Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை உலுக்கும் ஒழுக்கச் சீர்குலைவு

உலகை உலுக்கும் ஒழுக்கச் சீர்குலைவு

உலகை உலுக்கும் ஒழுக்கச் சீர்குலைவு

“எங்கும் மோசடி, எதிலும் மோசடி.” இவ்வாறு மோசடி கலாச்சாரம் என்ற ஆங்கிலப் புத்தகத்தைச் சமீபத்தில் எழுதிய டேவிட் கெலகன் தெரிவிக்கிறார். அமெரிக்காவில் நிகழ்கிற மோசடிகளைப் பட்டியலிடுகையில் மற்ற காரியங்களோடு, “உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நேர்மையற்ற செயல்கள்,” இசைத் தொகுப்புகள், திரைப்படங்கள் போன்றவற்றைத் “திருட்டுத்தனமாகப் பதிவு செய்தல்,” “வேலை செய்யும் இடங்களில் திருடுதல்,” “உடல்நலப் பராமரிப்பு நிறுவனங்களின் பெருத்த மோசடிகள்” மற்றும் போட்டி விளையாட்டுகளில் ஊக்கமருந்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். “பல்வேறு வகையான தார்மீக மீறுதல்களையும் சட்டவிரோதச் செயல்களையும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பார்த்தால், ஒழுக்கச் சீர்குலைவு எந்தளவுக்குப் படுமோசமாக இருக்கிறது என்பதைக் காண்பீர்கள்” என அவர் முடிவாகக் குறிப்பிடுகிறார்.

ஆகஸ்ட் 2005-⁠ல் கேட்ரீனா சூறாவளி அமெரிக்காவைத் தாக்கியபோது, “தற்கால சரித்திரத்திலேயே இதுவரை நடந்திராத மோசடிகளும், சூழ்ச்சித் திட்டங்களும், அரசாங்க அதிகாரிகளே பணத்தைக் கையாடிய அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களும் அரங்கேறியதாக” த நியு யார்க் டைம்ஸ் தெரிவிக்கிறது. ஐ.மா. சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்: “பகிரங்கமான மோசடிகள், துணிகரமான சூழ்ச்சித் திட்டங்கள், விரயமாக்கப்பட்ட பொருள்களின் அளவு ஆகியவற்றைப் பார்க்கையில் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது.”

தன்னலமின்றி மனிதநேயத்தைக் காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது உண்மையே. (அப்போஸ்தலர் 27:3; 28:2) ஆனால், பெரும்பாலும், “இதனால் எனக்கு என்ன கிடைக்கும்? எனக்கு என்ன லாபம்?” என்று கேட்பவர்களைத்தான் அதிகமாகப் பார்க்க முடிகிறது. நான்தான் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற மனநிலையே பரவலாக வியாபித்திருப்பதுபோல் தெரிகிறது.

கடந்த காலங்களில், வெட்கங்கெட்ட, அப்பட்டமான ஒழுக்கக்கேடுதான் ரோமப் பேரரசைப் போன்ற நாகரிகங்கள் வீழ்ச்சி அடைவதற்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதைக்காட்டிலும் குறிப்பிடத்தக்க ஏதோவொன்று நிகழப்போவதை இன்று நடைபெறும் காரியங்கள் சுட்டிக்காட்டுகின்றனவா? ‘நெறிகேடு பெருகும்’ என்பது, இந்தத் தரங்கெட்ட, மோசமான உலகின் முடிவுக்கு அறிகுறியாக பைபிள் குறிப்பிடுகிற காரியங்களில் ஒன்று; இன்று உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இதைக் காணமுடிகிறதா?​—மத்தேயு 24:3-8, 12-14, பொது மொழிபெயர்ப்பு; 2 தீமோத்தேயு 3:1-5.

உலகளாவிய சீரழிவு

உகாண்டாவின் ஒரு பகுதியிலுள்ள சேரிகளில் காணப்படுகிற “பாலியல் கொடுமைகளையும் ஆபாசத்தையும் குறித்த கருத்தரங்கு” பற்றி ஜூன் 22, 2006 தேதியிடப்பட்ட ஆப்பிரிக்கா நியூஸ் அறிக்கை செய்தது; “அப்பகுதியில் விபச்சாரமும் போதை மருந்து பழக்கமும் அதிகரித்திருப்பதற்கு பெற்றோரின் அலட்சியப் போக்கே காரணம்” என்று அது தெரிவித்தது. “குழந்தை துஷ்பிரயோகமும் குடும்ப வன்முறையும் பெருமளவு அதிகரித்திருப்பதாக காவெம்பே காவல் நிலையத்தில் சிறுவர் மற்றும் குடும்பப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரியாகப் பணியாற்றும் திரு. டாபாங்க்ஜி சாலாங்கோ தெரிவித்தார்” என்று அச்செய்தித்தாள் குறிப்பிட்டது.

