Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

துணிகளுக்குச் சாயமேற்றுதல் அன்றும் இன்றும்

துணிகளுக்குச் சாயமேற்றுதல் அன்றும் இன்றும்

துணிகளுக்குச் சாயமேற்றுதல் அன்றும் இன்றும்

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

நம் உணர்ச்சிகளுக்கும் நிறங்களுக்கும் சம்பந்தம் இருப்பதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சரித்திரம் முழுவதிலுமே மனிதர்கள் துணிமணிகளுக்கு நிறம் சேர்த்து உடுத்தியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அதற்குக் கைகொடுத்தது சாயமேற்றும் முறைதான்.

உடைகளையோ, வீடுகளை அலங்கரிக்கிற தரைவிரிப்புகள், திரைகள் போன்றவற்றையோ அல்லது அவற்றை உருவாக்குவதற்கான துணிமணிகளையோ வாங்குகையில், அவை சாயம்போகவோ வெளுத்துப்போகவோ கூடாதென்றே நாம் விரும்புகிறோம். துணிமணிகள் வெளுத்துப்போகாமல் இருப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற செயல்முறைகளைக் குறித்தும் பாரம்பரிய சாயமேற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் குறித்தும் கற்றுக்கொள்வதற்காக நாங்கள் இங்கிலாந்தின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ப்ராட்ஃபர்ட்டிலுள்ள எஸ்டிசி வண்ண அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தோம். a காலங்காலமாய் சாயம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அபூர்வமான பொருள்கள் சிலவற்றை அங்கே கண்டோம்.

பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட சாயங்கள்

19-⁠ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையாக, தாவரங்கள், பூச்சிகள், சிப்பி மீன்கள் போன்ற இயற்கைப் பொருள்கள் மட்டுமே சாயங்களைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, வோட் செடியிலிருந்து நீலநிறச் சாயம் (1) தயாரிக்கப்பட்டது; வெல்டு செடியிலிருந்து மஞ்சள் நிறச் சாயமும் (2), மஞ்சிட்டி செடியிலிருந்து சிவப்புச் சாயமும் எடுக்கப்பட்டன. லாக்வுட் மரத்திலிருந்து கறுப்புச் சாயமும் ஆர்ச்சல் என்ற மரப்பாசியிலிருந்து ஊதா சாயமும் தயாரிக்கப்பட்டன. ம்யூரெக்ஸ் சிப்பி மீனிலிருந்து விலையுயர்ந்த கருஞ்சிவப்புநிறச் சாயம் தயாரிக்கப்பட்டது; அது டைரியன் அல்லது இம்பீரியல் பர்ப்பிள் என அழைக்கப்படுகிறது (3). ரோமப் பேரரசர்கள் அணிந்த உடைகளைச் சாயமேற்ற இதுவே பயன்படுத்தப்பட்டது.

ரோம பேரரசர்கள் காலத்திற்கு வெகு முன்பாகவே, இயற்கைப் பொருள்களால் சாயமேற்றப்பட்ட உடைகளைப் பிரமுகர்களும் செல்வச்சீமான்களும் அணிந்தனர். (எஸ்தர் 8:15) உதாரணமாக, பெண் கர்மிஸ் பூச்சிகளிலிருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கப்பட்டது (4). பண்டைய இஸ்ரவேல் மக்கள், கூடாரத் துணிகளையும் பிரதான ஆசாரியரின் உடைகளையும் சாயமேற்றுவதற்குப் பயன்படுத்திய காக்கஸ் ஸ்கார்லட் (சிவப்பு) சாயம் இதிலிருந்தே தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.​—யாத்திராகமம் 28:5; 36:⁠8.

சாயமேற்றும் முறை

பெரும்பாலான சாயமேற்றும் முறைகளில் வெறுமனே நூலோ துணியோ சாயத்தொட்டிக்குள் முக்கி எடுக்கப்படுவதோடு வேலை முடிந்துவிடுவதில்லை; அதைவிடச் சிக்கலான வேலைகள் உட்பட்டுள்ளன என்பதை வண்ண அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த காட்சிப்பொருள்கள் தெரிவித்தன. பெரும்பாலும், சாயமேற்றும் செயலின் ஏதோவொரு கட்டத்தில் மார்டண்ட், அதாவது நிறம் நிறுத்தி பயன்படுத்தப்படுகிறது; இது நூலிழையோடும் சாயத்தோடும் ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. இதைப் பயன்படுத்தும்போது, சாயம் நூலிழையோடு இரண்டறக் கலந்துவிடுவதோடு நீரில் கரையாத தன்மையையும் பெறுகிறது. அநேக இரசாயனங்கள் நிறம் நிறுத்திகளாகப் பயன்படுத்தப்படுகின்றன; அவற்றில் சில மிக அபாயகரமானவை.

சாயமேற்றும் செயல்முறைகள் சிலவற்றின்போது துர்நாற்றம் வருகிறது. துருக்கி சிவப்பு நிறச் சாயமேற்றுகிற நீண்ட சிக்கலான செயல்முறையில் இத்தகைய துர்நாற்றம் வருகிறது. இம்முறையைப் பயன்படுத்தி பருத்தித் துணியில் சாயம் ஏற்றப்பட்டபோது கண்ணைப் பறிக்கிற சிவப்பு நிற துணி உருவானது. இது சூரியவொளி, சலவை, கறை நீக்கி என எதற்குமே மசியவில்லை. ஒரு சமயத்தில் இந்தச் செயல்முறையில் 38 வித்தியாசமான கட்டங்கள் உட்பட்டிருந்தன; அதோடு அதை முடிப்பதற்கு ஏறத்தாழ நான்கு மாதங்கள் ஆகிவிட்டதாம்! அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த மிக அழகான துணிகள் சில துருக்கி சிவப்பு சாயமேற்றப்பட்டவை (5).

