என்னை ஏன் எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்?
இளைஞர் கேட்கின்றனர் . . .
என்னை ஏன் எப்போதும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்?
“என் அப்பா அம்மாவோ ஆசிரியர்களோ என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசினால் எனக்குக் கோபம் கோபமாக வரும்.”—மியா. a
“இன்னாரைப் போல நானும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்குமென நானே ஏங்கிக்கொண்டிருக்கும்போது யாராவது வந்து, அதே நபரோடு என்னை ஒப்பிட்டுப் பேசினால் நான் லாயக்கற்றவளென நினைக்கத் தோன்றுகிறது.”—ஏப்ரல்.
பள்ளியில் ஆசிரியர் உங்களைத் திட்டுகிறார். ஏன்? உங்கள் சக மாணவரைப் போல் நீங்கள் கணக்கில் நல்ல மதிப்பெண் வாங்கவில்லை என்பதற்காக. வீட்டில் அம்மாவோ அப்பாவோ உங்களைத் திட்டுகிறார். ஏன்? உங்கள் சகோதரியைப் போல் நீங்கள் சுத்தமாக இருப்பதில்லை என்பதற்காக. “உன் வயதில் உன்னுடைய அம்மா ரொம்ப அழகாக இருந்தாங்க!” என்று யாரோ ஒருவர் உங்களிடம் சொல்கிறார். அப்படியென்றால், ‘அவருக்கு நான் அசிங்கமாகத் தெரிகிறேனா’ என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம். அது உங்களை நொறுங்கிப் போகச் செய்கிறது. “மக்கள் ஏன் என்னை ஒரு தனி ஆளாகப் பார்ப்பதில்லை? எப்போதும் ஏன் என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டே பேசுகிறார்கள்?” என்று கத்த வேண்டும் போல் உங்களுக்குத் தோன்றலாம்.
இப்படி மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசப்படுகையில் மனம் ஏன் அந்தளவு புண்படுகிறது? அப்படிப் பேசுவதில் ஏதாவது நன்மை இருக்கிறதா? யாராவது உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசும்போது அதை நீங்கள் எவ்வாறு வெற்றிகரமாகச் சமாளிக்கலாம்?
ஒப்பிடுவது மனதை ஏன் நோகடிக்கிறது?
ஒரு காரணம் அது உங்களைத் தனிப்பட்ட விதத்தில் பாதிக்கிறது. பொதுவாக நீங்கள் உங்களைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ அதையே ஒருவேளை மக்கள் வெளிப்படையாகச் சொல்லலாம். உதாரணத்திற்கு, பெக்கி என்ற பெண் இவ்வாறு சொல்கிறாள்: “பள்ளியில் பிரபலமாக இருக்கும் பிள்ளைகளைப் பார்க்கும்போது, ‘நானும் அவர்களைப் போல இருந்தால் என்னையும் நிறைய பேர் விரும்புவார்களே’ என்று யோசித்ததுண்டு.”
இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற உணர்வுகள் வருவதற்கு என்ன காரணம்? உங்களுக்கு உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் மன ரீதியிலும் என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள். உங்களுடைய உடலில் பல மாற்றங்கள் படுவேகமாக நடந்துகொண்டிருக்கலாம். பெற்றோருக்கும் உங்களுக்கும் உள்ள உறவில் இடைவெளி அதிகமாகலாம். எதிர்பாலாரைப் பற்றிய உங்களுடைய எண்ணத்தில் பெரிதளவு மாற்றம் ஏற்பட்டிருக்கலாம். எனவே, ‘நான் நார்மலாகத்தான் வளருகிறேனா?’ என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம்.
இந்தச் சந்தேகத்தைப் போக்க ஒரே வழி, உங்களைப் போலவே மாற்றங்களை எதிர்ப்படுகிற மற்ற இளைஞர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதே என நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். ஆனால், இங்குதான் பிரச்சினையே! ஒருவேளை அவர்கள் உங்களைவிட சிறந்தவர்களாக இருப்பதுபோல் தெரிந்தால் நீங்கள் பாதுகாப்பற்றவராக உணருவீர்கள். பிறகு, யாராவது வந்து, ‘இன்னாரைப் போல இருக்க கற்றுக்கொள்’ என்று உங்களிடம் சொல்லும்போது ‘ஐயோ, நான் பயந்ததுபோலவே நடந்துவிட்டது!’ என்று உணரலாம்; அதாவது, நீங்கள் நார்மலாக இல்லை என்று நினைக்கலாம்.
