Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிழக்கு டிமோர் மக்களைக் காண வாரீர்!

கிழக்கு டிமோர் மக்களைக் காண வாரீர்!

கிழக்கு டிமோர் மக்களைக் காண வாரீர்!

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கிழக்கு டிமோர், அதாவது டிமோர்-லெஸ்டா ஒரு சின்னஞ்சிறிய நாடு. டிமோர் தீவின் கிழக்கத்திய பகுதிதான் இந்த நாடு. “டிமோர்” என்ற பதத்திற்கான மலே வார்த்தைக்கும், லெஸ்டா என்ற போர்ச்சுகீஸிய வார்த்தைக்கும், “கிழக்கு” என்று அர்த்தம். ஆங்கிலம் பேசுபவர்கள் பொதுவாக இந்த நாட்டை கிழக்கு டிமோர் என அழைக்கிறார்கள். இந்தோனேஷிய தீவுக்கூட்டத்தின் கிழக்குக் கோடியில் இந்தத் தீவு அமைந்துள்ளதால் இதன் பெயர் இதற்கு ஏக பொருத்தமாய் இருக்கிறது.

கிழக்கு டிமோர் சுமார் 14,800 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது; அதாவது, பரப்பளவில் இது, அமெரிக்காவிலுள்ள கனெடிகட் மாகாணத்தைவிட சற்று பெரியதாக அல்லது நெதர்லாந்து நாட்டில் அரைவாசிக்கும் குறைவாக இருக்கிறது. இந்தத் தீவு சின்னஞ்சிறியதாக இருந்தாலும், இதன் இயற்கைச் சூழல், ஆசியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிற சூழலின் இரண்டறக் கலந்த கலவையாக இருக்கிறது. இங்கு, பச்சைப் பசேலென வெப்பமண்டலக் காடுகளும் உலர்ந்த யூகலிப்டஸ் புதர்க்காடும் வறண்ட மேய்ச்சல் நிலங்களும் காணப்படுகின்றன. வனவிலங்குகளிலும்கூட ஆஸ்திரேலிய, ஆசிய நாடுகளைச் சேர்ந்த இனங்கள் கலந்து காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, வயிற்றுப் பையில் குட்டிகளைச் சுமக்கும் மார்ஸுபியல் வகை விலங்குகளும் பறவைகளும், ஆசிய குரங்குகள், வெப்பமண்டல உவர்நீர் முதலைகள் ஆகியவற்றோடு சேர்ந்து குடியிருக்கின்றன. சரி, கிழக்கு டிமோர் வாசிகளைப்பற்றி என்ன சொல்லலாம்? அவர்களைக் காணச் செல்லலாம், வருகிறீர்களா?

குடியேற்ற காலத்தைப்பற்றிய நினைவலைகள்

1514 வாக்கில் போர்ச்சுகீஸிய மாலுமிகள் முதன்முதலாக கிழக்கு டிமோரில் கால் பதித்திருக்கலாம். அந்தச் சமயத்தில், மலைச்சரிவுகளில் போர்வை போர்த்தியதுபோல் சந்தனமரக் காடுகள் எங்கும் நிறைந்திருந்தன. வியாபாரத்தில் சந்தனமரங்கள் கொள்ளை லாபம் பெற்றுத் தந்தன; போர்ச்சுகீஸியர்கள் வணிகக் குடியிருப்புகளை உருவாக்குவதற்கு அந்த மரங்களே போதிய காரணத்தை அளித்தன. கத்தோலிக்க சர்ச்சுக்கும் இந்தப் பகுதியின்மீது ஒரு கண் இருந்தது; அங்கிருந்தவர்களை மதம் மாற்றுவதற்கு மிஷனரிகள் சிலரை அனுப்ப அது விரும்பியது. இந்த இரண்டு காரணங்களுக்காகவும் போர்ச்சுகீஸியர்கள் 1556-⁠ல் இந்தத் தீவைத் தங்கள் குடியேற்றத்திற்குப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

