் மீது எந்தளவு செல்வாக்கு செலுத்துகிறான்?​—யோவான் 12:31; 1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:9.

◼ சாத்தானுடைய சூழ்ச்சிகளிலிருந்து தப்புவது எப்படி?​—1 பேதுரு 5:8-10.

[பக்கம் 12-ன் படங்கள்]

உலகத்தை உலுக்கியெடுக்கும் பிரச்சினைகளுக்குப் பின்னால் மறைந்திருப்பது சாத்தான்தானா?