Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இவர் எனக்குப் பொருத்தமானவரா?

இவர் எனக்குப் பொருத்தமானவரா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

இவர் எனக்குப் பொருத்தமானவரா?

பின்வரும் வினாடிவினாவிற்குப் பதில் அளிக்க சற்று நேரம் செலவிடுங்கள்:

நீங்கள் மணமுடிக்க விரும்புகிறவரிடம் என்னென்ன குணங்கள் இருக்க வேண்டுமென இப்போது எதிர்பார்க்கிறீர்கள்? கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில், மிக முக்கியமானவையென நீங்கள் கருதுகிற நான்கு குணங்களுக்கு ✔ என்ற குறியிடுங்கள்.

․․․․․․․․ அழகானவர் ․․․․․․․․ ஆன்மீக மனம்படைத்தவர்

․․․․․․․․ சிநேகபாவத்துடன் பழகுபவர் ․․․․․․․․ நம்பகமானவர்

․․․․․․․․ பலராலும் விரும்பப்படுபவர் ․․․․․․․․ ஒழுக்கசீலர்

․․․․․․․․ ஜாலியானவர் ․․․․․․․․ இலட்சியத்துடன் செயல்படுபவர்

இதற்கு முன்பு யாரிடமாவது உங்கள் மனம் மயங்கியதா? மேற்குறிப்பிடப்பட்ட பட்டியலில், அந்தச் சமயத்தில் அவரிடம் உங்களுக்கு மிகப் பிடித்திருந்த ஒரு குணத்திற்கு ✘ என்ற குறியிடுங்கள்.

மேற்காணும் குணங்களில் எதுவுமே மோசமானதல்ல. ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய வசீகரம் உள்ளது. எனினும், கண்டதும் காதல் கொள்கிற வாலிப வயது காரணமாக காதல் வலையில் நீங்கள் சிக்கியிருக்கிறீர்களென்றால், இடது பத்தியில் கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்று, மேலோட்டமாகத் தெரியும் குணங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்துவீர்கள் என்பது உண்மையல்லவா?

எனினும், வயது ஆக ஆக, நல்லது கெட்டதை அறிந்துகொள்ளும் பக்குவத்தைப் பயன்படுத்தி, வலது பத்தியில் கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்ற, மிக முக்கியமான குணங்களை ஆராய்ந்து பார்க்க நீங்கள் ஆரம்பிக்கிறீர்கள். உதாரணத்திற்கு, உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கிற, அழகு தேவதை போல் வலம்வரும் பெண் நம்பகமானவள் அல்ல என்பதை, அல்லது வகுப்பில் எல்லாருடைய இதயத்திலும் நம்பிக்கை நட்சத்திரமாய் பிரகாசிக்கும் பையன் ஒழுக்கசீலன் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறீர்கள். தீவிர பாலுறவு ஆசைகள் எழுகிற ‘மலரும் பருவத்தை’ நீங்கள் ‘கடந்துவிட்டீர்களா’? அப்படியென்றால், அவருடைய மேலோட்டமான குணங்களைப் பார்த்து இவர் எனக்குப் பொருத்தமானவரா என்ற கேள்விக்குப் பெரும்பாலும் பதில் அளிக்க மாட்டீர்கள்.​—1 கொரிந்தியர் 7:36, NW.

யாராக இருந்தாலும் பரவாயில்லையா?

ஒரு கால கட்டத்தில், எதிர்பாலாரில் பலர் உங்கள் உள்ளம் கவர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், யார் வேண்டுமானாலும் உங்களுக்குப் பொருத்தமானவராக ஆகிவிட முடியாது. சொல்லப்போனால், வாழ்நாள் முழுக்க உறுதுணையாய் இருந்து உங்களிடமுள்ள அருமையான குணங்களுக்குப் பட்டைதீட்டி, மெருகூட்டி, மிளிரச் செய்ய வைக்கிற ஒருவர் வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள்; அவ்வாறே நீங்களும் அவருடைய அருமையான குணங்களை மிளிரச் செய்வீர்கள். (மத்தேயு 19:4-6) யார் அந்த நபராய் இருக்க முடியும்? அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பு உங்களை நீங்களே ‘கண்ணாடியிலே பார்த்து,’ நேர்மையாக மதிப்பிடுவது அவசியம்.​—யாக்கோபு 1:23-25.

