Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் வாழ்க்கை முன்விதிக்கப்பட்டிருக்கிறதா?

உங்கள் வாழ்க்கை முன்விதிக்கப்பட்டிருக்கிறதா?

பைபிளின் கருத்து

உங்கள் வாழ்க்கை முன்விதிக்கப்பட்டிருக்கிறதா?

ஒருநாள் காலை டிரக்கில் இரண்டு பேர் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தார்கள்; போகையில், குறுக்குவழியில் செல்ல அவர்கள் தீர்மானித்தார்கள்; அது அவர்களில் ஒருவர் முன்பு குடியிருந்த தெருவாகும். அவ்வாறு போய்க்கொண்டிருந்தபோது, ஒரு வீட்டின் சன்னல்களிலிருந்து குபுகுபுவென தீ ஜுவாலை வெளிவருவதைப் பார்த்தார்கள். உடனே தங்கள் டிரக்கை நிறுத்தினார்கள், தங்களிடமிருந்த ஏணியைப் பயன்படுத்தி அந்த வீட்டிலிருந்த தாயையும் ஐந்து பிள்ளைகளையும் காப்பாற்றினார்கள். அந்தச் சம்பவத்தைப்பற்றி அறிக்கை செய்த ஒரு செய்தித்தாள் “இப்படியெல்லாம் நடக்க வேண்டுமென்று அவர்களுடைய தலையில் எழுதி இருக்கலாம்” என குறிப்பிட்டது.

நல்லதோ கெட்டதோ தங்களுக்கு எது நடந்தாலும், தங்களையும் மீறிய சக்திதான் அதைத் தீர்மானிக்கிறது என்பதாக அநேகர் நினைக்கிறார்கள். உதாரணமாக, 16-ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதியான ஜான் கால்வின் இவ்வாறு எழுதினார்: “முன்விதிக்கப்படுதலுக்கு நாங்கள் அளிக்கிற விளக்கம் என்னவெனில், அது கடவுளுடைய நித்தியத் திட்டம், அதன்படி அவர் ஒவ்வொரு மனிதனும் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறார். அவர் எல்லாரையும் ஒரே விதமான சூழ்நிலையில் படைக்கவில்லை; ஆனால், சிலர் நித்திய ஜீவனையும் மற்றவர்கள் நித்திய அழிவையும் பெறும்படி முன்விதித்திருக்கிறார்.”

நம்முடைய செயல்களையும் வாழ்க்கையின் முடிவையும் உண்மையில் கடவுள் வெகு காலத்திற்கு முன்பே முன்விதித்துவிடுகிறாரா? பைபிள் என்ன கற்பிக்கிறது?

முன்விதிக்கப்படுதல்​—⁠தவறான நியாய விவாதம்

முன்விதிக்கப்படுதலில் நம்பிக்கை வைத்திருக்கிற சிலர் பொதுவாக பின்வருமாறு சிந்திக்கிறார்கள்: கடவுள் முற்றும் அறிந்தவர். அவருக்கு எல்லாமே தெரியும், எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதுகூடத் தெரியும். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளை எப்படிப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது தெரியும்; ஒவ்வொருவரும் எந்த நிமிடத்தில், எந்த விதத்தில் இறக்கப் போகிறார்கள் என்பதும்கூட அவருக்கு முன்னமே தெரியும். இப்படியிருக்க, அவர்களுடைய கருத்துப்படி, ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய கட்டத்தில் ஒருவர் என்ன முடிவுசெய்தாலும் அது கடவுள் முன்னறிந்து, முன்விதித்தபடிதான் இருக்கும்; அப்படி இல்லாவிட்டால், அவர் முற்றும் அறிந்தவராக இருக்க முடியாதே. இந்த விதமான தர்க்கம் உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? இப்படிப்பட்ட விவாதத்தால் உண்மையில் என்ன விளையும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

உங்கள் எதிர்காலத்தை ஏதோவொரு சக்தி முன்னமே தீர்மானித்திருக்கிறது என்றால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதில் பயனில்லை. உங்களுடைய நலனையும் உங்கள் பிள்ளைகளின் நலனையும் மனதில் வைத்து, புகைபிடிப்பதா வேண்டாமா எனத் தீர்மானிப்பதில் எந்தப் பயனுமில்லை. காரில் பயணிக்கும்போது பாதுகாப்புக்காக சீட் பெல்ட்டைப் போட்டுக்கொண்டாலும் சரி போட்டுக்கொள்ளாவிட்டாலும் சரி, அதனால் எந்தப் பயனுமில்லை. ஆனால், இந்த நியாய விவாதம் தவறானது. ஏனெனில், ஜனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்போது இறப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதென புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அஜாக்கிரதையால் உயிருக்கு ஆபத்து வரலாம்.

