Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சவால்களைச் சமாளிக்க இளைஞருக்கு உதவுதல்

சவால்களைச் சமாளிக்க இளைஞருக்கு உதவுதல்

சவால்களைச் சமாளிக்க இளைஞருக்கு உதவுதல்

இவ்வுலகில், மக்களின் பாணிகளும் சரி வாழ்க்கை முறைகளும் சரி, எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன. முக்கியமாக, நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தால் மலைக்க வைக்கும் மாற்றங்கள் இன்று ஏற்பட்டுள்ளன. நேற்று நவீன பாணியாகக் கருதப்பட்டது இன்று பழம்பாணியாகக் கருதப்படுகிறது, இன்று பிரபலமாக இருப்பது நாளை இடம்தெரியாமல் போய்விடலாம். மின்னல்வேகத்தில் நடைபெறும் இத்தகைய மாற்றங்கள் இளைஞர்களைப் பெரிதும் பாதித்திருக்கின்றன.

ஒரு சமூகப் புரட்சி

சமீப வருடங்களில் தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் புரட்சி இளைஞர்களைப் பெருமளவு பாதித்திருக்கிறது. உதாரணத்திற்கு, பல இடங்களில் செல் ஃபோனும் கம்ப்யூட்டரும் இளைஞர்களுடைய வாழ்க்கையின் உயிர்நாடியாக மாறியிருக்கின்றன. சோஷியல் நெட்வொர்க் சைட்டுகளும் இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை வாரிவழங்குகின்றன. “ஒருவருக்கு நிஜ வாழ்க்கையில் நண்பர்களே இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஆன்லைனில் திடீரென நூற்றுக்கணக்கான நண்பர்கள் கிடைத்துவிடலாம்” என்கிறாள் 19 வயது ஆஸ்திரேலியப் பெண்.

செல் ஃபோனிலும் இன்டர்நெட்டிலும் எண்ணற்ற பயன்கள் இருப்பதை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். என்றாலும், அநேகர் இவற்றுக்கு அடிமையாகிவிட்டிருப்பது போல் தெரிகிறது. சில மாணவர்களால், “10 மணி வகுப்புக்கும் 11 மணி வகுப்புக்கும் இடையே உள்ள அந்தச் சில நிமிடங்களில்கூட செல் ஃபோனில் பேசாமல் இருக்க முடிவதில்லை. அப்படிப் பேசாமல் இருந்தால் அவர்களுக்குத் தலையே வெடித்துவிடும்​—⁠‘அந்த நிசப்தத்தை என்னால் தாங்கமுடியாது’ என்று அவர்கள் சொல்வதைப் போலிருக்கிறது” என்கிறார் பல்கலைக்கழகப் பேராசிரியர், டோனால்ட் ராபர்ட்ஸ்.

சில இளைஞர்கள் தாங்கள் அதற்கு அடிமையாகியிருப்பதை ஒத்துக்கொள்கிறார்கள். “எஸ்எம்எஸ் வந்தால் பதிலளிக்காமல் இருக்க முடிவதில்லை. ஏனென்றால், என் நண்பர்களுடன் தொடர்புகொள்ள எனக்கு இருக்கிற ஒரே வழி அதுதான். . . . நான் வீட்டுக்குப் போன உடனேயே ஆரம்பித்துவிடுவேன்; நேரம் போவதே தெரியாமல் . . . இன்டர்நெட்டிலேயே மூழ்கியிருப்பேன். சில சமயம் மணியைப் பார்த்தால் காலையில் மூன்று மணி ஆகியிருக்கும்” என்கிறாள் 16 வயது ஸ்டெஃபானி. அவளுடைய செல் ஃபோன் கட்டணம், ஒரு மாதத்திற்கு 100 டாலர்கள் முதல் 500 டாலர்கள்வரை செல்கிறது. அவள் சொல்வதாவது: “இதுவரை என் பெற்றோர் அதிகப்படியாக 2,000 டாலர்கள் என் செல் ஃபோனுக்காகக் கட்டியிருக்கிறார்கள். ஆனால், எப்போதும் செல் ஃபோனும் கையுமாகவே இருந்து பழகிவிட்டதால் ‘அது இன்றி நான் இல்லை’ என்ற நிலைமைக்கு வந்துவிட்டேன்.”

