எலும்பில்லா மாமிசத்தை ருசிக்க வாருங்கள்!
எலும்பில்லா மாமிசத்தை ருசிக்க வாருங்கள்!
ஜாம்பியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
சாப்பாட்டில் புழுக்களைச் சேர்த்துக்கொள்ள சிலர் விரும்பமாட்டார்கள். ஆனால் பலர் இந்த எலும்பில்லா மாமிசத்தை ரசித்து ருசிக்கிறார்கள். எம்பரர் மாத் எனப்படுகிற பூச்சியின் கம்பளிப்புழுவை ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இப்பூச்சியின் விலங்கியல் பெயர் இம்பிரசியா பெலினா என்பதாகும். இதன் புழு, மோப்பேன் மரத்தில் தஞ்சம் புகவே விரும்புவதால் இது மோப்பேன் புழு என அனைவராலும் அழைக்கப்படுகிறது. வளைந்து நெளிந்திருக்கும் சத்தான இந்தப் புழுவைச் சேகரிக்கும் சமயத்திற்காக கிராமத்து மக்கள் ஆவலோடு காத்திருப்பது வழக்கம். “அவை புரதச்சத்து மிகுந்தவை” என்று கலஹாரி பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்தவரான கீத் லெகட் கூறுகிறார். இந்தப் புழுக்கள் வேறொரு விதத்திலும் மதிப்பு மிக்கவை. எவ்விதத்தில்? அந்தளவு செழிப்பாய் இராத, வறண்ட சவானா
காடுகளின் சூழியலைப் பாதுகாத்து அவற்றுக்குப் பொலிவூட்டுவதில் இவை பெரும் பணி ஆற்றுகின்றன.ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் நவம்பர் மாத ஆரம்பத்தில் கொட்டுகிற மழையில் பூமி தாகம் தீர நீரைக் குடித்து புத்துயிர் பெறுகிறது. மண்ணின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள தன்னிறைவு பெற்ற லட்சக்கணக்கான கூட்டுப்புழுக்கள் அழகான அந்துப்பூச்சிகளாக உருமாறி சிறகடிக்கின்றன. அவை இடும் முட்டைகள், சில வாரங்களில் பொரிந்து ‘லார்வா’ புழுக்கள் தோன்றுகின்றன; பின்னர் கம்பளிப்புழுக்களாக வளர்ச்சி அடைகின்றன. அவை, வண்ணம் தீட்டப்பட்ட “சாசேஜ்” போல் கொழுகொழுவென காட்சியளிக்கின்றன.
மாவுச்சத்து மிகுந்த மரவள்ளிக்கிழங்கும் மக்காச்சோளமும் அன்றாட உணவாக உட்கொள்ளப்படுகிற இடங்களில் இந்தக் கம்பளிப்புழு ருசிகரமான பதார்த்தமாகச் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. நம்மில் அநேகர் கம்பளிப்புழுக்களைச் சாப்பிட விரும்பமாட்டோம். என்றாலும், அவற்றில் 60 சதவீதத்துக்கும் அதிகமான புரதச்சத்து இருப்பதால் அவை மதிப்புவாய்ந்த பண்டமாகக் கருதப்படுகின்றன. அதுவும், தரமான புரதச்சத்துள்ள உணவுப்பொருள் அரிதாய் கிடைக்கிற இடங்களிலும், அதிக விலைக்கு விற்கப்படுகிற இடங்களிலும் அவை மிகவும் மதிப்புவாய்ந்த வணிகச் சரக்காகக் கருதப்படுகின்றன. இறைச்சி அல்லது மீனிலுள்ள அதே அளவு ஊட்டச்சத்து இந்தக் கம்பளிப்புழுக்களிலும் இருக்கிறது. புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவை ஒரு மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படுகிற சத்துப் பொருள்களாகும்; அவற்றில் சுமார் முக்கால் பாகத்தை இந்தக் கம்பளிப்புழுக்களே அளிக்கின்றன. ஆம், இந்தச் சின்னஞ்சிறிய ஜந்துக்கள் ஊட்டச்சத்து மிகுந்தவையே!
ஆனால், பிற இடங்களில் வணிக நோக்குடன் பயிர்த்தொழில் செய்கிற விவசாயிகள், ஊட்டச் சத்துமிக்க இப்புழுக்களை விலையுயர்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளால் கொல்வதற்கு என்ன காரணம் எனத் தெரியாமல் கம்பளிப்புழுவை உண்பவர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். கோடிக்கணக்கான இந்தப் புழுக்கள் பெரும்பாலும் மனிதர் சாப்பிட விரும்பாத இலைகளையும், சில சமயங்களில் மனிதர் சாப்பிடக்கூடாத இலைகளையும் தின்றுதீர்த்து, அவற்றைப் பயனுள்ள சத்துப்பொருளாக மாற்றிவிடுகின்றன. இந்த மாபெரும் பணி, விலையுயர்ந்த விவசாயக் கருவிகள் பயன்படுத்தப்படாமலும் தாவர வல்லுநர்களின் உதவியில்லாமலுமே செய்து முடிக்கப்படுகிறது. கையாலேயே சேகரிக்கப்படுகிற இந்தக் கம்பளிப்புழுக்கள், குறைந்த உழைப்பில் மிகுதியான பலனைப் பெற உதவுகின்றன.