மற்றொரு விதமான நியாய விவாதத்தைக் கவனியுங்கள். கடவுள் எல்லாவற்றையும் முன்னதாகவே அறிந்துவைத்திருக்கிறார் என்றால் ஆதாம் ஏவாளைப் படைப்பதற்கு முன்னமேகூட அவர்கள் தமக்குக் கீழ்ப்படியாமல் போவார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை” ஆதாம் சாப்பிடக் கூடாது என்றும், மீறி சாப்பிட்டால் அவன் இறந்துவிடுவான் என்றும் கடவுள் அவனிடம் சொன்னபோது, அதை அவன் சாப்பிடுவான் என அவர் முன்னமே அறிந்திருந்தாரா? (ஆதியாகமம் 2:16, 17) முதல் தம்பதியிடம், “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று” கடவுள் சொன்னபோது, பூங்கா போன்ற பரதீஸ் பூமியில் சந்தோஷமாய் வாழ்வதற்கு அவர்களுக்கிருக்கும் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகுமென அவர் அறிந்திருந்தாரா? இல்லை.​—ஆதியாகமம் 1:28.

இத்தகைய நியாய விவாதங்கள் எதில் போய் முடியுமென நாம் சிந்தித்தால், எல்லா தீர்மானங்களையும் கடவுள் முன்னறிகிறார் என்ற கருத்து, போர்கள், அநியாயங்கள், வேதனைகள் உட்பட அனைத்திற்குமே அவர்தான் காரணர் என்பதை அர்த்தப்படுத்தும். அப்படி அவர் காரணராய் இருக்க முடியுமா? தம்மைப்பற்றி கடவுள் சொல்வதிலிருந்தே அதற்குத் தெளிவான பதில் கிடைத்துவிடுகிறது.

‘நீ தேர்ந்தெடு’

“தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்றும் அவர் “நியாயத்தை விரும்புகிறவர்” என்றும் வேதவசனங்கள் சொல்கின்றன. ‘தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்’ என தம் மக்களை யெகோவா எப்போதுமே ஊக்குவித்திருக்கிறார். (1 யோவான் 4:8; சங்கீதம் 37:28; ஆமோஸ் 5:15) உண்மைத்தன்மையோடு தமக்குச் சேவை செய்பவர்களை நேர்மையான பாதையைத் தேர்ந்தெடுக்கும்படி எண்ணற்ற சமயங்களில் அவர் உற்சாகப்படுத்தினார். உதாரணத்திற்கு, பூர்வத்தில் இஸ்ரவேலருடன் யெகோவா ஓர் உடன்படிக்கை செய்தார்; அப்போது, மோசே மூலம் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள் மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொள் [அதாவது, தேர்ந்தெடு].’ (உபாகமம் 30:19) அவர்கள் ஒவ்வொருவரும் எதைத் தேர்ந்தெடுப்பார்களென கடவுள் வெகு முன்னதாகவே தீர்மானித்தாரா? தீர்மானித்திருக்க வாய்ப்பே இல்லை.

பூர்வத்தில் கடவுளுடைய ஜனங்களை வழிநடத்திச் சென்ற யோசுவா தன் நாட்டவருக்கு இவ்வாறு புத்திசொன்னார்: “யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள் [அதாவது, தேர்ந்தெடுங்கள்]; . . . நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்.” (யோசுவா 24:15) இதேபோல, கடவுளுடைய தீர்க்கதரிசியான எரேமியாவும் சொன்னார்: “நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்.” (எரேமியா 38:20) மக்கள் தோல்வி அடைய வேண்டுமென கடவுள் முன்விதித்திருந்தால், நீதியான நெஞ்சமும் அன்பான உள்ளமும் கொண்ட அவர், பரிசைப் பெறும் நம்பிக்கையுடன் மக்கள் சரியானதைச் செய்யும்படி தூண்டுதல் அளிப்பாரா? அளிக்க மாட்டார். அத்தகைய தூண்டுதல் போலியானதாய் இருக்கும்.

எனவே, உங்கள் வாழ்க்கையில் நல்லது நடந்தாலும் சரி கெட்டது நடந்தாலும் சரி, அவை முன்விதிக்கப்பட்டிருப்பதன் காரணமாக நடப்பதில்லை. மற்றவர்கள் எடுக்கிற ஞானமான அல்லது ஞானமற்ற தீர்மானங்களின் விளைவாகவே பெரும்பாலும், ‘எதிர்பாரா சம்பவங்கள்’ நடக்கின்றன. (பிரசங்கி 9:11, NW) உங்கள் எதிர்காலம் முன்னதாகவே திட்டமிடப்படவில்லை, நீங்கள் எடுக்கும் தீர்மானங்களே உங்கள் நித்திய எதிர்காலம் எப்படி இருக்குமென உறுதிசெய்கின்றன.

உங்கள் கருத்து?

◼ ஆதாம் ஏவாள் பாவம் செய்வார்களென கடவுள் முன்னதாகவே தீர்மானித்திருந்தாரா?​—⁠ஆதியாகமம் 1:28; 2:16, 17.

◼ கடவுளிடமுள்ள என்ன பண்புகள் முன்விதித்தலைப் பொருத்தமற்றதாக ஆக்குகின்றன?​—⁠சங்கீதம் 37:28; 1 யோவான் 4:8.

◼ உங்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?​—⁠யோசுவா 24:15.

[பக்கம் 13-ன் சிறு குறிப்பு]

ஜனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்போது இறப்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதென புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன