Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சர்க்கஸை விட்டு சத்தியத்திற்கு!

சர்க்கஸை விட்டு சத்தியத்திற்கு!

சர்க்கஸை விட்டு சத்தியத்திற்கு!

மார்ஸேலா நியீம் சொன்னபடி

உருகுவே நாட்டில் மான்டிவிடியோ நகரத்தில் நான் பிறந்தேன். என் பெற்றோர் கடவுளுக்குப் பயந்து நடந்தாலும் எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. எனக்குச் சுமார் நான்கு வயது இருந்தபோது என் அம்மா ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அதனால் சொந்தக்காரர்கள்தான் என்னை வளர்த்தார்கள், நல்ல ஒழுக்கநெறிகளைக் கற்றுத் தந்தார்கள். எனக்கு 20 வயதானபோது வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று அவற்றின் கலாச்சாரங்களைத் தெரிந்துகொள்ள தீர்மானித்தேன்.

கொலம்பியா நாட்டில் சர்க்கஸ் கம்பெனி ஒன்றில் எடுபிடி வேலையில் சேர்ந்தேன். பார்வையாளர்கள் கைதட்டி பாராட்டியபோது உச்சிகுளிர்ந்து போன சர்க்கஸ் கலைஞர்களைக் கவனித்தேன். நானும் அவர்களைப் போல ஆக விரும்பினேன். அதனால் சைக்கிளில் சாகசங்கள் செய்ய பழகிக்கொண்டேன். முடிந்தளவு சிறிய சிறிய சைக்கிள்களில் வித்தை பழகி கடைசியில் 12 சென்டிமீட்டரே நீளமுள்ள சைக்கிளை ஓட்டினேன். உலகிலுள்ள மிகச் சிறிய சைக்கிள்களில் இதுவும் ஒன்று. என் உள்ளங்கையில் வைத்துக்கொள்ளுமளவு இது மிகச் சிறியதாய் இருந்தது. எனவே, கிட்டத்தட்ட தென் அமெரிக்கா முழுவதும் ஓரளவு பிரபலமடையத் தொடங்கினேன். 25 வயதில் நான் மெக்சிகோவுக்குப் போனேன், அங்கே பல சர்க்கஸ் கம்பெனிகளில் பணியாற்றினேன்.

வாழ்க்கை அடியோடு மாறியது

சர்க்கஸில் வேலை பார்த்தால் நிறைய இடங்களுக்குப் பயணம் செய்யலாம், சிறந்த ஹோட்டல்களில் தங்கலாம், அதுமட்டுமா, பெயர்போன உணவகங்களிலும் சாப்பிடலாம்; அதனால்தான் இந்த வேலையை மிகவும் நேசித்தேன். ஆனால், என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாததாக உணர்ந்தேன், எனக்கு எந்த எதிர்கால நம்பிக்கையும் இருக்கவில்லை. ஒரு நாள் மதியம் என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. சர்க்கஸ் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துபவர் தனக்குக் கிடைத்த ஒரு புத்தகத்தை எனக்குக் கொடுத்தார். அது, வெளிப்படுத்துதல்​—⁠அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகம். a அன்று சர்க்கஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, விடியவிடிய அதனை வாசித்தேன். அந்தப் புத்தகத்திலுள்ள விஷயங்களைப் புரிந்துகொள்வது கடினமாய் இருந்தது. என்றாலும், சிவப்புநிற மிருகத்தையும் வேசியையும் பற்றிய விளக்கங்கள் என்னைக் கவர்ந்தன. (வெளிப்படுத்துதல் 17:3–18:8) நான் ஒரு டிரெய்லர் வண்டியை வாங்கியிருந்தேன். அதைச் சுத்தம் செய்தபோது இன்னொரு புத்தகத்தைக் கண்டுபிடித்தேன். அதே பிரசுரிப்பாளர்கள். அதன் பெயர் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம். அதைச் சுலபமாய் புரிந்துகொள்ள முடிந்தது. அதிலுள்ள விஷயங்களை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று உணர்ந்தேன். அதனால், படித்த விஷயங்களை நான் சந்தித்த எல்லாரிடமும் உடனே சொல்ல ஆரம்பித்தேன்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு யெகோவாவின் சாட்சிகளைக் கண்டிப்பாகத் தொடர்புகொள்ள வேண்டுமென நினைத்தேன். என் நண்பருக்கு வெளிப்படுத்துதல் உச்சக்கட்டம் புத்தகத்தைக் கொடுத்த அந்த யெகோவாவின் சாட்சி அதில் தன் ஃபோன் நம்பரையும் எழுதியிருந்தாள். அந்த நம்பருக்கு ஃபோன் செய்தேன். அவளுடைய அப்பா, மெக்சிகோவிலுள்ள டிஜுயெனா நகரில் நடைபெறவிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டிற்கு வரும்படி என்னை அழைத்தார். அங்கு எல்லாரும் அன்பாக பழகியதைப் பார்த்து திகைத்துப்போனேன். இதுதான் உண்மையான மதம் என்பதைப் புரிந்துகொண்டேன். வெவ்வேறு இடங்களில் சர்க்கஸ் நடத்தப்பட்டபோது அங்கிருந்த ராஜ்ய மன்றங்களுக்குச் சென்றேன். அங்கிருந்து பிரசுரங்களைப் பெற்று வந்து, சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்தேன்.

