Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏழைகளின் எதிர்காலம்?

ஏழைகளின் எதிர்காலம்?

ஏழைகளின் எதிர்காலம்?

நெற்றி வியர்வை நிலத்தில் விழ பாடுபட்டு உழைப்பதில் தவறேதுமில்லை. ஆனால் அவ்வாறு கடினமாய் உழைப்பவருக்குத் தகுந்த கூலி கிடைக்க வேண்டும். இதைக் குறித்து பைபிள் எழுத்தாளர் ஒருவர் தெரிவித்த கருத்தைக் கவனியுங்கள்: “மகிழ்ச்சியாக இருப்பதும் . . . எல்லோரும் உண்ணவும் குடிக்கவும் அவரது வேலையில் மகிழ்ச்சியடையவும் வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இவை தேவனிடமிருந்து வரும் அன்பளிப்புகள்.”​—பிரசங்கி 3:12, 13, ஈஸி டு ரீட் வர்ஷன்.

ஆனால் நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இன்றைய உலக பொருளாதார அமைப்பு, பொதுவாக தொழிலாளர்களைச் சக்கையாய்ப் பிழிகிறதே தவிர அவர்கள் செய்த வேலைக்கேற்ற கூலிகொடுக்க யோசிக்கிறது. அதனால் அநேகர் அன்றாடம் பிழைப்புக்காகப் போராட வேண்டியிருக்கிறது, அதன் விளைவாக அநேகர் ஏழைகளாகவே காலந்தள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் “மகிழ்ச்சியாக இருப்பது” மிக மிக அரிது; அவர்களுடைய வாழ்க்கை அப்படி. உலகம் செழிப்பின் உச்சியை எட்டிவிட்டது. என்றாலும், உலகில் அரைவாசி பேருக்கு அந்தச் செழிப்பிலிருந்து எந்தப் பயனும் கிடைப்பதில்லை.

ஏழைகளுக்காக கடவுள் மனதுருகுகிறார்

இந்த நிலைமையைக் குறித்து நம்மைப் படைத்த யெகோவா தேவன் துக்கப்படுகிறார். யெகோவாவுக்கு ஏழைகள்மீது கருணை இருக்கிறது. “சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை [கடவுள்] மறவார்” என்று நாம் பைபிளில் வாசிக்கிறோம். (சங்கீதம் 9:12) ஏழைகள்மீது யெகோவா அக்கறை காட்டுகிறார்.

“ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே” என்று யெகோவாவைக் குறித்து பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 10:14) இந்த வசனம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் தனித்தனியாகக் குறிப்பதைக் கவனியுங்கள். a ஆம், கடவுள் ஒவ்வொருவரையும் பார்த்து அவரவருடைய தேவைகளை கவனிக்கிறார். அவருடைய பார்வையில் நாம் ஒவ்வொருவரும் மதிப்புள்ளவர்கள், கவனத்திற்குப் பாத்திரர்கள். சமுதாயத்தின் எல்லா மட்டத்தினரும் தம்மிடமிருந்து கற்றுக்கொண்டு தம்முடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ளும்படி யெகோவா அழைக்கிறார்.

கடவுளிடமிருந்து மக்கள் கற்றுக்கொள்கிற ஒரு விஷயம், பிறரிடம் கருணையாகவும் பரிவுடனும் நடந்துகொள்வதே ஆகும். யெகோவாவின் சாட்சிகள் தங்களை ஒரு பெரிய ஆன்மீகக் குடும்பமாகக் கருதுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள், அவர்கள் மத்தியில் உண்மையான கிறிஸ்தவ அன்பு செழித்தோங்குகிறது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றினவர்களிடம் ஒரு முறை இவ்வாறு கூறினார்: “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.” (மத்தேயு 23:8) ஆம் உண்மை மதத்தைத் தழுவுகிற எல்லாருமே ஒரு சகோதரத்துவத்தின் பாகமாய் இருக்கிறார்கள், அவர்கள் மத்தியில் பொருளாதாரப் பாகுபாடு எதுவும் இருப்பதில்லை. அவர்கள் ஒருவர்மீது ஒருவர் அக்கறையாய் இருக்கிறார்கள், துன்பம் வருகையில் ஒருவருக்கொருவர் ஆதரவாய் இருக்கிறார்கள்.

