Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சென்ட் தயாரிப்பவர்களின் இஷ்டப் பழம்

சென்ட் தயாரிப்பவர்களின் இஷ்டப் பழம்

சென்ட் தயாரிப்பவர்களின் இஷ்டப் பழம்

இத்தாலியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

லங்காலமாய் மக்கள் சென்ட்டுகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பைபிள் காலங்களில், அவற்றை வாங்க முடிந்தவர்களுடைய வீடுகளிலும் துணிமணிகளிலும் படுக்கைகளிலும், ஏன் அவர்கள் மீதும்கூட சென்ட் வாசம் வீசியது. அகில், குங்கிலிய தைலம், இலவங்கப்பட்டை ஆகியவற்றையும் வேறு நறுமணப்பொருள்களையும் சேர்த்து சென்ட் தயாரிக்கப்பட்டது.​—நீதிமொழிகள் 7:17; உன்னதப்பாட்டு 4:10, 14.

இன்றும்கூட, தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகிற சாறு சென்ட் தயாரிப்பில் இன்றியமையாததாய் இருக்கிறது. இத்தகைய தாவரம் ஒன்றைப் பார்க்கவே நானும் என் மனைவியும் இத்தாலிய தீபகற்பத்தின் தென்கோடியில் உள்ள கலாபிரியாவிற்கு வந்திருக்கிறோம். பர்கமாட்டைப்பற்றி நீங்கள் ஒருவேளை கேள்விப்படாதிருக்கலாம். இருந்தாலும், பெண்கள் பயன்படுத்துகிற சென்ட்டுகளில் சுமார் மூன்றில் ஒரு பாகத்திலும் ஆண்கள் பயன்படுத்துகிற சென்ட்டுகளில் பாதிக்குப் பாதியிலும் பர்கமாட் பழத்தின் நறுமணம் வீசுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த பர்கமாட் குறித்து உங்களுக்கு அதிகமாகச் சொல்ல விரும்புகிறோம், கேட்கிறீர்களா?

பர்கமாட் என்ற இந்த சிட்ரஸ் மரம் வருடமெல்லாம் பசுமையாகவே இருக்கும். இளவேனில் காலத்தில் இந்த மரம் பூக்கிறது. இலையுதிர்கால கடைசியில் அல்லது குளிர்கால ஆரம்பத்தில் பழங்களைக் கொடுக்கிறது. கிட்டத்தட்ட ஆரஞ்சு பழ அளவில் உள்ள இந்த மஞ்சள் நிற பழங்களின் தோல் வழுவழுப்பாக இருக்கிறது. இந்த பர்கமாட் பழம், கலப்பின வகையைச் சேர்ந்ததாகவும் அதன் ஆரம்பம் புரியாப் புதிராய் இருப்பதாகவும் அநேக வல்லுநர்கள் கருதுகிறார்கள். இந்த பர்கமாட் மரங்கள் தானாகவும் வளராது, விதை போட்டும் வளர்க்க முடியாது. விவசாயிகள், அவற்றை ஒட்டு முறையில் வளர்க்க வேண்டியிருக்கிறது. அதாவது, பர்கமாட் மரத்தின் ஒரு கிளையை எடுத்து, இந்த இனத்தைச் சேர்ந்த எலுமிச்சை அல்லது புளிப்புள்ள ஆரஞ்சு மர கிளையுடன் ஒட்டுப் போட வேண்டியிருக்கிறது.

சென்ட் தயாரிப்பவர்களைப் பொறுத்தவரை பர்கமாட் பழத்திற்குப் பிரத்தியேக குணங்கள் இருக்கின்றன. அந்தப் பழங்களிலிருந்து எடுக்கப்படுகிற சாறு, “வெவ்வேறு விதமான வாசனைகளையும் ஒன்றாகச் சேர்த்து பிரத்தியேக நறுமணத்தைத் தருகிறது; இப்படி அது இணைந்துள்ள ஒவ்வொரு கலவைக்கும் விசேஷ புத்துணர்ச்சியும் அளிக்கிறது.” பர்கமாட் சாறு இப்பேர்ப்பட்ட அபூர்வ குணத்தைப் பெற்றிருப்பதாக சென்ட்டைப்பற்றி அலசுகிற ஒரு புத்தகம் விளக்குகிறது. a