எனினும், இந்தக் குடியேற்ற சமயத்தில் கிழக்கு டிமோர் தன்னந்தனியாக ஒரு மூலையில், புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. 1656-⁠ல் ஆலந்து நாட்டவர் இந்தத் தீவின் மேற்கத்திய பகுதியைத் தங்கள் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்தபோது போர்ச்சுகீஸியர்கள் இதன் கிழக்குப் பகுதிக்குக் குடிபெயர்ந்தார்கள். இறுதியில், 400 ஆண்டுகளுக்கும் அதிகமாகக் குடியேற்ற ஆதிக்கம் செலுத்திய பிறகு 1975-⁠ல் தங்கள் கட்டுப்பாட்டை முற்றிலும் விலக்கிக்கொண்டார்கள்.

அதே வருடத்தில் உள்நாட்டுப் போர் மூண்டது. அதற்கு அடுத்த 24 வருடங்களில் சுமார் 2,00,000 கிழக்கு டிமோர்வாசிகள், அதாவது மொத்த ஜனத்தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் போரில் கொல்லப்பட்டார்கள். 1999-⁠ல் திடீரென மும்முரமாய் வீச ஆரம்பித்த வன்முறை அலை, 85 சதவீத வீடுகளையும் நாட்டின் உள்கட்டமைப்பில் பெருமளவையும் அழித்துப்போட்டது. ஆயிரக்கணக்கானோர் மலைகளுக்கு ஓடிப்போனார்கள். இறுதியில் ஐக்கிய நாட்டுச் சங்கம் தலையிட்டு இந்த நாசத்தை நிறுத்தியது, நாட்டை நிலைப்படுத்தியது.

அதுமுதற்கொண்டு, சின்னாபின்னமான தங்கள் வாழ்க்கையை மீண்டும் சீர்படுத்த டிமோர்வாசிகள் படாதபாடுபட்டு வருகிறார்கள். 2002, மே மாதம் கிழக்கு டிமோர், அதாவது டிமோர்-லெஸ்டா ஜனநாயகக் குடியரசு, உலக மேடையில் புதிய நாடாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றது.

கலாச்சார சங்கமம்

ஐரோப்பிய குடியேற்றம், நூற்றாண்டுகளாக நடைபெற்ற வணிகம், குடியிருக்கும் நோக்குடன் ஆசிய மற்றும் ஆஸ்திரலேஷிய மக்களின் வருகை என எல்லாம் சேர்ந்து கிழக்கு டிமோரில் கதம்பக் கலாச்சாரத்தை உருவாக்கியது; அதோடு, பல்வேறு மொழிகள் பேசப்படுவதற்கும் வழிசெய்தது. வணிக மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் போர்ச்சுகீஸ் விளங்குகிறபோதிலும், மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் டெட்டும் எனப்படுகிற அதிகாரப்பூர்வ மொழியைப் பயன்படுத்துகிறார்கள்; இந்த மொழியில் போர்ச்சுகீஸிய வார்த்தைகள் பெருமளவு காணப்படுகின்றன. நாடெங்குமுள்ள பல்வேறு இனத்தொகுதியினர் மத்தியில் கிட்டத்தட்ட 22 பிற மொழிகள் பேசப்படுகின்றன.

நாட்டுப்புறவாசிகளின் வாழ்க்கையில், பாரம்பரிய அரசர்கள் இப்போதும் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறார்கள். இவர்கள் சடங்கு சம்பிரதாயங்களை ஏற்பாடு செய்கிறார்கள், நிலத்தைப் பிரித்துக்கொடுக்கிறார்கள், பாரம்பரிய வழக்கத்தோடு சம்பந்தப்பட்ட பிற காரியங்களையும் கையாளுகிறார்கள்; எனினும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவரே பொது நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார்.

