Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனத்தாழ்மை—பலமா, பலவீனமா?

மனத்தாழ்மை—பலமா, பலவீனமா?

பைபிளின் கருத்து

மனத்தாழ்மை​—⁠பலமா, பலவீனமா?

அகந்தையிலும் ஆணவத்திலும் ஊறிப்போயிருக்கும் நபர்களே பின்பற்றத் தகுந்தவர்கள் என்பதாக இந்த உலகம் பெரும்பாலும் சித்தரிக்கிறது. மனத்தாழ்மையும் பணிவும் உள்ளவர்கள் பொதுவாக வலுவிழந்தவர்களாகவும், கோழைகளாகவுமே கருதப்படுகிறார்கள். ஆனால் உண்மையான மனத்தாழ்மை, பலவீனத்துக்கு அடையாளமா? மறுபட்சத்தில் பெருமை பலத்திற்கு அடையாளமா? இதைப்பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

சில விஷயங்களில் பெருமைப்பட்டுக்கொள்வதை பைபிள் ஆதரித்தே பேசுகிறது என்பதை முதலில் சொல்லியாக வேண்டும். உதாரணத்திற்கு, யெகோவாவைத் தங்களுடைய கடவுளாகக் கொண்டிருப்பதைக் குறித்தும் அவர் தங்களைத் தெரிந்து வைத்திருப்பதைக் குறித்தும் கிறிஸ்தவர்கள் பெருமைப்பட வேண்டும். (சங்கீதம் 47:4, NW; எரேமியா 9:24; 2 தெசலோனிக்கேயர் 1:3, 4) தங்களுடைய பிள்ளைகள் கிறிஸ்தவ ஒழுக்கத்தில் சிறந்த மாதிரிகளாக விளங்கும்போதும் மெய் வணக்கத்திற்காக உறுதியான நிலைநிற்கை எடுக்கும்போதும் பெற்றோர் பெருமைப்படலாம். (நீதிமொழிகள் 27:11) இருந்தாலும் பெருமைக்கு இருண்ட பக்கமும் இருக்கிறது.

பெருமையும் மனத்தாழ்மையும்​—⁠விரிவான விளக்கம்

பெருமை என்பதற்கு ஒரு விளக்கம், தன்னைத்தான் அளவுக்குமீறி மதிப்புடன் நினைப்பதாகும். ஒரு நபருக்கு இப்படிப்பட்ட பெருமை இருந்தால் அவர் என்ன செய்வார்? உதாரணத்திற்கு அழகு, அந்தஸ்து, ஆஸ்தி, திறமை, ஜாதி ஆகியவை ஒரு நபரை தேவையின்றி தன்னைக் குறித்து அதிமுக்கியமாய் நினைக்க வைக்கலாம். அதோடு, மற்றவர்களைவிட தன்னை உயர்வாகக் கருதவும் செய்யலாம். (யாக்கோபு 4:13-16) ‘இறுமாப்புள்ளவர்களை’ பற்றி பைபிள் பேசுகிறது. (2 தீமோத்தேயு 3:4) வேறு வார்த்தைகளில் சொன்னால், இவர்கள் தங்களை மிஞ்சி யாருமில்லை என நினைக்கிறார்கள். ஆனால் அப்படி நினைப்பதற்கு எந்த நியாயமான காரணமுமில்லை.

மறுபட்சத்தில் தாழ்மையுள்ளோர் தங்கள் குறைபாடுகளை ஒத்துக்கொள்கிறார்கள், கடவுளுக்கு முன் தாங்கள் ஒன்றுமில்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறார்கள். அதனால் தங்களைக் குறித்து மிதமிஞ்சி நினைக்காமல் நியாயமாகவே நினைக்கிறார்கள். (1 பேதுரு 5:6) அதுமட்டுமல்ல, மற்றவர்களிடம் உள்ள நல்ல குணங்களைக் கவனித்து அதைக் குறித்து சந்தோஷமும் அடைகிறார்கள். (பிலிப்பியர் 2:3) எனவே, அவர்களிடம் பொறாமை பொங்குவதில்லை. (கலாத்தியர் 5:26) ஆக, உண்மையான மனத்தாழ்மை, மற்றவர்களுடன் ஒற்றுமையாக இருக்க உதவுவதுடன் மனதுக்கு நிம்மதியையும் நிறைவையும் தருகிறது.

இயேசுவை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். பூமிக்கு வருமுன் அவர் பரலோகத்தில் சக்திவாய்ந்த ஓர் ஆவி சிருஷ்டியாக இருந்தார். பூமியில் இருந்தபோது பாவமே அறியாத பரிபூரண மனிதராக இருந்தார். (யோவான் 17:5; 1 பேதுரு 2:21, 22) அவர் ஈடிணையற்ற திறமையும் அறிவும் புத்திக்கூர்மையும் ஒருசேரப் பெற்றிருந்தார். இவையெல்லாம் இருந்தும் அவர் பெருமை அடித்துக்கொள்ளவில்லை. மாறாக எப்போதும் தாழ்மையை வெளிக்காட்டினார். (பிலிப்பியர் 2:6) ஒருசமயம் தம் சீஷர்களின் பாதங்களைக்கூட கழுவினார்; சிறுபிள்ளைகளிடம் உண்மையான அக்கறை காட்டினார். (லூக்கா 18:15, 16; யோவான் 13:4, 5) ஒருமுறை ஒரு பிள்ளையை தன் அருகில் அழைத்து இயேசு இவ்வாறு சொன்னார்: “இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.” (மத்தேயு 18:2-4) ஆம், இயேசுவின் பார்வையிலும் அவருடைய பிதாவின் பார்வையிலும் உண்மையான உயர்வு என்பது தாழ்மையினால் வருவதே, பெருமையினால் அல்ல.​—யாக்கோபு 4:10.

மனத்தாழ்மை​—⁠பலமே

இயேசு மனத்தாழ்மையின் சிகரமாக விளங்கினாலும் அவர் ஒரு கோழையாகவோ பயந்து நடுங்குபவராகவோ இருக்கவில்லை. அவர் உண்மை பேசத் தயங்கவில்லை. மனிதர்களைக் கண்டு அஞ்சவுமில்லை. (மத்தேயு 23:1-33; யோவான் 8:13, 44-47; 19:10, 11) இதனால், தம்மை எதிர்த்தவர்கள் சிலரின் மதிப்பு மரியாதையையும் சம்பாதித்தார். (மாற்கு 12:13, 17; 15:5) ஆனால், இயேசு ஒருபோதும் வீறாப்புடன் நடந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, மனத்தாழ்மையோடும் அன்போடும் கனிவோடும் நடந்துகொண்டார். இதனால் மக்கள் அவரிடம் கவரப்பட்டார்கள். பெருமைபிடித்த ஒருவர் அதை கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாது. (மத்தேயு 11:28-30; யோவான் 13:1; 2 கொரிந்தியர் 5:14, 15) இன்றும்கூட லட்சக்கணக்கானோர், இயேசுவுக்கு உண்மையோடு கீழ்ப்படிகிறார்கள். அவர்மீது வைத்திருக்கும் மெய்யான அன்பும், அளவுகடந்த மரியாதையுமே அதற்குக் காரணம்.​—வெளிப்படுத்துதல் 7:9, 10.

கடவுளுடைய வார்த்தை மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளும்படி உற்சாகப்படுத்துகிறது. ஏனென்றால், மனத்தாழ்மையுள்ளவர்கள் சிட்சையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள்; அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது பரமதிருப்தி தரும். (லூக்கா 10:21; கொலோசெயர் 3:10, 12) திருத்தம் செய்யப்பட்டு தகவல்கள் புதிதாக அளிக்கப்படுகையில் அதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள்; இவ்விஷயத்தில் சொல்திறமிக்க பூர்வகால கிறிஸ்தவப் போதகரான அப்பொல்லோவைப் போலவே அவர்களும் இருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 18:24-26) அதோடு, தயங்காமல் கேள்விகளைக் கேட்டு தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். அகந்தையுள்ளவர்களோ, எங்கே தங்கள் அறியாமை புலப்பட்டுவிடுமோ எனப் பயந்து கேள்வி கேட்க பொதுவாகத் தயங்குகிறார்கள்.

முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எத்தியோப்பிய மந்திரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் வாசித்த வசனத்தின் அர்த்தம் புரியாமல் குழம்பிப்போயிருந்தார். கிறிஸ்துவின் சீஷரான பிலிப்பு அந்த மந்திரியிடம், “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா” என்றார். அதற்கு அவர், “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும்” என்றார். மனத்தாழ்மைக்கு என்னே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! இத்தனைக்கும் அந்த மந்திரி தன் நாட்டில் ஒரு கெளரவமான பதவியில் இருந்தார். ஆனால் அவருக்கு மனத்தாழ்மை இருந்ததால்தான் வசனங்களின் பேரில் விரிவான விளக்கத்தைப் பெற்றார்.​—அப்போஸ்தலர் 8:26-38.

