Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

இன்றைய ஒழுக்கச் சீர்குலைவைப்பற்றி பைபிள் பல ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவித்தது. அது இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், . . . தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், . . . கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்.’​—2 தீமோத்தேயு 3:1-5.

இந்த பைபிள் தீர்க்கதரிசனம் இன்றைய உலக நிலைமைகளைத் தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளலாம். இருந்தபோதிலும், இது எழுதப்பட்டதோ கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு முன்னர்! இந்தத் தீர்க்கதரிசனம் ‘கடைசி நாட்களில்’ என்ற வார்த்தைகளுடன் துவங்குகிறது. ‘கடைசி நாட்கள்’ என்ற சொற்றொடரின் அர்த்தம் என்ன?

எதற்குக் ‘கடைசி நாட்கள்’?

‘கடைசி நாட்கள்’ என்ற சொற்றொடர் மிகப் பரவலாக உபயோகிக்கப்படுகிறது. ஆங்கில மொழியில் மட்டுமே, நூற்றுக்கணக்கான புத்தகங்களின் தலைப்புகளில் இச்சொற்றொடர் காணப்படுகிறது. உதாரணமாக, அறியாமையின் கடைசி நாட்கள்​—⁠போரில் அமெரிக்கா, 1917-1918 என்ற தலைப்பில் சமீபத்தில் வெளிவந்த ஆங்கிலப் புத்தகத்தைக் கவனியுங்கள். இந்தப் புத்தகம் ‘கடைசி நாட்கள்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தும்போது, ஒழுக்கம் படுமோசமாகச் சீரழிந்த ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியையே குறிப்பதாக அதன் முன்னுரை தெளிவாகத் தெரிவிக்கிறது.

அப்புத்தகத்தின் முன்னுரை இவ்வாறு குறிப்பிடுகிறது: “1914-⁠ஆம் ஆண்டில் அமெரிக்கா, சரித்திரம் காணாத அளவுக்கு படுவேகமாக மாறத் துவங்கியது.” சொல்லப்போனால், முன்னொருபோதும் நிகழாத ஒன்று 1914-⁠ஆம் ஆண்டில் சம்பவித்தது; அதாவது முழு உலகமும் போர்க்களமாக மாறியது. அந்தப் புத்தகம் இவ்வாறு தெரிவிக்கிறது: “இது முழுமையான போராக இருந்தது. இரு படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் இல்லை; மாறாக இது நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்.” இந்தப் போர் ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் குறிப்பிடுகிற காலப்பகுதியின் ஆரம்பத்தில் நடைபெற்றது. இதைக் குறித்து பிற்பாடு நாம் சிந்திப்போம்.

இவ்வுலகம் முடிவடைவதற்கு முன்பு ‘கடைசி நாட்கள்’ என்றழைக்கப்படுகிற ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியைச் சந்திக்கும் என்பது பைபிள் புகட்டும் போதனை. உண்மையில், ஒரு காலத்தில் இருந்த உலகம் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டதாக பைபிள் தெரிவிக்கிறது; ‘அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்தது’ என அது விளக்குகிறது. எந்தக் காலப்பகுதியில் அது நடந்தது? அப்போது முடிவடைந்த உலகம் எது? அது நோவா என்ற மனிதனின் காலப்பகுதியில் இருந்த “அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த” பண்டைய ‘உலகம்.’ அதுபோலவே, இன்றைய உலகமும் முடிவுக்கு வரும். ஆனால், நோவாவும் அவருடைய குடும்பமும் தப்பிப்பிழைத்தது போலவே, கடவுளுக்குச் சேவை செய்பவர்கள் இந்த உலகத்தின் முடிவைத் தப்பிப்பிழைப்பார்கள்.​—2 பேதுரு 2:5; 3:6; ஆதியாகமம் 7:21-24; 1 யோவான் 2:17.

உலக முடிவைப்பற்றி இயேசு சொன்னவை

‘ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோன’ ‘நோவாவின் காலத்தைக்’ குறித்து இயேசு கிறிஸ்து பேசினார். ஜலப்பிரளயத்திற்கு முன்பு, அதாவது, அந்த உலகம் முடிவடைவதற்கு முன்பு நிலவிய நிலைமைகளை, இந்த “உலகத்தின் முடிவு” என அவர் குறிப்பிட்ட காலப்பகுதியில் நிலவும் நிலைமைகளோடு ஒப்பிட்டுப் பேசினார்.​—மத்தேயு 24:3, 37-39.

இந்த உலகத்தின் முடிவுக்கு முன்பு பூமியில் நிலைமைகள் எப்படி இருக்கும் என்பதை இயேசு முன்னறிவித்தார். போரைக் குறித்து அவர் இவ்வாறு சொன்னார்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” 1914-⁠ஆம் ஆண்டிலிருந்து இது சம்பவித்து வருவதாகச் சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். 1914-⁠ல் ஆரம்பித்தது வெறுமென ‘இரு படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் இல்லை; மாறாக நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட . . . முழுமையான போர்’ என்று முன்னர் குறிப்பிடப்பட்ட புத்தகத்தின் முன்னுரை தெரிவிக்கிறது, அல்லவா?

