Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“ஹூக் அப்”பிற்கு யாராவது அழைத்தால் என்ன செய்வது?

“ஹூக் அப்”பிற்கு யாராவது அழைத்தால் என்ன செய்வது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

“ஹூக் அப்”பிற்கு யாராவது அழைத்தால் என்ன செய்வது?

“செக்ஸ்வரை போக முடியுமா என்பதைப் பார்க்கவே, அதுவும் எத்தனை பேருடன் முடியுமென பார்க்கவே இளவட்டங்கள் “ஹூக் அப்”பிற்கு அழைக்கிறார்கள்.”​​—⁠ பென்னி. a

பையன்கள் அதைப்பற்றி வாய்கூசாமல் பேசுகிறார்கள். தங்களுக்கு ஒரு கேர்ல் ஃபிரண்ட் இருந்தாலும் வேறு பெண்களுடனும் செக்ஸில் ஈடுபடுவதைக் குறித்து பந்தாவாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.”​​—⁠ எட்வர்ட்.

‘ஹூக் அப்’பிற்கு என்னை அழைத்தவர்கள் அதைப்பற்றி நேரடியாகவே என்னிடம் கேட்டார்கள். அவர்களிடம் ‘முடியாது’ என்று சொன்னாலும் விடாமல் கேட்டுக்கொண்டே இருப்பார்கள்!”​​—⁠ ஈடா.

அவை சில இடங்களில் ‘செக்‍ஷுவல் ஷேரிங்’ அதாவது பாலியல் பகிர்வு என அழைக்கப்படுகின்றன. பிற இடங்களில் ‘ஹூக் அப்ஸ்’ என அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு ஜப்பானில், ‘டேக்-அவுட்ஸ்’ என அழைக்கப்படுவதாக ஆக்கிகோ என்ற இளம்பெண் சொல்கிறாள். “இதில் ஈடுபடுகிறவர்கள் ‘செஃப்ரே’ என்றும் அழைக்கப்படுகிறார்கள், அதன் அர்த்தம் ‘செக்ஸ் ஃபிரண்ட்,’ . . . செக்ஸுக்காக மட்டுமே அவர்கள் ஃபிரண்ட்ஸ்” என்றும் அவள் சொல்கிறாள்.

அவற்றுக்கு வெவ்வேறு பெயர்கள் இருந்தாலும் அர்த்தம் ஒன்றே. பிணைப்பு இணைப்பில்லாமல் விளையாட்டாக செக்ஸில் ஈடுபடுவதே அதன் அர்த்தம். b இதுபோக சில இளசுகள் தங்களுக்கு “உபயோகமான நண்பர்கள்” (“friends with benefits”) இருப்பதைக் குறித்தும் பெருமை அடித்துக்கொள்கிறார்கள். யார் இவர்கள்? நீண்ட காலக் காதல் என்ற “சிக்கல்” ஏதுமில்லாமல் வெறும் செக்ஸ் நண்பர்களாக மட்டுமே இருக்கிறவர்கள் இவர்கள். “காமப் பசியை உடனுக்குடன் தீர்த்துக்கொள்வதுதான் ‘செக்‍ஷுவல் ஷேரிங்,’ . . . தேவையானது கிடைத்த பிறகு கிளம்ப வேண்டியதுதான்” என்கிறாள் ஓர் இளம் பெண்.

நீங்கள் கிறிஸ்தவர் என்றால், ‘வேசித்தனத்திற்கு விலகியோட’ வேண்டும். c (1 கொரிந்தியர் 6:18) இதை அறிந்துவைத்திருக்கும் நீங்கள், உங்களைச் சோதனைக்குள் விழச்செய்யும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்திருப்பீர்கள். இருந்தாலும் சில சமயங்களில் சோதனை உங்களைத் தேடி வரும். “ஸ்கூலில் நிறைய பையன்கள் செக்ஸுக்காக என்னை கூப்பிட்டிருக்கிறார்கள்” என்று ஸிண்டி சொல்கிறாள். வேலை செய்யுமிடத்திலும் இந்தப் பிரச்சினை இருக்கலாம். “என் முதலாளி செக்ஸுக்காக என்னை அழைத்தார், . . . அவர் என்னை அந்தளவு நச்சரித்ததால் என் வேலையையே விடவேண்டிய நிலைமை ஏற்பட்டது!” என்கிறாள் மார்கரட்.

மறுபட்சத்தில், உங்கள் அடிமனதில் இந்த ஆசை எட்டிப்பார்ப்பது போல் தோன்றினால் அதைக் குறித்து ஆச்சரியப்படாதீர்கள். “எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 17:9) அது உண்மை என்பதை லுர்டெஸ் என்ற பெண் உணர்ந்தாள். “செக்ஸுக்காக என்னைக் கூப்பிட்ட அந்தப் பையனை எனக்குப் பிடித்திருந்தது” என்று அவள் ஒத்துக்கொள்கிறாள். ஜேன் என்ற பெண்ணுக்கும் அப்படியே இருந்தது. “என்னுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை . . . அவனிடம் முடியாது என்று சொல்வதுதான் என் வாழ்க்கையிலேயே மிகக் கடினமான விஷயமாக இருந்தது” என்று அவள் மனம்விட்டுச் சொல்கிறாள். முன்பு குறிப்பிடப்பட்ட எட்வர்ட்டும் ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வது அவ்வளவு சுலபமல்ல என்பதை ஒத்துக்கொள்கிறான். “பல பெண்கள் செக்ஸுக்காக என்னை அழைத்திருக்கிறார்கள்; கிறிஸ்தவனாக இருப்பதால், அதை மறுப்பது எனக்கு மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது . . . இல்லை என்று சொல்லவே கஷ்டமாக இருக்கிறது!” என்று அவன் சொல்கிறான்.

லுர்டெஸ், ஜேன், எட்வர்ட் ஆகிய மூவரைப் போலவே நீங்களும் உணர்ந்திருக்கிறீர்களா? இருந்தாலும், கடவுளின் பார்வையில் சரியானதைச் செய்திருக்கிறீர்களென்றால், அதற்காக உங்களை முதலில் பாராட்டியே ஆகவேண்டும். அப்போஸ்தலன் பவுலும்கூட தொடர்ந்து கெட்ட சிந்தனைகளை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது என்பதை அறிவது உங்களுக்கு ஆறுதல் அளிக்கலாம்.​—ரோமர் 7:21-24.

பிணைப்பு இணைப்பில்லாமல் விளையாட்டாக செக்ஸில் ஈடுபட நீங்கள் அழைக்கப்படுகையில் பைபிளிலுள்ள என்ன நியமங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்?

விளையாட்டு செக்ஸ் ஏன் தவறு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்

திருமண பந்தத்திற்கு வெளியே பாலுறவில் ஈடுபடுவதை பைபிள் கண்டனம் செய்கிறது. சொல்லப்போனால், வேசித்தனம் எந்தளவுக்கு பெரிய பாவம் என்றால், அதில் ஈடுபடுபவர்கள், “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) விளையாட்டாக செக்ஸில் ஈடுபடுவதற்கான போராட்டத்தை வெல்ல நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அவ்விஷயத்தை யெகோவா கருதும் விதமாகவே நீங்களும் கருத வேண்டும். உங்கள் கற்பைக் காத்துக்கொள்ள வேண்டுமென நீங்கள் சுயமாகத் தீர்மானிக்க வேண்டும்.

“யெகோவா காட்டும் வழியில் வாழ்வதே சிறந்தது என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை.”​—⁠கரென், கனடா.

“கணநேர இன்பத்துக்காக, ஒருவர் யெகோவாவின் ஒழுக்க நெறிகளை மீறுவது பெரிய இழப்பு.”​—⁠விவ்வியன், மெக்சிகோ.

“நீங்கள் ஒருவருடைய மகன் அல்லது மகளாக, பலருக்கு சிநேகிதன் அல்லது சிநேகிதியாக, ஒரு சபையின் பாகமாக இருப்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் சோதனைக்கு அடிபணிந்துவிட்டால் இவர்கள் எல்லாரும் உங்கள்மீது வைத்திருந்த நம்பிக்கை சுக்குநூறாகிவிடும்!”​—⁠பீட்டர், பிரிட்டன்.

அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் [தொடர்ந்து] சோதித்துப்பாருங்கள்.” (எபேசியர் 5:10) வேசித்தனத்தை யெகோவா கருதும் விதமாகவே நீங்களும் கருதினால் ‘தீமையை வெறுக்க முடியும்.’ அது உங்களுடைய பாவமுள்ள மாம்சத்திற்குக் கவர்ச்சிகரமாக இருந்தாலும்கூட அதை உங்களால் வெறுக்க முடியும்.​—சங்கீதம் 97:10.

◼ வாசித்துப் பார்க்கவும்: ஆதியாகமம் 39:7-9. செக்ஸில் ஈடுபடும்படி யோசேப்புக்கு வந்த சோதனையை அவர் உறுதியாக எதிர்த்ததையும், அப்படி உறுதியாய் இருக்க எது அவருக்கு உதவியது என்பதையும் கவனியுங்கள்.

உங்கள் நம்பிக்கைகளில் பெருமிதங்கொள்ளுங்கள்

இளைஞர்கள் தங்களுடைய நம்பிக்கைகளில் உறுதியாக இருப்பதும் அவற்றை ஆதரிப்பதும் இயல்பு. கிறிஸ்தவர்களாகிய உங்களுக்கிருக்கும் பாக்கியம், உங்கள் நன்னடத்தையின்மூலம் கடவுளுடைய பெயருக்கு மகிமை சேர்ப்பதாகும். திருமணத்திற்கு முன் செக்ஸில் ஈடுபடுவது தவறு என்ற கருத்தில் நீங்கள் உறுதியாய் இருப்பதைக் குறித்து வெட்கப்படத் தேவையில்லை.

“நீங்கள் உயர்ந்த ஒழுக்க தராதரங்களைக் கடைப்பிடிப்பவர் என்பதை ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லிவிடுங்கள்.”​—⁠அலன், ஜெர்மனி.

“உங்கள் நம்பிக்கைகளைக் குறித்து வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.”​—⁠எஸ்தர், நைஜீரியா.

“‘நான் டேட்டிங் போக அப்பா, அம்மா சம்மதிக்க மாட்டார்கள்’ என்றெல்லாம் சொன்னால், விளையாட்டு செக்ஸ் விஷயத்தில் உங்கள் தீர்மானத்தை உங்களுடைய நண்பர்கள் மதிக்க மாட்டார்கள். உங்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்பதைத் தெரியப்படுத்துங்கள்.”​—⁠ஜானட், தென் ஆப்பிரிக்கா.

“நான் மேல்நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது என்னுடன் படித்த பையன்களுக்கு என்னைப் பற்றி நன்றாகவே தெரியும். என்னிடம் அந்த வேலையெல்லாம் நடக்காது என்பதும் அவர்களுக்குத் தெரியும்.”​—⁠விக்கி, அமெரிக்கா.

உங்கள் நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்காமல் உறுதியாயிருப்பது நீங்கள் முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவராக ஆகிவருகிறீர்கள் என்பதற்கு அடையாளம்.​—1 கொரிந்தியர் 14:20.

◼ வாசித்துப் பார்க்கவும்: நீதிமொழிகள் 27:11. உங்களுடைய நடத்தை யெகோவாவின் பெயரை எவ்வாறு மகிமைப்படுத்துகிறது என்பதைப் பாருங்கள். அது உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாக்கியம்!

உறுதியாயிருங்கள்!

‘இல்லை’ என்று சொல்வது மிக முக்கியம். ஆனால், உங்களுக்கு “இஷ்டமில்லாதது போல் நீங்கள் நடிப்பதாகச்” சிலர் உங்களைத் தவறாகவும் புரிந்துகொள்ளலாம்.

“உங்களைக் கூப்பிடும்போது நீங்கள் ‘இல்லை’ என்று சொன்னால், அதை அவர் சவாலாக எடுத்துக்கொள்ளலாம். உங்களை எப்படியாவது மடக்கிவிட வேண்டுமென நினைக்கலாம். அது அவரை இன்னும் உசுப்பிவிடலாம். உங்களைத் தொடர்ந்து நச்சரிக்கத் தூண்டலாம்.”​—⁠லாரன், கனடா.

