Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பல் மருத்துவரிடம் ஏன் செல்ல வேண்டும்?

பல் மருத்துவரிடம் ஏன் செல்ல வேண்டும்?

பல் மருத்துவரிடம் ஏன் செல்ல வேண்டும்?

நவீன பல் மருத்துவம் தலைதூக்குவதற்கு முன்பு மக்கள் சிறு வயதிலிருந்தே பொதுவாக பல் வலியினாலும் பல் இழப்பினாலும் படாதபாடு பட்டிருக்கிறார்கள். பலருக்கு, நிறம் மாறிய பற்களாலோ, கோணல்மாணலான பற்களாலோ, பற்கள் விழுந்ததாலோ அவர்களுடைய முகத்தின் அழகே குலைந்திருக்கிறது. பற்களை இழந்த முதியவர்கள் உணவை மென்று சாப்பிட முடியாததால் சரியான ஊட்டச்சத்து கிடைக்காமல் சீக்கிரமே இறந்திருக்கிறார்கள். இன்றோ, பல் நோயினால் அவதிப்படுகிற அநேகர் பல் மருத்துவரின் உதவியோடு பல் வலியிலிருந்து விடுதலை பெறலாம், தங்கள் ஆயுள் வரைக்கும் பற்களை இழக்காமல் பாதுகாக்கலாம், முத்துப்பல் சிரிப்பைச் சிந்தலாம். நவீன மருத்துவம் எவ்வாறு குறிப்பிடத்தக்க இந்த மூன்று சாதனைகளைப் படைத்தது?

நோய்த்தொற்றிலிருந்து பற்களைப் பாதுகாத்துக்கொள்ள அவற்றைப் பற்றிய அறிவைப் பெறுவதும் அவ்வப்போது பரிசோதனைகள் செய்வதும் அவசியம்; பல் வலியையும் பல் விழுவதையும் தடுப்பதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. “சுகமுள்ளவர்களுக்கு [வைத்தியன்] வேண்டியதில்லை” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (லூக்கா 5:31) எனவே, சிலர் பற்களையும் ஈறுகளையும் நோய் தொற்றாமல் மிக நன்றாகப் பராமரிப்பதால் அவர்கள் பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே ஏற்படுவதில்லை. a இருந்தாலும், சிகிச்சை பெற வேண்டிய பலர் பல் மருத்துவரிடம் போவதே இல்லை. சிலர் கவனக்குறைவினால் அதை அலட்சியப்படுத்துகிறார்கள். மற்றவர்கள், பணம் செலவாகுமே என நினைத்துப் பின்வாங்குகிறார்கள். இன்னும் சிலர் பல் மருத்துவர் என்றாலே பயப்படுகிறார்கள். உங்களுடைய நிலைமை என்னவாக இருந்தாலும்சரி, ‘பல் மருத்துவர் எனக்கு என்ன உதவி செய்ய முடியும்? அவரிடம் போய்விட்டு வருவது பிரயோஜனம்தானா? என்ற கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்வது நல்லது. பல் மருத்துவர்கள் என்னென்ன பிரச்சினைகளைத் தடுக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இது, பற்களில் நோய் தொற்றுவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

பல் நோய் ஆரம்பிப்பது எப்படி?

