Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ கடந்த பத்தாண்டுகளில், நகரமயமாக்கல் அதிகரித்து வருவதன் காரணமாக சுமார் நான்கு கோடி சீன விவசாயிகள் தங்களுடைய நிலங்களை இழந்திருக்கிறார்கள்.​—⁠சைனா டெய்லி, சீனா.

◼ 2005-⁠ஆம் ஆண்டில் உலகமுழுவதும் 28 பெரிய போர்களும், 11 சிறிய அளவிலான தாக்குதல்களும் நடைபெற்றன.​—⁠வைட்டல் ஸைன்ஸ் 2006-2007, உவர்ல்ட் வாட்ச் இன்ஸ்டிட்யூட்.

◼ டோக்யோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, ஒருவர் செல்லக்கூடிய குறைந்த எடையுள்ள விமானத்தை வெற்றிகரமாக வானில் செலுத்தியிருக்கிறது; இது 55 கிலோவுக்கும் குறைவான எடை கொண்டது, சாதாரண பேட்டரிகளால் இயங்குகிறது. இந்த விமானம் 59 விநாடிகளில் 391 மீட்டர் தூரத்திற்குப் பறந்தது.​—⁠மைனிச்சி டெய்லி நியூஸ், ஜப்பான்.

◼ இன்டர்நெட்டை பயன்படுத்துகிற 12-லிருந்து 20 வயதுக்குட்பட்ட டச்சு இளைஞர்களில் சிலர், “டைரி தளங்கள்” என்று அழைக்கப்படும் வெப்சைட்டுகளுக்கு விஜயம் செய்கிறார்கள்; அப்போது வெப்கேமராவை பயன்படுத்திய பையன்களில் 40 சதவீதத்தினரும் பெண்பிள்ளைகளில் 57 சதவீதத்தினரும் “கேமரா முன்பு உடையைக் கழற்றும்படி அல்லது ஏதாவது ஆபாச செயலைச் செய்துகாட்டும்படி தங்களிடம் சொல்லப்பட்டதாக புகார் செய்திருக்கிறார்கள்.”​—⁠ரெட்கர்ஸ் நிஸ்ஸோ குரூப், நெதர்லாந்து.

வீடியோ கேம்ஸ் அடிமையாக்குமா?

“குடிக்கு அல்லது கஞ்சாவுக்கு அடிமையானவர்களுடைய மூளையில் எப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றனவோ, அதேபோன்ற மாற்றங்கள் அளவுக்கதிகமாக கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுகிறவர்களுடைய மூளையிலும் ஏற்படுகின்றன” என்று மனோதத்துவ நிபுணரான ரால்ப் டாலெமான் குறிப்பிடுகிறார்; இவர் ஜெர்மனி, பெர்லினிலுள்ள ஷாரிட்டே பல்கலைக்கழக மருத்துவமனையில், தீயபழக்கங்களுக்கு அடிமையாவதைப்பற்றி ஆராய்கிற ஒரு குழுவின் தலைவராகவும் செயலாற்றுகிறார். அளவுக்குமீறி கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதால் ஏற்படுகிற தூண்டுதல் ஆட்டக்காரரின் மூளையில் டோபமைன் என்ற ரசாயனம் கசிவதை அதிகரிக்கலாம்; இதனால் உடலும் மனதும் தெம்பாக இருப்பதைப் போன்ற உணர்ச்சியை ஏற்படுத்தி, நாளடைவில் வீடியோ கேம்ஸுக்கு “அடிமை” ஆக்கிவிடுவதாகக் கருதப்படுகிறது. வீடியோ கேம்ஸ் விளையாடுகிற 10 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இந்த மாற்றங்கள் ஏற்படலாம் என்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