உங்களைப்பற்றி நீங்களே அதிகம் தெரிந்துகொள்ள பின்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

என்னுடைய பலங்கள் என்னென்ன?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

என்னுடைய பலவீனங்கள் என்னென்ன?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

உணர்ச்சி ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் என்னென்ன தேவைகள் எனக்கு இருக்கின்றன?

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․․

உங்களை நீங்களே தெரிந்துகொள்வது சாதாரண விஷயமல்ல; ஆனால், அத்தகைய கேள்விகளைக் கேட்டுக்கொள்வதன்மூலம் உங்களை நீங்களே தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஆரம்பிக்கலாம். a உங்களைப்பற்றி எந்தளவுக்கு நன்கு புரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்தளவுக்குப் பொருத்தமான ஒரு நபரை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்; அவர் உங்கள் பலவீனத்தை அல்ல, ஆனால் பலத்தை மெருகூட்டி மிளிரச் செய்பவராக இருப்பார். எனினும், உங்களுக்குப் பொருத்தமான ஒருவரை நீங்கள் கண்டுபிடித்துவிட்டதாக நினைத்தால் என்ன செய்வது?

இந்தப் பந்தம் நிலைத்திருக்குமா?

இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க, உங்கள் மனதில் இடம்பிடித்தவரைப்பற்றி பாரபட்சமற்ற விதத்தில் சிந்தித்துப் பாருங்கள். எனினும், கவனமாய் இருங்கள்! நீங்கள் எதைப் பார்க்க விரும்புகிறீர்களோ அதை மட்டுமே பார்க்கத் தோன்றலாம். ஆகவே, அவசரப்படாமல் நிதானமாய் சிந்தியுங்கள். உங்கள் மனங்கவர்ந்தவரின் நிஜமான சுபாவத்தை அறிய முயற்சி செய்யுங்கள்.

டேட்டிங் செய்கிற அநேகர் ஆழமான விஷயங்களை அலசாமல் மேலோட்டமாகவே பார்க்கிறார்கள். அதனால், இருவரும் ஒத்துப்போகும் பொதுவான விஷயங்களுக்கு மட்டுமே உடனடி கவனம் செலுத்துகிறார்கள். அந்தப் பொதுவான விஷயங்கள் இதோ: ‘எங்க இரண்டு பேருக்கும் ஒரே இசைதான் பிடிக்கும்.’ ‘எங்க இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான காரியங்களையே செய்யப் பிடிக்கும்.’ ‘எல்லாவற்றிலும் நாங்கள் ஒத்துப்போகிறோம்.’ முன்னதாகக் குறிப்பிட்டது போல, மலரும் பருவத்தை நீங்கள் உண்மையிலேயே கடந்து வந்தவரென்றால் மேலோட்டமாகத் தெரியும் குணங்களை அல்ல, அதற்கு அப்பாலும் பார்ப்பீர்கள். ‘இருதயத்தில் மறைந்திருக்கிற குணத்தை’ நீங்கள் அறிந்துகொள்வது அவசியம்.​—1 பேதுரு 3:4; எபேசியர் 3:16.

உதாரணத்திற்கு, நீங்கள் எந்தெந்த விஷயங்களில் ஒத்துப்போகிறீர்கள் என்பதற்குக் கவனம் செலுத்துவதைவிட நீங்கள் ஒத்துப்போகாதபோது என்ன நடக்கிறது என்பது அந்த நபரைப்பற்றி நன்கு தெரிந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடும். வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒத்துப்போகாத சமயத்தில் அந்த நபர் எப்படி நடந்துகொள்கிறார்? ‘கோபப்படுவதன்’மூலம் அல்லது ‘அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுவதன்’மூலம் தன் வழிக்கு வரும்படி வற்புறுத்துகிறாரா? (கலாத்தியர் 5:19, 20; கொலோசெயர் 3:8, ஈஸி டு ரீட் வர்ஷன்) அல்லது அந்த நபர் நியாயத்தன்மையைக் காட்டுகிறாரா, அதாவது, சரி எது தவறு எது என்பதைக் குறித்த நியமங்கள் மீறப்படாதவரையில் சமாதானமாய் போவதற்காக இணங்கிப்போக அல்லது விட்டுக்கொடுக்க மனமுள்ளவராய் இருக்கிறாரா?​—யாக்கோபு 3:17.

