கலையைவிட நிலையானது
கலையைவிட நிலையானது
ராகெல் காயிவிஸ்டா சொன்னபடி
இரண்டாம் உலகப் போரில் மரணமடைந்தவர்களைக் கெளரவிப்பதற்காக எப்படிப்பட்ட கருங்கல் சிலையை நினைவுச்சின்னமாக வைக்கலாமென்று நான் சொன்ன ஆலோசனை, 1950-ல் நடத்தப்பட்ட ஒரு தேசிய போட்டியில் வெற்றி பெற்றது. ஒரு வருடத்திற்குப் பிறகு பின்லாந்து, டூசூலாவில் நான் உருவாக்கிய கருங்கல் நினைவுச்சின்னத்தின் திறப்புவிழா அமைதியான முறையில் நடந்தது. அதில் நான் கலந்துகொள்ளவில்லை. ஏனென்று சொல்லட்டுமா?
பின்லாந்தின் தெற்குப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில், எட்டுப் பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் நான் கடைக்குட்டியாக 1917-ல் பிறந்தேன். நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணர்ந்தேன். என்னுடைய பெற்றோர் நேர்மையானவர்களாகவும் கடவுள் பயமுள்ளவர்களாகவும் இருந்தார்கள்; ஆன்மீகக் காரியங்களை எங்களுக்குப் போதித்தார்கள். என்னுடைய அப்பா வாங்கிவைத்திருந்த பைபிள் எங்கள் வீட்டில் மிக உயர்வாக மதிக்கப்பட்டது.
சிறுமியாக இருந்தபோது மரத்தால் சிறிய சிலைகளைச் செதுக்கினேன். என்னுடைய வேலை மிகவும் நன்றாக இருக்கிறது என உறவினர்கள் நினைத்ததால் கலை பயில என்னை ஊக்கப்படுத்தினார்கள். கடைசியில், ஹெல்சிங்கியில் உள்ள தொழில் கலைக்கான பல்கலைக்கழகத்தில் என்னுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்லாந்து நாட்டுக் கலை வாழ்வின் மையமாக இருந்த மிகச் சிறந்த இந்தப் பள்ளி, கிராமப்புறத்து சிறுமிக்கு சுண்டியிழுக்கும் சூழலாக இருந்தது; அதில் நான் என்னையே மறந்தேன். 1947-ல் நான் பட்டம் பெற்றபோது, இந்த உலகில் நிலையான ஒன்றை விட்டுச்செல்ல முடியும் என்று நினைத்தேன்.
ஒரு திருப்புமுனை
பிறகு என்னுடைய லட்சியங்களில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டது. ஒரு நாள் என்னுடைய அக்கா அவுனெ என்னிடம் வந்து, “நான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்!” என்று மகிழ்ச்சியுடன் கூவினாள். யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட “தேவனே சத்தியபரர்” (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை அவள் பெற்றிருந்தாள். அதை நான் கண்டுகொள்ளவில்லை. கொஞ்ச காலத்திற்குப் பிறகு, பல்கலைக்கழகத்தில் சக மாணவியாக இருந்த ஒரு பெண்ணும் அதே புத்தகத்தை வைத்திருப்பதைக் கவனித்தேன். நான் அதைப் பார்த்து கேலி செய்து சிரித்தபோது, அவள் பதிலுக்கு: “சிரிக்கிறதை கொஞ்சம் நிறுத்துகிறாயா, இந்தப் புத்தகம் பைபிளைப் புரிந்துகொள்ள உனக்கு உதவும்!” என்று கூறினாள். அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஒரே மூச்சாகப் படித்து முடித்தேன். மறுபடியும் நான் அந்தப் புத்தகத்தைப்பற்றிக் கேலி செய்யவில்லை; உண்மையில் சாட்சிகளிடம் சத்தியம் இருக்கிறது என்று நம்பினேன். மேலும், கலை கொடுக்க முடியாத ஒன்றான நித்திய ஜீவனை யெகோவா தேவன் எனக்கு முன்பாக வைத்திருக்கிறார் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.
