Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பணக்கார உலகில் ஏன் இத்தனை ஏழைகள்?

பணக்கார உலகில் ஏன் இத்தனை ஏழைகள்?

பணக்கார உலகில் ஏன் இத்தனை ஏழைகள்?

“ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கிறார்கள்” என்று இயேசு கிறிஸ்து பொ.ச. முதல் நூற்றாண்டில் கூறினார். (மத்தேயு 26:11, பொது மொழிபெயர்ப்பு) இயேசுவின் காலந்தொட்டு நமது காலம்வரை எப்போதுமே எண்ணற்ற ஏழை மக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், உலகம் செல்வச் செழிப்பின் உச்சியை எட்டியிருக்கும் பட்சத்தில் வறுமை ஏன் எண்ணற்றோரை வாட்டி வதைக்கிறது என்பதுதான் புரியவில்லை.

மக்கள் தவறான தீர்மானங்களை எடுப்பதாலேயே ஏழ்மை நிலைக்கு வருவதாக சிலர் நம்புகிறார்கள். சிலருடைய விஷயத்தில் அது உண்மையாக இருக்கலாம். மதுபானம், போதைப்பொருள், சூதாட்டம் ஆகியவற்றுக்கு அடிமையாய் இருக்கிறவர்கள் தங்களுடைய பொருளுடமைகளை நொடிப்பொழுதில் இழந்துவிடலாம். ஆனால், ஏழைகளாக இருக்கிற எல்லாருமே தவறான தீர்மானம் எடுத்ததால்தான் ஏழைகளாக இருக்கிறார்களெனச் சொல்லமுடியாது.

தொழிற்சாலைகளில் ஏற்பட்ட மாற்றங்களினால் எத்தனையோ பேர் வேலைகளை இழந்திருக்கிறார்கள். வேலை செய்கிறவர்களில் பலர் வாழ்நாளெல்லாம் சேமித்து வைத்த பணத்தை, ராக்கெட் வேகத்தில் அதிகரித்துவருகிற மருத்துவச் செலவுக்காகப் பறிகொடுத்திருக்கிறார்கள். ஏழை நாடுகளில் பிறக்கிற லட்சக்கணக்கானோரில் பெரும்பாலோர் வறுமையில் வாடுவது, அவர்கள் செய்த தவறினால் அல்ல. பின்வரும் பத்திகள் காட்டுகிறபடி அவர்களுடைய வறுமைக்கு பெரும்பாலும் அவர்கள் பொறுப்பாளிகளே அல்ல.

கடந்த காலத்திலிருந்து ஒரு பாடம்

1930-களின் ஆரம்பத்தில் உலகம், பண நெருக்கடியால் தத்தளித்தது, அந்தக் காலப்பகுதியில் நிலவிய சூழ்நிலை, பெரும் பொருளாதார மந்தம் என அழைக்கப்படுகிறது. ஒரு நாட்டில் கோடிக்கணக்கானோர் வேலையை இழந்தார்கள், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்தன. அநேகர் பசியில் துடித்தார்கள். மறுபட்சத்தில், பண்ணை முதலாளிகள் எக்கச்சக்கமான பாலை சாக்கடையில் கொட்டினார்கள், கோடிக்கணக்கான கால்நடைகளைக் கொன்று குவிக்கும்படி அரசாங்கங்கள் பண்ணை முதலாளிகளை வற்புறுத்தின.

