Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான் தேர்ந்தெடுத்த சிறந்த வேலை

நான் தேர்ந்தெடுத்த சிறந்த வேலை

நான் தேர்ந்தெடுத்த சிறந்த வேலை

சான்யா ஆக்கூன்யா கேவேதோ சொன்னபடி

நான் வேலை செய்துவந்த வங்கியில் எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது. அதனால், என் அந்தஸ்து உயர்வதோடு, கைநிறைய சம்பளமும் கிடைக்கும். அதே சமயத்தில், தொலைவிலிருந்த சபையில் முழுநேர பயனியர் சேவை செய்ய அழைப்பும் கிடைத்திருந்தது. 32 ஆண்டுகள் கழித்து, என்னுடைய கடந்த கால சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்கையில், நான் ஞானமான தெரிவையே செய்தேன் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

அம்மா ரோமன் கத்தோலிக்கக் குடும்பத்தில் வளர்ந்தவர்; ஆனால், சர்ச் போதனைகளில் அவருக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருந்தன. மனிதன் வடித்த சிலைகளை வணங்குவது சரியா என அவர் யோசிக்கத் துவங்கினார். ஆன்மீக சத்தியத்தைத் தேடி, பல சர்ச்சுகளுக்கு ஏறி இறங்கினார், ஆனால் அவருடைய கேள்விகளுக்குப் பதிலே கிடைக்கவில்லை.

ஒருநாள், மெக்சிகோவில் ட்யுஸ்ட்லா நகரிலிருந்த எங்கள் வீட்டுக்கு வெளியே சில்லென்று இதமாக வீசிய தென்றல் காற்றை அனுபவித்தபடி அம்மா உட்கார்ந்திருந்தார்; அப்போது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அங்கே வந்தார். கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் பைபிளிலிருந்து பதிலளித்தது அம்மாவின் மனதைத் தொட்டது; அதனால் மறுபடியும் சந்திக்க ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் மறுபடியும் வந்தபோது, அம்மா தனியே காத்திருக்கவில்லை; ஓர் அட்வென்டிஸ்ட் ஊழியர், கத்தோலிக்கப் பாதிரி, நாசரீன் மத போதகர் ஆகியோருடன் காத்துக்கொண்டிருந்தார். ஓய்வுநாளைக் குறித்து அம்மா கேட்ட கேள்விக்கு சாட்சிதான் திருப்தியான பைபிள் விளக்கத்தைத் தந்தார். சொல்லப்போனால், அவருடைய கையில் மட்டும்தான் பைபிள் இருந்தது! 1956-⁠ல் பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள்ளேயே யெகோவாவின் சாட்சியாக அம்மா முழுக்காட்டப்பட்டார். அப்போது எனக்கு எட்டு வயது.

அப்பாவின் நியாயமான கவலைகள்

அம்மா பைபிளைப் படித்தபோது அப்பா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், பிள்ளைகள் நான்கு பேருக்கும், அதாவது இரண்டு பையன்களுக்கும், இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் பைபிளைக் கற்றுக் கொடுத்ததும், எங்களை கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றதும் அப்பாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை; அதனால் அம்மா வைத்திருந்த பைபிள் பிரசுரங்களை நாசமாக்கினார். நாங்கள் தவறான பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்றே அவர் நினைத்தார்; கடவுளுடைய பெயரை​—⁠யெகோவாவை​—⁠யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய மொழிபெயர்ப்புகளில் நயவஞ்சகமாய் நுழைத்திருக்கிறார்கள் என்பதை கத்தோலிக்க பைபிளிலிருந்து காட்டுவதற்கு முயன்றார். ஆனால் அந்தப் பெயரை அவருடைய பைபிளிலேயே அம்மா காட்டியபோது அவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை; அதோடு சாட்சிகளைக் குறித்த அவருடைய மனநிலை மாறத் துவங்கியது.​—சங்கீதம் 83:⁠17.

மெக்சிகோவில், பெண்பிள்ளைகளின் 15-வது பிறந்தநாள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பைபிளுக்கு முரணாக இருப்பதை அறிந்தபிறகு அதைக் கொண்டாடுவதை விட்டுவிட்டேன். a ஆனால், எனக்கு ஏதாவது நல்ல பரிசைக் கொடுக்க வேண்டுமென்று அப்பா விடாப்பிடியாய் இருந்தார். நான் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, “அப்பா, யெகோவாவின் சாட்சிகளுடைய அடுத்த மாநாட்டுக்கு நீங்கள் என்னோடு வாருங்கள்; அதுவே எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த பரிசு” என்று சொன்னேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார், பைபிளின் மீது அவருடைய ஆர்வமும் அதிகரித்தது.

ஓர் இரவில் கடும் புயல்காற்று அடித்து ஓய்ந்தபிறகு, வழியில் அறுந்து கிடந்த கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதால் அப்பா பலத்த காயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் இருந்தபோது, உள்ளூர் சாட்சிகள் இரவுபகல் பாராமல் கண்விழித்து அவரைக் கவனித்துக் கொண்டார்கள்; அவர்கள் காட்டிய கிறிஸ்தவ அன்பை அவர் சாகும்வரை மறக்கவில்லை. பிற்பாடு, வெளி ஊழியத்தில் கலந்துகொண்டு, தம்முடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார். வருத்தகரமாக, முழுக்காட்டுதல் எடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது, செப்டம்பர் 30, 1975-⁠ல் இறந்துபோனார். உயிர்த்தெழுந்து வரும் சமயத்தில் அவரை ஆசையோடு அரவணைக்க நாங்கள் எவ்வளவாய் ஏங்குகிறோம்!​—அப்போஸ்தலர் 24:⁠15.

குடும்பத்தின் நல்ல செல்வாக்கு

என்னுடைய அக்கா கார்மென், முழுநேர ஊழியத்தை எப்போதுமே உயர்வாய் கருதினாள். 1967-⁠ல் அவள் முழுக்காட்டுதல் எடுத்தவுடனேயே ஒழுங்கான பயனியரானாள்; ஒவ்வொரு மாதமும் சுமார் 100 மணிநேரத்தை ஊழியத்தில் செலவிட்டாள். பிற்பாடு, மெக்சிகோவின் மத்திய பகுதியிலுள்ள டோலூகா என்ற நகருக்கு மாறிச் சென்றாள். நான் பள்ளிப்படிப்பை முடித்தபிறகு வங்கியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஜூலை 18, 1970-⁠ல் முழுக்காட்டப்பட்டேன்.

கார்மென் முழுநேர ஊழியத்தில் மிகுந்த மகிழ்ச்சி கண்டாள், எனவே டோலூகாவிற்கு வந்து தன்னோடு சேர்ந்துகொள்ளும்படி என்னை உற்சாகப்படுத்தினாள். கிறிஸ்துவின் சீஷர்கள் கடவுளை மகிமைப்படுத்த தங்களுடைய மதிப்புமிக்க ஆன்மீகச் செல்வங்களைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்திய ஒரு பேச்சைக் கேட்டபோது அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். (மத்தேயு 25:14-30) ‘எனக்குக் கிடைத்த ஆன்மீகச் செல்வங்களை வைத்து நான் எந்தளவு கடினமாக உழைக்கிறேன்?’ என எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். அவ்வாறு சிந்தித்தது யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்யவேண்டுமென்ற என் ஆர்வக் கனலைத் தூண்டியது.

இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்

1974-⁠ல் வேறொரு பிராந்தியத்தில் பயனியராகச் சேவை செய்வதற்கு விண்ணப்பித்தேன். பின்னர் ஒருநாள், நான் வங்கியில் வேலை செய்துகொண்டிருந்தபோது, டோலூகாவிலிருந்த ஒரு கிறிஸ்தவ மூப்பரிடமிருந்து ஃபோன் வந்தது. “நாங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் ஏன் இன்னும் வரவில்லை?” என அவர் கேட்டார். டோலூகாவில் விசேஷ பயனியராக நான் நியமிக்கப்பட்டிருந்ததைக் கேட்டதும் எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை; ஆனால் என்னுடைய நியமிப்புக் கடிதம் தபாலில் எங்கோ தொலைந்திருக்க வேண்டும்! (விசேஷ பயனியர்கள் யெகோவாவின் அமைப்பு நியமிக்கிற இடத்தில் முழுநேரமாகச் சேவை செய்ய ஒப்புக்கொள்கிறார்கள்.)

வேலையை விட்டு விலகுவதைக் குறித்து வங்கியில் உடனடியாகத் தெரிவித்தேன். “ஒரு நிமிடம் சான்யா” என்று ஒரு பேப்பரைக் காட்டியபடி என் மேலதிகாரி சொன்னார்: “அஸிஸ்டன்ட் மானேஜராக ஏழு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களில் நீங்களும் ஒருவர்; இந்தத் தகவல் கொஞ்சம் முன்புதான் எங்களுக்குக் கிடைத்தது. நம் நிறுவனத்தில் இதுவரை பெண்களுக்கு இப்படியொரு பதவி அளிக்கப்படவில்லை. இந்தப் பொன்னான வாய்ப்பை நீங்கள் நழுவ விடப் போகிறீர்களா?” ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, இந்தப் பதவி உயர்வால் கைநிறைய சம்பளம் கிடைப்பதோடு என் அந்தஸ்தும் உயரும். இருந்தபோதிலும், என் மேலதிகாரிக்கு நன்றி சொல்லிவிட்டு, கடவுளுக்கு முழுமையாகச் சேவை செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தில் உறுதியாய் இருப்பதாகத் தெரிவித்தேன். “சரி, உங்கள் இஷ்டம்போலச் செய்யுங்கள், ஆனால், ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். வேலை கேட்டு நீங்கள் எப்பொழுது வந்தாலும் இந்த வங்கியில் உங்களுக்கு வேலை உண்டு” என்று சொன்னார். இரண்டே நாட்களில் நான் டோலூகாவுக்குப் போய்விட்டேன்.

மெக்சிகோவில் விசேஷ பயனியர் சேவை

டோலூகாவில் கார்மெனுடன் சேர்ந்துகொண்டேன்; அங்கு அவள் ஏற்கெனவே இரண்டு வருடங்களாக விசேஷ பயனியர் சேவை செய்து வந்தாள். நாங்கள் இருவரும் சேர்ந்து பயனியர் சேவை செய்ததால் பெருமகிழ்ச்சி அடைந்தோம்! ஆனால், கொஞ்ச காலம்தான் நாங்கள் பயனியர் கூட்டாளிகளாக இருந்தோம். மூன்று மாதங்கள் கழித்து, அம்மாவுக்கு விபத்து நேர்ந்தது; முழுநேரமும் அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்துடன் கலந்துபேசிய பிறகு, அம்மாவைக் கவனித்துக் கொள்வதற்காக கார்மென் வீட்டுக்குத் திரும்பிச் செல்லவும், நான் விசேஷ பயனியர் சேவையைத் தொடரவும் தீர்மானித்தோம். இவ்வாறு 17 வருடங்களாக அவள் அம்மாவைக் கவனித்துக் கொண்டாள். அந்தச் சமயத்தில், அவள் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்தாள்; தன்னோடு பைபிள் படித்து வந்தவர்களை வீட்டுக்கே அழைத்து படிப்பை நடத்தினாள்; இதனால் அம்மாவைக் கவனித்துக் கொண்டு அதே சமயத்தில் பயனியர் சேவையையும் தொடர முடிந்தது.

1976-⁠ல் டேகாமாச்சால்கோ என்ற நகரத்திற்கு நியமிக்கப்பட்டேன்; அது ரொம்பவே வித்தியாசமான நகரமாயிருந்தது, அங்கு ஒருபுறத்தில் ஏழைகளும், மறுபுறத்தில் பணக்காரர்களும் வசித்தார்கள். அங்கே, திருமணம் செய்திராத வயதான ஒரு பெண்மணியோடு பைபிள் படிப்பை ஆரம்பித்தேன்; அவர் தன்னுடைய பணக்காரத் தம்பியின் வீட்டில் வசித்தார். தானும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராய் ஆக விரும்புவதைத் தன்னுடைய தம்பியிடம் தெரிவித்தபோது, வீட்டைவிட்டுத் துரத்திவிடப் போவதாக அவர் மிரட்டினார். இத்தனை காலமும் தன் தம்பிக்குப் பணிந்துசென்ற அவர், இந்த உருட்டல்மிரட்டலுக்கெல்லாம் பணிந்துவிடவில்லை. 86 வயதில் அவர் முழுக்காட்டுதல் எடுத்த பிறகு, அவருடைய தம்பி அவரை வீட்டைவிட்டே துரத்திவிட்டார். இருந்தபோதிலும், யெகோவாவையே அவர் முழுமையாகச் சார்ந்திருந்தார். சபையாரின் அன்பான கவனிப்பைப் பெற்ற அவர், சாகும்வரையில் யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருந்தார்.