நான் சரியானதைத்தான் செய்தேன் என்பதற்கு அத்தாட்சி அளிக்கும் விதத்தில் இன்னொரு சம்பவம் நடந்தது. கிறிஸ்துவின் மரண நினைவுநாள் ஆசரிப்புக்கு வரும்படி சாட்சிகள் என்னை அழைத்தார்கள். கிறிஸ்தவர்கள் இதில் கலந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும் அவர்கள் எனக்கு விளக்கினார்கள். அன்று மாலை, அந்த இடத்தில் முதல்நாளாக சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெறவிருந்ததால் நினைவுநாள் ஆசரிப்புக்குப் போக முடியாது என நினைத்தேன். அது குறித்து யெகோவாவிடம் உருக்கமாய் வேண்டினேன். ஆச்சரியமான காரியம் ஒன்று சம்பவித்தது. நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பு மின்தடங்கல் ஏற்பட்டது! அதனால், நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொள்ளவும் பிறகு வந்து சர்க்கஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவும் என்னால் முடிந்தது. இது, யெகோவா என் ஜெபத்திற்குப் பதில் அளித்ததுபோல் இருந்தது.

வங்கியில் ஒரு சமயம் வரிசையில் காத்திருந்தபோது அங்கிருந்தவர்களுக்குத் துண்டுப்பிரதிகளைக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அதைப் பார்த்த ஒரு கிறிஸ்தவ மூப்பர் என் ஆர்வத்தைப் பாராட்டினார். சபையோடு சேர்ந்து முறையாகப் பிரசங்கிக்கும்படி அவர் என்னை உற்சாகப்படுத்தினார். அப்படிப் பிரசங்கிப்பதற்கு என் வாழ்க்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அன்பாக எனக்கு விளக்கினார். இதைக் குறித்து நான் யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில், அமெரிக்காவிலுள்ள சர்க்கஸ் கம்பெனி ஒன்று கைநிறைய சம்பளம் தருவதாகச் சொல்லி என்னை வேலைக்கு அழைத்தது. என்னால் தீர்மானமே எடுக்க முடியவில்லை. அமெரிக்காவுக்குச் செல்ல ஆசையாய் இருந்தாலும் அங்கு சென்ற பிறகு இந்தப் புதிய பாதையில் என்னால் தொடர முடியுமா என்பது சந்தேகமாகவே இருந்தது. எனக்கு வந்த முதல் பரிட்சை இது. ஆனால், நான் யெகோவாவை ஏமாற்ற விரும்பவில்லை. நான் சர்க்கஸ் தொழிலை விட்டுவிட்டேன். அதைப் பார்த்து என் சகாக்கள் ஆச்சரியப்பட்டார்கள். இருந்தாலும், நான் சபையின் அங்கத்தினன் ஆனேன், என் நீளமான முடியை வெட்டிக்கொண்டேன். யெகோவாவைச் சேவிக்க தகுதிபெற என் வாழ்க்கையில் வேறு மாற்றங்களையும் செய்தேன்.

திருப்தியான வாழ்வு, வருத்தமே இல்லை

1997-⁠ல் யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெறுவதற்குச் சற்று முன்பு, இரண்டாவது பரிட்சையை எதிர்ப்பட்டேன். மறுபடியும் அமெரிக்காவுக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையோ, மியாமி நகரில் நடைபெறவிருந்த பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் என் சாகசங்களைச் செய்துகாட்ட வேண்டியிருந்தது. எல்லா செலவுகளையும் கம்பெனியே ஏற்றுக்கொள்ள முன்வந்தது. நானோ யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற விரும்பினேன். அதனால், எனக்குக் கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பிரதிநிதிகளுக்கோ ஆச்சரியம் தாளவில்லை.

சர்க்கஸ் தொழிலை விட்டுவிட்டதற்காக வருந்துகிறேனா என சிலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் பதில்: என்னுடைய முந்தைய வாழ்க்கைக்காக, யெகோவாவின் நட்பையும் அன்பையும் ஒரு நாளும் இழக்க தயாராய் இல்லை. நான் இப்போது கிறிஸ்தவ ஊழியத்தில் முழுநேரம் ஈடுபடுகிறேன். இந்த ஊழியம், உலகில் எனக்குப் பேரையோ புகழையோ பணத்தையோ சம்பாதித்துத் தருவதில்லை. என்றாலும், இப்போது எதுவுமே இல்லாததுபோல் நான் உணருவதில்லை. பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் வாழும் அருமையான எதிர்பார்ப்பையும் உயிர்த்தெழுந்து வரும் என் அம்மாவை வரவேற்கும் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறேன்.​—யோவான் 5:28, 29.

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை.