வெனிஸின் நீர்வழிப் பாதைகளில் “கறுப்பு அன்னம்”
வெனிஸின் நீர்வழிப் பாதைகளில் “கறுப்பு அன்னம்”
இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
எங்கும் காணப்படுகிற ஈரமான சுவர்களையும், வில் போல் வளைந்திருக்கும் கற்பாலங்களையும், அலங்காரச் சித்திர வேலைப்பாடுள்ள சன்னல்களையும், மலர்கள் பூத்துக்குலுங்கும் முகப்புடைய மாடிகளையும் கடந்து நீர்வழிப் பாதையில் அது மெதுவாகச் செல்கிறது. அது கறுப்பாகவும் நளினமாகவும் இருக்கிறது, அமைதியாகவும் செல்கிறது. தூரத்திலிருந்து பார்த்தால் கறுப்பு அன்னத்தைப்போலவே இருக்கிறது. அதன் உடற்பகுதி மரத்தால் ஆனதாகவும் அதன் கழுத்துப் பகுதி மென்மையாகவோ இறகுகள் நிறைந்தோ இல்லாமல் உலோகத்தால் ஆனதாகவும் இருக்கிறது. எனினும், கறுத்த அன்னத்தைப் போலவே கம்பீரமாக, இத்தாலியின் வெனிஸ் நகர நீர்வழிப் பாதைகளில் இது வலம் வருகிறது. இது என்ன? இதுதான் காண்டலா படகு; உலகில் மிகப் பிரசித்திபெற்ற படகுகளில் ஒன்றாக இதைச் சிலர் கருதுகிறார்கள். இது பிறந்த கதை என்ன? இது ஏன் இந்தளவு பிரபலமாய் இருக்கிறது? இது எந்த விதத்தில் மற்ற படகுகளிலிருந்து வித்தியாசப்படுகிறது?
பிறந்த கதை
எப்போது முதன்முதலாக காண்டலா உருவாக்கப்பட்டது என்பதைத் திட்டவட்டமாகச் சொல்வது எளிதல்ல; எனினும், பொ.ச. 11-ஆம் நூற்றாண்டில் இது உருவாக்கப்பட்டதாக சிலர் நம்புகிறார்கள். 15-ஆம் நூற்றாண்டின் முடிவில் தீட்டப்பட்ட ஓவியங்களில் முதன்முதலாக இது இடம்பெற்றது. எனினும், 17-ஆம், 18-ஆம் நூற்றாண்டுகளில்தான் இது தனிச்சிறப்புமிக்க வடிவத்தைப் பெற்றது; இந்த வடிவமே இதைப் பிரபலமாக்கி, மற்ற படகுகளிலிருந்து வேறுபட்டு நிற்கச் செய்கிறது. ஏற்கெனவே இந்த காண்டலா படகின் அடிபாகம் சமதளமாய் இருந்தது; ஆனால், அந்தக் காலகட்டத்தில் இது நீண்டு ஒடுங்கியதாகவும், இரும்பாலான முகப்பை உடையதாகவும் விசேஷ வடிவமைப்பைப் பெற ஆரம்பித்தது.
காண்டலா என்ற பெயர் பிறந்தது எப்படி என்பதையும்கூட திட்டவட்டமாகச் சொல்வது எளிதல்ல. “காண்டலா” என்ற வார்த்தை, சிறிய படகைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிற குயம்புலா என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாக அல்லது காண்கூலா என்ற வார்த்தையிலிருந்து வந்ததாக சிலர் சொல்கிறார்கள். காண்கா என்ற வார்த்தை மருவி காண்கூலா என்று ஆனது; அதற்குச் “சிப்பி” என்று அர்த்தம்.
வெனிஸின் தனிச்சிறப்புக்குரியது
எதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாவிட்டாலும், இந்தப் படகுக்கும் வெனிஸுக்கும் பலமான பந்தம் இருப்பதை நாம் உறுதியாய் நம்பலாம். சொல்லப்போனால், இந்த நகரத்தின் மிக முக்கியமான அடையாளச் சின்னமாக காண்டலா விளங்குகிறது. காண்டலா இடம்பெற்றிருக்கும் வெனிஸின் படங்கள் அனைத்தையும் சற்று சிந்தித்துப் பாருங்கள்.