கிலியட் பள்ளி, பின்பு பொலிவியா

டேகாமாச்சால்கோவில் பயனியர் சேவை செய்த ஐந்து ஆண்டுகளும் இனிதாய்க் கழிந்தன. பிறகு, மெக்சிகோவில் நடைபெற்ற கிலியட் விரிவாக்கப் பள்ளியின் முதல் வகுப்புக்கு அழைக்கப்பட்டேன். அந்தப் பள்ளி, நியு யார்க் கிலியட் பள்ளியின் விரிவாக்கமாக இருந்ததை அதன் பெயரே தெரிவிக்கிறது. அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படி அம்மாவும் கார்மெனும் என்னை ஊக்கப்படுத்தினார்கள்; எனவே அந்தப் பத்து வாரப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள மெக்சிகோ சிட்டியிலிருந்த கிளை அலுவலகத்திற்குச் சென்றேன். இப்பயிற்சி என் நெஞ்சைவிட்டு நீங்காத அனுபவமாக இருந்தது. எங்கள் வகுப்பில் கலந்துகொண்டவர்களுக்கு பிப்ரவரி 1, 1981-⁠ல் பட்டமளிக்கப்பட்டது; என்ரிகீட்டா ஆயாலா (இப்போது பெர்னான்டஸ்) என்பவருடன் பொலிவியா நாட்டைச் சேர்ந்த லாபாஸ் நகருக்கு நியமிக்கப்பட்டேன்.

நாங்கள் லாபாஸை அடைந்தபோது, எங்களை வரவேற்று அழைத்துச் செல்லவிருந்த சகோதரர்கள் விமான நிலையத்திற்கு வந்து சேரவில்லை. எனவே, “நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும்?” என்று நாங்கள் இருவரும் சொல்லிக்கொண்டு அங்கிருந்தவர்களிடம் சாட்சி கொடுக்கத் துவங்கினோம். மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை; அதன் பிறகு, கிளை அலுவலக சகோதரர்கள் வந்துசேர்ந்தார்கள். பண்டிகை காரணமாக போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதாகத் தெரிவித்து, தாமதம் ஏற்பட்டதற்கு வருத்தமும் தெரிவித்தார்கள்.

உயரமான பிரதேசத்தில் ஊழியம்

லாபாஸ் நகரம் கடல்மட்டத்திற்கு மேலே ஏறத்தாழ 3,625 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்தது; ஆகவே பெரும்பாலான நாட்களில் மேகக்கூட்டங்களும்கூட எங்களுக்குக் கீழேயே தவழ்ந்து சென்றன. நாங்கள் சுவாசித்த காற்றில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்ததால், எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது; அதோடு கொஞ்ச நேரம் ஊழியம் செய்த உடனேயே களைத்துப் போனேன். உயரமான பிரதேசத்தின் சூழ்நிலைக்கு ஒத்துப்போக எனக்கு ஒரு வருடம் பிடித்தது; இருந்தாலும் யெகோவாவின் ஆசீர்வாதங்களுடன் ஒப்பிட இந்த உடல் உபாதைகள் எல்லாம் ஒன்றுமேயில்லை. உதாரணமாக, 1984-⁠ஆம் வருடத்தில் ஒரு நாள், மலை உச்சியில் இருந்த ஒரு வீட்டுக்குச் செல்வதற்கு அதன் கரடுமுரடான சரிவில் ஏறினேன். களைத்துப்போய் அந்த வீட்டின் கதவைத் தட்டினேன், ஒரு பெண்மணி வெளியே வந்தார். சுவாரஸ்யமான உரையாடலுக்குப்பிறகு, அவரை சில நாட்களில் மீண்டும் வந்து சந்திப்பதாகத் தெரிவித்தேன்.

“இத்தனைக் கஷ்டப்பட்டு திரும்பவும் வருவீர்களா, என்ன!” என்றார் அந்தப் பெண்மணி. ஆனால், நான் சொன்னபடியே சென்றேன்; அவரோ தன்னுடைய மகளுக்கு பைபிளைக் கற்றுக் கொடுக்கும்படி கூறினார். “பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமையாயிற்றே!” என்று சொன்னதோடு, “பைபிளைப் பற்றி கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பமிருந்தால் சொல்லுங்கள், நான் உதவி செய்கிறேன்” என்று சொன்னேன். அதை ஆமோதித்த அவர் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார். அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது; எனவே, இப்படிப்பட்டவர்களை மனதில் வைத்து யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற சிறுபுத்தகத்திலிருந்து படிப்பை ஆரம்பித்தேன்.