இவ்வாறு, பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினையை மட்டுமே இவை ஏற்படுத்துவதில்லை. குடும்ப வாழ்க்கை சம்பந்தமாக மனித இன வல்லுநரான எலனர் ஆக்ஸ் நடத்திய ஆராய்ச்சியில், வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அப்பா, 3 முறைக்கு 2 முறை கண்டது இதைத்தான்; அதாவது, மனைவியும் பிள்ளைகளும் பெரும்பாலும் தங்களுக்குப் பிடித்த காரியங்களிலேயே அந்தளவு மூழ்கிப்போயிருந்ததால் அவரைக் கண்டுகொள்ளவே இல்லை! வைத்த கண் வாங்காமல் தங்களுடைய எலெக்ட்ரானிக் கருவிகளையே அவர்கள் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதோடு, “தங்கள் பிள்ளைகளின் உலகிற்குள் செல்வதே பெற்றோருக்கு மிகவும் சிரமமாக இருப்பதையும் நாங்கள் கவனித்தோம்” என்கிறார் ஆக்ஸ். பிள்ளைகள், தங்களை மறந்து காரியங்களைச் செய்துகொண்டிருந்தபோது பெற்றோர் அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்கிறார்கள் என்பதும் அந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் சொல்கிறார்.

ஆன்லைன் சோஷியல் நெட்வொர்க்​—⁠தீங்கற்றதா?

ஆன்லைன் சோஷியல் நெட்வொர்க் என அழைக்கப்படும் சைட்டுகளில் இளைஞர்கள் மணிக்கணக்காக நேரம் செலவிடுவதைப்பற்றி பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவலை தெரிவிக்கிறார்கள். இந்த சோஷியல் நெட்வொர்க்கில் வெப் பேஜ் ஒன்றை உருவாக்கலாம், அதில் வீடியோக்களையும் படங்களையும் சேர்த்து ப்ளாக்ஸ் (blogs) என அழைக்கப்படும் டைரிகளையும் உருவாக்கி அலங்கரிக்கலாம்.

இளைஞர்கள் இந்த சைட்டுகளிடம் கவர்ந்திழுக்கப்படுவதற்கு ஒரு காரணம், இதன்மூலம் தங்கள் நண்பர்களுடன் அவர்களால் தொடர்புகொள்ள முடியும். இன்னொரு காரணம், வெப் பேஜ் மூலம் ஓர் இளைஞர் “தன் கருத்தைத் தெரிவித்து” தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறு இளைஞர்கள் இதனிடம் கவரப்படுவது புரிந்துகொள்ளத்தக்கதே. ஏனெனில், இளமைப் பருவத்தில் இளைஞர்கள் தங்களைத் தாங்களே புரிந்துகொண்டு தங்கள் உணர்வுகளையெல்லாம் பிறரிடம் கொட்டுவதன்மூலம் அவர்களுடைய உணர்ச்சிகளையும் தூண்டுவார்கள்.

ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சில நபர்கள் வெப் சைட்டில் தங்களை வித்தியாசமான ஒரு நபராகக் காட்டிக்கொள்கிறார்கள். தங்களுடைய நிஜ ரூபத்தை மறைத்து தாங்கள் யாராக இருக்க விரும்புகிறார்களோ அந்த ரூபத்தைக் காட்டுகிறார்கள். இதைக் குறித்து 15 வயது பையன் இவ்வாறு சொல்கிறான்: “என்னுடன் படிக்கும் ஒரு பையன் தனக்கு 21 வயதென்றும் லாஸ் வேகாஸ் நகரத்தில் தான் வசிப்பதாகவும் சொல்வான்.” ஆனால், இவர்கள் இருவருமே அமெரிக்காவைச் சேர்ந்த லாஸ் வேகாஸ் நகரத்திலிருந்து சுமார் 1,600 கி.மீ தொலைவில் வசிக்கிறார்கள்.