ஒப்பிடுவது நம் மனதை ஏன் நோகடிக்கிறது என்பதற்கான இன்னொரு காரணத்தை ஏப்ரல் குறிப்பிடுகிறார்: “மக்கள் உங்களை யாருடனாவது, முக்கியமாக உங்களுக்கு
நெருக்கமான ஒருவருடன் ஒப்பிட்டுப் பேசும்போது, உங்கள் மனதில் பொறாமையும் பகையும் பிறக்கலாம்.” தன் சொந்த அனுபவத்தில் மியா அதை உணர்ந்திருக்கிறாள். தன் பெற்றோரும் ஆசிரியர்களும் எப்போதும் தன் அக்காவுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதாக அவள் நினைக்கிறாள். “என்னுடைய அக்கா என் வயதில் என்னென்ன சாதித்தாளென எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிக் காட்டுவார்கள்” என்கிறாள் மியா. அதன் விளைவு? “என் அக்காவுடன் போட்டி போட வேண்டுமென நினைக்க வைக்கிறது. சில சமயத்தில் அவளை நான் வெறுக்கவும் செய்திருக்கிறேன்” என்றும் சொல்கிறாள்.ஒப்பிடுவதால் தீய விளைவுகள் ஏற்படலாம். இயேசுவின் நெருங்கிய தோழர்களுக்கு என்ன ஆனது என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இயேசு இறப்பதற்கு முந்தின இரவு அப்போஸ்தலர்கள் மத்தியில் கடும் “வாக்குவாதம்” எழுந்தது. ஏன் தெரியுமா? ஏனென்றால், அவர்கள் “தங்களில் எவன் பெரியவனாயிருப்பான்” என்று ஒப்பிட்டுப் பார்த்து வாக்குவாதம் செய்துகொண்டு இருந்தார்கள். (லூக்கா 22:24) ஆம், சில விதமான ஒப்பிடுதல்கள் தீய விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், எல்லா விதமான ஒப்பிடுதல்களும் தீங்கானவையா?
ஒப்பிடுதலின் நன்மைகள்
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள இளம் தானியேலையும் அவருடைய மூன்று எபிரெய தோழர்களையும்பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த நான்கு பேருமே பாபிலோன் ராஜா அளித்த உணவுப் பதார்த்தங்களை உண்ண விரும்பவில்லை. ஏனென்றால் அந்த உணவுப் பதார்த்தங்களைக் கடவுளுடைய சட்டம் தடை செய்திருந்தது. (லேவியராகமம் 11:4-8) ஆனால், இந்த விஷயத்தில் அவர்களுடைய விசாரணைக்காரரை, அதாவது அவர்களைக் கவனித்துக்கொள்ளும்படி நியமிக்கப்பட்டிருந்தவரை, இணங்க வைத்தால்தான் அவர் இவர்களுக்கு உதவி செய்ய முடியும். அதனால், தானியேல் தங்களைச் சோதித்துப் பார்க்கும்படி அவரிடம் கூறினார். கடவுளுடைய சட்டம் தடை செய்யாத உணவுப் பதார்த்தங்களைப் பத்து நாட்களுக்குச் சாப்பிட்ட பிறகு ராஜாவின் அரண்மனையில் உள்ள மற்ற இளைஞர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்படி தானியேல் அவரிடம் கூறினார். அதன் விளைவு?
பத்து நாட்களுக்குப் பிறகு, “ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப் பார்க்கிலும் [அந்த எபிரெயர்களின்] முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது” என்று பைபிள் கூறுகிறது. (தானியேல் 1:6-16) அது எப்படி? தானியேலும் அவருடைய தோழர்களும் பொதுவாகவே மற்ற இளைஞர்களைவிட பலசாலிகளாக இருந்தது அதற்குக் காரணமா? இல்லை, கடவுள் தமது மக்களுக்குக் கொடுத்திருந்த கட்டளைகளுக்கு அந்த எபிரெய இளைஞர்கள் கீழ்ப்படிந்ததே அதற்கு முக்கிய காரணம்.
இந்த இளம் எபிரெயர்கள் எதிர்ப்பட்டதைப் போன்ற நிலைமையில்தான் நீங்களும் இருக்கிறீர்களா? நீங்கள் பைபிளின் ஒழுக்க தராதரங்களின்படி வாழ்ந்தால் மற்ற இளைஞர்களைப் பார்க்கிலும் வித்தியாசமானவர்களாக இருப்பீர்கள். இதைப் பார்க்கும் சிலர் குழம்பிப்போய் ‘உங்களை தூஷிக்கலாம்.’ (1 பேதுரு 4:3, 4) மற்றவர்களோ, உங்களுடைய நல்ல நடத்தையையும் அதன் நல்ல பயன்களையும் பார்த்து யெகோவாவைப்பற்றி தெரிந்துகொள்ளவும் தூண்டப்படலாம். (1 பேதுரு 2:12) இப்படிப்பட்ட சூழ்நிலையில், மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நன்மை அளிக்கலாம்.
