Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மற்றொரு மொழியைக் கற்க உங்களால் முடியும்!

மற்றொரு மொழியைக் கற்க உங்களால் முடியும்!

மற்றொரு மொழியைக் கற்க உங்களால் முடியும்!

“எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அனுபவம்” என்று மைக் சொல்கிறார். “வாழ்க்கையில் நான் எடுத்த சிறந்த முடிவுகளில் இதுவும் ஒன்று” என்கிறார் ஃபெல்ப்ஸ். இருவரும் எதைப் பற்றி சொல்கிறார்கள்? மற்றொரு மொழியைக் கற்றுக் கொள்ளும் சவாலைப் பற்றித்தான்.

அகிலமெங்கும் அதிகமதிகமானோர் பல்வேறு காரணங்களுக்காகப் புதிய மொழிகளைப் பயில்கிறார்கள்; சிலர் சொந்த காரணங்களுக்காக, வேறு சிலர் வருமானத்தைப் பெருக்குவதற்காக, இன்னும் சிலர் ஆன்மீக காரணங்களுக்காக அவ்வாறு பயில்கிறார்கள். புதிய மொழியைக் கற்றுவருகிற பலரை விழித்தெழு! பேட்டி கண்டது. அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சில: ஒரு பெரியவராக, புதிய மொழியைக் கற்கும் அனுபவம் எப்படியிருந்தது? மொழியைக் கற்றுக்கொள்ள எது ஒரு நபருக்கு உதவும்? அவர்கள் சொன்னவற்றின் அடிப்படையிலேயே பின்வரும் தகவல் அமைந்துள்ளது. முக்கியமாக, நீங்கள் ஒரு புதிய மொழியைக் கற்று வந்தால், அல்லது கற்றுக்கொள்ள எண்ணியிருந்தால், இந்தக் குறிப்புகள் ஊக்கமூட்டுபவையாகவும், கருத்தாழமிக்கவையாகவும் இருப்பதைக் காண்பீர்கள். உதாரணமாக, பேட்டி காணப்பட்டவர்கள் தெரிவித்த கருத்துப்படி, மற்றொரு மொழியில் புலமை பெறுவதற்கு அவசியமான சில பண்புகளைக் கவனியுங்கள்.

பொறுமை, மனத்தாழ்மை, வளைந்துகொடுத்தல்

சிறு பிள்ளைகள் மிக எளிதாக மொழிகளைப் பயில்கிறார்கள், அதுவும் ஒரே சமயத்தில் இரண்டு, அல்லது அதற்கும் மேற்பட்ட மொழிகளைக்கூட கற்றுவிடுகிறார்கள்; வெறுமனே காதால் கேட்பவற்றை வைத்தே அவற்றைக் கற்றுவிடுகிறார்கள். ஆனால் பெரியவர்கள் பொதுவாக வேறொரு மொழியைக் கற்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அதற்கு ஒரு காரணம், மொழியைக் கற்பதற்கு அதிக காலம் எடுக்கிறது; அதனால் அவர்களுக்குப் பொறுமை தேவைப்படுகிறது. அதோடு ஓய்வுஒழிச்சல் இல்லாத வேலைப்பளு காரணமாக, பெரும்பாலும் இதற்காக மற்ற வேலைகளையெல்லாம் ஒத்திவைக்க வேண்டியதாகிறது.

“மனத்தாழ்மை ரொம்ப முக்கியம், உங்களுக்கு அந்த மொழியை சரளமாகப் பேசத் தெரியாதபோது, சிறுபிள்ளையைப்போல பேசுவதற்குத் தயாராக இருக்க வேண்டும், அதோடு சில சமயங்களில் சிறுபிள்ளையைப்போல மற்றவர்கள் நடத்தினாலும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்” என்று ஜார்ஜ் சொல்கிறார். புதிய மொழியைக் கற்பது எப்படி என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “நீங்கள் உண்மையிலேயே முன்னேற்றம் செய்ய விரும்பினால், உங்களையே உயர்வாக நினைப்பதையும், கௌரவக் குறைச்சலாக நினைப்பதையும் மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டும்.” எனவே, தப்பும்தவறுமாகப் பேசுவதைப்பற்றி ரொம்பவே குறைபட்டுக் கொள்ளாதீர்கள். “உங்கள் பேச்சில் தவறே வரவில்லையென்றால், அந்த மொழியை இன்னும் நீங்கள் நன்றாக கற்றுக்கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்” என்கிறார் பென்.