இப்படிப்பட்ட ஏமாற்று வேலை சர்வ சாதாரணமாய் நடக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 18 வயதுப் பெண் இவ்வாறு சொல்கிறாள்: “இன்டர்நெட்டில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், உங்களைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாததால் வேறொரு நபராகவே நீங்கள் மாறிவிடலாம். துணிந்து எதையும் செய்யலாம். மற்றவர்களைக் கவருவதற்காக புதுப்புது காரியங்களை உருவாக்கலாம். நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஒருபோதும் செய்யாத காரியங்களைச் செய்வதாகவோ, போடாத உடைகளைப் போடுவதாகவோ உங்கள் படங்களை அனுப்பலாம். நேரில் ஒருபோதும் நீங்கள் சொல்லத் துணியாத விஷயங்களை எழுதலாம். உங்களை யாருக்குமே தெரியாததால் நீங்கள் என்ன செய்தாலும் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள் என்றும், கெட்ட விளைவுகளைச் சந்திக்க மாட்டீர்கள் என்றும் நினைக்கத் தோன்றும். உண்மையிலேயே நீங்கள் யாரென்று ஒருவருக்கும் தெரியாது.”

தொடர்புகொள்ள பயன்படுத்தப்படுகிற எல்லா சாதனங்களையும் போலவே ஆன்லைன் சோஷியல் நெட்வொர்க்கிலும் நன்மை, தீமை ஆகிய இரண்டுமே உண்டு. உங்கள் பிள்ளைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்களென்று பெற்றோராகிய உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பிள்ளைகள் நேரத்தை ஞானமாகச் செலவிடுகிறார்களா என்பதை கவனிக்கிறீர்களா? a (எபேசியர் 5:15, 16) அதுமட்டுமல்ல, இளைஞர்கள் இன்டர்நெட்டைத் தவறாகப் பயன்படுத்தினால் பல பயங்கரமான ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளலாம். அவற்றில் சில யாவை?

சைபர் ஸ்பேஸ்​—⁠இருண்ட பக்கம்

இன்டர்நெட்டில் நிஜ அடையாளத்தை மறைத்துக்கொள்ள முடிவதால் காமுகர்கள், இளம் பிள்ளைகளுக்காக இன்டர்நெட்டில் வலைவீசுகிறார்கள். இளைஞர்கள், ஆன்லைனில் தாங்கள் தொடர்புகொள்ளும் ஒருவருக்குத் தங்களைப்பற்றி தகவல் அளித்தாலோ அவரை நேரில் சந்திக்கச் சம்மதித்தாலோ தெரியாத்தனமாக பிரச்சினையில் மாட்டிக்கொள்ள நேரிடலாம். “பிள்ளைகள் தங்கள் வீடுகளிலோ விளையாட்டு மைதானங்களிலோ, வன்முறைக்கும் துர்ப்பிரயோகத்திற்கும் ஆளாவதன்மூலம் இதைவிட மோசமான ஆபத்துகளை எதிர்ப்படுவதாகச் சிலர் வாதிடலாம். ஆனால் இந்தக் காமுகர்கள் இன்டர்நெட் வழியாக வீட்டுக்குள் நுழைந்து பிள்ளைகளின் பால் போன்ற மனதை நஞ்சாக்குவது நயவஞ்சகச் செயல் என்பதாக அநேக பெற்றோர்கள் கருதுகிறார்கள்” என்று சிறந்த பெற்றோராய் இருக்க 911 என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது.

மற்ற வழிகளிலும் இன்டர்நெட் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆன்லைனில் சில இளைஞர்கள் ஓயாமல் கேலி செய்கிறார்கள், சிலரை ஓரங்கட்டுகிறார்கள், நச்சரிக்கிறார்கள், அல்லது பயமுறுத்துகிறார்கள். இதுவே ஆங்கிலத்தில் ‘சைபர் புல்லியிங்’ என அழைக்கப்படுகிறது. யாரையாவது இழிவுபடுத்த வேண்டுமென்றால் அதற்கென தனி வெப் சைட்டே உள்ளது. மறுபட்சத்தில் ஈமெயில், சாட் ரூம் போன்றவை அவதூறுகளைப் பரப்பும் வழிகளாக மாறிவிட்டன. சைபர் புல்லியிங் செய்யப்படுவதால் 10-14 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் 80 சதவீதத்தினர் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருக்க வேண்டுமென ஓர் ஆன்லைன் பாதுகாப்புக் குழுவின் இயக்குநர் நம்புகிறார்.

