டொலீடோ இடைக்காலக் கலாச்சாரங்களின் கதம்பம்
டொலீடோ இடைக்காலக் கலாச்சாரங்களின் கதம்பம்
ஸ்பெயினிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
ஐபீரியன் தீபகற்பத்தின் நடுவே கருங்கல் மலை ஒன்று கொலுவீற்றிருக்க அதன் மூன்று பக்கத்திலேயும் டேகஸ் நதி சூழ்ந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டுகளில் இந்த நதியின் தண்ணீர் மலையின்மீது மோதிமோதி செங்குத்துப் பாறைகளை உருவாக்கியிருக்கிறது. இந்தப் பாறைகள் மலையின் பக்கங்களைப் பாதுகாக்கின்றன. எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் இந்த மலையில்தான் டொலீடோ நகரம் உருவானது. இன்று ஸ்பெயினையும் அதன் கலாச்சாரத்தையும்பற்றி பேசுகையில் டொலீடோவைப்பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.
டொலீடோவின் பண்டைய நகரப் பகுதியில் வளைந்து நெளிந்து செல்கிற குறுகலான தெருக்கள் வழியே பயணிக்கையில் சுற்றுலாப் பயணி கற்பனையில் இடைக்காலத்திற்கே சென்றுவிடுவார். இந்த நகரத்தின் வாயில்கள், கோட்டைகள், பாலங்கள் ஆகிய எல்லாமே இடைக்காலத்திற்கே உரிய தனிச்சிறப்புடன் மிளிருகின்றன. அதோடு, ஒரு காலத்தில் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக டொலீடோவும் இருந்தது என்பதற்கு அவை மெளனமாய் சாட்சி பகுருகின்றன.
இருந்தாலும், ஐரோப்பிய நகரத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக டொலீடோவைக் குறிப்பிட முடியாது. ஏனென்றால், அதன் ரயில் நிலையங்களிலும்கூட கிழக்கத்திய வாடை வீசுகிறது. டொலீடோவின் நினைவுச் சின்னங்களையும் கைவேலைகளையும் ஆராய்ந்து பார்க்கும்போது இந்த நகரம் கடந்த நூற்றாண்டுகளில் செழித்தோங்கிய பல கலாச்சாரங்களில் காணப்பட்ட திறமைகளைத் தனதாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. சுமார் 700 வருடங்களுக்கு முன்பு, அதன் பொற்காலத்தின்போது டொலீடோ இடைக்கால கலாச்சாரங்கள் பலவற்றின் கதம்பமாகவே ஆகிவிட்டது.
கதம்பக் கலாச்சாரங்கள்
ரோமர்கள் ஸ்பெயினுக்கு வருவதற்கு முன்பே கெல்டிய, ஐபீரிய இனத்தவர்கள், பாதுகாப்பு அரண்போல் விளங்கிய இந்த இடத்தில் ஏற்கெனவே ஒரு நகரத்தை உருவாக்கியிருந்தார்கள். ரோமர்கள் இந்த நகரத்தின் பெயரை (“உயர்த்தப்பட்டது” என அர்த்தம் தரும் டொலீடும் என்பதிலிருந்து) டொலேடும் என மாற்றினார்கள். அந்த நகரத்தைத் தங்களுடைய மாகாண தலைநகரங்களில் ஒன்றாக ஆக்கினார்கள். ரோம சரித்திராசிரியரான லிவீ என்பவர் டொலீடோவை, “சிறிய நகரமானாலும் இயற்கையாகவே தற்காப்பு பெற்ற நகரம்” என்று குறிப்பிட்டார். ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்த பிறகு ஜெர்மானிய இனத்தைச் சேர்ந்த விசிகாத்தியர்கள் ஸ்பெயினைக் கைப்பற்றியபோது அவர்கள் டொலீடோவைத் தங்கள்
தலைநகராகத் தேர்ந்தெடுத்தார்கள். ஆறாம் நூற்றாண்டில் அரீயனிஸத்தை அரசராகிய ரேகார்ரெட் எதிர்த்ததும் இந்த நகரத்தில்தான். அதன் விளைவாக, ஸ்பெயின் நாடு ஆர்த்தடாக்ஸ் கத்தோலிக்க மதத்தின் மையமாகவும் டொலீடோ பிரதான ஆர்ச்பிஷப்பின் முக்கிய ஸ்தலமாகவும் ஆனது.டொலீடோவை இஸ்லாமியர் கைப்பற்றிய பிறகு அதன் மதச் சூழல் மாறிவிட்டது. 8-ஆம் நூற்றாண்டிலிருந்து 11-ஆம் நூற்றாண்டுவரை நீடித்த அவர்களுடைய ஆட்சியின்போதுதான் டொலீடோவின் பண்டைய நகரப் பகுதியில் குறுகலான தெருக்கள் அமைக்கப்பட்டன. இஸ்லாமியரின் சகிப்புத்தன்மையால் டொலீடோவில் கிறிஸ்தவர்களும் யூதர்களும் மூர் இனத்தவரும் ஒருமித்து வாழ முடிந்தது. இறுதியில், 1085-ல் ஆறாம் அல்ஃபோன்ஸோ அரசர் (கத்தோலிக்க அரசர்) இந்த நகரத்தைக் கைப்பற்றினார். ஆட்சியாளர்கள் மாறியபோதிலும், இந்த மூன்று கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களும் பல நூற்றாண்டுகளுக்கு ஒருமித்தே வாழ்ந்தார்கள்.