இந்தப் படகுக்கும் இந்நகரத்துக்கும் இடையே நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்தும் வேறொரு அம்சமும் இருக்கிறது. நீர்வழிப் பாதைகளில் காண்டலாவில் பயணம் செய்யும்போது “வெனிஸ் நகரைப்பற்றி முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் அநேக விஷயங்களைத் தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் மேலோட்டமான காட்சிகளை மட்டுமே பார்க்க மாட்டீர்கள், உள்ளபடி அதை நன்கு தெரிந்துகொள்வீர்கள்” என்கிறார் ரோபர்டோ; இவர், சுற்றுலாப் பயணிகளை காண்டலாவில் ஏற்றிக்கொண்டு இங்குள்ள நீர்வழிப் பாதைகளில் செல்கிற படகோட்டி. “காண்டலாவில் ஏறி சாய்ந்து உட்கார்ந்த உடனேயே தான் ஏட்ரியாடிக் கடலின் தலைவன் என்ற நினைப்பு எந்த வெனிஸ்வாசிக்கும் வந்துவிடுகிறது” என்று யோஹான் வால்ஃப்காங் ஃபான் கேர்தா என்ற பிரபல ஜெர்மானிய எழுத்தாளர் குறிப்பிட்டார்; இந்தப் படகில் ஏறியபோது தனக்கும் அந்த நினைப்பு வந்ததாக அவர் குறிப்பிட்டார். “காண்டலா மெல்ல மெல்ல மிதந்து செல்வது வெனிஸ் சூழலுக்குக் கனகச்சிதமாய் பொருந்துகிறது. மெத்தென்ற இருக்கைகளில் உட்கார்ந்து அனுபவிக்கும் சுகமான தாலாட்டு, அவசர உணர்வை மாற்றி, சாவகாசமான உணர்வைத் தருகிறது” என்கிறார் ரோபர்டோ.
காண்டலாவின் சிறப்பம்சங்கள்
காண்டலாவில் ஒரே ஒரு துடுப்பு மட்டுமே அதன் வலப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளது; அப்படியிருந்தும் அது நேராகச் செல்வதைக் கவனிக்கும்போது ஆச்சரியத்தில் உங்கள் கண்கள் விரியலாம். பார்க்கப்போனால், படகு நேராகச் செல்வதற்குத் துடுப்பு வலிப்பதில் மாற்றம் செய்துகொண்டே இருக்க வேண்டும், இல்லாவிட்டால் படகு ஒரு பக்கமாகத் திரும்பி வட்டமடிக்க ஆரம்பித்துவிடும்; ஆனால், காண்டலாவைப் பொறுத்தவரை அப்படியல்ல. ஏன்? சரித்திரப் புகழ்பெற்ற படகுகளின் ஆராய்ச்சி நிபுணரான ஜில்பர்டோ பென்ஸோ இவ்வாறு எழுதுகிறார்: “படகின் கட்டமைப்பை, தலை, கைகால் இல்லாத மனித உடற்பகுதியாக உருவகப்படுத்தலாம்; நீண்டு கிடக்கும் படகின் அடிக்கட்டை முதுகெலும்பாகவும், படகின் சட்டங்கள் விலா எலும்புகளாகவும் இருக்கிறதென்றால், ஸ்கோலியோசிஸ் எனப்படும் முதுகெலும்புப் பக்கவாட்டு வளைவு நோயால் காண்டலா மோசமாய் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லலாம்.” வேறு வார்த்தைகளில் சொன்னால், படகின் சட்டங்கள் இருபுறத்திலும் சமச்சீராக இருப்பதில்லை; இடப்புறத்தைவிட வலப்புறம் 24 சென்டிமீட்டர் குறைவான அகலமுடையதாய் இருக்கிறது. இதனால், காண்டலா மிதக்கும்போது அதன் இடப்புறத்தைவிட வலப்புறம் தாழ்வாக தண்ணீரில் மூழ்கியிருக்கிறது. இப்படி ஒருபுறம் சரிந்திருப்பது, ஒரே ஒரு துடுப்பைப் பயன்படுத்தி காண்டலாவை உந்தித் தள்ளுவதற்கும், மையத்திலிருந்து சற்றே விலகி நின்று படகோட்டி துடுப்பு வலிக்கையில் அவருடைய எடைக்கு ஈடுகொடுத்து அதை நேராகச் செலுத்துவதற்கும் உதவுகிறது.