ஒப்பிடுவது இன்னொரு விதத்திலும் பிரயோஜனமாக இருக்கலாம். உதாரணத்திற்கு, வீட்டைச் சுற்றிலும் நீங்கள் போதுமான வேலை செய்வதாக உங்களுக்குத் தோன்றலாம்—உங்களுடைய சகோதரனுடனோ சகோதரியுடனோ ஒப்பிடும்போதாவது அப்படித் தோன்றலாம். ஆனால், உங்களைப் போல் உங்கள் பெற்றோர் ஒருவேளை நினைக்காதிருக்கலாம். உங்கள் சிந்தனையை மாற்றிக்கொள்ள அவர்கள் பைபிளிருந்து உதாரணம் காட்டிப் பேசலாம். உங்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கிற அந்த நபருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்படி அவர்கள் சொல்லலாம்.
உதாரணத்திற்கு போதகர், ஆண்டவர் என இயேசு அழைக்கப்பட்ட போதிலும் தம் சீஷர்களின் பாதங்களைக் கழுவ தாமாகவே முன்வந்ததை அவர்கள் உங்களுக்கு நினைப்பூட்டலாம். (யோவான் 13:12-15) அதன் பிறகு, இயேசுவைப் போலவே தாழ்மையாக இருக்கவும், கடினமாக உழைக்கவும் அவர்கள் உங்களை உற்சாகப்படுத்தலாம். பார்க்கப்போனால், எல்லா கிறிஸ்தவர்களும், சிறியோர் பெரியோர் அனைவருமே எப்போதும் கிறிஸ்துவுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்து அவருடைய “அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி” பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (1 பேதுரு 2:21) இப்படி நாம் ஒப்பிட்டுப் பார்ப்பது, தாழ்மையோடு நடந்துகொள்ள நமக்கு உதவும். அதோடு, யெகோவாவுக்கு மிகவும் பிரியமான குணாம்சங்களை வளர்த்துக்கொள்ளவும் உதவும்.
தவறான விதத்தில் ஒப்பிடப்படுவதைச் சமாளித்தல்
உடன் பிறந்தவருடனோ உங்கள் வயதை ஒத்தவருடனோ உங்களை ஒப்பிட்டுப் பேசும்போது அது எரிச்சலையும் மன சங்கடத்தையும் ஏற்படுத்தலாம் என்பது உண்மைதான். இதை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்? “மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்” என்று ஞானியாகிய சாலொமோன் ராஜா கூறினார். (நீதிமொழிகள் 19:11) இந்த விஷயத்தில் விவேகம் எப்படி உதவலாம்? உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுகிற உங்கள் பெற்றோருக்கோ ஆசிரியருக்கோ உங்கள்மீது அதிக அக்கறை இருக்கலாம், இது உங்களுக்கு ஒருவேளை தெரியாதிருக்கலாம். “யாராவது என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசும்போது, ‘இவர்கள் எந்த விதத்தில் எனக்கு உதவி செய்ய நினைக்கிறார்கள்?’ என்று எனக்குள் கேட்டுக்கொள்வேன்” என்பதாக காத்தி சொல்கிறாள். ஒப்பிட்டு பேசப்படுகையில் அதில் தனக்கு ஏதேனும் நன்மை உள்ளதா என எண்ணிப் பார்க்கும்போது தான் சீக்கிரம் மனமுடைந்து, நிலைகுலைந்து போகாதிருப்பதை அவள் உணருகிறாள்.
என்றாலும் ஒருவேளை, நீங்கள் எப்போதுமே மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசப்படுவதாக நினைத்தால் என்ன செய்யலாம்? உதாரணத்திற்கு, உங்களுடைய அம்மாவோ அப்பாவோ எப்போதுமே உங்களை உடன்பிறந்தவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி உங்கள் மனதை நோகடிக்கலாம். அப்படிப் பேசும்போது நீங்கள் எந்தளவு புண்பட்டுப் போகிறீர்கள் என்பதை மரியாதைக்குரிய விதத்தில் உங்கள் பெற்றோரிடம் எடுத்துச் சொல்லலாம். நீங்கள் எந்தளவு பாதிக்கப்படுகிறீர்கள் என்பதை அவர்கள் அறியாதிருக்கலாம்.
இருந்தாலும், “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு” என்பதை நினைவில் வையுங்கள். (பிரசங்கி 3:7) அடுத்த முறை நீங்கள் ஒப்பிட்டுப் பேசப்படுகையில் உடனடியாக கோபத்தில் வெடித்துச் சிதறாதீர்கள். உங்கள் கோபம் தணிந்த பிறகு உங்களை நியாயமற்ற விதத்தில் ஒப்பிட்டுப் பேசினவரிடமோ உங்கள் பெற்றோரிடமோ சென்று பேசுங்கள். அப்படிச் செய்தால் உங்களுடைய வார்த்தைகள் அவர்களை யோசிக்க வைக்கும்.—நீதிமொழிகள் 16:23.