பல்வலி வந்தாலோ, பல் உடைந்துபோனாலோ துடிதுடித்துப் போய்விடுகிறோம். ஆனால் இதனைத் தடுக்க பல் மருத்துவர்களால் உங்களுக்கு உதவ முடியும். பாக்டீரியா கிருமிகள் மெல்லிய படலமாகப் பற்கள்மீது படிந்து பற்களை நாசம் செய்கின்றன; இது பற்படலம் எனப்படுகிறது. உங்களுடைய ஒத்துழைப்புடன் இதனைக் கட்டுப்படுத்த பல் மருத்துவர்கள் முயற்சி செய்கிறார்கள். பற்களில் உணவுத் துகள்கள் ஒட்டியிருந்தால் போதும், இந்த பாக்டீரியாக்களுக்குக் கொண்டாட்டம்தான்! அவற்றிலுள்ள சர்க்கரையை அமிலமாக மாற்றுகின்றன. இந்த அமிலம் பல்லின் எனாமலை அரித்து அதில் சிறு சிறு துளைகளைப் போடுகிறது. இந்தச் சிறு துளைகள் காலப்போக்கில் குழியாக மாறி பல் சொத்தை ஏற்படுகிறது. இந்தக் கட்டத்தில் உங்களுக்கு வலியேதும் தெரியாது. ஆனால், அந்தச் சொத்தை, பற்கூழ்வரை ஆழமாகச் சென்றபிறகு கடுமையான வலியால் நீங்கள் துடிக்கக்கூடும்.

பற்கள்மீது படலமாகப் படிகிற இந்த பாக்டீரியா கிருமிகள் உங்களை இன்னொரு விதத்திலும் சித்திரவதை செய்கின்றன. பல் தேய்க்கும்போது இந்தப் படலத்தைச் சுத்தமாகத் துலக்கி அகற்றவில்லை என்றால் அவை கெட்டியாகி பற்காரையாக உருவெடுத்து ஈறுகளில் படிந்துவிடுகின்றன. இந்தப் பற்காரை வேறொன்றுமில்லை, கெட்டியாகிப்போன சுண்ணாம்புப் படிவமே. பிறகு ஈறுகள் பற்களிலிருந்து விலகிவிடலாம். இதனால் பற்களுக்கும் ஈறுகளுக்கும் நடுவே இடைவெளி ஏற்படுகிறது. இந்த இடைவெளியில் தங்கிவிடுகிற உணவுத் துகள்களில் பாக்டீரியா கிருமிகள் கும்மாளமடிக்கின்றன. இந்தக் கிருமிகளால் ஈறுகளை நோய் தொற்றக்கூடும். பற்களில் காரை படியாமல் இருப்பதற்கு நீங்கள் பல் மருத்துவரின் உதவியைப் பெறலாம். ஆனால், ஒருவேளை நீங்கள் அலட்சியமாக இருந்துவிட்டால், பற்களைச் சுற்றியுள்ள திசு மிகவும் சேதமடைந்து உங்கள் பற்கள் விழுந்துவிட நேரிடலாம். சொத்தையாகி விழுவதைவிட காரை படிவதனாலேயே அதிகமான பற்கள் விழுகின்றன.

பாக்டீரியாக்களின் இந்த இரண்டு நாசகரமான பாதிப்புகளிலிருந்தும் ஓரளவு பாதுகாப்பு தருவது உங்கள் உமிழ்நீர். நீங்கள் உணவு உண்டாலோ வெறுமனே ஒரு ஸ்வீட் சாப்பிட்டாலோ பற்களின் நடுவே தங்கிவிடுகிற உணவுத் துகள்களையெல்லாம் அகற்றி, பற்கள் மீதுள்ள படலத்தில் இருக்கிற அமிலத்தன்மையை சமநிலைப்படுத்த உங்கள் உமிழ்நீருக்கு 15 முதல் 45 நிமிடங்கள் வரை தேவைப்படுகிறது. ஆனால், இனிப்பும் உணவுத் துகள்களும் பற்களில் ஒட்டியிருக்கும் அளவைப் பொருத்து இந்த நேரம் வேறுபடுகிறது. இந்தச் சமயத்தில்தான் உங்கள் பற்கள் சேதமடைவதாகத் தெரிகிறது. எனவே, உங்கள் பற்கள் எந்தளவு சேதமடைகின்றன என்பது நீங்கள் எவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொருத்தல்ல, மாறாக நீங்கள் எவ்வளவு அடிக்கடி உணவையோ இனிப்பையோ சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொருத்தே இருக்கிறது. நீங்கள் தூங்கும்போது உமிழ்நீர் குறைவாகச் சுரப்பதால், தூங்குவதற்கு முன் இனிப்புப் பண்டத்தைச் சாப்பிட்டுவிட்டு அல்லது இனிப்பு பானத்தைக் குடித்துவிட்டு பல் தேய்க்காமல் தூங்கிவிட்டால் உங்கள் பற்களை நீங்களே கெடுத்துக்கொள்கிறீர்கள். மாறாக, உணவு அருந்திய பிறகு இனிப்பில்லா ‘சூயிங் கம்’மை மென்றால் அது உமிழ்நீரை அதிகமாய்ச் சுரக்கச் செய்து பற்களைப் பாதுகாக்க உதவும் என்பதாகச் சொல்லப்படுகிறது.