பைபிளிலுள்ள சில நியதிகளைப் பின்பற்றினால் வறுமையின் பாதிப்புகளைக் குறைக்கலாம். புகையிலை உபயோகித்தல், மிதமிஞ்சிக் குடித்தல் ஆகியவற்றின்மூலம் உடலைக் கெடுத்துக்கொள்வதை கடவுள் கண்டிக்கிறாரென பைபிள் தெரிவிக்கிறது. (நீதிமொழிகள் 20:1; 2 கொரிந்தியர் 7:1) பைபிளின் இந்த நியதிகளின்படி வாழ்கிறவர் உடலுக்குக் கேடு விளைவிக்கிற பழக்கங்களில் பணத்தை வீணாக்காமல் மிச்சப்படுத்துவார். புகைபிடிப்பதாலும் குடிப்பதாலும் ஏற்படுகிற வியாதிகளைத் தவிர்ப்பார்; அவற்றைக் குணப்படுத்த ஆகிற மருத்துவச் செலவுகளும் குறையும். பொருளாசை, பேராசை முதலானவற்றை அறவே வெறுக்கும்படியும் பைபிள் கற்பிக்கிறது. (மாற்கு 4:18; எபேசியர் 5:3) இந்த விஷயங்களில் கடவுளுடைய வார்த்தைக்குக் கட்டுப்படுகிற ஒருவர் சூதாடுவதிலும் தன் பணத்தைக் கரைக்கமாட்டார்.

அன்றாட வாழ்க்கையில், ஏன், வறுமையின் பிடியிலும்கூட சுமுகமாக வாழ்வதற்கான நடைமுறை ஆலோசனைகளை பைபிள் அளிக்கிறது. பின்வரும் இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்:

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாயிருந்த ஒரு நாட்டில், தொழிற்சாலையில் வேலை செய்துவந்த ஒரு பெண் தன் வேலைக்கு வேட்டுவைக்கும் ஒரு காரியத்தைச் செய்தார். கிறிஸ்தவக் கூட்டங்களுக்குப் போக தன்னுடைய மேற்பார்வையாளரிடம் அனுமதி கேட்டார், அவர் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை வேலையிலிருந்தே நீக்கியிருக்கலாம். ஆனால், அந்தப் பெண்ணின் கோரிக்கைக்கு இணங்கி அவர் அனுமதி வழங்கினார். இது அந்தப் பெண்ணையும் மற்ற பணியாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுமட்டுமல்ல, தன்னுடைய தொழிற்சாலையில் அந்தப் பெண் தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமெனக் கூறி அவரை “சிறந்த பணியாள்” என்று புகழ்ந்தார். அவர் அப்படிச் சொன்னதற்கு என்ன காரணம்?

அந்தப் பெண் ஒரு யெகோவாவின் சாட்சி, அவர் பைபிள் நியதிகளைத் தன் வாழ்க்கையில் கடைப்பிடித்தார். ‘எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்பிய’ அவர், பொய் சொல்லவோ திருடவோ இல்லை, அதனால் நேர்மையானவர் என்ற பெயரைச் சம்பாதித்தார். (எபிரெயர் 13:18) தேவ ஆவியின் உந்துதலால் கொலோசெயர் 3:22, 24-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள நியதிக்குக் கீழ்ப்படிந்து தன் வேலையை “மனப்பூர்வமாய்” செய்தார். அதாவது, தன் முதலாளிக்குக் கீழ்ப்படிந்து, வேலை நேரத்தில் ஒரு நிமிடத்தையும் வீணடிக்காமல், வாங்குகிற சம்பளத்திற்கு உண்மையாக வேலை செய்தார்.

லாபம் சம்பாதிப்பதிலேயே குறியாய் இருக்கிற, தன்னலம்பிடித்த இவ்வுலகில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம். சிலர் பைபிளின் நியதிகளைப் பெரிதும் மதிக்கிறவர்களாக இருந்தாலும் உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பெறுவதற்குத் திக்குமுக்காட வேண்டியிருக்கலாம். ஆனால், சிருஷ்டிகருக்கு முன்பாக அவர்கள் சுத்தமான மனசாட்சியைப் பெற்றிருக்கிறார்கள்; அதோடு, எதிர்காலத்தில் நல்ல நிலைமை வருமென ‘நம்பிக்கையின் தேவனான’ யெகோவாவிடமிருந்து வாக்குறுதி பெற்றிருக்கிறார்கள். அந்தக் காலத்திற்காக அவர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.​—ரோமர் 15:13.