சிந்திக்க வேண்டிய மற்றொரு அம்சம்: அந்த நபர் தன் இஷ்டப்படி காரியங்களைச் சாதிப்பவராக, அடக்கி ஆளுபவராக, பொறாமைப்படுகிறவராக இருக்கிறாரா? நீங்கள் செய்கிற ஒவ்வொன்றையும் தான் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறாரா? “‘தனக்கு மட்டுமே சொந்தம்’ என்ற எண்ணமும், பொறாமையும் ஆபத்திற்கான அடையாளங்கள். டேட்டிங் செய்கிற காலத்தில் அந்த ஜோடிகளில் ஒருவர் ஃபோன் செய்து தான் என்ன செய்கிறார், ஏது செய்கிறார் என்பதை மற்றவருக்குத் தெரிவிக்காததற்காக சண்டை போட்ட ஜோடிகளைப்பற்றி கேள்விப்படுகிறேன். அது ஆபத்துக்கு அடையாளம் என நினைக்கிறேன்” என்கிறாள் நிக்கல் என்ற இளம்பெண்.

உங்கள் பாய் ஃபிரெண்டை அல்லது கேர்ல் ஃபிரெண்டை மற்றவர்கள் எப்படிக் கருதுகிறார்கள்? இந்தப் பையனுடைய அல்லது பெண்ணுடைய சபையில் உள்ள முதிர்ச்சி வாய்ந்தவர்களுக்கு இவர்களை கொஞ்ச காலமாகத் தெரிந்திருக்கலாம்; அப்படிப்பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பலாம். இவர்கள் ‘நற்சான்று பெற்றவர்களா’ என்பதை அவர்கள் உங்களுக்குச் சொல்ல முடியும்.​—அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 16:1, 2, பொது மொழிபெயர்ப்பு. b

பழகுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமா?

நீங்கள் டேட்டிங் செய்கிற நபர் உங்களுடன் மணவாழ்வில் இணைவதற்குப் பொருத்தமானவர் அல்ல என்பதாக உணர்ந்தீர்கள் என்றால் என்ன செய்வது? அப்போது, அவருடன் பழகுவதை நிறுத்திக்கொள்வது மிகவும் நல்லது. “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்” என பைபிள் சொல்கிறது.​—நீதிமொழிகள் 22:3. c

காலப்போக்கில், நீங்கள் வேறொரு புதிய நபருடன் பழக ஆரம்பிக்கலாம். அப்படியென்றால், கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இன்னுமதிக சமநிலையான கண்ணோட்டத்துடன் பார்ப்பீர்கள். அப்போது, “இவர் எனக்குப் பொருத்தமானவரா?” என்ற கேள்விக்கு உங்கள் பதில், பொருத்தமானவர் என்பதாக இருக்கலாம்!

www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” தொடரின் கூடுதலான கட்டுரைகளைப் பார்க்க முடியும்

சிந்திப்பதற்கு

◼ சிறந்த மணத்துணையாய் விளங்க என்னென்ன நல்ல குணங்கள் உங்களிடம் உள்ளன?

◼ மணமுடிக்க விரும்பும் நபரிடம் என்னென்ன குணங்களை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

◼ நீங்கள் டேட்டிங் செய்கிற நபருடைய குணம், நடத்தை, நற்பெயர் ஆகியவற்றை எந்தெந்த வழிகளில் நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள முடியும்?

[அடிக்குறிப்புகள்]

a உங்களை நீங்களே கேட்டுக்கொள்வதற்கான கூடுதல் கேள்விகளுக்கு, ஜனவரி 2007, தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில் பக்கம் 30-ஐக் காண்க.

b பக்கங்கள் 19-20-லுள்ள கேள்விகளையும் காண்க.

c பழகுவதை நிறுத்திக்கொள்வதுபற்றிய கூடுதல் தகவலுக்கு 2001, ஏப்ரல் 8, விழித்தெழு!-வில் பக்கங்கள் 16-18-ஐக் காண்க.

[பக்கம் 19-ன் பெட்டி]

அவர் பொருத்தமான கணவராய் இருப்பாரா?

அடிப்படை குணங்கள்

❑ தனக்குள்ள எந்த அதிகாரத்தையும் அவர் எவ்வாறு பயன்படுத்துகிறார்?​மத்தேயு 20:25, 26.

அவருடைய இலட்சியங்கள் என்னென்ன?​1 தீமோத்தேயு 4:15.

❑ அந்த இலட்சியங்களை அடைய இப்போது அவர் உழைக்கிறாரா?​1 கொரிந்தியர் 9:26, 27.

❑ யாரெல்லாம் அவருடைய ஃபிரெண்ட்ஸ்? ​நீதிமொழிகள் 13:20.

❑ பண விஷயத்தில் அவர் எப்படிப்பட்டவர்? ​எபிரெயர் 13:5, 6.