வருமுன் காக்கும் பல் மருத்துவம்

உங்கள் பற்களின் நிலைமையைப் பொருத்து வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை தவறாமல் பற்களைப் பரிசோதிக்கும்படி பல் மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். பரிசோதனையின்போது உங்கள் மருத்துவர் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கலாம், பல்லில் சொத்தை விழுந்திருக்கிறதா என கவனமாக ஆராயலாம். குழிகள் இருப்பதாகத் தெரிந்தால், அந்தப் பகுதியை மட்டும் மரத்துப் போகச் செய்ய ஓர் ஊசி போட்டு, அதிவேகத் துளையிடும் கருவியைப் பயன்படுத்தி உங்களுக்கு எந்த வலியும் தெரியாமல் அந்தக் குழிகளை அவர் அடைத்துவிடுவார். அதிகமாய் பயப்படுகிறவர்களுக்கு இப்போதெல்லாம் பல் மருத்துவர்கள் சிலர் லேசர்களைப் பயன்படுத்துகிறார்கள் அல்லது பல்லின் சொத்தையான பகுதியைக் கரைத்துவிடும் ஒருவித ஜெல்லைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் துளையிடும் கருவி அல்லது மரப்பு ஊசி மருந்தின் அவசியம் குறையலாம் அல்லது அவற்றுக்கான அவசியமே இல்லாமற்போகலாம். பிள்ளைகளுக்குச் சிகிச்சை அளிக்கையில் புதிதாய் முளைத்திருக்கும் கடைவாய்ப்பற்களுக்கு மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். டூத் பிரஷ்ஷால் சுத்தம் செய்யக் கடினமாயுள்ள வெடிப்புகள் அல்லது வரிப்பள்ளங்கள் அவற்றின் மேற்பரப்பில் இருக்கின்றனவா என்பதைப் பார்க்கிறார்கள், பிறகு அவற்றை அடைத்துவிடும்படி பல் மருத்துவர் ஆலோசனை தரலாம். அப்படி அடைத்துவிட்டால் பற்களின் மேடுபள்ளம் மறைந்து அதன் மேற்பரப்பு சமமாகிவிடும். பிறகு அதனைச் சுலபமாக சுத்தம் செய்து சொத்தையாகாமல் பாதுகாக்க முடியும்.

பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஈறுகளில் நோய் தொற்றுவதைத் தடுப்பதிலேயே பல் மருத்துவர்கள் அக்கறையாய் இருக்கிறார்கள். எனவே, ஈறுகளில் கெட்டியான பற்காரை படிந்திருந்தால் பல் மருத்துவர் அதைச் சுரண்டி எடுப்பார். ஒவ்வொரு முறையும் பல் தேய்க்கையில் பற்களின் சில பகுதிகளை அநேகர் விட்டுவிடுகிறார்கள். ஆகையால், சிறந்த விதத்தில் நீங்கள் எவ்வாறு பல் தேய்க்கலாம் என்பதை மருத்துவர் உங்களுக்கு விளக்கலாம். அல்லது, சில மருத்துவர்கள் பல் சுகாதார நிபுணரிடம் உங்களை அனுப்பி வைக்கலாம்.