இவர்களது மதத்தில், பாரம்பரிய ஆன்மவாதமும் வெளிநாட்டவர் அறிமுகப்படுத்திய கத்தோலிக்க மதக்கோட்பாடுகளும் பின்னிப்பிணைந்திருக்கின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மூதாதையர் வழிபாடு, பில்லிசூனியம், ஆவியுலகத்தொடர்பு ஆகியவற்றின் செல்வாக்கு இருக்கிறது. தவறாமல் சர்ச்சுகளுக்குச் செல்பவர்கள்கூட, எதிர்காலத்தை முன்னதாகவே அறிவதற்கு, நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு, தீய ஆவிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு உள்ளூர் மாடான் டோயக்கிடம், அதாவது பில்லிசூனிய வைத்தியரிடம் ஆலோசனை கேட்பது வழக்கம்.

அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள், உபசரிக்க விருப்பமுள்ளவர்கள்

கிழக்கு டிமோர்வாசிகள் இயல்பாகவே கலகலப்பானவர்கள், எதையும் அறிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள், உபசரிக்கும் குணம் படைத்தவர்கள். “கற்றுக்கொள்ள வேண்டும், பேச வேண்டும், முன்பின் அறிமுகமில்லாதவர்களோடுகூட கூட்டுறவுகொள்ள வேண்டும், பழக வேண்டும் என்ற தீராத ஆசை எங்களுக்கு இருக்கிறது” எனச் சொல்கிறார் ஜனாதிபதி கேராலா ஷானானா கூஷ்மாவ்.

டிமோரில் வசிக்கும் ஒரு குடும்பத்தாருடன் உணவருந்த அழைக்கப்படுகிற விருந்தாளிகள், பொதுவாக குடும்பத் தலைவரான ஆண் மகனோடு சேர்ந்து சாப்பிடுவார்கள். அவருடைய மனைவியும் குழந்தைகளும் உணவைப் பரிமாறுவார்கள், பிறகு கடைசியாக அவர்கள் சாப்பிடுவார்கள். முதல் தடவை கொஞ்சமாக உணவை வாங்கிக்கொள்வது பணிவான செயலாகும். பிறகு விருந்தாளி இரண்டாவது முறை கேட்டு வாங்கிச் சாப்பிடுவதன்மூலம் உணவு சமைத்தவரைக் கௌரவிக்கலாம்.

பெரும்பாலும் டிமோர்வாசிகளின் உணவில், அரிசி, மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றில் ஒன்றோடு கீரைகளும் காய்கறிகளும் இடம்பெறும். டிமோர்வாசிகளின் விசேஷ உணவுப் பதார்த்தம் ஒன்றுக்கு சாபோகோ என்று பெயர்; இது, சாளை மீன்கள், கெட்டியான புளிக் கரைசல், மசாலா ஆகியவற்றின் சுவையான கலவையைப் பனை ஓலைக்குள் வைத்துத் தயாரிக்கப்படும் உணவாகும். ஆனால், இறைச்சியின் விலை ரொம்பவே அதிகமாய் இருக்கிறது.

குழந்தைகளின் கும்மாளம்

கிழக்கு டிமோர் இளைய தலைமுறையினர் நிறைந்த நாடு எனலாம். ஜனத்தொகையில் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி பிள்ளைகள்தான்; அநேக குடும்பங்களில் ஒரே வீட்டில் 10 முதல் 12 பிள்ளைகள்வரை இருக்கிறார்கள்.

பள்ளிக்குச் செல்லும்போது பொதுவாக சிறுவர்கள் சிறுவர்களோடும் சிறுமிகள் சிறுமிகளோடும் கைகோர்த்து நடந்து செல்கிறார்கள்; அப்போது, சிரித்துக்கொண்டும் பாடிக்கொண்டும் செல்கிறார்கள். பள்ளியில் கல்வி அறிவு மட்டுமே அவர்களுக்குப் புகட்டப்படுவதில்லை, வாழ்க்கை நன்னெறி, ஒழுக்கவியல் ஆகிய விஷயங்களிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

