Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மகரந்தம் உயிர் காக்கும் தூள்

மகரந்தம் உயிர் காக்கும் தூள்

மகரந்தம் உயிர் காக்கும் தூள்

வசந்த காலம் சுகந்தமாய் விடியும்போது, பூக்களை ஓயாமல் சுற்றி வந்து தேனீக்கள் கும்மாளமிடுகின்றன; காற்றோடு கைகோர்த்து மகரந்தத் தூள்கள் உலா செல்கின்றன. ஆனால், இந்தத் தூள்கள் அலர்ஜியால் அவதிப்படுகிறவர்களுக்கோ ஆனந்தத்தை அல்ல, அவஸ்தையைத்தான் தருகின்றன. இருந்தாலும், இயற்கை இலவசமாய் வழங்குகிற தொல்லைதானே இது என நாம் முடிவுகட்டுவதற்கு முன்பு, தனித்தன்மை வாய்ந்த இத்தூள்கள் வகிக்கும் முக்கியப் பங்கையும் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் வாழ்க்கை எந்தளவுக்கு அதன்மீது சார்ந்திருக்கிறது என்பதை அறிவது நமக்கே ஆச்சரியமாய் இருக்கலாம்.

மகரந்தம் என்பது என்ன? “பூக்கும் தாவரங்கள், கூம்பு வடிவில் காய்க்கிற தாவரங்கள் ஆகியவற்றின் ஆண் உறுப்புகளில் உற்பத்தியாகும் நுண்ணிய துகள்களே மகரந்தம்” என்று த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா விளக்குகிறது. சுருங்கச் சொன்னால், இனப்பெருக்கம் செய்வதற்காகவே தாவரங்கள் மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன. மனிதக் குழந்தை உருவாவதற்கு பெண்ணின் கருவுடன் ஆணின் விந்து இணைய வேண்டும் என்பது நமக்கு நன்கு தெரிந்த விஷயம். அதுபோலவே, பூவின் ஆண் உறுப்பிலிருக்கும் (மகரந்தத் தாள்) மகரந்தம் பெண் உறுப்பைச் (சூலகம்) சென்றெட்டும்போது அது கருவுற்று கனியை உற்பத்தி செய்கிறது. a

மகரந்தத் துகள்கள் அந்தளவுக்கு நுண்ணியதாக இருப்பதால், அவை நம் கண்களுக்குப் புலப்படாது; ஆனால், நுண்ணோக்கியில் தெள்ளத்தெளிவாகத் தெரியும். சொல்லப்போனால், நுண்ணோக்கியில் பார்க்கும் ஒருவருக்கு மகரந்தத்தின் அளவும் வடிவமும் ஒவ்வொரு வகை தாவரங்களிலும் ஒவ்வொரு விதமாக இருப்பது தெரியும். மகரந்தம் எளிதில் சிதைந்துபோவது கிடையாது; எனவே மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட மகரந்தத்தின் “கைரேகைகளை” அதாவது, அதற்கே உரிய தனித்தன்மை வாய்ந்த அம்சங்களை விஞ்ஞானிகள் அடிக்கடி ஆய்வு செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மக்கள் பயிரிட்ட தாவரங்களை அவர்களால் அடையாளம் காணமுடிகிறது. மிக முக்கியமாக, பூக்களுக்குத் தங்களுடைய இனத்தைச் சேர்ந்த மகரந்தத்தை அடையாளம் கண்டுகொள்ள ஒவ்வொரு மகரந்தத்திலும் உள்ள தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் உதவுகின்றன.

மகரந்தம் பயணிக்கும் விதம்

பல தாவரங்களின் ஊசல் பூக்கொத்துகளில் (காட்கின்) அல்லது கூம்புகளில் காற்று மோதும்போது அது மகரந்தத்தைச் சிதறடிக்கிறது; இம்மகரந்தத்தை வேறொரு இடத்திற்குக் கொண்டுச் செல்ல அநேக தாவரங்கள் காற்றையே நம்பியிருக்கின்றன. சிலவகை நீர் வாழ் தாவரங்களில் நீர் வழியாக மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. மகரந்தம் காற்றிலே மிதந்துச் செல்லும்போது மகரந்தச் சேர்க்கை நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என்பதால், இம்முறையில் மகரந்தச் சேர்க்கை செய்கிற மரம் செடிகொடிகள் மிக அதிக எண்ணிக்கையில் மகரந்தத்தை உற்பத்தி செய்கின்றன. b இவ்வாறு காற்றில் இறைக்கப்படுகிற ஏராளமான மகரந்தமே அலர்ஜியால் அவதிப்படுகிற மக்களுக்கு பெரும் அவஸ்தையைத் தருகிறது.

