Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

◼ சுகப்பிரசவத்தைக் காட்டிலும் சிசேரியன் செய்யும்போது தாய் இறப்பதற்கான அபாயம் மூன்று மடங்குக்கும் அதிகமாய் இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.​—⁠அப்ஸ்டெட்ரிக்ஸ் அண்டு கைனகாலஜி, அ.ஐ.மா.

◼ விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் இந்தப் பொதுப்படையான கேள்வியை இன்டர்நெட்டில் எழுப்பினார்: “அரசியலும் சமுதாயமும் சுற்றுச்சூழலும் தாறுமாறாக இருக்கும் இந்த உலகில், மனிதர் இன்னும் 100 வருடங்களுக்கு எப்படி வாழப் போகிறார்கள்?” ஒரு மாதம் கழித்து அவர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “இதற்கு எனக்குப் பதில் தெரியவில்லை. இதைக் குறித்து மக்களை யோசிக்க வைக்கவும், இப்போது நாம் சந்திக்கிற அபாயத்தைப் புரிய வைக்கவும்தான் இந்தக் கேள்வியை எழுப்பினேன்.”​—⁠த கார்டியன், பிரிட்டன்.

◼ டான்ஜானியாவிலுள்ள 3 கோடியே 70 லட்சம் பேரில் ஒவ்வொரு ஆண்டும் 1 கோடியே 40 லட்சத்திலிருந்து 1 கோடியே 90 லட்சம் வரையான ஆட்கள் மலேரியாவால் அவதிப்படுகிறார்கள். “இந்நாட்டில் ஆண்டுதோறும் இந்த நோய் சுமார் 1,00,000 உயிர்களைக் காவுகொள்கிறது.”​—⁠த கார்டியன், டான்ஜானியா.

குடிநீரைப் பாதுகாக்கும் மீன்

வட அமெரிக்காவிலுள்ள பல நகரங்கள், குடிநீர் மாசுபடுகிறதாவென கண்காணிப்பதற்கு ஒருவகை மீனை (Lepomis macrochirus) பயன்படுத்துகின்றன; சுற்றுச்சூழலில் இரசாயனங்கள் இருப்பதை உணர்ந்துகொள்வதில் இந்த மீன்கள் கில்லாடிகள். “நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள சிறிய தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் தொடர்ந்து நிரப்பப்படும்; அவற்றில் இந்த மீன்கள் சில விடப்படுகின்றன; இந்தத் தண்ணீரில் நச்சுத்தன்மையுள்ள பொருள்கள் கலந்துவிடும்போது இவற்றின் சுவாசத்திலும், இதயத்துடிப்பிலும், நீந்தும் விதங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன; இந்த மாற்றங்களைப் பதிவுசெய்வதற்காக அங்குள்ள சென்ஸார்கள் 24 மணிநேரமும் செயல்படுகின்றன” என்று அசோஸியேட்டட் பிரெஸ் செய்தித்தாளின் அறிக்கை குறிப்பிட்டது. நியு யார்க் சிட்டியில் ஒருசமயம், “தண்ணீரில் டீசல் கலந்திருந்ததை இந்த மீன் மற்ற . . . கருவிகள் கண்டறிவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பே கண்டறிந்தது”; இவ்வாறு, நச்சுத்தன்மையுள்ள இந்தத் தண்ணீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிற குடிநீரில் கலந்துவிடாதபடி தடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