டிமோரில் ஒரு பிள்ளை தன்னந்தனியாகவோ, அமைதியாகவோ விளையாடுவதே இல்லை. அக்கம்பக்கத்தில் வசிக்கும் எல்லா பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து கும்மாளமடிக்கிறார்கள்! அவர்களுக்கு மிகப் பிடித்தமான விளையாட்டு டூடூ காரிட்டா, அதாவது தள்ளு வண்டியாகும். சைக்கிள் சக்கரம்தான் அவர்களுடைய கற்பனை வண்டி. தெருவில் அந்தச் சக்கரத்தை ஓட்டிச் செல்கையில் அது கீழே விழுந்துவிடாமல் குச்சியை வைத்து உருட்டிவிடுகிறார்கள், ஒரே சிரிப்புதான்.

எனினும், டிமோரில் பிள்ளைகள் சதா விளையாடிக்கொண்டே இருப்பதில்லை. உதாரணத்திற்கு, கனமான இரும்புக் குழவிகளைப் பயன்படுத்தி மக்காச்சோளத்தை அரைக்கிற வேலை அவர்களுக்குக் கொடுக்கப்படலாம். ஆனாலும், சிரித்துக்கொண்டே அதை அவர்கள் செய்கிறார்கள். உலகில் ஏழ்மையின் அடிமட்டத்தில் கிடக்கிற பத்து நாடுகளில் ஒன்றில் தாங்கள் பிறந்திருப்பதை அவர்கள் அறிந்திருப்பதாகவே தெரியவில்லை.

வேதனையிலும் வருத்தத்திலும் தவிக்கிற நாடு

வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிப்பதால் டிமோர்வாசிகளின் வாழ்க்கை பெருமளவு ஆட்டம் காண்கிறது. ஜனத்தொகையில் நாற்பது சதவீதத்தினர் தினமும் 1.50 டாலருக்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்; இது, அத்தியாவசியமான உணவுப்பொருள்களையும் வீட்டுச் சாமான்களையும் வாங்குவதற்குத் தேவைப்படும் குறைந்தபட்சத் தொகையாகும். நாட்டின் உள்கட்டமைப்பின் தரம் மிக மோசமானதாக இருக்கிறது. ஓர் அரசாங்க அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “நாட்டில் நால்வரில் மூவர் மின்வசதியின்றி வாழ்கிறார்கள், ஐவரில் மூவர் கழிவறை வசதியின்றி வாழ்கிறார்கள், இருவரில் ஒருவர் நல்ல குடிநீர் வசதியின்றி வாழ்கிறார்.”

இத்தகைய சூழ்நிலைகளில் நோய்கள் ஏராளமாய் பெருகுகின்றன. ஊட்டச்சத்துக் குறைவு, மலேரியா, எலும்புருக்கியாகிய காச நோய் போன்றவையும் பிற நோய்களும் மக்களின் வாழ்நாளைக் குறைத்திருக்கின்றன; இதனால், சராசரியாக மக்கள் 50 வயதுவரை வாழ்கிறார்கள். ஐந்து வயதை எட்டுவதற்கு முன்பே சுமார் 10 பிள்ளைகளில் ஒன்று இறந்துவிடுகிறது. 2004-⁠ல், கிட்டத்தட்ட 8,00,000 பேருக்கு சிகிச்சை அளிப்பதற்கு 50-⁠க்கும் குறைவான டாக்டர்களே இருந்தார்கள்.

சேதமடைந்த தங்கள் நாட்டைச் சீராக்கும் பணியில் டிமோர்வாசிகளுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாட்டுச் சங்கத்துடன் சேர்ந்து அநேக அயல் நாடுகள் தற்போது பாடுபடுகின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் டிமோர் கடலில் மிகுதியாக இருப்பதும், ஏழ்மையான பொருளாதார நிலை சீரடையுமென்ற நம்பிக்கையை அளிக்கிறது. எனினும், கிழக்கு டிமோரின் மிகப் பெரிய சொத்து, துவண்டுவிடாமல் எதையும் எளிதில் சமாளிக்கும் மனப்பக்குவமுள்ள சாமானியர்கள்தான். டிமோர்வாசியான ஒரு பெண் விழித்தெழு!-விடம் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் வறுமையில் வாடலாம், ஆனால் வருத்தத்தில் மூழ்கிவிடுவதில்லை!”