உங்களிடம் உள்ள நல்ல குணங்களை முதலில் அறிந்துகொள்ளுங்கள், அப்படிச் செய்தால் ஒப்பிட்டுப் பேசப்படும்போது ஏற்படுகிற மனக்கஷ்டங்களைப் பெரும்பாலும் குறைக்கலாம். தீமோத்தேயுவிடம் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு” நடந்துகொள். (1 தீமோத்தேயு 4:12) தீமோத்தேயு ஒரு கிறிஸ்தவ கண்காணியாக நியமிக்கப்படும்போது வாலிபராக இருந்தார். எனவே, சிலர் அவரை முதிர்ந்தவர்களுடனோ அனுபவசாலிகளுடனோ ஒப்பிட்டுப் பேசி இழிவுபடுத்தியிருக்கலாம். ஆனால், அப்படிப் பேசுவதற்கு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. ஏனென்றால், தீமோத்தேயு வாலிபராக இருந்தாலும் பவுலுடன் பிரயாணம் செய்ததால் அதிக அனுபவம் பெற்றிருந்தார். கடவுளுடைய வார்த்தையை எவ்வாறு சிறந்த விதத்தில் பயன்படுத்துவது என்பதுபற்றி தீமோத்தேயுவுக்குத் தெரிந்திருந்தது. தன்னுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகள்மீது அவர் உண்மையான அக்கறையும் காட்டினார்.—1 கொரிந்தியர் 4:17; பிலிப்பியர் 2:19, 20.
ஆகவே, அடுத்த முறை யாராவது உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு உங்கள் மனதைக் குத்தும் விதத்தில் பேசினால், ‘இவர்கள் சொல்வது சரிதானா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது என்றால், நீங்கள் செய்ய வேண்டிய மாற்றத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், ஒருவேளை மற்றவர்களுடன் பொதுவாக நீங்கள் ஒப்பிடப்பட்டால், உதாரணத்திற்கு, “உன் சகோதரனைப் போல் இருக்க நீ ஏன் முயற்சி செய்யக்கூடாது?” என்று சொல்லப்பட்டால், அதற்கு என்ன காரணம் என்பதை யோசித்துப் பாருங்கள். அதில் ஏதேனும் நன்மை இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முயலுங்கள்.
யெகோவா தேவன் உங்களை மற்ற அபூரண மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதன்மூலம் மதிப்பிடுவதில்லை. (கலாத்தியர் 6:4) அவர் உங்களுடைய வெளித்தோற்றத்தைப் பார்ப்பதில்லை, இருதயத்தைப் பார்த்து நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்கிறார். (1 சாமுவேல் 16:7) உண்மையில், நீங்கள் யார் என்பதை மட்டுமல்ல, எப்படிப்பட்டவராக இருக்க விரும்புகிறீர்கள் என்பதையும் யெகோவா பார்க்கிறார். (எபிரெயர் 4:12, 13) நீங்கள் தவறே செய்யக் கூடாது என அவர் எதிர்பார்ப்பதில்லை. அதற்குப் பதிலாக உங்களிடம் உள்ள நல்ல குணங்களைப் பார்க்கிறார். (சங்கீதம் 130:3, 4) இந்த விஷயங்களை நீங்கள் அறிந்து வைத்திருப்பது மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசப்படும்போது அதைச் சமாளிக்க உங்களுக்கு உதவும்.
www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்
சிந்திப்பதற்கு
◼ என்ன விதமான ஒப்பிடுதல்கள் உங்களுக்கு எரிச்சலூட்டுகின்றன?
◼ உங்களுடைய பெற்றோர் எப்போதும் உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசினால் நீங்கள் என்ன செய்யலாம்?
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 12-ன் சிறு குறிப்பு]
“எனக்கு ஆலோசனை வழங்குபவர், ஒருவருடைய பெயரைக் குறிப்பிட்டு ‘நீ அவரைப் போல இருக்க வேண்டும்’ என்று சொல்வதை நான் விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக முதலில் என்னிடம் உள்ள நல்ல குணங்களைப் பாராட்டிவிட்டு, பிறகு என் குறைகளைச் சரிசெய்துகொள்ள அன்பான விதத்தில் உதவுவதையே விரும்புகிறேன்.”—நாட்டாலி
[பக்கம் 13-ன் படம்]
ஒப்பிட்டுப் பேசப்படுகையில் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை மரியாதைக்குரிய விதத்தில் எடுத்துச்சொல்ல நீங்கள் நினைக்கலாம்