நீங்கள் தப்புத்தப்பாகப் பேசுவதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தால் கவலைப்படாதீர்கள், நீங்களும் அவர்களுடனே சேர்ந்து சிரித்துக்கொள்ளுங்கள்! உண்மையில், நீங்கள் எப்படியெல்லாம் பேசினீர்கள் என்பதைப் பற்றி ஒருநாள் சுவாரஸ்யமான கதைகளைச் சொல்லத்தான் போகிறீர்கள். அதோடு, கேள்வி கேட்பதற்கும் தயங்காதீர்கள். ஒரு விஷயம் ஏன் ஒரு குறிப்பிட்ட விதமாகச் சொல்லப்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டால் அதை நினைவில் வைத்துக் கொள்வது எளிது.

ஒரு புதிய மொழியைக் கற்பதென்பது பெரும்பாலும் ஒரு புதிய கலாச்சாரத்தையே கற்பதைக் குறிக்கிறது; எனவே, வளைந்து கொடுப்பவராக, பரந்த மனப்பான்மை உள்ளவராக இருப்பது நல்லது. ஜூலி இவ்வாறு சொல்கிறார்: “வேறொரு மொழியைக் கற்றதன் மூலம், காரியங்களைப் பற்றி யோசிப்பதற்கும் செய்வதற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் இருக்கின்றன என்பதை நான் புரிந்து கொண்டேன். பல வழிகள் இருந்தாலும் ஒன்று மற்றொன்றைவிடச் சிறந்தது என்று சொல்லிவிட முடியாது, மாறாக, ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கிறது, அவ்வளவுதான்” என்றும் அவர் சொல்கிறார். ஜே என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “அந்த மொழியைப் பேசுகிற ஆட்களுடன் நட்பு கொள்ளுங்கள், அவர்களோடு பேசி மகிழுங்கள்.” ஆனால், அத்தகைய நண்பர்கள் கண்ணியமாகப் பேசுகிற நல்ல ஆட்களாக இருக்க வேண்டும் என்ற விஷயத்திலும் கிறிஸ்தவர்கள் கவனம் செலுத்துவார்கள். (1 கொரிந்தியர் 15:33; எபேசியர் 5:3, 4) “அவர்களிடமும், அவர்களுடைய உணவு, இசை, இன்னும் இதுபோன்ற விஷயங்களிடமும் நீங்கள் ஆர்வம்காட்டும்போது, அவர்களும் உங்களிடம் நெருங்கிப் பழகுவார்கள்” என்றும் ஜே குறிப்பிடுகிறார்.

ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதற்கு மட்டுமல்ல, அதில் பேசுவதற்கும் நீங்கள் எவ்வளவு நேரத்தைச் செலவிடுகிறீர்களோ அந்தளவு விரைவாக முன்னேற்றம் செய்வீர்கள். ஜார்ஜ் இவ்வாறு சொல்கிறார்: “மொழியைக் கற்பதற்கான நம் திறமை, கோழி ஒவ்வொரு தானியமாக கொத்திக் கொத்தித் தின்பதைப் போலத்தான் இருக்கிறது. அது சின்னச்சின்னத் துணுக்காக இருந்தாலும், கொஞ்சம்கொஞ்சமாக அதிகரித்துவிடும்.” மிஷனரியாக சேவை செய்து பல மொழிகளைக் கற்ற பில் இவ்வாறு சொல்கிறார்: “நான் எங்கே போனாலும் என் கைவசம் வார்த்தைப் பட்டியலை தயாராய் வைத்திருப்பேன், கொஞ்ச நேரம் கிடைத்தாலும் அதை எடுத்துப் பார்ப்பேன்.” நிறைய நேரத்தை ஒதுக்கி எப்போதாவது படிப்பதைவிட, கொஞ்ச நேரத்தை ஒதுக்கி தவறாமல் படிப்பது அதிக பலன் தருவதாக அநேகர் சொல்கிறார்கள்.