வறுமைக்கு நிரந்தரத் தீர்வு

ஏழைகளை அநியாயமாக வாட்டி வதைக்கிறவர்களை யெகோவா எந்தளவு வெறுக்கிறார் என்பதை பைபிள் விளக்குகிறது. கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், . . . சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும், அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!” (ஏசாயா 10:1, 2) இன்று தெரிந்தோ தெரியாமலோ ஏழைகளைக் கொடுமைப்படுத்துவதில் பங்கேற்கிறவர்கள், அதாவது, மனித சமுதாயத்தின் பொருளாதார நடவடிக்கையைக் கட்டுப்படுத்துகிறவர்கள், வெகு சீக்கிரத்தில் சர்வ வல்லமையுள்ள கடவுளால் ஒழித்துக்கட்டப்படுவார்கள்.

இந்தக் கொடுமையாளர்களிடம், “விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று தீர்க்கதரிசியான ஏசாயா கேட்கிறார். (ஏசாயா 10:3) அவர்கள் பயன்படுத்துகிற நியாயமில்லாத உலக அமைப்புகளை அழிப்பதன்மூலம் யெகோவா அவர்களை அகற்றிவிடுவார்.

ஆனால் கடவுளுடைய நோக்கம், கொடுமைப்படுத்துகிறவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமே அல்ல; அநீதி அண்டாத ஒரு வாழ்வை நல்மனமுள்ள ஆட்களுக்குத் தருவதும் அவருடைய நோக்கமாகும். மேம்பட்ட ஓர் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன்மூலம் மனிதர்கள் எல்லாரும் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, சந்தோஷத்துடன் திருப்தியான வாழ்க்கை வாழ அவர் வழிசெய்வார். அந்தச் சமயத்தில் உங்கள் வாழ்வை வளமாக்க நிறைய சொத்துபத்துக்களோ, தொழில் பிரமுகர்களுடன் தொடர்புகளோ, தொழில் அனுபவங்களோ தேவையிருக்காது. இப்படிப்பட்ட மாற்றங்கள் ஏற்படும் என்பதில் நாம் ஏன் நம்பிக்கையாக இருக்கலாம்?

மனிதர்களை ஆட்சி செய்யும்படி யெகோவாவால் நியமிக்கப்பட்டிருக்கிற அரசரான இயேசு கிறிஸ்து, அருமையான அந்த எதிர்காலத்தை “புது படைப்பு” என்று குறிப்பிட்டார். (மத்தேயு 19:28, பொது மொழிபெயர்ப்பு) இந்த வார்த்தை புதிய தொடக்கத்தை, அதாவது மனிதருக்கு ஒரு புதிய வாழ்வு மலரவிருப்பதைக் குறிக்கிறது. “புது படைப்பு” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதன்மூலம் இயேசு எதை வலியுறுத்தினார்? நம்முடைய அன்பான சிருஷ்டிகரான யெகோவா, தம்முடைய சித்தத்தின்படி நீதியுள்ள மனிதர்கள் வாழ்வதற்காக ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பார் என்பதையே வலியுறுத்தினார். அந்தச் சமயத்தில் மனிதவர்க்கத்துக்கு அவர் கொண்டுவரப்போகும் அநேக ஆசீர்வாதங்களில் ஒன்று, அநேகரைப் பாடாய்ப் படுத்துகிற பணப் பிரச்சினைக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைப்பதாகும்.

இயேசு கிறிஸ்துவின் ஆட்சியைக் குறித்து பைபிள் இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைக்கிறது: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”​—⁠சங்கீதம் 72:12-14.

அருமையான இந்த எதிர்காலத்தை நீங்களும் கண்டடையலாம். ஆனால் அந்தப் புதிய உலகில் கால் வைப்பதற்கு, கடவுள் உங்களிடம் எதிர்பார்ப்பதை நீங்கள் நிறைவேற்றியாக வேண்டும். அதாவது, உண்மையான கடவுளைப்பற்றி முதலில் கற்றுக்கொண்டு அவருடைய சித்தத்தைச் செய்வது அவசியம். ஆகவே, கடவுளுடைய வார்த்தையிலிருந்து பெற்ற அறிவின் அடிப்படையில் நல்ல தீர்மானங்களை எடுங்கள். முழு மனிதகுலத்திற்கும் கடவுள் தரப்போகிற அந்த அருமையான எதிர்காலத்தை எப்போதுமே மனதில் வைத்துச் செயல்படுங்கள். நீங்கள் ஒருபோதும் ஏமாந்துபோகமாட்டீர்கள். “எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை” என்று கடவுளுடைய வார்த்தை வாக்குறுதியளிக்கிறது.​—சங்கீதம் 9:18.