நிக்கோடின் அளவு அதிகரிப்பு

ஒருபக்கம் பொதுநல அமைப்புகள் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தும்படி புகைப்பவர்களை வலியுறுத்துகையில் மறுபக்கம், புகையிலை நிறுவனங்களோ நிக்கோடின் அளவுகளை அதிகரிப்பதன்மூலம் புகைப்பதை ஊக்குவிக்கின்றன; இவ்வாறு, நிக்கோடின் அளவை “கடந்த ஆறு வருடங்களில் 10 சதவீதம்” அதிகரிப்பதன்மூலம் “தந்திரமாக சிகரெட்டுகளுக்கு மனிதர்களை அடிமையாக்கி வருகின்றன” என்று த நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. புகைபிடிப்பவர்களின் பழக்கவழக்கங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும் வகையில் ஒரு புதிய சோதனை முறை பயன்படுத்தப்பட்டது. சிகரெட்டிலுள்ள நிக்கோடின் அளவைக் கண்டறிவதற்காக இச்சோதனை நடத்தப்பட்டது. அப்போது, புகையிலை நிறுவனங்கள் “இளைஞர்களை எப்படியாவது தங்கள் வலையில் விழவைக்கவும்,” ஏற்கெனவே புகைப்பழக்கம் உடைய “பெரியவர்களைத் தங்கள் பிடியிலிருந்து நழுவவிடாமல் பார்த்துக்கொள்ளவும்” முயற்சி செய்து வருவது வெட்டவெளிச்சமானது. இவ்வாறு சோதனைகள் செய்ததில், “கிட்டத்தட்ட [சிகரெட்டுகளின்] எல்லா பிராண்ட்களிலுமே, புகைக்கும்போது வெளிவருகிற நிக்கோடினின் அளவு அதிகமாக இருப்பது தெரிய வந்தது. நிக்கோடினுக்கு அடிமையாவதை அதிகரிக்கவே இப்படிச் செய்யப்பட்டுள்ளது.”

சிந்திப்பதைச் செயல்படுத்தும் செயற்கை கை

அமெரிக்காவிலுள்ள ஒருவருடைய இரண்டு கைகளும், விபத்திற்குப் பிறகு தோள்பட்டையிலிருந்து துண்டிக்கப்பட்டன. இப்போது அவர் மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குகிற செயற்கை கையைப் பயன்படுத்துகிறார். அவரால் ஏணியில் ஏற முடிகிறது, பெயிண்ட் உருளையைப் பயன்படுத்த முடிகிறது, தன் பேரப்பிள்ளைகளை அரவணைக்கவும்கூட முடிகிறது. “அவருடைய இடது கை உயிரியப் பயனியல் (bionic) கருவியாக இருக்கிறது; அதை அவருடைய மூளை கட்டுப்படுத்துகிறது” என கேபிள் நியூஸ் நெட்வர்க் விளக்குகிறது. “‘கையை மூட வேண்டும்’ என்று அவர் நினைத்தால், அறுவை சிகிச்சையால் பாதை மாற்றப்பட்ட நரம்புகள் ஏந்திச் செல்கிற மின் செய்திகள் அவருடைய கையை மூட வைக்கின்றன.” யோசிக்கும்போது ஏற்படும் உணர்ச்சிகளால் தசைகள் இயங்குவதை மின்வாய்கள் (Electrodes) கண்டறிந்து கையிலுள்ள கம்ப்யூட்டருக்கு அதைத் தெரிவிக்கின்றன. செயற்கையான கையை இயக்குகிற சிறிய இயந்திரங்களை கம்ப்யூட்டர் செயல்படுத்துகிறது; இதனால் சாதாரணமாக முழங்கையும் கையும் செய்கிற அசைவுகளை செயற்கை கையின் பாகங்கள் அப்படியே செய்கின்றன.

ஆயிரமாயிரம் புதிய இனங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 17,000 புதிய இனங்கள் கண்டறியப்படுவதாக டஹிட்டியில் வெளியாகும் ஃபெனூவா இன்ஃபோ செய்தித்தாள் தெரிவிக்கிறது. இவ்வாறு கண்டறியப்பட்டவற்றில் ஏறத்தாழ 75 சதவீதம் பூச்சிகளே; அதோடு, சுமார் 450 முதுகெலும்புள்ள பிராணிகளும் 250 வகை மீன்களும் 20-⁠லிருந்து 30 வகை பாலூட்டிகளும்கூட இருந்தது கண்டறியப்பட்டது. இந்தப் புதிய பாலூட்டிகளில், மூன்றுக்கு இரண்டு என்ற வீதத்தில் எலி, அணில் போன்ற கொறித்துத் தின்னும் பிராணிகளும் வௌவால்களும் இருந்தன; அதோடு, “ஒவ்வொரு வருடமும் சராசரியாக ஒரு புதிய பாலூட்டி இனம் கண்டறியப்படுகிறது” என்பதாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது; இது ஆச்சரியம் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு கண்டறியப்பட்டவற்றின் பட்டியலில் மரங்களும் செடிகளும்கூட இடம்பெற்றுள்ளன.