சேதமடைந்த பற்களைச் சீரமைத்தல்

உங்களுடைய பற்கள் சேதமடைந்திருக்கலாம், கோணலாக இருக்கலாம், விழுந்தும் இருக்கலாம்; கவலையே வேண்டாம்! பற்களைச் சீரமைப்பதற்கு பல் மருத்துவர்களிடம் பல புதிய உத்திகள் இருக்கின்றன. ஆனால், இந்தச் சீரமைப்புச் சிகிச்சை அதிக செலவுபிடிப்பதால் உங்களுடைய சக்திக்குமீறி செலவு செய்துவிடாதபடி கவனமாயிருக்க வேண்டும். இருந்தாலும், இந்தச் சீரமைப்புச் சிகிச்சைக்குப் பணம் செலவழிப்பதை அநேகர் பயனுள்ளதாகவே கருதுகிறார்கள். ஒருவேளை, நீங்கள் மென்று சாப்பிடும் திறனை இழந்திருந்தால் பல் மருத்துவர் அதனை மீட்டுத்தரலாம். அல்லது உங்கள் சிரிப்பிற்கு மெருகூட்டலாம். சேதமடைந்த பற்களால் உங்கள் வாழ்க்கை பொலிவிழந்து போகலாம் என்பதால் பற்களின் சீரமைப்பு ஒரு முக்கியமான விஷயமே.

முன்பற்கள் உடைந்தோ கறை படிந்தோ இருந்தால், வெனீர் (veneer) அணியும்படி பல் மருத்துவர் சிபாரிசு செய்யலாம். இது ஒருவேளை ஒளி ஊடுருவும் போர்சிலினால் செய்யப்பட்டிருக்கலாம், பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நிஜ பல்லின் எனாமல் போலவே இருக்கும். சேதமடைந்த பல்லின் மீது பொருத்தப்படுகிற இந்த வெனீர், பற்களுக்குப் புது வடிவத்தையும் பொலிவையும் தருகிறது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பற்களுக்கு டூத் கேப் எனும் செயற்கை மூடியைப் போட்டுக்கொள்ளும்படி பல் மருத்துவர் சிபாரிசு செய்யலாம். இந்தச் செயற்கை மூடி பல்லின் மீதி பாகத்தை முழுவதுமாக மூடி அதற்குப் புதிய தோற்றத்தை அளிக்கிறது. இந்த மூடி தங்கத்தால் தயாரிக்கப்படுகிறது, அல்லது இயற்கைப் பல்லைப் போலவே தோற்றமளிக்கும் வேறெதாவது பொருளால் தயாரிக்கப்படுகிறது.

நீங்கள் பற்களை இழந்திருந்தால் பல் மருத்துவர் உங்களுக்கு எவ்வாறு உதவக்கூடும்? எடுத்து மாட்டிக்கொள்ளக்கூடிய பகுதிச் செயற்கைப் பற்தொகுப்பை (removable partial denture) அவர் உங்களுக்குப் பொருத்துவார். அல்லது, பால இணைப்புப் பற்களைப் (fixed bridge) பொருத்துவார். இது என்னவெனில், இழக்கப்பட்ட பற்களின் இடத்தில் செயற்கைப் பற்களை வைத்து, அவற்றின் இருபக்கங்களிலும் உள்ள பற்களோடு சேர்த்து பாலம் போன்ற அமைப்பை ஏற்படுத்துவதாகும். பிரபலமாகி வரும் இன்னொரு வழி, நீக்கப்பட்ட பல்லுக்குப் பதிலாக புதிய பல்லைப் பொருத்துவதாகும். பல் மருத்துவர், டைட்டேனியம் என்ற உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு ஸ்க்ரூவை பல்லின் எலும்புக்குள் அதாவது நீக்கப்பட்ட பல் முன்பு இருந்த இடத்தில் செருகுகிறார். எலும்பும், ஈறும் வளர்ந்த பிறகு ஒரு செயற்கைப் பல்லை அந்த ஸ்க்ரூவுடன் பொருத்துகிறார். இது கிட்டத்தட்ட நிஜ பல்லைப் போலவே செயல்படுகிறது.