மொழியைக் கற்றுக்கொள்ள மக்களுக்கு உதவுகிற ஏராளமான உபகரணங்கள் இருக்கின்றன; புத்தகங்கள், ஆடியோ வீடியோ கேசட்டுகள், ஃபிளாஷ் கார்டுகள், அதாவது, சொற்கள் எழுதப்பட்ட அட்டைகள், இன்னும் இதுபோன்றவை இவற்றில் அடங்கும். இத்தகைய உபகரணங்கள் இருந்தபோதிலும்கூட, அநேகர் வகுப்பறையைப் போன்ற சூழலில் இருக்கும்போதுதான் நன்கு கற்றுக்கொள்வதாக கூறுகிறார்கள். உங்களுக்கு எது பயனுள்ளதாகத் தெரிகிறதோ அந்த முறையைப் பயன்படுத்துங்கள். இருந்தாலும், தனிப்பட்ட உழைப்பும் விடாமுயற்சியும் இல்லாமல், ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்ள முடியாது என்பதை நினைவில் வையுங்கள். ஆனால், கற்பதைச் சுலபமாக்கவும் இன்பம் மிகுந்ததாக்கவும் நிறைய வழிகள் உள்ளன. அதில் ஒன்று, அந்த மொழியையும் கலாச்சாரத்தையும் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்வதே.

“புதிய மொழியின் அடிப்படை விஷயங்கள் சிலவற்றை நன்கு கற்றுக்கொண்டு, அதை ஓரளவுக்கு பேசுவதற்காவது வார்த்தைகளைத் தெரிந்துகொண்ட பிறகு, அம்மொழி பேசப்படுகிற நாட்டுக்குச் சென்று சில காலம் செலவிடுவது சிறந்ததாக இருக்கலாம்” என்று ஜார்ஜ் குறிப்பிடுகிறார். இதை ஆமோதிப்பவராக பார்ப் என்பவர் சொல்கிறார்: “அம்மொழி பேசப்படுகிற நாட்டுக்குச் செல்வது அதற்கே உரிய தனித்தன்மையைக் கிரகிக்க உதவுகிறது.” மிக முக்கியமாக, அந்த மொழி பேசப்படுகிற சூழலில் ஒன்றிப்போவது, அதில் யோசிப்பதற்கு உதவுகிறது. உண்மைதான், வேறொரு நாட்டுக்குச் செல்வதென்பது பெரும்பாலோருக்கு இயலாத காரியம். ஆனால், நீங்கள் வசிக்கும் இடத்திலேயே அந்த மொழியோடும் அதன் கலாச்சாரத்தோடும் ஒன்றிப்போவதற்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். உதாரணமாக, நீங்கள் பயின்று வருகிற அந்த மொழியில் தரமான நல்ல புத்தகங்களோ ரேடியோ அல்லது டிவி நிகழ்ச்சிகளோ இருக்கலாம். உங்கள் பகுதியில் அந்த மொழியை நன்கு பேசுகிற ஆட்களைக் கண்டுபிடித்து அவர்களுடன் பேசுங்கள். “முடிவாக, மொழியைப் பேசிப் பழகுவது மட்டுமே முன்னேறுவதற்கு மிகச் சிறந்த படியாக இருக்கிறது” என புதிய மொழியைக் கற்பது எப்படி என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. a

தேக்கநிலை

மொழியைக் கற்று வருகையில், தேக்கநிலையில் இருப்பதைப்போல நீங்கள் ஒரு கட்டத்தில் உணரலாம்; அதாவது, மேற்கொண்டு முன்னேறாமல் அதே நிலையில் திணறிக்கொண்டிருப்பதாக உணரலாம். அப்படியானால், நீங்கள் என்ன செய்யலாம்? முதலாவதாக, மொழியைக் கற்க வேண்டுமென நீங்கள் முடிவெடுத்ததற்கான காரணங்களைச் சிந்தித்துப் பாருங்கள். யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் பிறருக்கு பைபிளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே புதிய மொழியைப் பயில்கிறார்கள். நீங்கள் ஆரம்பத்தில் வைத்திருந்த இலக்குகளை அல்லது நோக்கத்தைக் குறித்து சிந்திப்பது முன்னேற வேண்டுமென்ற தீர்மானத்தைப் பலப்படுத்தும்.