“நீங்கள் செய்கிற ஒவ்வொன்றும், உங்கள் உடை, பேச்சு, நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள், எப்படிப் பேசுகிறீர்கள் ஆகியவை அவர்களுடைய அழைப்பை நீங்கள் மறுக்கிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்.”​—⁠ஜாய், நைஜீரியா.

“நீங்கள் அழுத்தம் திருத்தமாக ‘இல்லை’ என்று சொல்ல வேண்டும்.”​—⁠டானியெல், ஆஸ்திரேலியா.

“கண்டிப்புடன் இருங்கள்! ஒருவன் என்னை அழைத்தபோது, நான் அவனிடம், ‘முதலில் என் தோள் மேலிருந்து கையெடு!’ என்று சொல்லி முறைத்துவிட்டு விருட்டென்று நடையைக் கட்டினேன்.”​—⁠எலன், பிரிட்டன்.

“உங்களுக்கு அதில் விருப்பமில்லை என்று முகத்துக்கு நேராகச் சொல்லிவிடுங்கள். இப்போது மட்டுமல்ல எப்போதுமே உங்களுக்கு அதில் இஷ்டம் இருக்காது என்பதைச் சொல்லிவிடுங்கள். தயவு காட்டுவதற்கெல்லாம் இது சமயம் கிடையாது!”​—⁠ஜீன், ஸ்காட்லாந்து.

“ஒரு பையன் என்னை அவனுடன் வரும்படி திரும்பத்திரும்ப கூப்பிட்டுக்கொண்டே இருந்தான். என்னை கிண்டலடித்துக்கொண்டே இருந்தான். ஒருநாள் நான் சீறும் புலியாக மாறினேன். அப்போதுதான் அவனுடைய தொல்லை நின்றது.”​—⁠குவானீட்டா, மெக்சிகோ.

“அவர்களுடன் நீங்கள் ஒருபோதும் செக்ஸில் ஈடுபடப் போவதில்லை என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். உங்களுடன் செக்ஸில் ஈடுபட முயற்சி செய்கிற பையன்களிடமிருந்து ஒருபோதும் அன்பளிப்புகளைப் பெறாதீர்கள். அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். நீங்கள் என்னவோ அவர்களுக்குக் கடன்பட்டிருப்பதுபோல் செய்துவிடுவார்கள்.”​—⁠லாரா, பிரிட்டன்.

நீங்கள் உறுதியாக இருந்தால் யெகோவா உங்களுக்கு உதவி செய்வார். சங்கீதக்காரனாகிய தாவீது தன் சொந்த அனுபவத்திலிருந்து யெகோவாவைப்பற்றி இவ்வாறு சொல்ல முடிந்தது: “ஒருவன் உமக்கு உண்மையாய் இருந்தால் நீரும் அவனுக்கு உண்மையாய் இருப்பீர்.”​—சங்கீதம் 18:25, 26, ஈஸி டு ரீட் வர்ஷன்.

◼ வாசித்துப் பார்க்கவும்: 2 நாளாகமம் 16:9. தம்மை முழு இருதயத்தோடு சேவிப்பவர்களுக்கு உதவ யெகோவா எவ்வளவு ஆவலாய் இருக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.

முன்யோசனை தேவை

“விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 22:3) இந்த ஆலோசனையை நீங்கள் எவ்வாறு பின்பற்றலாம்? முன்னதாகவே யோசித்துப் பார்ப்பதன்மூலம்!

“அப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுகிறவர்களிடமிருந்து முடிந்தளவு விலகியே இருங்கள்.”​—⁠நாயோமி, ஜப்பான்.

“ஆபத்து விளைவிக்கக்கூடிய கூட்டுறவுகளையும் சூழ்நிலைகளையும் தவிர்த்திடுங்கள். உதாரணத்திற்கு, எனக்குத் தெரிந்த சிலர், குடிபோதையில் இருந்தபோது இந்த வலையில் சிக்கிவிட்டார்கள்.”​—⁠ஈஷா, பிரேசில்.

“உங்கள் விலாசம், தொலைபேசி எண் போன்ற தகவல்களைக் கொடுக்காதீர்கள்.”​—⁠டையனா, பிரிட்டன்.

“உங்கள் வகுப்பு மாணவர்களை சகஜமாகக் கட்டித் தழுவாதீர்கள்.”​—⁠எஸ்தர், நைஜீரியா.

“உங்கள் உடையைக் குறித்து கவனமாயிருங்கள். உங்கள் உடை மற்றவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவது போல் இருக்கக்கூடாது.”​—⁠ஹைடி, ஜெர்மனி.

“உங்கள் பெற்றோருடன் நல்ல உறவை வைத்துக்கொள்ளுங்கள்; அவர்களிடம் இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுவது உங்களுக்குப் பலமான பாதுகாப்பை அளிக்கும்.”​—⁠ஆக்கிகோ, ஜப்பான்.

உங்கள் பேச்சு, நடத்தை, கூட்டுறவு, நீங்கள் அடிக்கடி செல்லும் இடங்கள் ஆகியவற்றை சற்று யோசித்துப்பாருங்கள். பிறகு உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘செக்ஸில் ஈடுபட மற்றவர்கள் என்னை அழைப்பதற்கு நானே காரணமாயிருக்கிறேனா? என்னை அறியாமலே அப்படிப்பட்ட எண்ணத்தை மற்றவர்களுக்குத் தருகிறேனா?’

◼ வாசித்துப் பார்க்கவும்: ஆதியாகமம் 34:1, 2. தவறான இடத்தில் இருந்ததால் தீனாள் என்ற பெண் எவ்வாறு பாதிக்கப்பட்டாள் என்பதைப் பாருங்கள்.

விளையாட்டான செக்ஸ் என்பது யெகோவாவுக்கு விளையாட்டான விஷயமல்ல, அது உங்களுக்கும் விளையாட்டாக இருக்கக்கூடாது என்பதை மறவாதீர்கள். “விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, . . . தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை” என்று பைபிள் சொல்கிறது. (எபேசியர் 5:5) சரியானதை மட்டுமே செய்ய நீங்கள் தீர்மானமாய் இருந்தால் சுத்தமான மனசாட்சியையும் சுயமரியாதையையும் காத்துக்கொள்ளலாம். கார்லி என்ற பெண் சொல்கிற விதமாக, “இன்னொருவர் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்ள நீங்கள் ஏன் ‘பலியாடாய்’ ஆக வேண்டும்? இத்தனை காலமாக நீங்கள் காத்துவந்த உங்களுடைய சுத்தமான நிலையைப் பறிகொடுத்துவிடாதீர்கள்!”

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடரின் கூடுதலான கட்டுரைகளைக் காண்க

சிந்திப்பதற்கு

◼ முறைகேடான செக்ஸ் பாவமுள்ள மாம்சத்திற்கு கவர்ச்சிகரமாக இருந்தாலும் அது ஏன் தவறு?

◼ யாராவது உங்களை விளையாட்டு செக்ஸில் ஈடுபட அழைத்தால் என்ன செய்வீர்கள்?

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b இதற்குப் பயன்படுத்தப்படும் வேறு பதங்கள், வருடுவது, முத்தமிடுவது போன்ற நெருக்கத்தை வெளிப்படுத்தும் வேறு செயல்களையும் உட்படுத்தலாம்.

c வேசித்தனம் என்பதில் உடலுறவு, வாய்வழி செக்ஸ், ஆசனவழி செக்ஸ், ஓரினப்புணர்ச்சி, இன்னொருவரின் பிறப்புறுப்புகளைக் கிளர்ச்சியடையச் செய்தல், திருமணமாகாத இருவர் பிறப்புறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவையெல்லாம் உட்படுகின்றன.

[பக்கம் 27-ன் பெட்டி]

◼ வேசித்தனத்தில் ஈடுபடுகிற ஒருவன் “சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:18) அது எப்படி? ஏதேனும் சில வழிகளை உங்களால் யோசிக்க முடிகிறதா என்று பாருங்கள். அவற்றைக் கீழே எழுதுங்கள்.

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடிக்க உதவும் சில பிரசுரங்கள்: யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகம், பக்கம் 188; மே 1, 1990 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கம் 23.