கேலி கிண்டல் காலங்காலமாய் நடந்துவருவது உண்மையே; ஆனால், இன்று வதந்திகளும், வீண் பேச்சுகளும், பச்சைப் பொய்களும் மிகத் தொலைவிலுள்ள இடங்களுக்கும் ராக்கெட் வேகத்தில் பரவுகின்றன. பெரும்பாலும் அவை ஆபாசமாகவும் இருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில், செல் ஃபோன்களில் உள்ள கேமராவைப் பயன்படுத்தி ஆபாசமான, அநாகரிகமான படங்களும் வீடியோக்களும் எடுக்கப்படுகின்றன; ஒருவேளை, அவை பள்ளியிலுள்ள உடை மாற்றும் அறைகளிலோ குளியல் அறைகளிலோ எடுக்கப்பட்டிருக்கலாம். இந்தப் படங்கள் பிறகு இன்டர்நெட்டில் போடப்பட்டு, இப்படிப்பட்ட விஷயங்களில் ஆர்வமுள்ள பலருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

பொதுமக்களிடையே அதிகரித்துவரும் கவலை

இதையெல்லாம் பார்த்து, அமெரிக்காவைச் சேர்ந்த நியூ ஜெர்ஸியின் சட்டம் மற்றும் பொதுநலத் துறை அதிர்ந்துபோய், பெற்றோர்களிடமும் பாதுகாப்பாளர்களிடமும் உதவி கேட்டு ஒரு கடிதம் அனுப்பியது. “பள்ளியிலோ பள்ளிக்கு வெளியிலோ பிள்ளைகள் இன்டர்நெட்டைத் தவறாகப் பயன்படுத்துவதால் எழுகிற பிரச்சினைகளைச் சமாளிக்க எங்களுக்கு உதவுங்கள்” என்று அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. குறிப்பாக, ஆன்லைனில் இளைஞர்கள் தங்களைப் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் அனுப்புவது கவலைக்குரியது என அந்தக் கடிதம் தெரிவித்தது. அப்படிப்பட்ட தகவல்களைப் பரப்பும் சைட்டுகள் காமவெறி பிடித்த இளைஞர்களையும் பெரியவர்களையும் காந்தமாக இழுக்கின்றன. “இது உண்மையிலேயே மிகப் பெரிய பிரச்சினை என்பதை பெற்றோராகிய நீங்கள் உணர்ந்தாக வேண்டும், உங்கள் பிள்ளைகள் இன்டர்நெட்டில் என்ன செய்கிறார்கள், ஏது செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து வைத்திருந்தால் அவர்களைப் பாதுகாப்பதில் நீங்கள் முக்கியப் பங்கை வகிக்க முடியும்” என்று அந்தக் கடிதம் கூறியது.

ஆனால், சில பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைப்பற்றி எதுவுமே தெரிவதில்லை. தன்னுடைய 16 வயது மகள் ஆன்லைனில் செய்கிற காரியங்களை எப்போதும் மேற்பார்வையிடும் ஒரு தாய் இவ்வாறு சொல்கிறார்: “தங்கள் பிள்ளைகள் இன்டர்நெட்டில் என்ன செய்தியை அனுப்புகிறார்கள், என்ன விஷயத்தைப் பேசுகிறார்கள் என்பது பெற்றோருக்குத் தெரியவந்தால் தர்மசங்கடத்திற்குள்ளாகி, கதிகலங்கிப்போவார்கள்.” சில இளைஞர்கள் ஆபாசமான, அப்பட்டமான படங்களை அனுப்புவதாக இன்டர்நெட் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறினார்.

படுமோசமான பாதிப்புகள்

மேற்கூறப்பட்ட அனைத்துக் கவலைகளும், பருவ வயதினரின் இயல்பைச் சிறிதும் எண்ணிப்பார்க்காத பெரியவர்களின் மனப்பிரமை தானா? இல்லையென புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதைச் சற்று கவனியுங்கள்: சில இடங்களில் 15-17 வயதுக்குட்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் என்ற கணக்கில் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள். 13-19 வயதுக்குட்பட்டவர்களில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமானோர் வாய்வழி செக்ஸில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதிரவைக்கும் இந்தப் புள்ளிவிவரங்களுக்குக் காரணம் தொழில்நுட்பமா? அதில் சந்தேகமே இல்லை. “செல் ஃபோன்களும் இன்டர்நெட்டுகளும் இளைஞர்களுக்கு அதிகபட்ச தனிமையைத் தருவதால் “ஹூக் அப்”பில் ஈடுபடுவது மிக சுலபமானதாய் ஆகியிருக்கிறது” என்று நியு யார்க் டைம்ஸ் மேகசின் என்ற செய்தித்தாளில் வெளிவந்த ஓர் அறிக்கை கூறுகிறது. b உண்மையில், கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள கம்ப்யூட்டர் கீபோர்ட்டில் சில தட்டுகள் தட்டினால் போதுமே. ஆன்லைனில் இருக்கையில் தாங்கள் அந்தளவு ஜாக்கிரதையாக இருப்பதில்லையென 5-⁠ல் 4 பெண்கள் ஒத்துக்கொண்டதாக ஓர் ஆய்வு காட்டுகிறது.