இந்த ‘அன்னத்தின்’ சிறப்பம்சங்களில் ஒன்று இதன் கழுத்துப் பகுதியாகிய முகப்பு ஆகும். பின்புற முனையில் உள்ள இரும்பு தவிர, இந்தப் படகின் முகப்பில் மட்டுமே உலோகம் காணப்படுகிறது. இதன் முகப்பு, “பார்ப்பவர்களைச் சுண்டி இழுப்பதாலும் தனித்துத் தெரிவதாலும்,
முதன்முறையாக இதைப் பார்ப்பவர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிடுகிறது” என்கிறார், எழுத்தாளர் ஜான்ஃபிரான்ங்கோ மூனிராட்டோ. முன்பெல்லாம், பின்பக்கமிருந்து படகோட்டி துடுப்பு வலிக்கும்போது இரும்பாலான முகப்பு சரிசமமாய் ஈடுகொடுத்து வந்தது; இப்போதோ, அந்த முகப்பு அலங்காரமாக மட்டுமே விளங்குகிறது. பாரம்பரியத்தின்படி, அதன் முகப்பில் பொருத்தப்பட்டுள்ள மெல்லிய, தட்டையான தகடுகள், ஆறு செஸ்டைரி-ஐ, அதாவது வெனிஸ் நகரம் கூறுபோடப்பட்டுள்ள அண்டைப் பகுதிகளைக் குறிக்கின்றன; கழுத்தின் பின்புறத்தில் சிறியதாகத் துருத்திக்கொண்டிருக்கிற பல்போன்ற அமைப்பு, வெனிஸுக்குச் சொந்தமான ஜூடிக்கா தீவைக் குறிக்கிறது. முகப்பில் “S” வடிவிலுள்ள இரட்டை வளைவு, வெனிஸின் கிரான்ட் கேனாலின் வடிவத்தைக் குறிக்கிறது.காண்டலாவின் மற்றொரு சிறப்பம்சம், இதன் கறுத்த “இறக்கைகளாகும்.” இந்தப் படகுகள் கறுப்பு நிறத்தில் காணப்படுவதற்கு ஏதேதோ விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு விளக்கத்தின்படி, 16-ஆம், 17-ஆம் நூற்றாண்டுகளின்போது மட்டுக்குமீறிய அளவில் காண்டலாக்கள் பகட்டாகவும், வண்ண வண்ண நிறங்களிலும், சொகுசு மிக்கவையாகவும் இருந்தன; அவ்வாறு மட்டுக்குமீறிப் போகாதிருப்பதை ஊக்குவிப்பதற்காக வெனிஸின் ஆட்சிப் பேரவை, பளபளவென கண்ணைப் பறிக்கும் விதத்தில் காண்டலாக்களை அலங்கரிக்கும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நிர்ப்பந்தத்தை எதிர்ப்பட்டது. ஆனால் அநேகர், அலங்கரிப்பதை நிறுத்துவதற்குப் பதிலாக அபராதம் செலுத்தத் தயாராக இருந்தார்கள். இதனால், எல்லா காண்டலாக்களுக்கும் கறுப்பு வண்ணம் அடிக்கும்படி நீதிபதி ஆணை பிறப்பித்ததாகச் சொல்லப்படுகிறது. இன்னொரு விளக்கத்தின்படி, பிளாக் டெத் எனும் கொள்ளை நோய்க்குப் பலியான ஆயிரக்கணக்கானவர்களுக்குத் துக்கம் அனுஷ்டிப்பதற்கு அடையாளமாக இந்த கறுப்பு வண்ணம் அடித்ததாகச் சொல்லப்படுகிறது. இன்னுமொரு விளக்கத்தின்படி, வெனிஸ் மேல்குடி பெண்மணிகள் வெள்ளை வெளேரென இருப்பதை எடுப்பாகக் காட்டுவதற்காக காண்டலாவிற்குக் கறுப்பு வண்ணம் அடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நிஜம் இதுதான்: காண்டலாவிற்குள் நீர்புகாதிருப்பதற்காகப் பூசப்பட்ட நிலக்கீலிலிருந்தே இது ஆரம்பத்தில் கறுப்பு நிறத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
சலனமற்ற தண்ணீரில் மெல்ல மெல்ல நீந்தும் கறுப்பு அன்னத்தின் முதுகில் அமர்ந்து சவாரி செய்த பிறகு, உங்கள் பயணத்தை ஆரம்பித்த படகுத் துறையின் படிக்கட்டுகளை அடைகிறீர்கள். வெகுதூரம் காண்டலா செல்வதைக் கண்கொட்டாமல் பார்க்கையில், அந்த அன்னம் தன் நீண்ட கழுத்தைத் திருப்பி, கலைந்து கிடைக்கும் தன் இறகுகளைக் கோதிக்கொள்ளாதோ என ஒரு கணம் நினைக்கத் தோன்றுகிறது.
[பக்கம் 24-ன் படம்]
காண்டலாவின் சட்டங்கள் இருபுறமும் சமச்சீராக இல்லை
[பக்கம் 24, 25-ன் படம்]
தனித்துத் தெரிகிற முகப்பு
[பக்கம் 25-ன் படம்]
வெனிஸ் நீர்வழிப் பாதைகளில் காண்டலாவைச் செலுத்தும் படகோட்டி ரோபர்டோ
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
© Medioimages