[பக்கம் 29-ன் பெட்டி]

பெற்றோர் கவனிக்க . . .

“என் வகுப்பில் ஒரு மாணவன், ‘ஹூக் அப்’பில் ஈடுபடக் கூப்பிட்டான். ஒரு கணம் ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தேன். பிறகுதான் புரிந்தது. அப்போது எனக்கு 11 வயதுதான்.”​​—⁠ லீயா.

இன்று இளம் பிஞ்சுகளுக்குக்கூட செக்ஸ் விஷயமெல்லாம் தெரிந்திருக்கிறது. கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும்; அப்போது மக்கள் “இச்சையடக்கமில்லாதவர்களாயும்,” “தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்” இருப்பார்களென பைபிள் வெகுகாலம் முன்னமே அறிவித்துவிட்டது. (2 தீமோத்தேயு 3:1, 3, 4) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியிருக்கிறது என்பதற்கு பல காரியங்கள் ஆதாரமாக இருக்கின்றன. இளைஞர்களுக்கான கட்டுரையில் விமர்சிக்கப்பட்டிருக்கும் ‘ஹூக் அப்’ பழக்கமும் அவற்றில் ஒன்று.

நீங்கள் வளர்ந்த காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. என்றாலும் கிட்டத்தட்ட பிரச்சினைகள் ஒரே விதமானவைதான். அதனால், உங்கள் பிள்ளைகளைச் சுற்றி நடக்கும் காரியங்களைப் பார்த்து உணர்ச்சிவசப்படவோ பயந்துவிடவோ தேவையில்லை. மாறாக, அப்போஸ்தலன் பவுல் சொன்னதைச் செய்ய அவர்களுக்கு உதவுங்கள். 2000 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவர்களை அவர் இவ்வாறு உற்சாகப்படுத்தி எழுதினார்: “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுத வர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 6:11) சொல்லப்போனால், அநேக கிறிஸ்தவ இளைஞர்கள் தங்களைச் சுற்றி கெட்ட காரியங்கள் நடந்தாலும் சரியானதைச் செய்ய கடுமையாகப் போராடுகிறார்கள். உங்கள் பிள்ளைகளும் அப்படியே செய்வதற்கு நீங்கள் எவ்வாறு அவர்களுக்கு உதவலாம்?

ஒரு வழி, இந்தக் கட்டுரையைப் பயன்படுத்தி உங்கள் மகனிடமோ மகளிடமோ பேசுங்கள். “வாசித்துப் பார்க்கவும்” பகுதிகளில் சிந்தனையைத் தூண்டும் சில வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சரியானதைச் செய்ததால் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்களின் உதாரணங்களும் கடவுளுடைய சட்டங்களை அவமதித்ததால் தீய விளைவுகளைச் சந்தித்தவர்கள் சிலரது உதாரணங்களும் அவற்றில் இடம்பெற்றுள்ளன. கடவுளுடைய சட்டங்களுக்கு இசைய வாழும் அரும்பெரும் பாக்கியம் தங்களுக்கு​—⁠ஏன் உங்களுக்கும்⁠—​கிடைத்திருப்பதை அவர்கள் புரிந்துகொள்ள உதவுகிற நியமங்களும் இந்தப் பகுதியிலுள்ள மற்ற வசனங்களில் அடங்கியுள்ளன. இந்த வசனங்களை நீங்கள் ஏன் அவர்களுடன் கலந்தாராயக்கூடாது?

கடவுளுடைய தராதரங்களுக்கு இசைய வாழ்வது நமக்கு எப்போதுமே நன்மையளிக்கும். (ஏசாயா 48:17, 18) அவற்றை அசட்டை செய்வதோ தீங்கிலேயே விளைவடையும். உங்களுடைய பிள்ளைகளின் மனதில் கடவுளுடைய சட்டங்களையும் நியமங்களையும் பதிய வைப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சியை யெகோவா ஆசீர்வதிப்பாராக! இதுவே விழித்தெழு! பிரசுரிப்பாளர்களின் பிரார்த்தனை.​—⁠உபாகமம் 6:6, 7.

[பக்கம் 28-ன் படம்]

அது நடக்கவே நடக்காது என்பதைத் தெளிவுபடுத்துங்கள்