முதன்முறையாக சாட்சிகளோடு பழக்கமானபோது, கூட்டங்களுக்கு என்னை அவர்கள் யாரும் அழைக்கவில்லை. எனவே, உறுப்பினர்களாய் இருப்பவர்களுக்கு மட்டும்தான் அந்தக் கூட்டங்கள் போலும் என நினைத்தேன். அதனால் நானே முன்வந்து, ‘கூட்டங்களுக்கு நான் வரலாமா’ எனக் கேட்டேன். கூட்டங்களுக்கு எல்லாருமே வரலாம் என்பதை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கூட்டங்களில் கலந்துகொண்டது என்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியது, என்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு
ஒப்புக்கொடுக்க முடிவு செய்தேன். இந்த முடிவை யாவரும் அறிந்துகொள்ளும் வகையில் நானும் என்னுடைய அக்காவும் நவம்பர் 19, 1950-ல் முழுக்காட்டுதல் பெற்றோம். இறுதியாக, எங்களுடைய அன்பான பெற்றோரும் மற்ற நான்கு சகோதரிகளும் சாட்சிகளாக மாறியது சந்தோஷமாக இருந்தது.என்ன வேலையைத் தேர்ந்தெடுப்பது?
நான் சாட்சிகளோடு பைபிளைப் படித்துக்கொண்டிருந்த அதே சமயத்தில் என்னுடைய கலைத்தொழிலிலும் முன்னேறிக்கொண்டிருந்தேன். நான் கலைப்பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற பிறகு, சிற்பக்கலைப் பேராசிரியர் ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்தேன். அதன்பிறகுதான், நான் ஆரம்பத்தில் சொன்னபடி, இரண்டாம் உலகப் போரில் மரணமடைந்தவர்களைக் கெளரவிக்கும் நினைவுச் சின்னத்தைப் பற்றிய என்னுடைய கருத்து ஒரு தேசிய போட்டியில் வெற்றி பெற்றது. அதற்குத் தலைப்பாக, “திரும்பி வரமுடியாத பாதை” என்ற என்னுடைய கருத்தை முன்வைத்தேன்; அது போரைப்பற்றி என்னுடைய நோக்குநிலை மாறியிருந்ததைப் பிரதிபலித்தது. (ஏசாயா 2:4; மத்தேயு 26:52) 5 மீட்டர் உயரமுள்ள அந்தச் சிலை திறக்கப்பட்டபோது, அந்த விழா தேசப்பற்றுமிக்கதாக இருந்ததாலும் பைபிள் அடிப்படையிலான என்னுடைய நம்பிக்கைகளுக்கு முரணாக இருந்ததாலும் நான் அதில் கலந்துகொள்ளவில்லை.
ஒரு கலைஞராக என்னுடைய பேரும் புகழும் பெருகியது, மிகவும் பிரபலமானேன்; நல்ல வேலைவாய்ப்புகள் என்னைத் தேடிவந்தன. என்றாலும், எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதைச் சீர்தூக்கிப் பார்த்தேன். என்னுடைய வேலையை நான் மிகவும் நேசித்தபோதிலும் ஆன்மீக வழியில் மற்றவர்களுக்கு உதவுகிற ஆசையே மேலோங்கி இருந்தது. அதனால்தான் 1953-ல் பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தேன்; யெகோவாவின் சாட்சிகளின் முழுநேர சுவிசேஷகர்கள், பயனியர்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.
சிலசமயங்களில், ‘உன் திறமைகளையெல்லாம் ஏன் வீணாக்குகிறாய்?’ என சிலர் கேட்டார்கள். ஆனால், ஒரு சிற்பியாக என்னுடைய எந்தவொரு தனிப்பட்ட சாதனையும் தற்காலிகமானதாகவே இருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். கருங்கல் நினைவுச்சின்னங்கள்கூட காலப்போக்கில் தகர்ந்துவிடும். ஆனால், ஒரு பயனியராக என்னுடைய பெரும்பாலான நேரத்தை, நித்திய ஜீவனுக்குச் செல்லும் பாதையைக் கண்டடைய மற்றவர்களுக்கு உதவ பயன்படுத்த முடியுமல்லவா! (யோவான் 17:3) எனினும், சிற்பக்கலையை நான் மறக்கவில்லை. எப்போதாவது, என்னுடைய சந்தோஷத்திற்காக சிறிய சிலைகளை உருவாக்கினேன், என்னை ஆதரிப்பதற்காக அவற்றை விற்றேன்.