பல வகையான மரங்களும் புற்களும் மகரந்தச் சேர்க்கை செய்வதற்குக் காற்று பேருதவி புரிந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வளருகிற பூக்கும் தாவரங்களுக்கு இதைவிட சிறந்த முறை தேவைப்படுகிறது. இத்தகைய தாவரங்களில் இருக்கும் மகரந்தம் பல கிலோமீட்டர் தள்ளியிருக்கிற இவ்வகை தாவரத்தை எவ்வாறு சென்றெட்டுகிறது? வௌவால்களும், பறவைகளும் பூச்சிகளும் புரிகிற சிறந்த சேவையால்தான்! ஆனால், ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு மகரந்தத்தை எடுத்துச் செல்லும் இந்த வேலையை இவை ‘போனால் போகட்டும்’ என்று சும்மா ஒன்றும் செய்வதில்லை.

மகரந்தச் சேர்க்கைக்குக் கைகொடுக்கிற இவற்றுக்கு பூக்கள் மலர்த்தேன் விருந்து படைக்கின்றன; சுவைமிக்க மலர்த்தேனை பருகுவதற்குக் கசக்குமா என்ன! எனவே, இந்த அழைப்பை இவை தட்டாமல் ஏற்றுக்கொள்கின்றன. இந்த “விருந்தாளி” பூவுக்குள் புகுந்து தேனை உறிஞ்சுகிறபோதெல்லாம் அதன் உடல் முழுவதும் மகரந்தத் துகள்கள் ஒட்டிக் கொள்கின்றன. மலர்த்தேனின் சுவையில் மயங்கி அதைப் பருகுவதற்காக வேறொரு மலரிடம் செல்லும்போது இந்த மகரந்தத்தை அம்மலரிடம் சேர்த்துவிடுகிறது.

குறிப்பாக, மித வெப்பமண்டல நாடுகளில், மகரந்தச் சேர்க்கைக்குப் பெரும்பாலும் கைகொடுப்பது பூச்சிகளே. இவை மலர்த்தேனையும் மகரந்தத்தையும் உண்பதற்காக ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மலர்களை விஜயம் செய்கின்றன. c “மனிதர்கள் ஆரோக்கியமாகவும் தெம்பாகவும் வாழ்வதற்கு பூச்சிகள் அளிக்கும் மிக முக்கியமான கொடை மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதுதான்; ஆனால் அவை செய்யும் சேவையை நாம் அவ்வளவாக பொருட்படுத்துவதே கிடையாது” என்று பூச்சியியல் வல்லுநர் மே பெரன்பாம் தெரிவிக்கிறார். கனிதரும் மரங்களில் பொதுவாக மலர்கள் பூத்துக் குலுங்கும்; இவை ஏராளமான கனிகளை உற்பத்தி செய்வதற்கு அயல் மகரந்தச் சேர்க்கையையே நம்பியிருக்கின்றன. எனவே, மகரந்தம் பல்வேறு வழிகளில் எடுத்துச் செல்லப்படுவது நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

இவை எப்படி வசீகரிக்கப்படுகின்றன?

மலர்கள், மகரந்தச் சேர்க்கைக்குக் கைகொடுப்பவைகளை வசீகரித்து வரவேற்பதோடுகூட அவற்றிற்கு உணவளிக்கவும் வேண்டும். இதை எவ்வாறு செய்கின்றன? தங்களை நாடி வரும் “விருந்தாளி”க்கு அமர கதகதப்பான இடம் தரலாம். தங்களிடம் மலர்த்தேனும் மகரந்தமும் இருப்பதையும்கூட அவை விளம்பரப்படுத்துகின்றன; அவற்றின் வசீகரமான தோற்றமும் நறுமணமும் இதற்குப் பெரிதும் கைகொடுக்கின்றன. அநேக பூக்கள் தங்களுடைய வண்ணவண்ண புள்ளிகள் அல்லது கோடுகளின் வாயிலாக, ‘இங்கே தேன் இருக்கிறது’ என்று சொல்லாமல் சொல்கின்றன. இதன்மூலம் இந்த “விருந்தாளிகள்” மலர்த்தேன் கிடைக்குமிடத்தை அறிந்துகொள்கின்றன.