டொலீடோவில் காணப்படுகிற மிகப் பிரமாண்டமான நினைவுச் சின்னங்களில் பல இடைக்காலத்தைச் சேர்ந்தவையே. கத்தோலிக்க ஆட்சியாளர்கள் இந்த நகரத்தைத் தங்கள் தலைநகரமாக மாற்றினார்கள்; யூத குடிமக்கள் கைவினைத் தொழில்களிலும் வணிகத்திலும் தங்கள் திறனை வெளிக்காட்டினார்கள்; இஸ்லாமிய கைவினைஞர்கள் கட்டடக்கலையில் தங்கள் கைவரிசையைக் காட்டினார்கள். இந்த மூன்று கலாச்சாரங்களையும் சேர்ந்த கல்விமான்கள் ஒன்றாகச் சேர்ந்து மொழிபெயர்ப்பாளர்களின் குழுவில் பணியாற்றினார்கள். 12-ஆம், 13-ஆம் நூற்றாண்டுகளில் பழமையான புத்தகங்கள் பலவற்றை லத்தீன் மொழியிலும் ஸ்பானிஷ் மொழியிலும் அவர்கள் மொழிபெயர்த்தார்கள். இவர்களுடைய அரிய முயற்சியால் அரேபிய கலாச்சாரத்தின் அறிவியல் களஞ்சியங்களிலிருந்து மேற்கத்திய நாடுகளும் பயன் அடைய முடிந்தது.
14-ஆம் நூற்றாண்டில் மத சகிப்புத்தன்மை மறைந்தது; அந்தச் சமயத்தில் மதத்தின் பேரில் நடந்த படுகொலையில் ஆயிரக்கணக்கான யூதர்கள் இறந்தார்கள். அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பே ஸ்பானிய ஒடுக்குமுறை விசாரணை குழு டொலீடோவில் ஒரு நீதிமன்றத்தை உருவாக்கியிருந்தது. யூதர்களும் இஸ்லாமியரும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள், மறுத்தவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள்.
புகழ்பெற்ற பூர்வ கால நினைவுச் சின்னங்கள்
சுறுசுறுப்பாய் இயங்குகிற டொலீடோவின் மையப் பகுதியில் இன்று நூற்றுக்கும் அதிகமான நினைவுச் சின்னங்கள் உள்ளன. சரித்திரப் புகழ் படைத்த எண்ணற்ற ஆஸ்திகளை இந்த நகரம் பெற்றிருப்பதால் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவு, பண்பாட்டு அமைப்பு (UNESCO) இதனை உலக ஆஸ்தி நகரமாக அறிவித்தது. டொலீடோ நகரத்தை கிழக்கிலும் மேற்கிலும் இணைப்பதற்கு டேகஸ் நதியின் மீது இடைக்காலத்தின்போது பிரமிக்கத்தக்க இரண்டு பாலங்கள் கட்டப்பட்டன. புவெர்டா நுவிவா டி பிஸாக்ரா என்றழைக்கப்படுகிற மிகப் பெரிய வாயில், டொலீடோவின் மதில் சூழ்ந்த பண்டைய நகரப் பகுதிக்கு காவற்காரனாய் நிற்கிறது. இந்த வாயில், சுற்றுலாப் பயணிகளின் கண்ணில் படாமல் போக வாய்ப்பே இல்லை.