கிராமப்புற பகுதிக்குச் செல்லுதல்
ஹெல்சிங்கியில் நான்கு வருடங்கள் பயனியராக சேவைசெய்த பிறகு 1957-ல் யாலாஸியர்வியில் சேவைசெய்ய பின்லாந்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தால் அழைக்கப்பட்டேன். அது பாத்னீய வளைகுடாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள ஊரக நகராட்சிப் பகுதியாகும். அங்கே, என்னைவிட 17 வயது இளையவளாக இருந்த ஆன்யா கீட்டாவுடன் சேர்ந்துகொண்டேன். அவளை எனக்கு முன்பின் தெரியாதபோதிலும் சந்தோஷமாக அந்த நியமிப்பைப் பெற்றுக்கொண்டேன்; அவளோடு சேர்ந்து தொடர்ந்து சேவை செய்தேன். அந்தப் பகுதியிலேயே நானும் அவளும்தான் சாட்சிகளாயிருந்தோம், அதனால் ஏறக்குறைய எப்பொழுதும் நாங்கள் இருவரும் சேர்ந்தே ஊழியத்தைச் செய்தோம். விரைவில் நாங்கள் இணைபிரியாத தோழிகளானோம்.
யாலாஸியர்வியில் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருந்தது? 20 வருடங்களுக்கு முன்பாக தலைநகரில் கலையார்வம் உள்ளவர்களின் வட்டாரத்தில் ஒரு பாகமாக ஆவதற்கு முன்னால், நான் வாழ்ந்த வாழ்க்கையைப்போலவே ஓர் எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டியதாய் இருந்தது. பிரத்தியேகமாக குளிர்காலங்களில் கடுங்குளிர் நிலவியது; சிலசமயம், எங்கள் இடுப்பு உயரத்திற்குப் பெய்திருந்த பனியின் ஊடே கடந்து செல்ல வேண்டியிருந்தது. எந்தவித ஆடம்பரமும் இல்லாத ஒரு சிறிய அறையில் நாங்கள் வசித்தோம். அருகிலிருந்த நீரூற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டோம்; எப்போதாவது, நாங்கள் அறையில் வைத்திருந்த தண்ணீரின் மேற்பரப்பு பனிக்கட்டியாக மாறியிருக்கும். ஆனால், எங்களுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. (1 தீமோத்தேயு 6:8) வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அந்த நாட்களில் மகிழ்ச்சியாக இருந்தோம்.
பலன்தரும் நடவடிக்கையில் மும்முரம்
என்றாலும், ஆரம்பத்தில் எங்களுடைய முயற்சிகள் பலனளிக்குமெனத் தோன்றவில்லை. ஏனெனில், உள்ளூர்வாசிகளுக்கு எங்கள்மீது தப்பான அபிப்பிராயம் இருந்தது. எங்களுடைய வேலையை அவர்களுக்குப் புரிய வைப்பதற்கு, யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட புதிய உலக சமுதாயம் செயலில், புதிய உலக சமுதாயத்தின் மகிழ்ச்சி போன்ற படங்களைக் காண்பிக்க ஏற்பாடு செய்தோம். இவை எங்களையும் நம்முடைய அமைப்பையும் நன்கு அறிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பளித்தன; நம்முடைய நடவடிக்கைகள் உலகமெங்கும் உள்ள மக்கள் மத்தியில் உண்டாக்கிய நல்ல செல்வாக்குகளைக் காண உதவின. இந்தக் காட்சிகளைக் காண ஏராளமானோர் கூடிவந்தனர்.
ஒரு சந்தர்ப்பத்தில், யெகோவாவின் சாட்சிகளின் பயணக் கண்காணியான எரா ம்யூரைனென், ஒரு சமுதாயக் கூடத்தில் புதிய உலக சமுதாயம் செயலில் என்ற படத்தைப் போட்டுக் காட்டினார். அங்கே கூட்டம் நிரம்பி வழிந்தது; மிகவும் கஷ்டப்பட்டு எங்கோ ஒரு மூலையில் எனக்கு இடம் கிடைத்தது. தரையில் கால் வைப்பதற்குக்கூட இடமில்லாததால் ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றி சுவரில் சாய்ந்துகொண்டுதான் நிற்க வேண்டியிருந்தது. படம் முடிந்தபிறகு, அநேகர் எங்களை அணுகினார்கள், தங்களைச் சந்திக்க வரும்படி கேட்டார்கள்.