காலப்போக்கில், அவருக்கு எட்டுப் பிள்ளைகளாகிவிட்டார்கள். நான் அங்கே சென்றபோது, பிள்ளைகள் சிலர் மனிதச் சங்கிலியாக நின்றுகொண்டு சரிவில் ஏறிவர எனக்கு உதவினார்கள். முழு குடும்பமும்​—⁠அப்பா, அம்மா, எட்டுப் பிள்ளைகள்​—⁠யெகோவாவைச் சேவித்தார்கள். மூன்று மகள்கள் பயனியராகச் சேவை செய்கிறார்கள்; ஒரு மகன் சபை மூப்பராக இருக்கிறார். தகப்பன் 2000-⁠ல் இறக்கும் வரை உதவி ஊழியராகச் சேவை செய்தார். இந்த அருமையான குடும்பத்தையும் அவர்களுடைய விசுவாசத்தையும் பற்றி நினைக்கும்போதெல்லாம் நான் பூரிப்படைகிறேன். அவர்களுக்கு உதவ எனக்கு வாய்ப்பு தந்ததற்காக யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

மீண்டும் கார்மெனுடன்

1997-⁠ல் அம்மா இறந்தபிறகு, கார்மென் மீண்டும் விசேஷ பயனியராகச் சேவை செய்வதற்கு அழைப்பைப் பெற்றாள். 1998-⁠ல் நான் சேவை செய்துவந்த பொலிவியாவிலுள்ள கோச்சாபாம்பாவிற்கே அவளும் நியமிக்கப்பட்டாள். 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் நாங்கள் இருவரும் இணைந்தோம், அதோடு கார்மென் மிஷனரியாகவே நியமிக்கப்பட்டாள். கோச்சாபாம்பாவில் எங்கள் நாட்கள் அருமையாகக் கழிந்தன. அங்கே இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் சிட்டுக்குருவிகள்கூட அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்லாது என்பதாக சொல்லப்படுகிறது. தற்போது, நாங்கள் 2,20,000 பேர் வசிக்கிற பொலிவியாவிலுள்ள சுக்ரி என்ற அழகிய நகரத்தில் வசிக்கிறோம்; இது உயரத்திலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. ஒருகாலத்தில் இங்கே ஏகப்பட்ட கத்தோலிக்க சர்ச்சுகள் இருந்ததால் இது சிறிய வத்திகன் என அழைக்கப்பட்டது; இப்போது இங்கே யெகோவாவின் சாட்சிகளுடைய ஐந்து சபைகள் இருக்கின்றன.

கார்மெனும் நானும் சேர்ந்து 60-⁠க்கும் அதிகமான ஆண்டுகளை பயனியர் ஊழியத்தில் கழித்திருக்கிறோம். நூறுக்கும் மேற்பட்ட ஆட்கள் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறுவதற்கு உதவியிருக்கிறோம்; இதை ஒப்பற்ற பாக்கியமாகக் கருதுகிறோம். ஆம், யெகோவாவுக்கு முழு ஆத்துமாவோடு சேவை செய்வதே சிறந்த வேலை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை!​—மாற்கு 12:⁠30.

[அடிக்குறிப்பு]

a பைபிளில் இரண்டே இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள்தான் குறிப்பிடப்பட்டுள்ளன; பொய்வணக்கத்தாரே அவற்றைக் கொண்டாடினார்கள், அதோடு, அவற்றைக் குறித்து சாதகமான கருத்துகள் சொல்லப்படவில்லை. (ஆதியாகமம் 40:20-22; மாற்கு 6:21-28) சமுதாயத்தின் அல்லது நண்பர்களின் செல்வாக்கு காரணமாக பரிசுகள் தருவதைக் காட்டிலும் இதயப்பூர்வமாக பரிசுகள் தருவதையே கடவுளுடைய வார்த்தை ஊக்குவிக்கிறது.​—⁠நீதிமொழிகள் 11:25; லூக்கா 6:38; அப்போஸ்தலர் 20:35; 2 கொரிந்தியர் 9:⁠7.

[பக்கம் 15-ன் படம்]

இந்தக் குடும்பத்தாருக்குப் படிப்பு நடத்த கரடுமுரடான மலைச்சரிவில் ஏறினேன்

[பக்கம் 15-ன் படம்]

ஊழியத்தில் நானும் என் அக்கா கார்மெனும் (வலது)