இரண்டாவதாக, எதார்த்தமான எதிர்பார்ப்புகளை வையுங்கள். “பிறப்பிலேயே அம்மொழியைப் பேசுகிறவரைப்போல உங்களால் ஒருபோதும் பேசமுடியாது. அதோடு அது உங்கள் குறிக்கோளும் அல்ல, உங்களுக்கு வேண்டியதெல்லாம் நீங்கள் பேசுவதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதானே” என்று புதிய மொழியைக் கற்பது எப்படி என்ற புத்தகம் தெரிவிக்கிறது. எனவே, தாய்மொழியைப் பேசுவதுபோல சரளமாகப் பேச முடியவில்லையே என புலம்புவதற்குப் பதிலாக, நீங்கள் இதுவரை கற்றதை வைத்து தெளிவாகப் பேசுவதற்கு கவனம் செலுத்துங்கள்.

மூன்றாவதாக, ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் எந்தளவு முன்னேறியிருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது அளவிட்டுக்கொள்ளுங்கள். மொழியைக் கற்றுக்கொள்வது புல் வளருவதை அருகிலிருந்து பார்ப்பதைப் போல இருக்கிறது; அது வளர்ந்து வருவது உங்களுக்குத் தெரியாது, ஆனால் நாளுக்கு நாள் அது உயரமாகிறது. அதைப்போலவே, நீங்கள் மொழியை முதன்முதலாக படிக்கத் துவங்கிய சமயத்தைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால், இப்போது முன்னேற்றம் செய்திருப்பதைக் காண்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. மற்றவர்களுடைய முன்னேற்றத்தை வைத்து உங்களுடைய முன்னேற்றத்தை எடை போடாதீர்கள். இது சம்பந்தமாக பைபிளில் கலாத்தியர் 6:4-⁠ல் ஒரு நல்ல நியமம் கொடுக்கப்பட்டுள்ளது. அது இவ்வாறு சொல்கிறது: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.”

நான்காவதாக, மொழியைப் பயில்வதை நீண்டகால முதலீடாகக் கருதுங்கள். இப்படி யோசித்துப் பாருங்கள்: மூன்று அல்லது நான்கு வயது பிள்ளை எந்தளவுக்கு திறமையாகப் பேசுகிறான்? கடினமான வார்த்தைகளையும் சிக்கலான இலக்கணத்தையும் அவன் பயன்படுத்துகிறானா? இல்லவே இல்லை! என்றபோதிலும், அவனால் மற்றவர்களுடன் பேச முடிகிறது. சொல்லப்போனால், சிறு பிள்ளைக்கும்கூட ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள பல ஆண்டுகள் பிடிக்கிறது.

ஐந்தாவதாக, புதிய மொழியை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குப் பயன்படுத்துங்கள். “நான் அந்த மொழியை தினந்தோறும் பயன்படுத்தாதபோது, என்னுடைய முன்னேற்றத்தில் ஒரு படிகூட மேலே செல்லாததைக் கவனித்தேன்” என்று பென் சொல்கிறார். எனவே தொடர்ந்து பயன்படுத்துங்கள். பேசுங்கள், பேசுங்கள், பேசிக் கொண்டேயிருங்கள்! சிறு பிள்ளையைப்போல கொஞ்ச வார்த்தைகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு பேச முயலுவது தர்மசங்கடமாக இருக்கும் என்பது உண்மைதான். “நான் சொல்ல நினைக்கிற வார்த்தைகள் பேசுகிற சமயத்தில் வராமல் தடுமாறுவதுதான் மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கிறது” என்று மிலேவி புலம்புகிறார். ஆனால் இத்தகைய சங்கடங்கள்தான் விடாமுயற்சியுடன் முன்னேற உங்களுக்குத் தூண்டுதலளிக்கும். மைக் இவ்வாறு நினைவுகூருகிறார்: “கதைகளையும் ஜோக்குகளையும் புரிந்துகொள்ள முடியவில்லையே என்பதை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். அந்த வருத்தம்தான் இன்னும் நன்கு முன்னேறுவதற்கு கடினமாக உழைக்க என்னை உந்துவித்தது என நினைக்கிறேன்.”