மேலும், பதிவுசெய்யப்பட்ட பைபிள் பேச்சுகளை பண்ணைவீடுகளில் போட்டுக்காட்டுவதற்கு நாங்கள் ஒரு பெரிய ஒலிப்பதிவுப் பெட்டியையும் பயன்படுத்தினோம். ஒரு சமயம் இதுபோன்ற பேச்சை மாலை 7 மணிக்கு ஒரு வீட்டில் வைத்துப் போட்டுக்காட்டுவதற்கு ஒத்துக்கொண்டிருந்தோம்; அதற்காக அந்தக் கிராமத்தார் அனைவரையும் அழைத்திருந்தோம். அன்று அதிகாலையில் பிரசங்கிப்பதற்காக
எங்களுடைய சைக்கிள்களில் சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றோம்; பிரசங்கித்துவிட்டு மாலை வீடு திரும்பிவிடலாமென நாங்கள் நினைத்துக்கொண்டோம். ஆனால், நாங்கள் அந்தக் கிராமத்தைவிட்டுக் கிளம்பியபோது, மழை காரணமாக பாதை சேறும்சகதியுமாய் சொதசொதவென ஆகிவிட்டது.கடைசியாக, எங்களுடைய சைக்கிள்கள் சேற்றில் வசமாக மாட்டிக்கொண்டன; சக்கரங்கள் சுழலவில்லை; அதனால் அவற்றை நாங்கள் வீட்டிற்குத் தூக்கிச் செல்லவேண்டியதாயிற்று. அதன் விளைவாக, திட்டமிட்ட அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு மாலை அதிக நேரமானபிறகும் வீட்டைவிட்டுக் கிளம்ப முடியவில்லை. அந்தக் கனமான ஒலிப்பதிவுப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு இரவு 10 மணிக்கு அங்குச் சென்றோம். அவர்கள் எல்லாரும் காத்திருந்து பார்த்துவிட்டு நிச்சயமாகத் திரும்பிப் போயிருப்பார்கள் என நாங்கள் நினைத்தோம். ஆனால், அந்த வீடு நிறைய கூடியிருந்த கிராமவாசிகள் இன்னும் எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தது எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது! நிகழ்ச்சி முடிந்தபிறகு, அருமையான கலந்துரையாடல் ஆரம்பித்தது. இறுதியாக, நாங்கள் வீடு வந்துசேர அதிகாலை ஆகிவிட்டது; நாங்கள் சக்கையாய்க் களைத்துப் போயிருந்தோம், ஆனால் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்!
கிராமங்களுக்கிடையே இருந்த தூரம் மிகவும் அதிகமாக இருந்தது; அந்தப் பகுதியிலுள்ள சாட்சிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஒரு பழைய காரை வாங்குவதற்கு உதவினார்கள். அது எங்களுடைய பிரசங்க வேலையை மிகவும் சுலபமாக்கியது. பிறகு அந்த கார் பிரபலமாயிற்று, அந்தப் பகுதியிலுள்ள பிஷப் அங்கு வந்திருந்தபோது எங்களை வீடுகளுக்கு அழைக்கக்கூடாது என அந்த சர்ச்சைச் சேர்ந்தவர்களிடம் சொன்னார். நீலநிற காரில் வரும் இரண்டு பெண்களைப்பற்றி அவர் பேசினார். அந்த எச்சரிக்கை உடனடியாக மக்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. யாரந்த இரண்டு பெண்கள் என்றும் அவர்களால் என்ன ஆபத்து இருக்கிறது என்றும் அறிய அவர்கள் விரும்பினார்கள். அவர்களுடைய ஆர்வம் அருமையான, நிறைய பைபிள் கலந்துரையாடல்களுக்கு வழிநடத்தியது. “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” என்று ஏசாயாவில் சொல்லப்பட்ட வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை.—ஏசாயா 54:17.
காலப்போக்கில் எங்களுடைய வேலை கனிகொடுத்தது. ஆர்வம் காட்டியவர்கள் அடங்கிய ஒரு சின்னத் தொகுதியுடன் நாங்கள் வாராந்தர கூட்டங்களை நடத்த ஆரம்பித்தோம். இறுதியில் எங்களுடைய தொகுதி வளர்ந்ததால், பெண்கள் அநேகர் உள்ள 18 சாட்சிகள்கொண்ட சபை 1962-ல் ஸ்தாபிக்கப்பட்டது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு நானும் ஆன்யாவும் அதே பகுதியிலிருந்த யூயிலிஸ்டாரா நகராட்சிக்கு மாற்றப்பட்டோம்.