செயற்கைச் சாயங்கள் அறிமுகம்

இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தாமல் முதன்முதலில் 1856-⁠ல் சாயத்தைத் தயாரித்த பெருமை வில்லியம் ஹென்றி பர்கன் என்பவரைச் சேரும். மாவ், அதாவது அடர்ந்த கருஞ்சிவப்பு நிறத்தை பர்கன் கண்டுபிடித்ததைப் பற்றி அருங்காட்சியகத்திலுள்ள ஒரு காட்சிப்பொருள் தெரிவிக்கிறது. 19-⁠ம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக, பகட்டான நிறங்களில் இன்னுமதிக செயற்கைச் சாயங்கள் தயாரிக்கப்பட்டன. இன்றோ 8,000-⁠க்கும் அதிகமான செயற்கைச் சாயங்கள் தயாரிக்கப்படுகின்றன (6). இயற்கைப் பொருள்களான லாக்வுட்டும் காச்சனீலும் மட்டுமே இன்றுவரை சாயம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று, ரேயானைப் போன்ற செயற்கைப் பொருள்களுக்குச் சாயமேற்றுவதில் உட்பட்டுள்ள விசேஷ செயல்முறைகளைக் குறித்து அந்த அருங்காட்சியகத்திலுள்ள கலைக்கூடம் தெரிவிக்கிறது. தற்போது பயன்படுத்தப்படுகிற மிகப் பிரபலமான வகை ரேயான், விஸ்கோஸ் ரேயான் ஆகும்; இது முதன்முதலில் 1905-⁠ஆம் ஆண்டு வியாபார ரீதியாக தயாரிக்கப்பட்டது. விஸ்கோஸ் ரேயான் வேதியியல் ரீதியில் பருத்தியை ஒத்திருப்பதால் அச்சமயத்தில் புழக்கத்தில் இருந்த சாயங்களே அதற்கும் ஏற்றப்பட்டன. இருந்தபோதிலும், அசெட்டேட் ரேயான், பாலியஸ்டர், நைலான், அக்ரிலிக் போன்ற அதி நவீன செயற்கைப் பொருள்களுக்குச் சாயமேற்றுவதற்குப் பல்வேறு புதிய வகை சாயங்களைத் தயாரிக்க வேண்டியிருந்தது.

வெளுத்துப்போகாத சாயங்களை உற்பத்தி செய்யும் சவால்

உடைகளையோ துணிகளையோ வாங்கும்போது, அவை நிறம் மங்காதவையாக இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். என்றாலும், அநேக துணிமணிகள் சூரியவொளி படுவதாலோ அடிக்கடி துவைப்பதாலோ வெளுத்துப் போகின்றன; அதுவும் குறிப்பாக, சலவைப்பொருள்களைப் பயன்படுத்துகையில் அவ்வாறு ஆகின்றன. வியர்வைப்படுவதாலோ அல்லது மற்ற உடைகளுடன் சேர்த்து துவைப்பதாலோ சில சமயங்களில் துணிகள் சாயம் போகலாம். துவைக்கும்போது சாயம்போகாமல் இருப்பது சாய மூலக்கூறுகள் நூலிழைகளில் எந்தளவுக்குக் கெட்டியாக ஒட்டிக்கொள்கின்றன என்பதைச் சார்ந்திருக்கிறது. அடிக்கடி துவைப்பதும் கறைகளை அகற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்ட சலவைப் பொருள்களைப் பயன்படுத்துவதும் நூலிழைகளிலிருந்து சாயத்தைப் பிரித்துவிடுகின்றன; இதனால் துணிகள் வெளுத்துப்போகின்றன. சாயம் உற்பத்தி செய்பவர்கள் சூரியவொளி, துவைத்தல், சலவைப்பொருள்கள், வியர்வை ஆகியவற்றைத் தங்களுடைய தயாரிப்புகள் சரியான அளவிற்கு தாக்குப்பிடிக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக அவற்றைப் பரிசோதிக்கிறார்கள்.

இந்தச் சுற்றுப்பயணம், நம் உடைகள் எத்தகைய பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வதற்கான அவசியத்தை எங்களுக்கு உணர்த்தியது. அதைவிட முக்கியமாக, நம் உடைகளைப் பலமுறை துவைத்தாலும்கூட சாயம் போகாமல் இருப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட புத்திக்கூர்மையான செயல்முறைகளைக் குறித்து கற்றபோது நாங்கள் அறிவொளிப் பெற்றோம்.

[அடிக்குறிப்பு]

a எஸ்டிசி​—⁠சாயமேற்றும் மற்றும் வண்ணமேற்றும் தொழில்புரிவோர் சங்கம்​—⁠நிறம் சம்பந்தமான ஆய்வை மேற்கொள்கிறது.

[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]

ஃபோட்டோக்கள் 1-4: Courtesy of the Colour Museum, Bradford (www.colour-experience.org)

[பக்கம் 25-ன் படங்களுக்கான நன்றி]

ஃபோட்டோ 5: Courtesy of the Colour Museum, Bradford(www.colour-experience.org); ஃபோட்டோ 6: Clariant International Ltd., Switzerland