[அடிக்குறிப்பு]

a துன்பப்படுகிறவர்கள்மீது கடவுள் அக்கறையாய் இருப்பதைச் சிறப்பித்துக் காட்டுகிற இன்னும் இரண்டு வசனங்கள்: சங்கீதம் 35:10; சங்கீதம் 113:7.

[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]

அருமையான ஓர் எதிர்காலத்தை நீங்களும் கண்டடையலாம்

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

செல்வச் செழிப்பான இடத்திற்கு நான் குடிமாறிச் செல்ல வேண்டுமா?

நாம் எங்கு வசிக்க வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் கடவுளுடைய வார்த்தை சொல்வதில்லை. இருந்தாலும், பொருளாதார காரணங்களுக்காக வேறொரு இடத்திற்கு குடிமாறிச் செல்வது சரியா என்பதைத் தீர்மானிக்க பைபிளின் நியதிகள் உதவுகின்றன. பின்வரும் கேள்விகளையும் அவற்றுக்குப் பொருத்தமான பைபிள் நியதிகளையும் கவனியுங்கள்:

1. ஆதாரமற்ற வதந்திகளைக் கேட்டு நான் மோசம்போகிறேனா? “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என்று நீதிமொழிகள் 14:15 சொல்கிறது. கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு மனிதர் பணக்கார நாட்டிற்கு குடிமாறிச் சென்ற பிறகு இவ்வாறு கூறினார்: “இங்கே மரத்தில் பணம் காய்ப்பதாகக் கேள்விப்பட்டேன், ஆனால் இன்னும் அந்த மரம் என் கண்ணில் படவில்லை.”

2. என் குடும்பத்தின் தேவைகளைக் குறித்து எனக்குச் சமநிலையான கண்ணோட்டம் இருக்கிறதா? அத்தியாவசியத் தேவை, அநாவசிய ஆசை ஆகிய இரண்டுக்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் அவற்றைக் குழப்பிக்கொள்கிறேனா? குடும்பத் தலைவர்கள் தங்களது மனைவிமக்களின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 5:8) அதேசமயம், தகப்பன்மார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஒழுக்கம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கற்பிக்க வேண்டிய பொறுப்பையும் பெற்றிருக்கிறார்கள். (உபாகமம் 6:6, 7; எபேசியர் 6:4) ஒருவேளை தந்தை வேறு இடத்திற்கு குடிமாறிச் செல்வதன்மூலம் குடும்பத்தின் பொருளாதார நிலை செழித்தோங்கலாம். ஆனால் வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் என தன் பிள்ளைகளைப் பார்க்காமலே இருந்தால் அவர்களுக்குத் தேவையான ஒழுக்கம், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பயிற்றுவிப்பை அவரால் அளிக்க முடியாது.

3. என் மனைவியிடமிருந்து நீண்ட காலம் பிரிந்திருப்பது எங்கள் இருவரையுமே விபச்சாரத்தில் ஈடுபடும் ஆபத்துக்குள்ளாக்குகிறது என்பதை நான் உணருகிறேனா? திருமணமானவர்கள் ஒருவருக்கொருவர் பாலியல் ஆசைகளைத் திருப்தி செய்யும்படி கடவுளுடைய வார்த்தை ஆலோசனை அளிக்கிறது.​—⁠1 கொரிந்தியர் 7:5.

4. சட்டவிரோதமாக ஒரு நாட்டுக்குள் பிரவேசித்தால் அந்த நாட்டு அரசாங்கத்தின் கடுந்தண்டனைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும் என்பதை நான் அறிந்திருக்கிறேனா? தங்களது நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய உண்மைக் கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.​—⁠ரோமர் 13:1-7.

[பக்கம் 8, 9-ன் படங்கள்]

ஏழைக்கும் சரி பணக்காரருக்கும் சரி, பைபிள் நியதிகள் நடைமுறையானவை

[பக்கம் 7-ன் படத்திற்கான நன்றி]

மேலே: © Trygve Bolstad/Panos Pictures