கலாபிரியாவில் சாகுபடி

இந்த பர்கமாட் மரங்கள் சுமார் 18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே கலாபிரியாவில் வளர்க்கப்பட்டதாகவும் அந்த ஊர்மக்கள் பர்கமாட்டின் சாற்றைப் பயணிகளுக்கு அவ்வப்போது விற்றதாகவும் சரித்திரப் புத்தகங்கள் குறிப்பிடுகின்றன. இருந்தாலும், சென்ட்டின் லாபத்தைப் பொறுத்தே பர்கமாட் மரங்கள் வியாபாரத்திற்காகப் பயிரிடப்பட்டன. இத்தாலியிலிருந்து ஜெர்மனிக்குக் குடிமாறிய ஜான் பாயோலோ ஃபெமினிஸ் என்பவர் 1704-⁠ல் ஒரு சென்ட்டைத் தயாரித்து அதனை அக்வா அட்மிராபிலிஸ் (“அட்மைரபல் வாட்டர்”) என அழைத்தார். மிதமாக மணம் வீசிய அந்தச் சென்ட்டின் முக்கியக் கூறு பர்கமாட் சாறாக இருந்தது. ஜான் தயாரித்த அந்த சென்ட், ஓடகலோன், அதாவது “கலோன் வாட்டர்” அல்லது கலோன் என அறியப்பட்டது; அது தயாரிக்கப்பட்ட நகரத்தின் பெயரே அதற்கும் சூட்டப்பட்டது.

பர்கமாட் பழத்தோட்டம் முதன்முதலில் ரெக்கியோ டி கலாபிரியா நகரில் 1750-⁠ல் அமைக்கப்பட்டது. பர்கமாட் சென்ட் கொள்ளை லாபத்தை ஈட்டித்தந்ததால் அது பெருமளவு பயிரிடப்பட்டது. வடக்கிலிருந்து வீசும் குளிர்காற்றால் பாதிக்கப்படாதபடி தெற்கு முகமாக வளருவதையும் மிதமான சீதோஷ்ணத்தையும் இந்த பர்கமாட் மரங்கள் விரும்புகின்றன. ஆனால், பலத்த காற்று அடித்தாலோ சீதோஷ்ணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டாலோ நீண்ட காலத்திற்கு காற்றில் ஈரப்பதம் இருந்தாலோ இவற்றின் விளைச்சல் குறைந்துவிடுகிறது. இத்தாலியின் தென்கோடியில் உள்ள கடற்கரைப் பகுதியில் நிலவும் சீதோஷ்ணம் இவற்றுக்குத் தோதாக இருக்கிறது. குறுகலான இந்தக் கடற்கரைப் பகுதியின் அகலமோ ஐந்தே கிலோமீட்டர், நீளமோ 150 கீலோமீட்டர். பர்கமாட் மரங்களை வேறு இடங்களில் வளர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் உலகத்திலேயே ரெக்கியோ மாகாணத்தில்தான் அவை மிகுதியாக விளைவிக்கப்படுகின்றன. உற்பத்தியில் அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் ஒரே நாடு ஆப்பிரிக்காவிலுள்ள கோட் டீ வ்வார்.

பர்கமாட் வாசனை தைலம் அந்தப் பழத்தின் தோலிலிருந்து எடுக்கப்படுகிறது. அந்த தைலம் பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் இருக்கிறது. இந்தப் பழத்திலிருந்து தைலம் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாரம்பரிய முறை, அதை பாதியாக அறுத்து, உள்ளிருக்கும் சதைப்பற்றைக் கரண்டியால் வழித்து எடுத்துவிட்டு, அதன் வண்ணத் தோலை பஞ்சுகள்மீது பிழிவதாகும். அரை கிலோகிராமுக்கும் குறைவான சாறு எடுப்பதற்குக் கிட்டத்தட்ட 91 கிலோகிராம் பர்கமாட் பழங்களைப் பிழிய வேண்டுமாம்! இப்போதெல்லாம் சாறு எடுப்பதற்குப் பெரும்பாலும் இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திரங்களிலுள்ள கூர்மையான தட்டுகளின் அல்லது உருளைகளின் உதவியோடு பழங்களின் தோல் சீவப்பட்டு, அவற்றிலிருந்து சாறு பிழிந்தெடுக்கப்படுகிறது.