யூத வேதபாரகரும் பரிசேயரும் தாங்கள் வாழ்ந்த காலத்தின் பெரிய மத குருமார்களாக தங்களைக் கருதினார்கள். இவர்களுக்கும் இந்த எத்தியோப்பிய மந்திரிக்கும் எவ்வளவு வித்தியாசம்! (மத்தேயு 23:5-7) இவர்கள், இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் தாழ்மையோடு செவிகொடுப்பதற்குப் பதிலாக அவர்களைக் கேலி செய்து அவர்களிடம் குற்றம் கண்டுபிடிக்க வகை தேடினார்கள். அதனால் அவர்களது அகந்தை, அவர்களை ஆன்மீக இருளில் வைத்துவிட்டது.​—யோவான் 7:32, 47-49; அப்போஸ்தலர் 5:29-33.

நீங்கள் மென் களிமண்ணா, கெட்டிக் களிமண்ணா?

யெகோவாவை ஒரு குயவனாகவும், மனிதர்களை களிமண்ணாகவும் பைபிள் சித்தரிக்கிறது. (ஏசாயா 64:8) தாழ்மை மனம் படைத்த ஒருவர், கடவுளின் கையில் மென்மையான களிமண்ணைப் போல இருக்கிறார். கடவுள் தமக்குப் பிடித்த வடிவத்தில் அவரை வனைக்க முடியும். ஆனால் பெருமை பிடித்த நபரோ காய்ந்து கெட்டியாகிப்போன களிமண்ணைப் போல இருக்கிறார். அவரை வனைக்க முடியாது, அப்படியே முயன்றாலும் உடைந்துவிடுவார். மேட்டிமைக்குப் பேர்போனவர்களில் ஒருவன் பூர்வ எகிப்து தேசத்து அரசனாகிய பார்வோன். அவன் யெகோவாவை எதிர்த்ததால் தன் உயிரையே இழந்தான். (யாத்திராகமம் 5:2; 9:17; சங்கீதம் 136:15) “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை” என்ற நீதிமொழிக்கு பார்வோனின் மரணம் மிகச் சிறந்த உதாரணம்.​—நீதிமொழிகள் 16:18.

மேற்குறிப்பிட்ட விஷயங்கள், கடவுளுடைய மக்களிடம் பெருமை ஒருபோதும் தலைதூக்காது என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. உதாரணத்திற்கு, இயேசுவின் சீஷர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று அடிக்கடி தர்க்கம் செய்தார்கள். (லூக்கா 22:24-27) இருந்தாலும், அந்தக் குணம் தங்களை ஆதிக்கம் செலுத்த அவர்கள் விடவில்லை. இயேசுவின் பேச்சைக் கேட்டு பின்னர் தங்களுடைய மனப்பான்மையை மாற்றிக்கொண்டார்கள்.

“தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்” என்று சாலொமோன் எழுதினார். (நீதிமொழிகள் 22:4) மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள இதைவிட நல்ல காரணங்கள் தேவையா, என்ன! அது வெறுமனே எல்லாராலும் விரும்பப்படும் சக்திவாய்ந்த ஒரு குணம் மட்டுமே அல்ல. கடவுளின் தயவைப் பெறுவதற்கும் நித்திய ஜீவ பரிசைப் பெறுவதற்கும் அது நமக்கு உதவுகிறது.​—2 சாமுவேல் 22:28; யாக்கோபு 4:10.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ எல்லா வித பெருமையும் தவறா?​—⁠2 தெசலோனிக்கேயர் 1:3, 4.

◼ கற்றுக்கொள்வதில் மனத்தாழ்மை எப்படி உதவுகிறது?​—அப்போஸ்தலர் 8:26-38.

◼ கடவுளுடைய ஊழியர்கள் மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ள வேண்டுமா?​—லூக்கா 22:24-​27.

◼ தாழ்மை உள்ளவர்களுக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது?​—⁠நீதிமொழிகள் 22:4.

[பக்கம் 20, 21-ன் படம்]

இயேசு தமது மனத்தாழ்மையால் பிள்ளைகளின் இதயத்தில் இடம்பிடித்தார்