Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“இயற்கையில் மிளிரும் புத்திக்கூர்மை”

“இயற்கையில் மிளிரும் புத்திக்கூர்மை”

“இயற்கையில் மிளிரும் புத்திக்கூர்மை”

ஜப்பானிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஜப்பானிலுள்ள ஆய்ச்சி என்ற இடத்தில் நடைபெற்ற எக்ஸ்போ 2005-⁠ல் மேற்கூறப்பட்ட கருத்தே பலமாக ஒலித்தது; இதில் 121 நாடுகள் பங்கேற்றன. இயற்கையிடமிருந்து பாடம் படிக்கவும், “பொருளாதார முன்னேற்றத்துக்காக இயற்கை வளங்களைப் பயன்படுத்துகையில், சுற்றுச்சூழல் சமநிலையைக் கெடுத்துவிடாதபடியும்” பார்வையாளர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள். மத்திய ஜப்பானிலுள்ள நகாயா என்ற நகரத்திற்கு அருகிலிருந்த இந்தக் கண்காட்சி வளாகத்தில் வனங்களும் குளங்களும் மலர்களும் சிறப்பம்சங்களாக இடம் பெற்றிருந்தன. 2.6 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த உயரமான நடைபாதை தனித்தன்மையுடன் அனைவரையும் வசீகரித்தது; இதற்கு குளோபல் லூப் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. சுமார் 21 மீட்டர் அகலமான இந்நடைபாதை அதன் கீழிருந்த இயற்கை அழகைக் குலைக்காத வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது; அங்கேயிருந்து எக்ஸ்போவின் கண்கவர் காட்சிகளைப் பார்த்து ரசிக்க முடிந்தது.

இயற்கையோடு ஒன்றி . . .

ஜப்பானியர்களுடைய காட்சியரங்கின் வெளிப்புறம், 23,000 மூங்கில்களால் “உறை” போல வேயப்பட்டிருந்தது. இது பார்ப்பதற்கு பட்டுப்பூச்சியின் பிரமாண்டமான கூடு போல இருந்தது, அதோடு சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் குடையாகவும் அமைந்தது. கிட்டத்தட்ட 7 மீட்டர் நீளமுடைய மூங்கில்கள் இதற்குப் பயன்படுத்தப்பட்டன; அதோடு 19 மீட்டர் உயரமும், 90 மீட்டர் அகலமும், 70 மீட்டர் நீளமும் கொண்ட கட்டடமாக இருந்ததால் இதுவே உலகின் மிகப்பெரிய மூங்கில் கட்டமைப்பாகத் திகழ்ந்தது. 360 டிகிரி கோணத்தில் கோள வடிவில் அமைக்கப்பட்ட வீடியோ காட்சி இந்த அரங்கின் தனிச்சிறப்பு அம்சமாக விளங்கியது. 12.8 மீட்டர் விட்டத்தை உடைய கோளத்தினுள்ளே திரும்பிய பக்கமெல்லாம் இயங்கு படக்காட்சிகள் தெரிந்தன; எனவே வீடியோவில் பார்ப்பதுபோல இல்லாமல் நிஜத்தில் பார்ப்பதுபோலவே அனைத்தும் தெரிந்தன. இவ்வாறு, ஒரு வகையில், பூமியோடும் அதன் ஏராளமான உயிரினங்களோடும் ஒன்றிவிடுகிற உணர்வைப் பார்வையாளர்களால் பெற முடிந்தது.

மலேசியா அரங்கிலிருந்த மல்டிமீடியா காட்சிகளில் அங்குள்ள மழைக் காடுகளும் பவளப் பாறைகளும் காட்டப்பட்டன. தாய்லாந்து காட்சியரங்கில் டிசம்பர் 26, 2004-⁠ல் ஏற்பட்ட சுனாமி பற்றிய மனதை உருக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன; “மனிதன் இயற்கையை அடக்கியாள முடியாது” என்ற உண்மையை இது பார்வையாளர்களுக்கு உணர்த்தியது. தென்னாப்பிரிக்கா அரங்கில், உயிரினங்கள் அழிந்துவருகிற அபாயத்தைச் சுட்டிக்காட்டுவதற்காக, வரிக்குதிரையைப் போலிருக்கிற பாலூட்டி விலங்கான குவாகா குட்டியின் மாதிரி உருவம் வைக்கப்பட்டிருந்தது; தென்னாப்பிரிக்கச் சமவெளிகளில் சுற்றித்திரிந்த இவ்விலங்கு 19-⁠ஆம் நூற்றாண்டில் அந்தளவுக்கு வேட்டையாடப்பட்டதால் அடியோடு மறைந்து போனது.

எக்ஸ்போவின் முக்கிய அரங்கிற்கு அருகே 2002-⁠ல் ரஷ்யாவிலுள்ள சைபீரியாவின் நிலைவுறைபனி நிலத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட மமத் எனப்படும் யானை இன விலங்கின் எஞ்சிய பாகங்கள் குளிர்பதன நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. யூகாகீர் என்ற இடத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டதால், அதற்கு யூகாகீர் மமத் என்று பெயரிடப்பட்டுள்ளது; மறைந்துவிட்ட இந்த விலங்கிற்கு இரண்டு பெரிய வளைந்த தந்தங்கள் உள்ளன; அதோடு இதன் கண்கள் பாதி திறந்த நிலையில் உள்ளன. தலையில் தோலும் அடர்ந்த ரோமங்களும் அழியாமல் இருக்கின்றன. வியக்கவைக்கும் இந்த விலங்கு, உயிரினங்கள் அழிந்து வருவதை நினைவுபடுத்துகிற மற்றொரு அவலமான உதாரணம்.

எதிர்காலம் மேம்படுமா?

பூமியின் எதிர்காலத்தை அச்சுறுத்துகிற தூய்மைக்கேடு, புவிச்சூடு போன்றவற்றை மனிதன் எவ்வாறு சமாளிக்கப் போகிறான்? “எக்ஸ்போ 2005-⁠ன் சின்னம்” என்று வர்ணிக்கப்பட்ட பிரமாண்டமான “பச்சை” சுவர் நிறுத்தப்பட்டிருந்தது; உயிரியல் நுரையீரல் என அழைக்கப்பட்ட இச்சுவர், 150 மீட்டர் நீளமும் 15 மீட்டர் உயரமுமாய் இருந்தது. 200 வகையான 2,00,000 தாவரங்களையும், பூக்களையும் வைத்து இது உருவாக்கப்பட்டிருந்தது. இதை தட்பவெப்ப மாறுதல்களுக்கு ஏற்றவிதமாக மாற்றியமைக்க முடியும்; அத்துடன், இது கார்பன் டை-ஆக்ஸைடை உள்ளிழுத்து ஆக்ஸிஜனை வெளிவிடுகிறது; எனவே இதுபோன்ற பல “நுரையீரல்கள்” நகரத்தின் சுவாச உறுப்பாகவும் காற்று ஃபில்டராகவும் செயல்பட முடியும் என்பதாகப் பரிந்துரைக்கப்பட்டது.

மின்சக்தியால் இயங்குகிற புதியவகை பேருந்துகளும் இந்த எக்ஸ்போவில் சிறப்பு அம்சங்களாகத் திகழ்ந்தன. பயணிகளை இங்கும் அங்கும் அழைத்துச் சென்ற இந்தப் பேருந்துகளின் புகைபோக்கியிலிருந்து தண்ணீர் மட்டுமே வெளியேறியது. ஜப்பானில் முதன்முதலாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்த மிதக்கும் காந்த அமைப்பு ரயில் வண்டிகள் தொழில்நுட்பப் பிரியர்களுக்கு மற்றொரு விருந்தாக அமைந்தன; இதற்கு லினிமோ என்று பெயர். சக்திவாய்ந்த காந்தங்களின் உதவியோடு தண்டவாளத்துக்கு மேலே சுமார் 8 மில்லிமீட்டர் இடைவெளியில் லினிமோ வழுக்கிக்கொண்டு அமைதியாக ஓடியது. மின்கலத்தில் இயங்குகிற டிராம்களும், இரண்டு சக்கர சைக்கிள் டாக்ஸிகளும், ஓட்டுநர் இல்லாமலும்கூட இயங்குகிற பேருந்துகளைப் போன்ற வாகனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இரண்டிரண்டாக அல்லது மும்மூன்றாக படுவேகத்தில் சென்ற இந்த அதிநவீன வாகனங்கள் நிலவாயுவை பயன்படுத்துகின்றன; இது சாதாரண எரிவாயுவைக் காட்டிலும் அதிக சுத்தமானது.