காதலிக்கவோ செக்ஸில் ஈடுபடவோ ஆன்லைனில் ஜோடி தேடுகிறவர்கள் தாங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். ‘செக்ஸ் குற்றங்கள் அதிகரித்திருப்பதை நாங்கள் பார்க்கிறோம்’ என்கிறார் கலிபோர்னியா மாநிலத்தின் நோவாடோ நகர காவல் துறையைச் சேர்ந்த ஜெனிஃபர் வெல்ச். அநேகர் தங்களை வலையில் சிக்கவைக்கும் ‘வேடர்களை’ முதன்முதல் இன்டர்நெட்டில்தான் தொடர்புகொள்கிறார்கள், பின்னரே நேரில் சந்திக்கிறார்கள் என்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

‘இவ்வுலக ஞானம்’​—⁠ஜாக்கிரதை!

செய்தித்தாள்களிலும் பத்திரிகைகளிலும் பருவ வயதினருக்கு ஆலோசனை தருகிற கட்டுரைகள், இளைஞர்கள் செக்ஸ் கொள்ளும் விஷயத்தைக் கண்டித்துப் பேசுவதில்லை. திருமணத்திற்கு முன் செக்ஸில் ஈடுபடுவது தவறு, ஒழுக்க சுத்தம் முக்கியம் என்றெல்லாம் அவை வெறுமனே பேசினாலும், அவற்றின் முக்கியக் குறிக்கோள் “பாதுகாப்பான” செக்ஸை உந்துவிப்பதே, அதைக் கண்டிப்பதல்ல. ‘அவர்களை நாம் தடுக்க முடியாது, அதனால் தங்கள் செயல்களுக்குத் தாங்களே பொறுப்பாளி என்பதை அவர்களுக்குக் கற்பிக்கவாவது செய்யலாம்’ என்றே அவை நினைப்பதாகத் தோன்றுகிறது.

பருவ வயதினருக்கான பிரபல வெப் சைட் ஒன்று, செக்ஸ் கொள்வதா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதற்கு முன்பு மூன்றே மூன்று காரியங்களை மட்டும் சிந்தித்தால் போதுமெனக் கூறுகிறது: (1கர்ப்பமாகாமலிருக்கும்படி பார்த்துக்கொள்வது, (2பால்வினை நோய் தொற்றாமலிருக்க ஜாக்கிரதையாக இருப்பது, (3செக்ஸில் ஈடுபடப் போகும் இருவருமே உணர்ச்சி ரீதியில் அதற்குத் தயாரா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வது. பிறகு, “தீர்மானம் உங்களுடையது” என்று அந்த வெப் சைட் சொல்கிறது. இந்த விஷயத்தைப் பெற்றோரிடம் பேசுவதுபற்றி அது பட்டும்படாதவாறே குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட செக்ஸ் சரியா தவறா என்பதைப்பற்றி அது எதுவும் சொல்வதில்லை.

நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால், பைத்தியக்காரத்தனமான இந்த ‘உலகத்தின் ஞானத்தைவிட’ மேம்பட்ட ஞானமே உங்கள் பிள்ளைகளை வழிநடத்த வேண்டுமென நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். (1 கொரிந்தியர் 1:20) உங்கள் பிள்ளை, பருவ வயதை வெற்றிகரமாகக் கடந்து இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆபத்துகளைத் தவிர்க்க நீங்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவலாம்? கம்ப்யூட்டர் இணைப்பையோ தொலைபேசி இணைப்பையோ துண்டித்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என நினைக்காதீர்கள். இப்படிச் செய்தால் பிள்ளைகளின் இருதயத்தை நீங்கள் எட்டுவது கடினம். (நீதிமொழிகள் 4:23) பிள்ளைகள், செல் ஃபோனிலோ இன்டர்நெட்டிலோ தேடுகிற உதவியை பெற்றோராகிய உங்களாலேயே மிகச் சிறந்த விதத்தில் அளிக்க முடியலாம்; அதைப்பற்றி கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். அவர்களது சில தேவைகள் என்ன?