இந்த மோப்பேன் புழுக்கள் புதர்க்காட்டின் செழிப்புக்கும் சூழியல் சமநிலைக்கும் பெரிதும் பங்களிக்கின்றன. உருவத்தில் பெரிதாக இருக்கும் ஆப்பிரிக்க யானையின் பசியார்வம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது உண்மைதான்; ஆனாலும், இந்தச் சின்னஞ்சிறு மோப்பேன் புழுவின் ஜீரண சக்தி யானையின் ஜீரண சக்தியையும் விஞ்சிவிடுகிறது. ஆறே வாரங்களை ஆயுட்காலமாகக் கொண்ட இப்புழுக்களின் படை, அந்தக் குறுகிய காலப்பகுதிக்குள், ஒரே அளவான மேய்ச்சல் நிலத்தில் யானைகள் உண்பதைவிட பத்து மடங்கு அதிகமாக உண்டு, யானைகள் வெளியேற்றும் கழிவுகளைவிட நான்கு மடங்கு அதிகமான கழிவுகளையும் வெளியேற்றுகின்றன. இதனால்தான் கம்பளிப்புழுவின் உடல் எடை பிரமிக்கத்தக்க அளவு—4,000 மடங்கு—அதிகரிக்கிறது போலும்! எனவே, கட்டுப்பாடில்லாமல் கம்பளிப்புழுக்களைச் சேகரித்தால் நிலத்தின் செழுமையும் சூழியல் சமநிலையும் பாதிக்கப்படும் என்பதில் ஆச்சரியமில்லை.
மோப்பேன் புழுக்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன? வருடத்தில் இரண்டு முறை இவை சேகரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மழைக் காலத்தின்போதும் கிராமத்துப் பெண்கள் முதல்கட்டச் சேகரிப்புக்காகப் புறப்படுகிறார்கள். பல வாரங்களுக்கு இவ்வேலையில் ஈடுபடுகிறார்கள். பிறகு இவற்றின் உள்ளுறுப்புகளை நீக்கிவிட்டு, புழுவை வேகவைத்து வெயிலில் காய வைக்கிறார்கள். என்றாலும், இவ்வாறு சாப்பிடக்கூடிய வேறு சில வகை புழுக்களைச் சேகரிப்பதிலும் சமைப்பதிலும் அதிக கவனமாய் இருக்க வேண்டும். ஏனெனில், அவற்றின் உடலை முட்கள் அலங்கரிக்கின்றன. அவற்றை முதலில் நீக்கிவிட வேண்டும். சில கம்பளிப்புழுக்கள் மனிதனுக்கு விஷமாக இருக்கும் தாவரங்களை உண்பதால் அவற்றை ரொம்பவே ஜாக்கிரதையாகச் சமைக்க வேண்டும். மேற்கண்டவாறு பதப்படுத்தப்பட்ட கம்பளிப்புழுக்கள் நொறுக்குத் தீனியாக ‘கர்க் முர்க்’ என்று அப்படியேவும் கடித்துச் சாப்பிடப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும் அவை மீண்டும் ஊறவைக்கப்பட்டு, சூப்பாகத் தயாரிக்கப்படுகின்றன அல்லது வெங்காயம், தக்காளி சேர்த்து வறுக்கப்படுகின்றன.
புழுக்களைத் தின்பது உங்களுக்கு ருசிகரமான அனுபவமாக இருக்கலாம், அல்லது அதை நினைத்தாலே குமட்டலும் எடுக்கலாம். வாயில் நீரூறச் செய்யும் இந்தத் தின்பண்டத்தை ருசித்துப் பார்க்கும் வாய்ப்பை நீங்கள் நழுவ விடலாம். ஆனால், அவை புரதச்சத்து மிகுந்தவை என்பதையும், ஆப்பிரிக்காவிலுள்ள அநேக குடும்பங்களுக்கு அவற்றால் மேல்வருமானம் கிடைக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
[பக்கம் 26-ன் படம்]
மோப்பேன் புழுவிலுள்ள அதிகளவு புரதச்சத்து அதை மதிப்புமிக்க வணிகச் சரக்காக ஆக்குகிறது
[பக்கம் 27-ன் படம்]
ஆறே வார ஆயுட்காலத்தில் மோப்பேன் புழுவினுடைய உடலின் எடை 4,000 மடங்கு அதிகரிக்கிறது