உணவுப்பொருள்களின் குப்பைக்கூளங்கள் போன்ற கரிமக் கழிவுகளிலிருந்து மின்சாரத்தையும் உரத்தையும் தயாரிப்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த அரங்கத்திலிருந்த மின் உற்பத்தி நிலையம் மீத்தேன் ஃபெர்மென்டேஷன் முறையில் இதைத்தான் செய்தது. குப்பைக்கூளங்களை எரித்துச் சாம்பலாக்குவதற்குப் பதிலாக, அவற்றை நொதிக்க வைத்து மீத்தேன் வாயுவாக மாற்றி, அதிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுத்தது. வேதிவினைகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிற எரிகலன்கள், ஹைட்ரஜனை ஆக்ஸிஜனுடன் கலப்பதன்மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்தன. இதிலிருந்து நீரும் உரமும் உபபொருட்களாகக் கிடைக்கின்றன. இந்த எக்ஸ்போ அரங்கத்தில் உண்டான கரிமக் கழிவுகளையெல்லாம் சேர்த்து இந்த மின் நிலையம் மின்சாரத்தைத் தயாரித்தது; அங்கிருந்த சில அரங்குகளுக்கு இந்த மின்சாரமே சப்ளை செய்யப்பட்டது.

ரோபாட்டுகள் துறையிலும் கணிசமான ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது; இத்துறை மனிதர்களுக்கு கூடமாட உதவி செய்கிற எடை குறைவான ரோபாட்டுகளைத் தயாரிப்பதை லட்சியமாகக் கொண்டுள்ளது. ஏழு ரோபாட்டுகள் ஓர் அரங்கிலிருந்த மேடைக்குச் சென்று இசைக்கருவிகளை வாசித்தன; இவை ரோபாட் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சில முன்னேற்றங்களைக் காட்டுவதோடு அங்கிருந்த கூட்டத்தினரையும் கவர்ந்தன. சில ரோபாட்டுகள் கிளாரினட் போன்ற கருவிகளை வாசித்தபோது அவற்றின் “விரல்கள்” சாவிகளில் வேகமாக இயங்கின; மற்றவை டிரம்ஸ் இசைத்தன. “மனிதர்கள்தான் ரோபாட் வேடத்தில் வாசிக்கிறார்களோ என நினைக்கத் தோன்றும் அளவுக்கு அந்தக் கருவிகளை அவை வேகமாகவும் நளினமாகவும் இயக்கின” என பார்வையாளர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.

மக்காச்சோள மாவிலிருந்தும் அதுபோன்ற பிற பொருள்களிலிருந்தும் தயாரிக்கப்பட்ட மக்கிப்போகக்கூடிய பிளாஸ்டிக், நேனோகுமிழிகள் ஆகியவை உயர் தொழில்நுட்பத்தின் மற்ற இரண்டு கண்டுபிடிப்புகளாக இருந்தன; இந்தக் குமிழிகள் விட்டத்தில் 200 நேனோமீட்டருக்கும் குறைவான சின்னஞ்சிறிய வாயு குமிழிகள் ஆகும். மனிதருடைய தலைமுடியின் விட்டம் சுமார் 50,000 நேனோமீட்டர்கள். பொதுவாக இத்தகைய சின்னஞ்சிறிய குமிழிகள் நிலையற்றவை, அதோடு சட்டென்று மறைந்துவிடுபவை. இருந்தபோதிலும், ஜப்பானிலுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆக்ஸிஜனின் நிலையான நேனோகுமிழிகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள்; “மீனுக்கும், சிப்பி மீனுக்கும் சுற்றுச்சூழலில் ஏற்படுகிற மாற்றத்துக்கு ஒத்துப்போவதற்கான ஆற்றலை” இது மேம்படுத்துகிறது. சொல்லப்போனால், ஆக்ஸிஜன் நேனோகுமிழிகள் நிறைந்த மீன்தொட்டிகளில் சில வகையான நன்னீர்வாழ் மீன்களும் கடல்நீர்வாழ் மீன்களும் சிரமமின்றி வலம் வந்தன. மீன் வளர்ப்பிலும், விவசாயத்திலும், இன்னும் மற்ற துறைகளிலும் இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வாய்ப்பிருக்கலாமென ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