“நலம்தரும் செய்தி”

சமீப வருடங்களில் யெகோவாவின் சாட்சிகள் கிழக்கு டிமோர்வாசிகளுக்கு ‘நலம்தரும் செய்தியை’ அறிவித்து வருகிறார்கள். (ஏசாயா 52:7, பொது மொழிபெயர்ப்பு; ரோமர் 10:14, 15) 2005-⁠ல் இந்த நாட்டில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரேவொரு சபை இருந்தது: பூங்கா போன்ற பரதீஸாக பூமி மாறவிருப்பதைப்பற்றிய பைபிள் வாக்குறுதியை மற்றவர்களுக்குச் சொல்வதில் அச்சபையினர் அந்த வருடம் கிட்டத்தட்ட 30,000 மணிநேரத்தைச் செலவிட்டார்கள்.​—சங்கீதம் 37:10, 11; 2 பேதுரு 3:13.

பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்வது, ஆவியுலகத்தொடர்பு எனும் பயங்கரமான கைவிலங்கை உடைத்தெறிய டிமோர்வாசிகளில் சிலருக்கு உதவியிருக்கிறது. உதாரணத்திற்கு, ஜேக்கப் என்பவருக்கு ஐந்து பிள்ளைகள். இவர் ஆவியுலகத்தொடர்பு பாரம்பரியப் பழக்கவழக்கங்களில் மூழ்கிப்போயிருந்தார். இறந்தவர்களின் ஆவிகளுக்காகத் தவறாமல் மிருக பலிகளைச் செலுத்திவந்தார். இப்படிப் பலி செலுத்த எக்கச்சக்க பணம் செலவானதால் செலவைச் சமாளிக்க முடியாமல் இந்தக் குடும்பம் திண்டாடியது. கோழியைப் பலி செலுத்துவதற்கு கிட்டத்தட்ட ஒருநாள் சம்பளமும், ஆட்டுக்கடா அல்லது பன்றியை விசேஷ பலியாகச் செலுத்துவதற்கு பல வார சம்பளமும் செலவானது.

காலப்போக்கில், ஜேக்கப்பின் மனைவி ஃபிரான்ஸிஸ்கா யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தார். பிறகு, இறந்தவர்கள் ஒன்றும் அறியார்கள், உயிரோடிருப்பவர்களுக்கு அவர்களால் தீங்கு செய்ய முடியாது என்பதை உறுதிப்படுத்தும் பைபிள் வசனங்களை தன் கணவருக்குக் காட்டினார். (பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4) பைபிள் சொல்வதை அவர்கள் விசுவாசித்ததால், இறந்தவர்களின் ஆவிகளுக்குப் பலி செலுத்துவதை நிறுத்தத் தீர்மானித்தார்கள். இதனால், அவர்களுடைய உற்றார் உறவினர்கள் கோபித்துக்கொண்டு அவர்களை ஒதுக்கிவிட்டார்கள்; பழிவாங்கும் அந்த ஆவிகள் சீக்கிரத்தில் அவர்களைக் கொன்றுவிடுமென சொன்னார்கள். ஆனால், “யெகோவா எங்களைக் காப்பாற்றுவார்” என்று சொல்லி ஜேக்கப்பும் ஃபிரான்ஸிஸ்காவும் தங்கள் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார்கள்.