❑ எந்த மாதிரியான பொழுதுபோக்கை அவர் விரும்புகிறார்?​சங்கீதம் 97:10.

❑ அவர் உடை உடுத்தும் விதம் எதைக் காட்டுகிறது?​2 கொரிந்தியர் 6:3.

❑ யெகோவாமீது அன்பிருப்பதை அவர் எப்படி வெளிக்காட்டுகிறார்?​1 யோவான் 5:3.

பொன்னான குணங்கள்

சுறுசுறுப்பானவரா?​நீதிமொழிகள் 6:9-11.

❑ பொறுப்புணர்வுடன் பணத்தைச் செலவழிப்பவரா?​லூக்கா 14:30.

❑ நற்பெயர் எடுத்தவரா?​அப்போஸ்தலர் 16:1, 2.

❑ பெற்றோரை மதித்து நடக்கிறவரா? ​யாத்திராகமம் 20:12.

❑ மற்றவர்கள்மீது கரிசனை காட்டுபவரா? ​பிலிப்பியர் 2:4.

ஆபத்தான குணங்கள்

❑ சட்டெனக் கோபப்படுகிறவரா? ​நீதிமொழிகள் 22:24.

❑ பாலியல் ரீதியில் தவறாக நடக்க உங்களைத் தூண்டுகிறவரா?​கலாத்தியர் 5:19.

❑ மற்றவர்களைச் சொல்லாலும் கையாலும் தாக்குகிறவரா?​எபேசியர் 4:31.

❑ மகிழ்ச்சியாக இருக்க அவருக்கு மது தேவையா?​நீதிமொழிகள் 20:1.

❑ பொறாமைப்படுகிறவரா, சுயநலக்காரரா?​1 கொரிந்தியர் 13:4, 5.

[பக்கம் -ன் பெட்டி] 20]

அவள் பொருத்தமான மனைவியாய் இருப்பாளா?

அடிப்படை குணங்கள்

❑ குடும்பத்திலும் சபையிலும் தன் கீழ்ப்படிதலை அவள் எப்படிக் காட்டுகிறாள்? ​எபேசியர் 5:21, 22.

❑ அவள் உடை உடுத்தும் விதம் எதைக் காட்டுகிறது?​1 பேதுரு 3:3, 4.

❑ யாரெல்லாம் அவளுடைய ஃபிரெண்ட்ஸ்? ​நீதிமொழிகள் 13:20.

❑ பண விஷயத்தில் அவள் எப்படிப்பட்டவள்?​1 யோவான் 2:15-17.

அவளுடைய இலட்சியங்கள் என்னென்ன? ​1 தீமோத்தேயு 4:15.

❑ அந்த இலட்சியங்களை அடைய இப்போது அவள் உழைக்கிறாளா? ​1 கொரிந்தியர் 9:26, 27.

❑ எந்த மாதிரியான பொழுதுபோக்கை அவள் விரும்புகிறாள்?​சங்கீதம் 97:10.

❑ யெகோவாமீது அன்பிருப்பதை அவள் எப்படி வெளிக்காட்டுகிறாள்?​1 யோவான் 5:3.

பொன்னான குணங்கள்

சுறுசுறுப்பானவளா? ​நீதிமொழிகள் 31:17, 19, 21, 22, 27.

❑ பொறுப்புணர்வுடன் பணத்தைச் செலவழிப்பவளா?​நீதிமொழிகள் 31:16, 18.

❑ நற்பெயர் எடுத்தவளா?​ரூத் 4:11.

❑ பெற்றோரை மதித்து நடக்கிறவளா? ​யாத்திராகமம் 20:12.

❑ மற்றவர்கள்மீது கரிசனை காட்டுபவளா? ​நீதிமொழிகள் 31:20.

ஆபத்தான குணங்கள்

❑ சண்டை போடுகிறவளா? ​நீதிமொழிகள் 21:19.

❑ பாலியல் ரீதியில் தவறாக நடக்க உங்களைத் தூண்டுகிறவளா?​கலாத்தியர் 5:19.

❑ மற்றவர்களைச் சொல்லாலும் கையாலும் தாக்குகிறவளா?​எபேசியர் 4:31.

❑ மகிழ்ச்சியாக இருக்க அவளுக்கு மது தேவையா?​நீதிமொழிகள் 20:1.

❑ பொறாமைப்படுகிறவளா, சுயநலக்காரியா? ​1 கொரிந்தியர் 13:4, 5.