மகரந்தச் சேர்க்கைக்குக் கைகொடுப்பவைகளை வசீகரிக்கும் உத்திகள் மலருக்கு மலர் வேறுபடுகின்றன. ஈக்களைக் கவர்ந்திழுப்பதற்காக சில மலர்கள் ஒருவித அழுகல் நாற்றத்தை வெளியிடுகின்றன. மகரந்தச் சேர்க்கை வெற்றிகரமாக நடைபெறுவதற்காக சில மலர்கள் தந்திரங்களைக் கையாளுகின்றன. உதாரணமாக, தேனீ ஆர்க்கிட் மலர்கள் தேனீக்களைப் போலவே காட்சியளிக்கின்றன; காதல் மயக்கத்திலிருக்கும் தேனீக்கள் அவற்றிடம் ‘காதல்புரிய’ வந்து ஏமாறுகின்றன. சிலவகை மலர்கள் பூச்சிகளைச் சிறைபிடித்துக் கொள்கின்றன; மகரந்தச் சேர்க்கையை நிகழ்த்திய பின்னர்தான் அவற்றை விடுவிக்கின்றன. “தாவர உலகில், பூக்கள் மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுவதை உறுதிசெய்கிற இந்த முக்கியமான விஷயத்தைவிட வேறெந்த செயலிலும் இந்தளவு அபார ஞானம் அதிக மென்மையான, நுட்பமான அல்லது அறிவுத்திறம்வாய்ந்த விதத்தில் வெளிப்படவில்லை” என்று தாவரவியலாளர் மல்கம் வில்கின்ஸ் குறிப்பிடுகிறார்.

கவர்ந்திழுக்கும் தன்மையை தாவரங்களுக்குத் தருவதன்மூலம் மகரந்தச் சேர்க்கை புரிவதற்கான ஏற்பாட்டை படைப்பாளர் செய்திராவிட்டால், கோடிக்கணக்கான தாவரங்களில் இனப்பெருக்கமே நடைபெறாது. இந்த அதிசயச் செயலால் விளையும் நன்மையைக் குறித்து இயேசு கிறிஸ்து இவ்வாறு கூறினார்: “காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை.”​—மத்தேயு 6:25, 28, 29.

மகரந்தச் சேர்க்கையின் காரணமாகவே, தாவரங்கள் செழித்து வளர்ந்து நமக்குத் தேவையான உணவை அளிக்கின்றன. மகரந்தம் நம்மில் சிலருக்கு அவஸ்தையைத் தருவதென்னவோ உண்மைதான், என்றாலும், உயிர் காக்கும் இத்தூளை எடுத்துச் செல்வதில் சுறுசுறுப்பாய் உழைக்கிற உயிர்களுக்கு நாம் எல்லாரும் நன்றியுடன் இருக்க வேண்டும். இந்த அதிசயிக்கத்தக்க இயற்கைச் செயல்முறையில்தான் அமோக விளைச்சல் பெருமளவு சார்ந்திருக்கிறது; அதோடு இது படைப்பாளரின் வியக்கத்தக்க கைவண்ணத்துக்கு மிகச் சிறந்த சான்றாகவும் விளங்குகிறது.

[அடிக்குறிப்புகள்]

a அயல் மகரந்தச் சேர்க்கை வழியாகவோ தன் மகரந்தச் சேர்க்கை வழியாகவோ கருவுறுதல் நிகழ்கிறது. இருந்தபோதிலும், அயல் மகரந்தச் சேர்க்கையால் புதிய ரகங்கள் உருவாகின்றன; அதனால் திடமான, எதையும் தாக்குப்பிடித்து நிற்கும் தாவரங்கள் வளருகின்றன.

b உதாரணமாக, ஒரு பூர்ச்ச மரத்தின் ஊசல் பூக்கொத்திலிருந்து மட்டுமே ஐம்பது லட்சத்துக்கும் அதிகமான மகரந்தத் துகள்கள் வெளியேறலாம்; அதோடு பூர்ச்ச மரத்தில் பொதுவாக பல்லாயிரக்கணக்கான ஊசல் பூக்கொத்துகள் இருக்கலாம்.

c தேனீக்கள் ஒரு கிலோ தேன் எடுப்பதற்காக ஒவ்வொரு மலரிடமும் சுமார் ஒரு கோடி தடவை விஜயம் செய்கின்றன.

[பக்கம் 16, 17-ன் பெட்டி/படங்கள்]

மகரந்தச் சேர்க்கைக்குக் கைகொடுப்பவை

ஈக்களும் வண்டுகளும்

இவை மகரந்தச் சேர்க்கைக்கு கைகொடுக்கிற மறக்கப்பட்ட சாதனையாளர்களில் சில. நீங்கள் சாக்லேட் பிரியரா? குட்டி ஈக்கு நீங்கள் நன்றி சொல்லலாம். ஏனெனில், கோக்கோ மரத்தின் மலர்களில் மகரந்தச் சேர்க்கை நிகழ இதுவே முக்கியப் பங்காற்றுகிறது.