சற்றுத் தொலைவில் விண்ணைத் தொடுகிற உயரத்தில் இரண்டு நினைவுச் சின்னங்கள் டொலீடோவில் கம்பீரமாய் நிற்கின்றன. அல்காஸர் என அழைக்கப்படும் மாபெரும் சதுரக் கோட்டை நகரத்தின் கிழக்கே வீற்றிருக்கிறது. கடந்த நூற்றாண்டுகளில் அது ரோம ஆளுனரின் குடியிருப்பாகவும், விசிகாத்திய அரசர்களின் அரண்மனையாகவும், அரேபியர்களின் அரணாகவும், பிறகு ஸ்பானிய அரசர்களின் மாளிகையாகவும் இருந்திருக்கிறது. இன்றோ அங்கு ராணுவ அருங்காட்சியகமும், பெரிய நூலகமும் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, டொலீடோ மதப்பற்றுள்ள நகரமாக இருப்பதால், மிகப் பெரிய கோதிக் கத்தீட்ரல் நகரத்தின் மையப்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது.—பக்கம் 17-லுள்ள பெட்டியைக் காண்க.
டொலீடோவிலுள்ள கத்தீட்ரலும் மற்ற சர்ச்சுகளும் பிரபலமான ஒரு கலைஞரின் ஓவியங்களால் பெருமையடைந்திருக்கின்றன. டொலீடோவில் குடியேறிய இந்தக் கலைஞரின் பெயர் எல் கிரேக்கோ, அதன் அர்த்தம், “கிரேக்கர்” என்பதாகும். அவருடைய முழு பெயர், டாமேனிகாஸ் டேயாடாகாபூலாஸ். பூர்வ யூத குடியிருப்பில் அவர் வாழ்ந்த அதே பகுதியில் இப்போது ஓர் அருங்காட்சியகம் உள்ளது. அதில் அவர் வரைந்த ஆயிரக்கணக்கான ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தெற்கே அமைந்துள்ள மலைகளிலிருந்து டொலீடோவைப் பார்க்கையில் இது மிக மிடுக்காகக் காட்சி அளிக்கிறது. என்றாலும், நகரத்தில் வளைந்து நெளிந்து செல்லுகிற குறுகலான தெருக்கள் வழியே சென்றால்தான் டொலீடோவின் முழு அழகையும் கண்களால் பருக முடியும். டொலீடோவுக்கு வரும் சுற்றுலாப் பயணி வழிதெரியாமல் கொஞ்ச நேரத்திற்குத் திக்குமுக்காடிப் போகலாம். இருந்தாலும், பழங்காலத்துத் தெருக்களையும், கட்டடங்களையும், அலங்கார மேல்மாடங்களையும், கண்களைக் கொள்ளைக் கொள்கிற நினைவுப் பொருள்களை விற்கிற கடைகளையும் பார்க்கையில் அவர் தன்னையே மறந்து டொலீடோவைச் சுற்றி வலம் வருவார்.
காலம் கடந்தாலும் தன் அழகை இழக்காத இந்தப் பழம்பெரும் டொலீடோ நகரத்தைக் காணவரும் சுற்றுலாப் பயணி கடைசியில் இங்கிருந்து புறப்படத்தான் வேண்டும். டேகஸ் நதியின் தென்கரையிலிருந்து டொலீடோவை விட்டு விடைபெறுவது பொருத்தமாக இருக்கும். அந்திசாயும் வேளையில் சூரியக் கிரணங்கள் நகரின் மீது மங்கலாகப் படர்ந்திருக்கையில் டொலீடோவின் பிரமிக்கவைக்கும் நினைவுச் சின்னங்கள் மீண்டும் அதன் பொற்காலத்தை நினைவுபடுத்துவதுபோல் தெரிகின்றன.
[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]
டொலீடோவில் சங்கமித்த மூன்று கலாச்சாரங்கள்
இடைக்காலத்தின்போது டொலீடோ மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் கத்தோலிக்கர்களும் யூதர்களும் இஸ்லாமியரும் அவரவர் நியதிகளின்படியும் கலாச்சாரங்களின்படியும் வாழ்ந்து வந்தார்கள். முன்னர் அவர்கள் பயன்படுத்திய வழிபாட்டு ஸ்தலங்களில் சில இப்போது சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முக்கிய ஸ்தலங்களாக மாறிவிட்டன.
➤ கரீஸ்டோ டி லா லூஸ் என்றழைக்கப்படுகிற பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மசூதி இஸ்லாமிய கைவினைஞர்கள் கலைநயத்தோடு கட்டிய செங்கல் கட்டடத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. ஒரு காலத்தில் இஸ்லாமிய செல்வசீமான்கள் வசித்து வந்த மெதினா பகுதியில் இந்த மசூதி இருக்கிறது.