பிரபலமோ குறைவு, பயன்பாடோ மிகுதி

கலாபிரியாவுக்கு வெளியே இந்தப் பழம் அந்தளவு பிரபலமாக இல்லாதிருக்கலாம். எனினும், ஒரு புத்தகம் சொல்கிறபடி, “நிபுணர்கள் மத்தியில் பர்கமாட்டுக்கு மவுசு அதிகம்.” இந்தப் பழத்தின் வாசனை, சென்ட்டுகளில் மட்டுமல்ல, சோப்புகளிலும் டியோட்ரன்ட்டுகளிலும் பற்பசைகளிலும் கிரீம்களிலும்கூட கமகமக்கிறது. அது நறுமணப் பொருளாக இருப்பதால் ஐஸ்கிரீம், தேநீர், இனிப்புகள் போன்ற பானங்கள் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. வெயில்பட்டு சருமத்தைக் கறுக்கவைக்க உதவும் கிரீம்களின் தயாரிப்பிலும் அது பயன்படுத்தப்படுகிறது. கிருமிநாசினியாகவும் பாக்டீரியாநாசினியாகவும் அது இருப்பதால் மருந்து தயாரிப்பில் மிகவும் பயனுள்ளதாய் கருதப்படுகிறது. உதாரணத்திற்கு, அறுவைசிகிச்சையிலும் கண் மருத்துவத்திலும், தோல் மருத்துவத்திலும் தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பதற்காக அது பயன்படுத்தப்படுகிறது. பர்கமாட் பழத்தின் பசை, கெட்டியாக்குவதில் பெரும் பங்கு வகிப்பதால் இரத்தக் கசிவையும் வயிற்றுப்போக்கையும் நிறுத்துகிற மருந்துகளைத் தயாரிப்பதிலும் அது பயன்படுத்தப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள், பர்கமாட் சாற்றிலிருந்து கிட்டத்தட்ட 350 ஆக்கக்கூறுகளைப் பிரித்திருக்கிறார்கள்; இவையெல்லாம் சேர்ந்து அந்தப் பழத்திற்கே உரிய அதன் பிரத்தியேக நறுமணத்தையும் எண்ணற்ற பிற குணங்களையும் அளிக்கின்றன. இவையெல்லாம் ஒரே பழத்தில்!

பைபிள் எழுத்தாளர்கள் பர்கமாட் பழத்தைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும், இந்த சிட்ரஸ் பழத்தின் பயன்களையும் அதன் படைப்பாளரின் ஞானத்தையும் சிந்திப்பதில் ஆர்வம் காட்டுகிற எவருமே சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளை எதிரொலிப்பார்கள்: “கர்த்தரைத் துதியுங்கள் . . . கனிமரங்களே.”​—சங்கீதம் 148:1, 9.

[அடிக்குறிப்பு]

a புல் அல்லது பூக்களின் மகரந்தம் சிலருக்கு எப்படி ஒத்துக்கொள்ளாமல் போகிறதோ அதுபோல சென்ட்டும் சிலருக்கு ஒத்துக்கொள்வதில்லை. அதனால் குறிப்பிட்ட எந்தவொரு சென்ட்டையும் பயன்படுத்தும்படி விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை.

[பக்கம் 25-ன் படம்]

பர்கமாட் பழங்களின் தோலை சீவி பர்கமாட் சாறு எடுக்கப்படுகிறது

[படத்திற்கான நன்றி]

© Danilo Donadoni/Marka/age fotostock