ஊக்கமூட்டும் ஒரு சூழல்
புதிய நியமிப்பில், கிராமப்புறத்தின் அழகையும் அமைதியையும் கண்டு மகிழ்ந்தோம், விசேஷமாக அங்கிருந்த மக்களே எங்களைக் கவர்ந்தார்கள். பொதுவாக அவர்கள் உபசரிப்பவர்களாகவும் சிநேகப்பான்மையுள்ளவர்களாகவும் இருந்தார்கள். அநேகர் தீவிரமான மதப்பற்றும் தேசப்பற்றும் உடையவர்களாக இருந்தார்கள் என்பது உண்மைதான்; சிலசமயங்களில் கோபத்தில் எங்களைத் திட்டினார்கள்; ஆனால் பைபிளுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டியவர்களும் அங்கே இருந்தார்கள். பல சமயங்களில் நாங்கள் பைபிளை வெளியே எடுத்தபோது, கவனிப்பதற்காக பெண்கள் தங்களுடைய வீட்டுவேலைகளை விட்டுவந்தார்கள், ஆண்கள் தங்களுடைய தலைகளில் எப்போதுமே அணிந்திருந்த தொப்பிகளைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். சில சமயங்களில், நாங்கள் பைபிள் படிப்பு நடத்தும்போது வீட்டிலுள்ள அனைவரும், ஏன் பக்கத்து வீட்டுக்காரர்களும்கூட வருவார்கள்; அமைதியாக அமர்ந்து படிப்பில் கலந்துகொள்வார்கள்.
ஊழியத்தில் நல்மனமுள்ள, நேர்மையான மக்களைச் சந்தித்தது என்னுடைய கலையார்வத்தைத் தூண்டியது. எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கொஞ்சம் களிமண் எடுத்து வேலையை ஆரம்பித்துவிடுவேன். மனித குணங்களான மகிழ்ச்சியும் நகைச்சுவையும் என்னைக் கவர்ந்ததால் கிட்டத்தட்ட நான் உருவாக்கின எல்லாச் சிலைகளும் மனித சிலைகளாகவே இருந்தன. அவற்றில் பல, பெண்கள் தங்களுடைய வீட்டுவேலைகளைச் செய்வதைச் சித்தரித்தன. என்னுடைய சிற்பங்களைப்பற்றி ஒரு பத்திரிகையிலுள்ள கட்டுரை இவ்வாறு சொன்னது: “நகைச்சுவையும் சாவகாசமும்கூடிய அமைதியையும் பூமியின்
ரம்மியத்தையும் அவை வெளிப்படுத்துகின்றன . . . படைப்புத்திறனுக்கு உந்துசக்தியாக இருந்த அருமையான கலைத்திறமையுடன் மக்கள் மீதான அன்பும் இந்த உருவங்களுக்குப் பின்னால் இருக்கின்றன.” ஆனாலும், கலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடாதபடிக்கு நான் மிகவும் கவனமாக இருந்தேன். யெகோவாவுக்கு முழுநேரமாக சேவை செய்யும் என்னுடைய தீர்மானத்தில் உறுதியாக இருந்தேன்.மறுக்கவே முடியாத ஒரு வேலைவாய்ப்பு 1973-ல் எனக்குக் கிடைத்தது. வான்டாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய பின்லாந்து கிளை அலுவலகத்தின் புதிய வரவேற்பறைக்காக களிமண்ணில் ஒரு பெரிய செதுக்குச் சித்திரத்தை உருவாக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். சங்கீதம் 96:11-13-ல் உள்ள வார்த்தைகளைச் சித்தரிக்கும் வகையில் அதைச் செதுக்கும்படி தீர்மானிக்கப்பட்டது. என்னுடைய திறமைகளை யெகோவாவைத் துதிப்பதில் பயன்படுத்துவதற்கு நான் எவ்வளவாய் மகிழ்ச்சியடைந்தேன் தெரியுமா!
