செல்வச் செழிப்பு யாருக்கு?
செல்வச் செழிப்பு யாருக்கு?
இந்த உலகம் செல்வச் செழிப்பில் மிதக்கிறது. ஆனால், எங்குப் பார்த்தாலும் வறுமையே தலைவிரித்தாடுகையில், இவ்வுலகம் செழிப்பானதென்று எப்படிச் சொல்ல முடியும்? உண்மை என்னவென்றால், தங்களிடம் உள்ள பணத்தை வைத்து என்ன செய்வதென்றே தெரியாத அளவுக்கு சில நாடுகளில் பணம் கொட்டிக் கிடக்கிறது! 2005-ஆம் வருடத்தின் மொத்த உலக உற்பத்தி (GWP), அதாவது அந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள், அளிக்கப்பட்ட சேவைகள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு, 60 டிரில்லியன் டாலர்களைவிட அதிகமாய் இருந்ததாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த அமோக உற்பத்தி உலகிலுள்ள எல்லாருக்கும் சரிசமமாகப் பகிர்ந்து அளிக்கப்பட்டால் தற்போது உயிரோடிருக்கும் ஒவ்வொரு நபருக்கும் கிட்டத்தட்ட 9,000 டாலர்கள் கிடைக்கும். இத்தொகை இன்னும் அதிகரித்து வருகிறது.
ஆனால் இவ்வுலகச் செழிப்பு, நாம் எதிர்பார்ப்பதற்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. எப்படியெனில், உலகில் மகா கோடீஸ்வரர்களான மூன்று பேரிடம் இருக்கிற செல்வம், மிகவும் ஏழ்மையான 48 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (GDP) அதிகமாய் இருப்பதாக சமீபத்திய ஐக்கிய நாட்டுப் பிரசுரம் ஒன்று கூறுகிறது. அதோடு, 250 கோடி மக்கள் மிகவும் குறைந்த வருமானத்தில் ஒவ்வொரு நாளையும் ஓட்டுவதாக ஐநா வளர்ச்சித் திட்டம் குறிப்பிடுகிறது. இன்னும் பல கோடி மக்கள் ஊட்டச்சத்துள்ள உணவோ, சுத்தமான குடிநீரோ கிடைக்காமல் திண்டாடுகிறார்கள்.
அமெரிக்காவில் சமூகவியலாளர்கள் ஒரு தொகுதியினரை வைத்து ஆய்வு நடத்துகிறார்கள்; “வறுமையின் விளிம்பைத் தொட்டவர்கள்” என்றே அவர்களை அழைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் வறுமையில் சிக்கும் வாய்ப்பு மிகவும் அதிகமாய் இருக்கிறது. அமெரிக்காவில் மலைபோல் செல்வம் குவிந்திருக்கிறபோதிலும் 5 கோடிக்கும் அதிகமானோர் அங்கு வறுமையில் வாடுகிறார்கள்.
உலகமுழுவதும் கஜானாக்களிலும் வங்கிகளிலும் எக்கச்சக்கமான பணம் புழங்குகிறபோதிலும் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வேதனை மட்டும் ஏன் தீர்ந்தபாடில்லை? உலகம் செல்வச் செழிப்பில் மிதந்தாலும் ஏன் அநேகர் அதை அனுபவிக்க வழியில்லை?
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
உலகில் மகா கோடீஸ்வரர்களான மூன்று பேர் மிகவும் ஏழ்மையான 48 நாடுகளைவிட செல்வந்தர்களாக இருக்கிறார்கள்
[பக்கம் 2, 3-ன் படம்]
இந்தச் செங்கல் தொழிற்சாலையில் வேலைசெய்கிற குழந்தைத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளம் சுமார் 50 அமெரிக்க சென்ட்டுகள்
[படத்திற்கான நன்றி]
© Fernando Moleres/ Panos Pictures
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
© Giacomo Pirozzi/Panos Pictures