உலகத்தின் ‘காதில்’ விழுகிறதா?

‘இயற்கையில் மிளிருகிற புத்திக்கூர்மைக்கு’ செவிசாய்க்க வேண்டியதன் அவசியத்தை இந்த எக்ஸ்போ வலியுறுத்தியபோதிலும், பொதுவாக இது உலகத்துக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது. இயற்கையிடமிருந்து பாடம் படிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறவர்களின் குரலைவிட அறியாமையும், பேராசையும், ஊழலும் நிறைந்த ஆட்களுடைய குரல்தான் மேலோங்கியிருக்கிறது. அதன் விளைவாக, ஒரு கண்காட்சியில் தெரிவிக்கப்பட்டபடி, இந்தப் பூமி, “காயமுற்ற கோளமாக” ஆகியிருக்கிறது. என்றாலும், மனிதருடைய பிரச்சினைகளுக்கும் பூமியின் சூழியல்சார்ந்த இன்னல்களுக்கும் நல்லெண்ணம் கொண்ட ஆட்களாலும்கூட நம்பகமான பதில்களைத் தர முடியவில்லை. பைபிள் சொல்கிறபடி, இதற்கான பதில்கள் மனித அறிவுக்கும் புத்திக்கூர்மைக்கும் அப்பாற்பட்டவை. (எரேமியா 10:23) இருந்தபோதிலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வே இல்லை என முடிவுகட்ட வேண்டியதில்லை. ஏன் அப்படிச் சொல்கிறோம்?

புத்திக்கூர்மையின் பிறப்பிடமாகத் திகழ்கிற நம் படைப்பாளர், தம்முடைய கைவண்ணங்களை மனிதர்கள் குலைத்துப் போடுவதற்கு முன்பு இந்தப் பூமியின் விவகாரங்களில் தலையிடுவார் என்பதாக பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 4:11; 11:18) “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்” என்று சங்கீதம் 37:10, 11 தெரிவிக்கிறது. உண்மைதான், இயற்கைக்குச் செவிகொடுப்பது புத்திசாலித்தனம்; ஆனால் படைப்பாளருக்குச் செவிகொடுத்தால் அதாவது, அவருடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளை வாசித்து அதிலுள்ளவற்றைக் கடைப்பிடித்தால் புத்திசாலிகளையும் விஞ்சிவிடலாம். (2 தீமோத்தேயு 3:16) அவ்வாறு செய்கிற எல்லாருமே, நோய்பிடித்த நம் கோளம் பூரண குணமடைவதையும் அதோடு பூங்காவனம் போன்ற பரதீஸாக மாறுவதையும் காண்பார்கள்.​—லூக்கா 23:⁠43.

[பக்கம் 24-ன் படம்]

நேனோகுமிழிகள் நிறைந்த மீன்தொட்டி

[பக்கம் 24-ன் படம்]

ஓட்டுநரில்லாத பேருந்துகள்

[பக்கம் 24, 25-ன் படம்]

360 டிகிரி கோள வடிவ வீடியோ காட்சி

[பக்கம் 25-ன் படம்]

200 வகையான 2,00,000 தாவரங்களால் செய்யப்பட்ட உயிரியல் நுரையீரல்

[பக்கம் 25-ன் படம்]

பார்வையாளர்களைச் சுண்டியிழுத்த ரோபாட்டுகளின் இசைக் கச்சேரி