[அடிக்குறிப்புகள்]

a இன்டர்நெட்டைக் குறைகூறுவதற்குப் பதிலாக பெற்றோர் தங்கள் பிள்ளைகள் அடிக்கடி பார்க்கும் சைட்டுகளைத் தெரிந்து வைத்திருப்பது நல்லது. இவ்வாறு பிள்ளைகள் “நன்மை தீமையின்னதென்று . . . பகுத்தறிய” பெற்றோர் அவர்களுக்குப் பயற்சி அளிக்க முடியும். (எபிரெயர் 5:14) பிள்ளைகளுக்குப் பெற்றோர் அளிக்கும் இவ்விதப் பயற்சி அவர்கள் பெரியவர்களாக ஆகும்போதும் உதவியாயிருக்கும்.

b “ஹூக் அப்” என்ற பதம், ஜாலியாகப் பொழுதைக் கழிப்பது முதல் செக்ஸ் கொள்வதுவரை எதை வேண்டுமானாலும் அர்த்தப்படுத்தலாம். இங்கே, இணைப்பு பிணைப்பில்லாமல் காமப் பசியைத் தீர்த்துக்கொள்ள மட்டுமே செக்ஸில் ஈடுபடுவதைக் குறிக்கிறது.

[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]

“நான் வீட்டுக்குப் போன உடனேயே ஆரம்பித்துவிடுவேன்; நேரம் போவதே தெரியாமல் . . . இன்டர்நெட்டிலேயே மூழ்கியிருப்பேன். சில சமயம் மணியைப் பார்த்தால் காலையில் மூன்று மணி ஆகியிருக்கும்”

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

“இன்டர்நெட்டில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், உங்களைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாததால் வேறோரு நபராக நீங்கள் மாறிவிடலாம்”

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

“தங்கள் பிள்ளைகள் இன்டர்நெட்டில் என்ன செய்தியை அனுப்புகிறார்கள், என்ன விஷயத்தைப் பேசுகிறார்கள் என்பது பெற்றோருக்குத் தெரியவந்தால் தர்மசங்கடத்திற்குள்ளாகி, கதிகலங்கிப்போவார்கள்”

[பக்கம் 6-ன் பெட்டி/படம்]

சோஷியல் நெட்வொர்க் ஒரு பெண்ணின் கதை

“எங்களுடைய பள்ளியின் வெப் பேஜ் மூலமாக என் டீச்சர்களோடும் ஃபிரண்ட்ஸுகளோடும் தொடர்புகொள்ள ஆரம்பித்தேன். முதலில் வாரத்திற்கு ஒரு மணி நேரம்தான் செலவிட்டேன். போகப்போக, தினமும் இன்டர்நெட்டில் அவர்களைத் தொடர்புகொள்ள ஆரம்பித்துவிட்டேன். நான் அதற்கு எந்தளவு அடிமையாகிப் போய்விட்டேன் என்றால், இன்டர்நெட்டைப் பயன்படுத்தாத சமயத்தில் அதைப்பற்றியே யோசித்துக்கொண்டு இருந்தேன். வேறு எதிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. பள்ளிப் பாடங்களில் சரிந்துவிட்டேன். கிறிஸ்தவ கூட்டங்களில் என்னால் செவிகொடுத்துக் கேட்க முடியவில்லை. என்னுடன் இருந்த நண்பர்களையும் அசட்டை செய்துவிட்டேன். எனக்கு என்ன ஆனது என்பதை கடைசியில் என் அப்பா அம்மா கண்டுபிடித்தார்கள். அதன்பிறகு என்னை இன்டர்நெட்டில் அதிக நேரம் உட்கார அனுமதிக்கவில்லை. அதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்போல் ஆகிவிட்டது. ஆனால் இப்பொழுது நான் சந்தோஷமாக இருக்கிறேன். எல்லாமே நல்லதுக்குதான் நடந்திருக்கிறது, நான் இப்பொழுது ரொம்பவே மாறிவிட்டேன். நான் மீண்டும் இன்டர்நெட்டுக்கு அடிமையாகிவிட மாட்டேன்!”​—⁠பியாங்கா.