காரணம்? அன்று இருந்த பொருளாதாரச் செயல்பாடே. அந்தச் சமயத்தில் பண்ணைப் பொருள்களும் பிற பொருள்களும் அதிக லாபத்திற்காக விற்கப்பட்டன. பால், இறைச்சி, தானியம் ஆகியவை ஏழைகளின் முக்கிய உணவாக இருந்தன. ஆனால், அவை லாபத்திற்காக விற்கப்பட்டபோது ஏழைகளால் அவற்றை வாங்க முடியவில்லை. ஆகவே, அவற்றுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதாக எண்ணப்பட்டது. பிறகென்ன, யாருக்கும் பிரயோஜனமின்றி அவற்றை வீணடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மக்களுக்கு உணவு கிடைக்காமல் போனதால் பல நகரங்களில் கலவரம் வெடித்தது. தங்கள் குடும்பங்களுக்காக உணவு வாங்க முடியாமல் போனதால் சில குடிமக்கள் துப்பாக்கி முனையில் தங்களுக்குத் தேவையானதைக் கொள்ளையடித்தார்கள். மற்றவர்களோ பட்டினியில் சுருண்டார்கள். இவை எல்லாம் எங்கு நடந்தது தெரியுமா? அமெரிக்காவில். பெரும் பொருளாதார மந்தத்தின் ஆரம்ப நாட்களில், அந்நாட்டின் சக்திவாய்ந்த நிதித் துறை, மிகக் குறைந்த சம்பளக்காரர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. அனைத்துக் குடிமக்களுக்கும் தேவையான உணவு, வீடு, வேலை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவற்றையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு லாபம் சம்பாதிப்பதிலேயே முழு மூச்சாய் ஈடுபட்டது.

இன்றைய பொருளாதார நிலை

உலக பொருளாதாரம், பெரும் பொருளாதார மந்தத்திலிருந்து மீண்டு வெளியே வந்துவிட்டது. அநேக மக்கள் இப்போது பணக்காரர்களாகவும் பண ரீதியில் பாதுகாப்புள்ளவர்களாகவும் இருப்பதுபோல் தெரிகிறது. இன்றைய உலகில் பணத்திற்குப் பஞ்சமே இல்லை. ஆனால், ஏழைகளின் வாழ்வில் மட்டும் ஏன் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை? வளரும் நாடுகளில் பஞ்சம், வறுமை பற்றிய செய்திகளுக்குக் குறைவே இல்லை. அநேகருக்கு அவற்றை வாசித்து வாசித்து அலுத்துப்போய்விட்டது. போரின் காரணமாக அகதிகள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் திண்டாடுகையிலும், அரசியலில் நடைபெறும் ஊழல் காரணமாக உணவுப்பொருள்கள் நாசமடைகையிலும், விலைவாசிகளின் ஏற்றத்தாழ்வு காரணமாக ஏழைகள் வாங்க முடியாதளவு வாழ்க்கையின் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கையிலும், நாட்டின் பொருளாதாரத் துறை அதன் ஏழை குடிமக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாமற்போவதை நாம் பார்க்கிறோம். உலக பொருளாதார அமைப்பு எண்ணற்ற ஏழைகளை அசட்டை செய்துவிடுகிறது.

உண்மையில், மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்ட எந்தப் பொருளாதார அமைப்பும் முழு மனிதகுலத்தினுடைய பொருளாதாரத் தேவைகளைச் சரிவர நிறைவேற்றியதாக சரித்திரமே இல்லை. சுமார் 30 நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்க்கையைக் கவனமாய் ஆராய்ந்த ஒருவர் இந்த முடிவுக்கு வந்தார்: “நான் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.” (பிரசங்கி 4:1) செல்வச் செழிப்பு மிகுதியாகப் புரளுகிற இந்தக் காலத்திலும் நியாயமற்ற பொருளாதாரப் பழக்கங்கள் இன்னும் நிலவத்தான் செய்கின்றன.

ஏழைகளாயிருக்கும் ஏராளமானோர், வறுமை எனும் பாதாளத்திலிருந்து வெளிவரவே முடிவதில்லை. இருந்தாலும், அநேகர் தங்களுடைய பொருளாதார நெருக்கடிகளை வெற்றிகரமாகச் சமாளிக்கக் கற்றிருக்கிறார்கள். எதிர்காலத்தில் தங்களுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்குமென இவர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

[பக்கம் 5-ன் பெட்டி]

