Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ “செல்ஃபோனில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுகிறவர்கள், அதைக் கையில் பிடித்துக்கொள்ள அவசியமிராதபோதிலும், குடித்துவிட்டு ஓட்டுகிற டிரைவர்களைப்போலவே மந்தநிலையில் இருக்கிறார்கள்” என்கிறது ஓர் ஆய்வறிக்கை.​—⁠ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை, அ.ஐ.மா.

◼ 2006-⁠ன் முதல் ஐந்து மாதங்களில் மட்டுமே குவாதமாலா நகர அரசுப் பேருந்துகளில் துப்பாக்கி முனையில் 30,200 கொள்ளைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. பேருந்து ஓட்டுனர்கள் அல்லது உதவியாளர்கள் பதினான்கு பேரும், பயணிகள் பத்துப் பேரும் உயிரிழந்தனர்.​—⁠பிரென்ஸா லிபர், குவாதமாலா.

◼ இரத்தத்தைத் தானமாகப் பெறுவது, அதைப் பரிசோதனை செய்வது ஆகியவை சம்பந்தமாக WHO நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட 124 நாடுகளில், 56 நாடுகள் “தானமாகப் பெறப்பட்ட எல்லாருடைய இரத்தத்திலும் ஹெச்ஐவி, பி மற்றும் சி கல்லீரல் அழற்சி, மேகநோய் போன்ற நோய்களைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை.”​—⁠உலக சுகாதார மையம், சுவிட்சர்லாந்து.

◼ ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்களின் எண்ணிக்கை 1960-களில் சுமார் ஐந்து சதவீதமாக இருந்தது; 2003-⁠ல் அது 70 சதவீதத்துக்கும் சற்று அதிகமாக உயர்ந்திருந்தது.​—⁠மெல்பர்ன் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா.

சர்க்கரை நோய்​—⁠உலகளாவிய கொள்ளைநோய்

கடந்த 20 ஆண்டுகளில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகமுழுவதும் 3 கோடியிலிருந்து 23 கோடியாக அதிகரித்திருக்கிறது என்பதாக த நியு யார்க் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது; இத்தகவலை இன்டர்நேஷனல் டயபடீஸ் ஃபெடரேஷன் அளித்துள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் வாழ்கிற பத்து நாடுகளில் ஏழு, வளரும் நாடுகளே. “உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய உயிர்க்கொல்லி நோய்களில் இந்தச் சர்க்கரை நோயும் ஒன்று” என இந்த ஃபெடரேஷனின் தலைவரான டாக்டர் மார்டின் சிலிங்க் கூறினார். “உலகின் ஏழ்மையான நாடுகள் சிலவற்றில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அற்ப ஆயுளில் இறந்துவிடுகிறார்கள்” எனவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகின் மிக உயரமான ரயில்பாதை

உலகின் மிக உயரமான ரயில்பாதையின் திறப்புவிழா ஜூலை 2006-⁠ல் நடைபெற்றது; இது பெய்ஜிங்கை திபெத்தின் தலைநகரான லாஸாவுடன் இணைக்கிறது. இவற்றுக்கு இடையிலுள்ள தூரம் சுமார் 4,000 கிலோமீட்டர். “மாறும் தன்மையுடைய நிரந்தர உறைபனி நிலத்தின் வழியாகச் சென்று, கடல் மட்டத்திலிருந்து 4,800 மீட்டருக்கும் அதிகமான உயரத்தை அடைகிற இந்த ரயில்பாதை பொறியியல் துறையின் சாதனை” என்று த நியு யார்க் டைம்ஸ் செய்தித்தாள் கூறுகிறது. தண்டவாளம் நிலையாக இருப்பதற்காக அதன் அடிப்பகுதியை ஆண்டுமுழுவதும் உறைந்த நிலையில் வைத்துக் கொள்வதே பொறியாளர்கள் சந்தித்த சவால்களில் ஒன்று. ஏற்கெனவே ரயில்பெட்டியில் ஒவ்வொரு பயணிக்கென்றும் ஆக்ஸிஜன் தயாராக வைக்கப்பட்டிருந்தாலும் ரயில் அதிக உயரத்தை அடைவதால் அந்தப் பெட்டிகளுக்குள்ளேயும் காற்று பம்ப் செய்யப்படுகிறது.

“போலி மாணவர்கள்”

பிரெஞ்சு பல்கலைக்கழகம் ஒன்றில் இலக்கியப் பிரிவில் சேர்ந்திருந்த முதலாமாண்டு மாணவர்களில் பத்து முதல் இருபது சதவீதத்தினர் “வகுப்புகளில் தலைகாட்டுவதே இல்லை” என லா ஃபிகாரோ செய்தித்தாள் தெரிவிக்கிறது. மாணவர்களுக்கென அரசாங்கம் தருகிற சலுகைகளைப் பெறுவதற்காகவும், விமானங்கள், ஹோட்டல்கள், பொதுப் போக்குவரத்துகள், திரைப்படங்கள் ஆகியவற்றில் சலுகைகளைப் பெறுவதற்காகவுமே ‘மாணவர்’ என்ற தகுதியைச் சிலர் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இத்தகைய சலுகைகளைப் பெறுவதற்காக மாணவர்கள் குறைவாகச் சேருகிற பிரிவுகளான பெலாரூசியன், ஃபின்னிஷ், அல்லது சுவாஹிலி போன்ற வகுப்புகளில் இந்த “போலி மாணவர்கள்” சேருகிறார்கள். வருகைப் பதிவேடு சரிபார்க்கப்படாததால் போலிப் பெயரில் பதிவு செய்வதும் சகஜமாக இருக்கிறது. இந்த “மாணவர்கள்” இன்டர்நெட்டில் பெயரைப் பதிவு செய்து, ஓரிரு நாட்களில் மாணவர் அடையாள அட்டையைப் பெறுகிறார்கள் என அந்த அறிக்கை கூறுகிறது.

“மண்ணில் புதைந்திருந்த” வினோதங்கள்

எண்ணற்ற நூற்றாண்டுகளாக “மண்ணில் புதைந்திருந்த” ஒரு குகையில் எட்டு வகை முதுகெலும்பற்ற பிராணிகளை இஸ்ரேலின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்; இவை புதிய வகைகளாக இருக்கவேண்டுமென அவர்கள் நம்புகிறார்கள் என்பதாக த ஜெருசலேம் போஸ்ட் செய்தித்தாள் தெரிவிக்கிறது. ஒரு கல்சுரங்கத்தைத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அதில் சிறிய துவாரத்தைக் கண்டுபிடித்தார்கள்; அதன் வழியாகச் சென்றபோது, இரண்டரை கிலோமீட்டர் நீளத்தில் ஒரு குகை இருந்தது; அங்கே குழிவான நிலத்தில் ஓர் ஏரியும் இருந்தது. அந்தக் குகையில் இருந்த எட்டுப் பிராணிகளில் இரண்டு கடல்நீரில் வாழ்கிற ஓட்டுடலிகள், மற்ற இரண்டு நன்னீரில் வாழ்கிற ஓட்டுடலிகள், மீதமான நான்கு பிராணிகள் நிலத்தில் வாழ்கிற உயிரினங்கள். இவற்றில் சில, பார்ப்பதற்குத் தேள்களைப் போல இருந்தன.