பற்கள் கோணல்மாணலாக இருந்தால் சங்கடமாகவும், சுத்தம் செய்வது கடினமாகவும் இருக்கலாம். அதன் விளைவாக பற்களில் சுலபமாக நோய் தொற்றலாம். பற்கள் வரிசையாக இல்லாவிட்டால் கடிக்கும்போது வலி ஏற்படலாம், மென்று சாப்பிடுவதும் கடினமாகிவிடலாம். ஆனால், பொதுவாக இப்படிப்பட்ட பிரச்சினைகளை “கிளிப்” போட்டு பல் மருத்துவர்கள் சரிசெய்துவிடுகிறார்கள் என்பது சந்தோஷமான செய்தி. “கிளிப்” தயாரிப்பில் இப்போது நவீன டிசைன்கள் வந்துவிட்டதால் அவை மற்றவர்களுக்குப் பளிச்செனத் தெரிவதில்லை, அடிக்கடி அவற்றை அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை.

பல் மருத்துவர்கள் சிலர் வாய் துர்நாற்றத்திற்குச் சிகிச்சை அளிக்க அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அநேகருக்கு வாய் துர்நாற்றம் எப்போதாவது இருக்கும், சிலருக்கு அது எப்போதுமே இருக்கும். அதற்குப் பல காரணங்கள் உள்ளன. பல் மருத்துவர்கள் சிலர் அதற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் திறமை பெற்றிருக்கிறார்கள். அநேகருக்கு, நாக்கின் பின்பகுதியிலுள்ள பாக்டீரியாவாலேயே இது பெரும்பாலும் ஏற்படுகிறது. டூத் பிரஷ்ஷால் நாக்கைத் தேய்ப்பதன் மூலமாகவோ சுரண்டுவதன் மூலமாகவோ வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம். அதுபோலவே இனிப்பில்லா ‘சூயிங் கம்’மைச் சவைப்பதன்மூலம் உமிழ்நீரை அதிகமாகச் சுரக்கச் செய்தும் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம். முக்கியமாக பாலினால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், இறைச்சி, அல்லது மீன் ஆகியவற்றைச் சாப்பிட்ட பிறகு வாயைச் சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.

பயத்தை மேற்கொள்ளுதல்

பல் மருத்துவரிடம் செல்ல நீங்கள் பயப்படுகிறீர்களா? உங்கள் பல் மருத்துவர் உங்களைப் பயமுறுத்த அல்ல உங்கள் பயத்தைப் போக்கவே விரும்புவார். அதனால் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை அவரிடம் சொல்லுங்கள். சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கையில் உங்களுக்கு வலி எடுத்தாலோ பயம் வந்தாலோ கையினால் எப்படிச் சைகை காட்டுவது என்பதுபற்றி அவரிடம் பேசுங்கள். இப்படிச் செய்வதால் தங்கள் பயம் குறைவதாக அநேக நோயாளிகள் கூறுகிறார்கள்.

ஒருவேளை மருத்துவர் உங்களைத் திட்டுவாரோ என நீங்கள் பயப்படலாம். உங்கள் பற்களைச் சரியாகப் பராமரிக்காததால் மருத்துவர் உங்களை கேவலமாகப் பேசிவிடுவாரோ என நீங்கள் கவலைப்படலாம். ஆனால், மருத்துவர் அப்படியெல்லாம் பேசினால் அவரிடம் அடுத்தமுறை யாரும் போகமாட்டார்கள், அதனால் திட்டு விழுமோ என நீங்கள் பயப்படத் தேவையில்லை. அநேக பல் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளிடம் அன்பாகவே பேச விரும்புகிறார்கள்.

பல் மருத்துவரிடம் சென்றால் நிறைய செலவாகுமெனப் பயந்து அநேகர் பல் மருத்துவரிடம் போவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால், இப்போதே உங்களுடைய பற்களை நீங்கள் பரிசோதனை செய்துகொள்ள முடிந்தால், பின்னர் வரக்கூடிய பல் பிரச்சினைகளையும், அதிக பணம் செலவாகிற சிகிச்சைகளையும் தவிர்க்கலாம். பல இடங்களில், ஒவ்வொருவருடைய தகுதிக்கு ஏற்ற விதமாக பலதரப்பட்ட பல் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மிகச் சாதாரண பல் மருத்துவமனையிலும் பெரும்பாலும் எக்ஸ்ரே கருவியும் அதிவேகத் துளையிடும் கருவியும் இருக்கின்றன. பல் மருத்துவர்கள் அளிக்கிற அநேக சிகிச்சைகள் நோயாளிகளுக்குச் சிறிதளவு வலியையே உண்டாக்குகின்றன. பகுதி மரப்பு ஊசி மருந்தை அநேக மக்கள், ஏன், அந்தளவு வசதியில்லாதவர்கள்கூட வாங்க முடிகிற அளவுக்கு அவற்றின் விலை குறைவாகவே இருக்கிறது.

பல் மருத்துவர்கள் வலியை ஏற்படுத்துவதில்லை; மாறாக வலிக்கு நிவாரணம் அளிக்கவே முயற்சி செய்கிறார்கள். உங்கள் தாத்தா பாட்டி காலத்தில் இருந்ததைப் போல பல் மருத்துவம் இன்று பயங்கரமான அனுபவமாக இருப்பதில்லை. ஆரோக்கியமான பற்கள் உடல் நலத்தை மேம்படுத்தி, வாழ்க்கையில் இன்பம் காண உதவுவதால் நீங்கள் ஏன் பல் மருத்துவரை நாடக்கூடாது? போய்தான் பாருங்களேன், நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

[அடிக்குறிப்பு]

a பல் மருத்துவர் தன் நோயாளிக்கு எப்படி உதவ முடியும் என்பதைக் குறித்து இக்கட்டுரை கலந்தாலோசிக்கிறது. உங்கள் பற்களைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்துகொள்ள டிசம்பர் 8, 2005 விழித்தெழு! இதழில் வெளிவந்த “முத்துப்பல் சிரிப்பிற்கு” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.

[பக்கம் 29-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஆரோக்கியமான பற்களின் கட்டமைப்பு

பற்தலை

எனாமல்

பற்திசு

நரம்புகளும் இரத்தக் குழாய்களும் உடைய பற்கூழின் அறை

வேர்

ஈற்றுத் திசு (gingiva)

எலும்பு

[பக்கம் 29-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பல் சொத்தை

குழி

குழியை அடைத்தல் குழிகள் மேலும் பெரிதாகாமல் தடுக்கிறது

[பக்கம் 29-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

ஈறு சம்பந்தப்பட்ட நோய்

பற்படலம் டூத் பிரஷ்ஷாலோ ஃப்ளாஸாலோ அகற்ற வேண்டும்

பற்காரை அகற்றுவது கடினம், ஈறுகள் பற்களிலிருந்து விலகிவிடலாம்

விலகியிருக்கும் ஈறுகள்

[பக்கம் 30-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பற்களைச் சீரமைத்தல்

வெனீர், பல்லோடு ஒட்டப்படுகிறது

டூத் கேப்

செயற்கைப் பல்

பாலம் செயற்கைப் பல்லை வைத்து அதன் இருபக்கங்களிலுமுள்ள பற்களோடு இணைத்துப் போடப்படுகிறது