வாழ்க்கையே போராட்டம்

ஓர் எழுத்தரும் பத்திரிகையாளருமான டேவிட் கே. ஷிப்லர், அமெரிக்காவில் கண்ணில்படாத கூலித் தொழிலாளர்கள் என்ற தலைப்பில் ஓர் ஆங்கில புத்தகத்தை எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் வறுமையின் விளிம்பில் வாழ்கிற சிலரின் நிலைமையை நாம் புரிந்துகொள்ள அவர் உதவுகிறார்: “பாழடைந்த அடுக்குமாடிக் கட்டடத்தில் வசிக்கிற குழந்தையின் ஆஸ்துமா தீவிரமடைகிறது, அதற்காக ஆம்புலன்ஸ் அழைக்கப்படுகிறது, பிறகு கடனுக்கு மருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது, அதன் விளைவாக கடனில் வாங்கிய வண்டிக்கான வட்டியும் எக்கச்சக்கமாய் அதிகரிக்கிறது. எனவே ஒரு ‘டப்பா’ காரை வாங்க வேண்டிய கட்டாயம் வருகிறது, அதன் காரணமாக தாய் சரியான நேரத்தில் வேலைக்குச் செல்ல முடிவதில்லை, ஆகவே அவளுக்கு பிரமோஷனும் கிடைப்பதில்லை, கைநிறைய சம்பாதிக்கவும் முடிவதில்லை, அதனால் பாழடைந்த அடுக்குமாடிக் கட்டடமே கதியாகிவிடுகிறது.” அந்தத் தாயும் பிள்ளையும் பணக்கார நாட்டில் வாழ்கிறபோதிலும் அவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம்.

[பக்கம் 6-ன் பெட்டி]

நல்லெண்ணம் இருந்தால் மட்டும் போதுமா?

நவம்பர் 1993-⁠ல், வாஷிங்டன், டி.ஸி.-யில் ஓர் அரசாங்க கட்டடத்திற்கு உள்ளே சில அதிகாரிகள் ஒரு முக்கியமான பிரச்சினையைத் தீர்ப்பதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கோடிக்கணக்கான டாலர்களை கையிருப்பில் வைத்திருந்த அந்த அதிகாரிகள் அமெரிக்காவில் வீடில்லாதவர்களுக்கு உதவுவதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசி முடிப்பதற்குள் போலீஸ்காரர்கள், தீயணைப்புப் படையினர், அவசர மருத்துவப் பணியாட்கள் ஆகிய அனைவரும் சாலையின் மறுபக்கம் இருந்த ஒரு பஸ் ஸ்டாப்பில் கூடிவிட்டார்கள். ஆம்புலன்ஸிலிருந்து இறங்கிய ஆட்கள் வீடில்லாத ஒரு பெண்ணின் உடலைத் தூக்கினார்கள். அமெரிக்காவின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் (HUD) கட்டடத்திற்கு முன்புதான் அந்தப் பெண் இறந்துகிடந்திருந்தாள்.

பிறகு த நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையாளர் ஒருவர் HUD-யில் பணியாற்றிய ஒரு பெண்மணியைப் பேட்டி கண்டபோது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த எண்ணற்ற அவசரப் பணியாட்களையும் வாகனங்களையும் குறித்து அவர் இவ்வாறு சொன்னார்: “ஒருவர் இறந்த பிறகு எவ்வளவோ பேர் உதவிக்கு வருகிறார்கள், ஆனால், அவர் உயிரோடிருக்கும்போதோ ஒருவரும் கண்டுகொள்வதில்லை. இதை நினைத்தால் விசித்திரமாயிருக்கிறது.”

[பக்கம் 4, 5-ன் படம்]

1930-களில் நிலவிய பெரும் பொருளாதார மந்தத்தின்போது தன் மூன்று பிள்ளைகளுடன் இடம் பெயர்ந்த தாயின் படம்

[படத்திற்கான நன்றி]

Dorothea Lange, FSA Collection, Library of Congress

[பக்கம் 6, 7-ன் படம்]

இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் வேலை செய்பவர்கள் சராசரியாக மாதத்திற்கு 14 டாலர்கள் சம்பாதிக்கிறார்கள், ஆனால் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்யும்படி வற்புறுத்தப்படுகிறார்கள்

[படத்திற்கான நன்றி]

© Fernando Moleres/Panos Pictures