நான் பயனியராக இருந்த நாட்களில், பெரும்பாலும் என்னுடைய சொந்த திருப்திக்காகவே கலைப்பணியைச் செய்தேன்; அதனால், 1970-களின் பிற்பகுதியில் ஒரு கலைஞருக்குரிய ஓய்வூதியம் தரப்பட்டபோது ஆச்சரியமடைந்தேன். பண உதவி கிடைத்தது குறித்து சந்தோஷமடைந்தேன் என்பது உண்மைதான்; ஆனால், எனக்குள்ளேயே இவ்வாறு நினைத்துக்கொண்டேன், ‘என்னுடைய வாழ்க்கை முழுவதையும் கலைக்காக அர்ப்பணித்திருந்தாலும் இவ்வளவுதானே கிடைத்திருக்கும்? கொஞ்சம் கூடுதலான பணம் என்னுடைய ஓய்வு வருடங்களை அதிக பாதுகாப்பானதாக ஆக்கிவிடுமா?’ நித்திய ஜீவனோடு ஒப்பிடும்போது அது எவ்வளவு அற்பமானதாக இருந்தது!—1 தீமோத்தேயு 6:12.
நகரத்துக்குத் திரும்புதல்
1974-ஆம் வருடத்தில் எங்களுடைய வாழ்க்கையிலும் ஊழியத்திலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. பெரிய நகரமான டுர்குவிற்குச் செல்ல நாங்கள் நியமிப்பைப் பெற்றோம். அந்தச் சமயத்தில் பல புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டுக்கொண்டிருந்தன; ஏராளமான மக்கள் அங்கு வந்து சேர்ந்ததால் ராஜ்ய பிரஸ்தாபிகள் அங்கே பிரசங்கிப்பதற்கான தேவை ஏற்பட்டது. முதலில், நகர்ப்புறத்தில் கிடைத்த புதிய நியமிப்பில் எங்களுக்கு அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை. நகரவாசிகளுக்குப் பிரசங்கிப்பது கடினமாகத் தோன்றியது; அவர்களில் அநேகர் அலட்சியமாக நடந்துகொண்டார்கள். ஆனால், படிப்படியாக அந்தப் புதிய பிராந்தியத்திற்குத் தக்கவாறு எங்களை மாற்றிக்கொண்டோம்; பைபிள் சத்தியங்களை மதித்த அநேகரைக் கண்டுபிடித்தோம்.
பல வருடங்களாக 40-க்கும் அதிகமான நபர்கள் தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு ஆன்யாவும் நானும் உதவிசெய்யும் சிலாக்கியத்தைப் பெற்றோம். இந்த ஆன்மீகப் பிள்ளைகள் எங்களுடைய இதயங்களுக்கு எவ்வளவாய் இதமளிக்கிறார்கள்! (3 யோவான் 4) சமீப காலமாக, என்னுடைய உடல் ஆரோக்கியம் முன்புபோல் இல்லை; ஆனால் யெகோவாவின் ஆதரவையும் சபையின் அன்பையும் என் அன்பான பயனியர் கூட்டாளியான ஆன்யாவின் ஆறுதலையும் நான் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். (கொலோசெயர் 4:11; சங்கீதம் 55:22) சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் நான் ஆன்யாவைச் சந்தித்தபோது, வாழ்நாள் முழுவதும் நாங்கள் பயனியர் தோழிகளாக இருப்போமெனக் கற்பனைகூட செய்யவில்லையென்றுதான் சொல்லவேண்டும்.
“வாழ்க்கை நிலையற்றது கலையோ நிலையானது” என்ற பிரபலமான பழமொழி ஒன்று உண்டு. என்றாலும், என்னைப் பொருத்தவரையில் இது தாரக மந்திரமாக இருக்கவில்லை. “காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்” என்று 2 கொரிந்தியர் 4:18-ல் குறிப்பிடப்பட்ட பவுலின் வார்த்தைகளையே உண்மையென ஒப்புக்கொள்கிறேன். ஒரு கலைஞராக நான் பெற்ற எல்லா சந்தோஷங்களான “காணப்படுகிறவைகள்” தற்காலிகமானவையாகவே இருந்திருக்கின்றன. யெகோவாவின் சேவையில் நான் பெற்ற சந்தோஷங்களோடு நிச்சயமாகவே அவற்றை ஒப்பிட முடியாது; அதோடு அவை நித்திய ஜீவனையும் கொடுப்பதில்லை. கலையைவிட நிலையானவையாக இருக்கிற ‘காணப்படாதவைகளுக்கு’ என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்!
[பக்கம் 19-ன் படம்]
கருங்கல் நினைவுச்சின்னத்தைச் செதுக்குதல்
[பக்கம் 21-ன் படம்]
ஆன்யாவுடன் (இடது), 1957
[பக்கம் 22-ன் படம்]
இன்று ஆன்யாவுடன் (வலது)