தம்முடைய தீர்க்கதரிசனத்தில், இயேசு இவ்வாறு தொடர்ந்தார்: “பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும். இவையனைத்தும் பேறுகால வேதனைகளின் தொடக்கமே.” மற்ற அநேக காரியங்களோடு, ‘நெறிகேடு பெருகும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். (மத்தேயு 24:7-14, பொது மொழிபெயர்ப்பு) இவை அனைத்தும் நம்முடைய காலத்தில் சம்பவிப்பதை நாமே கண்கூடாகப் பார்க்கிறோம். இன்றைய ஒழுக்கச் சீர்குலைவு நாளுக்குநாள் படுமோசமாக ஆவது, பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறி வருவதைக் காட்டுகிறது.

நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்லும் இந்த உலகத்தில் நாம் எவ்வாறு வாழ வேண்டும்? ஒழுக்கச் சீர்குலைவைக் குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் ரோமில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதியவற்றைக் கவனியுங்கள். மக்களுடைய ‘கட்டுக்கடங்காத இழிவான பாலுணர்வைக்’ குறித்து சுட்டிக்காட்டி இவ்வாறு குறிப்பிட்டார்: “அவர்களுடைய பெண்கள் இயல்பான இன்ப முறைக்குப் பதிலாக இயல்புக்கு மாறான முறையில் நடந்துகொண்டார்கள். அவ்வாறே ஆண்களும் பெண்களோடு சேர்ந்து இன்பம் பெறும் இயல்பான முறையை விட்டு தங்களிடையே ஒருவர்மீது ஒருவர் வேட்கை கொண்டு காமத்தீயால் பற்றி எரிந்தார்கள். ஆண்கள் ஆண்களுடன் வெட்கத்திற்குரிய செயல்களைச் செய்”தார்கள்.​—ரோமர் (உரோமையர்) 1:26, 27, பொ.மொ.

முதல் நூற்றாண்டிலிருந்த மனித சமுதாயம் ஒழுக்கச் சீர்கேடு எனும் சேற்றில் அமிழ்ந்தபோது, “சிறுபான்மைக் கிறிஸ்தவ சமுதாயத்தினரின் பக்தியும் நல்லொழுக்கமும் இன்ப வெறிபிடித்த புறமத உலகத்தாருக்கு உறுத்தலாக இருந்தது” என்பதாக சரித்திராசிரியர்கள் தெரிவிக்கிறார்கள். இதை வாசிக்கும் நாம் சற்று நிதானித்து நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நானும், நான் தேர்ந்தெடுத்திருக்கிற நண்பர்களும் எப்படிப்பட்டவர்கள்? ஒழுக்கங்கெட்ட ஆட்களைப்போல இல்லாமல், ஒழுக்க சீலர்களாக, மற்றவர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர்களாய் விளங்குகிறோமா?’​—1 பேதுரு 4:3, 4.

நமக்கு உள்ள போராட்டம்

நம்மைச் சுற்றி ஒழுக்கக்கேடு தலைவிரித்தாடினாலும், “கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படி” பைபிள் நமக்குக் கற்பிக்கிறது. இதைச் செய்வதற்கு, நாம் ‘ஜீவவசனத்தை [“உறுதியாய்,” NW] பிடித்துக்கொள்ள’ வேண்டும். (பிலிப்பியர் 2:14-16) ஒழுக்கச் சீர்கேட்டினால் கறைபடாதபடிக்கு கிறிஸ்தவர்கள் எவ்வாறு தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த பைபிள் வசனம் பயனுள்ள வழிகாட்டியாக இருக்கிறது; அவர்கள் கடவுளுடைய வார்த்தையின் போதனைகளைப் பின்பற்றுவதும், அதிலுள்ள ஒழுக்கத் தராதரங்களே மிகச் சிறந்த வாழ்க்கை முறையாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதும் அவசியம் என்று கற்பிக்கிறது.

‘இப்பிரபஞ்சத்தின் தேவனான’ பிசாசாகிய சாத்தான் மக்களைத் தன்வசப்படுத்த முயலுகிறான். (2 கொரிந்தியர் 4:4) அவன் “ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்”கிறான் என்று பைபிள் தெரிவிக்கிறது. அவனைப்போலவே செயல்படுவதன்மூலம் அவனைச் சேவிக்கிற அவனுடைய ஊழியக்காரரும் தேவ ஊழியக்காரரைப்போல வெளிவேஷம் போடுகிறார்கள். (2 கொரிந்தியர் 11:14, 15) இவர்கள் விடுதலையையும், மகிழ்ச்சியையும் தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்கள்; ஆனால், ‘தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருக்கிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது.​—2 பேதுரு 2:⁠19.