இதற்கிடையில், ஜேக்கப் பைபிள் படிப்பில் கலந்துகொள்ள ஆரம்பித்தார், குடும்பத்தாரோடு கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் போய்வந்தார். இதனால் மெச்சத்தக்க இன்னும் பல மாற்றங்களை தன் வாழ்க்கையில் செய்தார். பல வருடங்களாக தினமும் ஒரு பாக்கெட் சிகரெட்டைப் புகைத்து வந்த அவர், புகைபிடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். வாசிப்பதற்கும் எழுதுவதற்கும்கூட அவர் கற்றுக்கொண்டார். இந்தச் சமயத்தில் வெற்றிலை-பாக்குப் போடுவதை ஃபிரான்ஸிஸ்கா நிறுத்திவிட்டார். இறுதியில், 2005-⁠ல் ஜேக்கப்பும் ஃபிரான்ஸிஸ்காவும் யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டுதல் பெற்றார்கள். இன்று, தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கவும், மருத்துவச் செலவுக்காகவும் பணத்தைப் புத்திசாலித்தானமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

சொல்லப்போனால், இயேசு முன்னறிவித்த விதமாகவே, கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தி “பூமியின் கடைசிபரியந்தமும்” பிரசங்கிக்கப்பட்டு வருகிறது; அறிந்துகொள்ள ஆர்வமும் உபசரிக்க விருப்பமும் தாராள குணமும் படைத்த ஜனங்கள் குடியிருக்கும் சின்னஞ்சிறிய கிழக்கு டிமோரிலும் அது பிரசங்கிக்கப்பட்டு வருகிறது.​—அப்போஸ்தலர் 1:8; மத்தேயு 24:14.

[பக்கம் 17-ன் பெட்டி/படம்]

“நூல்கண்டு வந்தாயிற்று”

“நூல்கண்டு வந்தாயிற்று” என்ற சொல்வழக்கு, பெண் குழந்தை பிறந்திருப்பதை அறிவிக்க டிமோர்வாசிகள் மத்தியில் ஒருகாலத்தில் பயன்படுத்தப்பட்டது. இது டிமோர் பெண்களின் பாரம்பரியத் தொழிலை விவரிக்கிறது; டைஸ் என்ற அலங்காரத் துணியை நீளமாக நெய்வது இவர்களுடைய வேலையாகும். டைஸை பயன்படுத்தி, பல வித நுணுக்கங்களோடும், கலைநயத்தோடும் உருவாக்கப்படும் கம்பளங்கள், விசேஷங்களுக்கு உடுத்துகிற உடை குடும்பத்தின் பாரம்பரியச் சொத்தாகக் கருதப்படும் உடை ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. பருத்தியை விளைவிப்பதற்கு, பொறுக்குவதற்கு, நூற்பதற்கு, சாயந்தோய்ப்பதற்கு என பல பணிகளைச் செய்வதற்கும், பற்பல வண்ணங்களில் அழகிய வடிவமைப்புகளில் நெய்வதற்கும் பாட்டியம்மாக்கள் பெண்பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறார்கள். எந்தளவுக்குச் சிக்கலான அமைப்புகளில் நெய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்து, டைஸ் தயாராவதற்கு ஒரு வருடமோ அதற்கு மேலுமோ எடுக்கலாம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் அதற்கே உரிய பாரம்பரிய டிசைன்கள் உள்ளன; டைஸை பார்த்த உடனேயே அது எந்தப் பிராந்தியத்திற்குரியது என்பதை நிபுணர்கள் டக்கெனச் சொல்லிவிடுவார்கள்.

[பக்கம் 14-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பாப்புவா நியூ கினி

இந்தோனேஷியா

கிழக்கு டிமோர்

ஆஸ்திரேலியா

[பக்கம் 15-ன் படம்]

கூம்பு வடிவ பாரம்பரிய வீடு

[பக்கம் 16-ன் படம்]

“டூடூ காரிட்டா”​—⁠பிள்ளைகளுக்கு மிகப் பிடித்தமான விளையாட்டு

[பக்கம் 16, 17-ன் படம்]

ஜேக்கப்பும் அவருடைய குடும்பத்தாரும்