“சமுதாயத்தின் பண்பாடும் பாரம்பரியமும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன” என்பதாக இந்தியாவிலுள்ள ஒரு டாக்டர் தெரிவிக்கிறார். இங்கே “போதைமருந்து பழக்கமும் முறைதகாத செக்ஸும் கைகோர்த்துக் கொண்டு அதிகரித்து வருகின்றன; இது ‘மேற்கத்திய கலாச்சாரச் சீர்கேட்டுக்குள்’ இந்தியா சிக்கிவிட்டதைக் காட்டும் மற்றொரு அறிகுறி” என்று அங்குள்ள திரைப்பட இயக்குனர் ஒருவர் சொன்னார்.

பெய்ஜிங்கிலுள்ள சீன பாலியல் ஆய்வு அமைப்பின் பொதுச் செயலாளர் ஹ்யூ பெச்சங் இவ்வாறு தெரிவிக்கிறார்: “நம் சமுதாயத்தில் முன்பெல்லாம் சரி எது, தவறு எது என்பதை ஒழுக்கத்தின் அல்லது தார்மீக நியமங்களின் அடிப்படையில் முடிவு செய்தோம். இப்போதோ, நம் இஷ்டம்போல என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.” சைனா டுடே என்ற பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை இவ்வாறு தெரிவித்தது: “இப்போதெல்லாம் கள்ளத்தொடர்பு விவகாரத்தை சமுதாயம் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.”

“வியாபாரத்தைப் பெருக்குவதற்காக ஆடையைக் குறைப்பதற்கும் செக்ஸ் காட்சிகளைக் காட்டுவதற்கும் இப்போது எல்லாருமே தயாராய் இருப்பதாகத் தோன்றுகிறது” என இங்கிலாந்தின் யார்க்‍ஷ்யர் போஸ்ட் சமீபத்தில் தெரிவித்தது. “கடந்த தலைமுறையினர் இவற்றை ஒழுக்க மீறுதல்களாகக் கருதி கோபத்தில் கொதித்தெழுந்திருப்பார்கள். இன்றோ, எங்குத் திரும்பினாலும் விதவிதமான ஆபாசப் படங்கள் நம்மைத் திணறடிக்கின்றன; அதோடு, ஆபாசம் . . . சமுதாயத்தில் மிகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.” அந்தச் செய்தித்தாள் தொடர்ந்து இவ்வாறு கூறியது: “வயது வந்தவர்களுக்கு மட்டும் என முன்பு கருதப்பட்ட புத்தகங்களும் பத்திரிகைகளும் திரைப்படங்களும் இன்றோ பெரும்பாலும் குடும்பமாக வாசிக்க அல்லது பார்க்கத் தகுந்தவையாகக் கருதப்படுகின்றன; ஆபாசத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்கள் தெரிவிக்கிறபடி, இவை ஒளிவுமறைவற்ற விதத்தில் பெரும்பாலும் பிள்ளைகளைக் குறிவைத்தே வருகின்றன.”

த நியு யார்க் டைம்ஸ் மேகஸின் இவ்வாறு குறிப்பிட்டது: ‘கேன்டீன் மதிய உணவு மெனுவைப் பற்றி பேசுவதைப் போல சில டீனேஜர்கள் தங்களுடைய செக்ஸ் அனுபவங்களைப்பற்றி சர்வசாதாரணமாகப் பேசுகிறார்கள்.’ “8 முதல் 12 வயது பிள்ளைகளை உடைய பெற்றோர்களுக்கு அறிவுரை அளிக்கும்” ட்வீன்ஸ் நியூஸ் பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “சிறு பிள்ளையைப் போன்ற கையெழுத்தில் ஒரு சிறுமி நெஞ்சை பிளக்கும் இச்செய்தியை எழுதியிருந்தாள்: ‘பையன்களோடு டேட்டிங் செய்யும்படியும், செக்ஸ் வைத்துக்கொள்ளும்படியும் என் அம்மா வற்புறுத்துகிறார். எனக்கு 12 வயதுதான் ஆகிறது . . . தயவு செய்து எனக்கு உதவுங்கள்!’”

காலம் எப்படி மாறிவிட்டது! சில காலங்களுக்கு முன்பு “ஆணோடு ஆணும், பெண்ணோடு பெண்ணும் வெளிப்படையாகச் சேர்ந்து வாழ்வது அதிர்ச்சியூட்டுகிற நெறிகெட்ட செயலாகக் கருதப்பட்டது” என கனடாவின் டோரன்டோ ஸ்டார் பத்திரிகை குறிப்பிட்டது. ஆனால், “இந்தக் காலத்து மக்கள், ‘எங்களுடைய அந்தரங்க வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன கவலை? மற்றவர்கள் இதில் மூக்கை நுழைப்பதை நாங்கள் விரும்பவில்லை’ என்பதாகச் சொல்கிறார்கள்” என்று ஒட்டாவாவிலுள்ள கார்ல்டன் பல்கலைக்கழகத்தில் சமூக வரலாறு ஆசிரியையாக பணியாற்றும் பார்பரா ப்ரீமன் தெரிவிக்கிறார்.

தெளிவாகவே, கடந்த சில பத்தாண்டுகளில், உலகமெங்கும் பல இடங்களில் ஒழுக்கம் படுவேகமாக சீரழிந்திருக்கிறது. இத்தகைய பெரும் மாற்றங்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்ன? அவற்றைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? இந்த மாற்றங்கள் எதிர்காலத்தைக் குறித்து எதைச் சுட்டிக்காட்டுகின்றன?