ஏமாந்துவிடாதீர்கள். கடவுளுடைய ஒழுக்கத் தராதரங்களை அசட்டை செய்கிறவர்கள் மோசமான விளைவுகளைச் சந்திப்பார்கள். பைபிள் கவிஞர் ஒருவர் இவ்வாறு எழுதினார்: “இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது [கடவுளது] பிரமாணங்களைத் தேடார்கள்.” (சங்கீதம் 119:155; நீதிமொழிகள் 5:22, 23) இதை நாம் உறுதியாய் நம்புகிறோமா? அப்படியானால், நெறிகெட்ட வாழ்க்கையை ஊக்குவிக்கும் பிரச்சாரங்களிலிருந்து நம் மனதையும் இருதயத்தையும் பாதுகாப்போமாக.

இருந்தபோதிலும், ‘நான் செய்வது சட்டவிரோதமில்லாத செயலென்றால், அது சரியானதுதான்’ என்பதாக அநேகர் விதண்டாவாதம் செய்கிறார்கள். ஆனால், அது சரியல்ல. நம் பரலோக தகப்பன் அன்புடன் அளிக்கும் ஒழுக்க வழிகாட்டுதல், உங்கள் வாழ்க்கையைச் சலிப்பூட்டவும் உங்களைக் கட்டுப்படுத்தவும் அல்ல, மாறாக உங்களைப் பாதுகாப்பதற்காகத்தான். அவர், ‘பிரயோஜனமாயிருக்கிறதை உங்களுக்குப் போதிக்கிறார்.’ நீங்கள் பேராபத்துகளைத் தவிர்த்து வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டுமென்றே அவர் விரும்புகிறார். உண்மையில், பைபிள் கற்பிக்கிறபடி, கடவுளைச் சேவிப்பது ‘இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தம்’ அளிக்கிறது. அதுவே கடவுள் வாக்குறுதி அளித்திருக்கும் புதிய உலகில் நமக்கு கிடைக்கும் ‘உண்மையான வாழ்வு,’ அதாவது நித்திய ஜீவன்!​—ஏசாயா 48:17, 18; 1 தீமோத்தேயு 4:8; 6:19, பொ.மொ.

எனவே, பைபிள் போதனைகளைக் கடைப்பிடிப்பதால் வரும் நன்மைகளை அதைக் கடைப்பிடிக்காதவர்கள் காலப்போக்கில் அனுபவிக்கும் வேதனைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். கடவுளுக்குச் செவிகொடுப்பதன்மூலம் அவருடைய தயவைப் பெறுவதே உண்மையில் மிகச் சிறந்த வாழ்க்கை! கடவுள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறார்: “எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.”​—நீதிமொழிகள் 1:⁠33.

நல்லொழுக்கமுள்ள சமுதாயம்

இந்த உலகம் ஒழிந்துபோகும்போது, “துன்மார்க்கன் இரான்” என்று பைபிள் சொல்கிறது. அது மேலும் இவ்வாறு சொல்கிறது: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.” (சங்கீதம் 37:10, 11; நீதிமொழிகள் 2:20-22) அதனால், ஒழுக்கக்கேட்டின் சிறு தடயமும்கூட பூமியில் எஞ்சியிருக்காது. நம்முடைய படைப்பாளர் தரும் ஆரோக்கியமான போதனைகளின்படி வாழ மறுக்கும் அனைவரும் பூண்டோடு அழிக்கப்படுவார்கள். கடவுள், முதல் மனிதத் தம்பதிகளை பூமியில் குடிவைத்தபோது அது பூங்காவனமாக இருந்தது. அதைப்போலவே, கடவுளை நேசிப்பவர்கள் முழு பூமியையும் படிப்படியாக மீண்டும் பூங்காவனமாக மாற்றுவார்கள்.​—ஆதியாகமம் 2:7-9.

சுத்தமான, அழகு கொழிக்கும் பூங்காவனமான பூமியில் வாழ்வது என்னே ஆனந்தமயமாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இறந்தவர்களிலிருந்து உயிர்த்தெழுந்து வரும் கோடிக்கணக்கான ஆட்களும்கூட அதைப் பார்க்கும் ஒப்பில்லா பாக்கியத்தைப் பெறுவார்கள். கடவுளுடைய பின்வரும் வாக்குறுதிகளில் களிகூருங்கள்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”​—சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4.

[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]

ஓர் உலகம் முடிவடைந்தபோது, தேவ பயமுள்ளவர்கள் தப்பிப்பிழைத்தார்கள்

[பக்கம் 10-ன் படம்]

இந்த உலகம் முடிவடைந்த பிறகு, பூமி பூங்காவனம் போன்ற பரதீஸாகும்