“இனம்புரியாத பயத்திலும் கவலையிலும்” தத்தளிக்கிற கோடீஸ்வரர்கள்

“கோடீஸ்வரர்கள் இனம்புரியாத பயத்திலும் கவலையிலும் தத்தளிக்கிறார்கள்” என்று பெய்ஜிங்கிலிருந்து வெளிவருகிற சைனா டெய்லி என்ற செய்தித்தாள் தெரிவிக்கிறது. வட சீனாவையும் தென் சீனாவையும் சேர்ந்த சில கோடீஸ்வரர்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது; இவர்களுடைய சொத்து மதிப்பு சராசரியாக 275 மில்லியன் டாலராகும். “ஆன்மீகம், திருமணம், வாழ்க்கை, தொழில், பணம் ஆகியவற்றைக் குறித்த” இவர்களின் “மனப்பான்மையை” இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள் நுணுக்கமாக ஆராய்ந்தார்கள்; அப்போது “கோடீஸ்வரர்களில் பெரும்பாலோர் பணத்தை நேசிக்கவும் வெறுக்கவும் செய்கிறார்கள்” என்பதைக் கண்டறிந்தார்கள். சமுதாய அந்தஸ்தும், சாதனை உணர்வும் இருந்தாலும்கூட, “பணம் வந்த கையோடு முக்கியமாக எரிச்சலும் வந்திருப்பதாக” கோடீஸ்வரர்களில் பலர் தெரிவித்தார்கள்.

மனநோயாளிகளுக்கு ஆரோக்கியமளிக்கும் பண்ணை வேலை

பண்ணை வேலை, கற்பித்தல், உடல்நலப் பராமரிப்பு ஆகியவை இணைந்த “ஆரோக்கியமளிக்கும் பண்ணை” திட்டத்தைப்பற்றிக் கற்றுக்கொள்வதற்காக சமீபத்தில் 14 நாடுகளைச் சேர்ந்த 100-⁠க்கும் அதிகமான வல்லுநர்கள் நார்வேயிலுள்ள ஸ்டவஞ்சரில் கூடிவந்தார்கள். வருடக்கணக்காக மனநோயாளிகளாக இருந்த சிலர் பண்ணையில் வேலை செய்யத் துவங்கியபோது அவர்களை ஆஸ்பத்திரியில் வைத்து கவனிக்கவேண்டிய அவசியமில்லாமல் போனது என்பதாக நார்வே தேசிய ஒலிபரப்பு நிலையம் குறிப்பிட்டது. அது “மனதுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் அளிக்கிறது” என்றும் தெரிவித்தது. நார்வேயிலுள்ள 600-⁠க்கும் அதிகமான பண்ணைகள் இந்த ஆரோக்கியமளிக்கும் பண்ணை அமைப்புடன் இணைந்து செயல்படுகின்றன; அதற்காக அவர்களுக்குக் கூடுதல் வருமானமும் கிடைக்கிறது.

வாடகைக்கு விடப்படும் சர்ச் கோபுரங்கள்

“சரிந்து வரும் நிதி நிலையை தூக்கி நிறுத்துவதற்கு [ஐக்கிய மாகாணங்களில் உள்ள] நியு இங்கிலாந்து சர்ச்சுகள் புதிய உத்தியைக் கண்டுபிடித்திருக்கின்றன; அதன்படி, செல்ஃபோன் கம்பெனிகள் தங்கள் ஆன்டெனாக்களை நிறுவுவதற்காக சர்ச்சின் கண்ணைக் கவருகிற ஊசி கோபுரங்களை வாடகைக்கு விடுகின்றன” என்று நியூஸ்வீக் பத்திரிகை தெரிவிக்கிறது. செல்ஃபோனிலிருந்து செய்திகளை வாங்கி அனுப்புகிற உயரமான கோபுரங்களை அரசாங்க சட்டம் காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் நிறுவுவது கடினமாக இருக்கிறது; அதோடு, அப்பகுதிகளில் குடியிருப்பவர்கள் தங்களுடைய சுற்றுப்புறத்தின் அழகை இந்த ஆன்டெனாக்கள் கெடுத்துப் போடும் என்ற எண்ணத்தில் அவற்றை நிறுவ அனுமதிப்பதில்லை. எனவே, செல்ஃபோன் கம்பெனிகள் தங்களுடைய கருவிகளை சர்ச்சின் ஊசி கோபுரங்களுக்குள்ளே மறைத்து வைக்கின்றன. இதுதொடர்பாக சர்ச்சுகளுக்கு ஆலோசனை அளிக்கும் நிறுவனம் ஒன்றின் தலைவர் இவ்வாறு சொல்கிறார்: “முதன்முதலாக நாங்கள் ஆன்டெனாவை நிறுவிய சர்ச்சில் இன்று மூன்று கம்பெனியின் ஆன்டெனாக்கள் நிறுவப்பட்டிருக்கின்றன; [இதுவரை] யாரும் பயன்படுத்தாமல் இருந்த இடம் இப்போது வருடத்துக்கு 74,000 டாலர் சம்பாதித்துக் கொடுக்கிறது.”