வௌவால்களும் போஸ்ஸம்களும்

இலவம்பஞ்சு வகை மரம், ஆணை புளியமரம் போன்ற உலகின் கம்பீரமான மரங்களில் பல, மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடுவதற்கு வௌவால்களையே நம்பியுள்ளன. பழந்தின்னி வௌவால்கள் சில, மலர்த்தேனைக் குடிப்பதோடு மட்டுமல்லாமல் பழத்தையும் தின்று அதன் விதைகளைப் பரவலாகப் போட்டுவிடுகின்றன; இவ்வாறு இவை இரட்டைச் சேவைப் புரிகின்றன. ஆஸ்திரேலியாவில் இருக்கும் சிறிய பைப்பாலூட்டி விலங்கான போஸ்ஸம், மலர்த்தேனைக் குடிப்பதற்காக பூக்களை விஜயம் செய்கிறது. அப்போது, அதன் ரோமமுள்ள உடலில் ஒட்டிக்கொள்ளும் மகரந்தம் ஒரு மலரிலிருந்து வேறொரு மலருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

வண்ணத்துப் பூச்சிகளும் அந்துப்பூச்சிகளும்

கண்ணைப் பறிக்கும் அழகுள்ள இந்தப் பூச்சிகளுக்கு மலர்த்தேனே உணவு; இதனால் ஒரு மலரிலிருந்து வேறொரு மலருக்குச் செல்லும்போது இவை மகரந்தத் தூளைக் கொண்டு செல்கின்றன. அழகிய ஆர்க்கிட்கள் சில, வெற்றிகரமான மகரந்தச் சேர்க்கைக்கு முற்றிலுமாக அந்துப்பூச்சிகளையே சார்ந்திருக்கின்றன.

சூரியப்பறவைகளும் தேன்சிட்டுகளும்

இந்த வண்ணப் பறவைகள் தேனை உறிஞ்சிக் குடிக்க மலருக்கு மலர் ஓயாமல் பறக்கின்றன. இப்பறவைகளின் முன்னந்தலையிலும் மார்புப்பகுதியிலும் உள்ள இறக்கைகளில் மகரந்தம் படிந்து விடுகிறது.

தேனீக்களும் குளவிகளும்

மூக்குக் கண்ணாடியில் தூசி எவ்வளவு எளிதாகப் படிகிறதோ அவ்வளவு எளிதாக தேனீக்களின் ரோமம் நிறைந்த உடல்களில் மகரந்தம் ஒட்டிக் கொள்கிறது; எனவே தேனீக்கள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதில் கில்லாடிகளாகத் திகழ்கின்றன. ரோமமுள்ள ஒருவகை பெரிய தேனீ மட்டுமே கிட்டத்தட்ட 15,000 மகரந்தத் துகள்களை எடுத்துச் செல்ல முடியும். 19-⁠ம் நூற்றாண்டில், இப்பெரிய தேனீக்கள் இங்கிலாந்திலிருந்து நியுஜிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டன; அதுமுதற்கொண்டு, க்ளோவர் என்ற கால்நடை தீவனப் பயிர் செழித்து வளருவதால் அங்குள்ள கால்நடைகளின் முக்கிய உணவுப்பயிருக்கு இப்போது தட்டுப்பாடு இல்லை.

உலகிலேயே மகரந்தச் சேர்க்கைக்கு கைகொடுப்பதில் தேனீக்களே முன்னோடிகளாக இருக்கின்றன. தேன்கூட்டுக்கு அருகே ஏராளமாக வளருகிற ஒருவகை பூக்களை மட்டுமே அவை சாதாரணமாக விஜயம் செய்கின்றன. “மனிதர் சாப்பிடக்கூடிய உணவுகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் தேனீக்கள் செய்யும் மகரந்தச் சேர்க்கையை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்திருக்கின்றன” என்று கணக்கிட்டுத் தெரிவிக்கிறார் பூச்சியியல் வல்லுநர் கிறிஸ்டஃபர் ஓட்டூல். பாதாம்பருப்புகள், ஆப்பிள்கள், ப்ளம்கள், செர்ரிகள், கிவி பழங்கள் போன்றவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்கள் பெரிதும் அவசியம். தேன்கூடுகள் புரியும் சேவைகளுக்காக தேனீ வளர்ப்பவர்களுக்கு உழவர்கள் பணம் தருகிறார்கள்.

[பக்கம் 18-ன் படம்]

தேனீ ஆர்க்கிட்கள்