➤ டொலீடோவில் அதிகமான யூதர்களும் குடியிருந்தார்கள் என்பதற்குச் சான்றளிக்கும் விதத்தில் இடைக்காலத்தைச் சேர்ந்த இரண்டு ஜெப ஆலயங்கள் இங்கு இருக்கின்றன; இவை பிறகு கத்தோலிக்க சர்ச்சுகளாக மாற்றப்பட்டன. ஒரு சமயத்தில், நகரத்தின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு யூதர்கள் இருந்தார்கள். ஸான்டா மாரியா பிளாங்கா என்ற ஜெப ஆலயம்தான் மிகப் பழமையானது, மேலே மசூதியில் காணப்படுவதைப் போலவே இதன் உட்புறத்தில் பல அலங்காரத் தூண்கள் இருக்கின்றன. எல் டிரான்ஸீடோ என்ற ஜெப ஆலயம் (வலப்பக்கத்திலுள்ளது) இதைவிட பெரியது, அது இப்போது யூதர்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஸஃபார்டி அருங்காட்சியக மாக மாற்றப்பட்டிருக்கிறது.
➤ ஸ்பெயினின் மிகப் பெரிய கோதிக் கத்தீட்ரலின் கட்டட வேலை 13-ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. அதைக் கட்டி முடிக்க 200 வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.
[பக்கம் 18-ன் பெட்டி/படங்கள்]
விசேஷ வாள்களும் மார்ஸபான் இனிப்புகளும்
இந்த நகரத்தின் கொல்லர்கள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாள்களைச் செய்கிற பணியில் ஈடுபட்டிருப்பதால் டொலீடோ, சிறந்த எஃகு இரும்புக்குப் பெயர்போன நகரமாய் ஆகிவிட்டது. டேகஸ் நதி அருகே தயாரிக்கப்பட்ட இந்த வாள்களை ஹனபல்லின் படை வீரர்களும் ரோம படை வீரர்களும் பயன்படுத்தினார்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இஸ்லாமிய கைவினைஞர்கள் டொலீடோவில் உருவாக்கப்பட்ட வாள்களையும் போர்க் கவசங்களையும் அலங்கரிக்க வெள்ளியில் அல்லது தங்கத்தில் அழகிய வடிவங்களைப் பொறித்தார்கள். இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் டொலீடோவினுடைய வாளின் படம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. (ஜனவரி 22, 2005 விழித்தெழு! இதழில் வெளிவந்த “எஃகு இரும்பில் தங்க வேலைப்பாடுகள்” என்ற ஆங்கில கட்டுரையைக் காண்க.) இப்போதெல்லாம், இந்த நகரத்தின் பெரும்பாலான நினைவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் நிறைய வாள்களும், போர்க் கவசங்களும் கிடைக்கின்றன. அதுபோக, இந்த வாள்களைத் திரைப்படங்களிலாவது பார்க்கலாமே தவிர போர்க்களத்தில் அல்ல!
டொலீடோவில் மார்ஸபான் இனிப்பு தயாரிப்பது இன்னொரு வழக்கம். அரேபியர்கள் இந்த நகரத்தைக் கைப்பற்றிய சமயத்திலேயே இது ஆரம்பித்துவிட்டது. இஸ்லாமியர் ஸ்பெயினுக்கு வந்த சமயத்தில் அங்கு ஏற்கெனவே ஏகப்பட்ட பாதாம் தோட்டங்கள் இருந்தன. ஆனால், மார்ஸபான் தயாரிப்பதற்குத் தேவையான மற்றொரு முக்கியப் பொருளான சர்க்கரை இல்லாதிருந்தது. இஸ்லாமியரின் ஆட்சி தொடங்கி 50 வருடங்களுக்குள் ஸ்பெயினின் தென் பகுதியில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டது. 11-ஆம் நூற்றாண்டுக்குள் டொலீடோவின் சிறப்பு பண்டமாக மார்ஸபான் மாறிவிட்டது. அன்றுமுதல் சுவைஞர்களின் விருப்பப் பண்டமாகவும் இது இருந்து வருகிறது. சிறுசிறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிற இந்த மார்ஸபான் இனிப்புக்காக இன்று டொலீடோவில் தனி கடைகளே உள்ளன. டொலீடோவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ருசிகரமான இந்த மார்ஸபான் இனிப்பைச் சாப்பிட்டால் மட்டுமே அவர்களுடைய சுற்றுலாப் பயணம் முழுமை பெறும்.
[படத்திற்கான நன்றி]
Agustín Sancho
[பக்கம் 16-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
போர்ச்சுகல்
ஸ்பெயின்
மாட்ரிட்
டொலீடோ
[பக்கம் 18-ன் படம்]
ஸான் மார்டின் பாலம்