மற்றவர்கள் எவ்வாறு உதவலாம்

புதிதாக மொழியைக் கற்பவருக்கு ஏற்கெனவே அந்த மொழியைப் பேசுகிறவர்கள் எவ்வாறு உதவலாம்? முன்னே குறிப்பிடப்பட்ட பில் இவ்வாறு தெரிவிக்கிறார்: “மெதுவாக, ஆனால் திருத்தமாகப் பேசுங்கள், மழலை மொழியில் பேசாதீர்கள்.” ஜூலி இவ்வாறு சொல்கிறார்: “சொல்ல விரும்புவதை அவர்களே முழுமையாகச் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாக இருங்கள், நீங்கள் அவசரப்பட்டு அந்த வாக்கியத்தை முடிக்காதீர்கள்.” டோனி இவ்வாறு நினைவுகூருகிறார்: “இரண்டு மொழிகளையும் நன்கு தெரிந்தவர்கள் என்னுடைய தாய்மொழியிலேயே என்னிடம் பேசினார்கள். இதனால் என் முன்னேற்றம் தடைபட்டது.” எனவே, சில சமயங்களில் தாங்கள் கற்றுவருகிற அந்த மொழியிலேயே பேசும்படியும், அதோடு முன்னேற வேண்டிய குறிப்புகளைச் சுட்டிக்காட்டும்படியும் சிலர் தங்கள் நண்பர்களிடம் கேட்டிருக்கிறார்கள். மொழியைப் பயில்பவர்கள் தங்களுடைய முயற்சிகளை மனதார பாராட்டுபவர்களைப் பெரிதும் மதிக்கிறார்கள். “என் நண்பர்களுடைய அன்பும் ஊக்கமும் இல்லையென்றால் என்னால் இதைச் சாதித்திருக்க முடியாது” என்று ஜார்ஜ் தெரிவிக்கிறார்.

எனவே, வேறொரு மொழியைப் பயில்வது உண்மையிலேயே பிரயோஜனமுள்ளதா? இதற்கான பதிலை, பல்வேறு மொழிகளைப் பேசுகிற, முன்னர் குறிப்பிடப்பட்ட பில் இவ்வாறு கூறுகிறார்: “ஆம்! வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டத்தை விசாலமாக்கவும், மற்றவர்களுடைய நோக்குநிலையிலிருந்து காரியங்களைப் பார்க்கவும் இது எனக்கு உதவியிருக்கிறது. குறிப்பாக, மற்ற மொழிகளைப் பேசுகிற மக்களோடு பைபிளைப் படிக்க முடிவதாலும், அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு ஆன்மீக ரீதியில் முன்னேறுவதைக் காண்பதாலும், இதற்காக நாம் எடுக்கிற எந்த முயற்சியும் தகுந்ததே எனத் தோன்றுகிறது. சொல்லப்போனால், 12 மொழிகளைச் சரளமாகப் பேசுகிற ஒருவர் ஒருசமயம் என்னிடம் இவ்வாறு சொன்னார்: ‘உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது. நான் விளையாட்டாக பாஷைகளைப் படித்தேன், நீயோ உண்மையிலேயே மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்பதற்காக படிக்கிறாய்.’”

[அடிக்குறிப்பு]

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்ற ஆசையே மொழியைக் கற்றுக்கொள்ள பலமான தூண்டுதலாகும்