Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பணத்தைக் குறித்த ஞானமான கண்ணோட்டம் என்ன?

பணத்தைக் குறித்த ஞானமான கண்ணோட்டம் என்ன?

பைபிளின் கருத்து

பணத்தைக் குறித்த ஞானமான கண்ணோட்டம் என்ன?

‘திரவியம் கேடகம்,’ அதாவது, பணம் பாதுகாப்பு தரும் என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:12) உணவு, உடை, உறைவிடத்தைப் பெற பணம் தேவைப்படுவதால், வறுமையோடு கைகோர்த்து வருகிற கஷ்டநஷ்டங்களிலிருந்து அது பாதுகாப்பு தருகிறது. சொல்லப்போனால், பணத்தை வைத்து எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். அது “எல்லாவற்றிற்கும் உதவும்” என்று பிரசங்கி 10:19 சொல்கிறது.

நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் குடும்பத்தைப் பராமரிக்கவும் பணம் தேவைப்படுகிறது; அதற்காக அயராது உழைக்க வேண்டுமென்று கடவுளுடைய வார்த்தை ஊக்குவிக்கிறது. (1 தீமோத்தேயு 5:8) நேர்மையாக, கடினமாக உழைக்கையில் அதன் பலனாக மனநிறைவையும், சுயமரியாதையையும், பாதுகாப்பு உணர்வையும் பெறுகிறோம்.​—பிரசங்கி 3:12, 13.

அதுமட்டுமல்ல, நாம் கடினமாக உழைத்தால் பொருளாதார விஷயத்தில் தாராள குணத்தைக் காட்ட முடியும். “வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் [“அதிக சந்தோஷம்,” NW]” என்று இயேசு கூறினார். (அப்போஸ்தலர் 20:35) வறுமையில் வாடுபவர்களுக்கு, அதிலும் குறிப்பாக அப்படி வாடும் சக கிறிஸ்தவர்களுக்கு உதவுவதற்கோ, நம் பாசத்துக்குரியவருக்குப் பரிசுப் பொருளை வாங்கித் தருவதற்கோ நம் பணத்தை மனப்பூர்வமாகப் பயன்படுத்தும்போது இத்தகைய சந்தோஷம் நமக்குக் கிடைக்கிறது.​—2 கொரிந்தியர் 9:7; 1 தீமோத்தேயு 6:17-19.

தாராள குணத்தைக் காட்டும்படி தம்மைப் பின்பற்றியவர்களை இயேசு ஊக்குவித்தார். அந்தக் குணத்தை எப்போதாவது மட்டுமல்ல, எப்போதுமே காட்டுவதன்மூலம் அதையே பழக்கமாக்கிக்கொள்ளும்படி, வாழ்க்கைமுறையாக்கிக்கொள்ளும்படி கூறினார். “கொடுப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” என்று அவர் கூறினார். (லூக்கா 6:38, NW) ஏழ்மையில் தவிப்பவர்களுக்கு உதவுவதில் தாராள குணத்தைக் காட்ட வேண்டுமென்ற இந்த நியமம் ராஜ்ய பிரசங்க வேலையை ஆதரிப்பதற்கு நன்கொடை கொடுக்கிற விஷயத்துக்கும் பொருந்துகிறது. (நீதிமொழிகள் 3:9) இப்படித் தாராள மனப்பான்மையைக் காட்டுவது, யெகோவாவையும் அவருடைய மகனையும் நம்முடைய ‘சிநேகிதராக’ ஆக்கிக்கொள்ள உதவும்.​—லூக்கா 16:⁠9.

‘பண ஆசையைக்’ குறித்து எச்சரிக்கையாயிருங்கள்

சுயநலப் பேர்வழிகள் எதையும் யாருக்கும் அபூர்வமாகவே கொடுப்பார்கள். அப்படியே அவர்கள் கொடுத்தாலும் பொதுவாக அதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்கும். அவர்கள் கொடுக்கத் தயங்குவதற்குக் காரணம் என்ன தெரியுமா, பணத்தின் மீதிருக்கும் தீராத ஆசைதான். இப்படிப்பட்ட ஆசை தங்களுக்குச் சந்தோஷத்தை அள்ளித் தருமென்று அவர்கள் நினைக்கிறார்கள்; மாறாக, இது அவர்களுடைய சந்தோஷத்தை அடியோடு பறித்துவிடுகிறது. “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று 1 தீமோத்தேயு 6:10 சொல்கிறது. பண ஆசை ஏன் இந்தளவுக்கு அதிருப்தி தருவதாகவும் தீங்கு விளைவிப்பதாகவும்கூட இருக்கிறது?

ஒரு காரணம் என்னவென்றால், பேராசைமிக்க நபருக்கு செல்வத்தைக் குவிக்க வேண்டுமென்ற வேட்கை தணிவதே இல்லை. “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை” என்று பிரசங்கி 5:10 சொல்கிறது. எனவே, பணம் பணமென்று ஆலாய்ப் பறப்பவர்கள் தீராத வேதனையால் ‘தங்களை உருவக் குத்திக் கொள்கிறார்கள்.’ கூடுதலாக, இவர்களுடைய பேராசையால் உறவுகளில் விரிசல் ஏற்படுகிறது, குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி தொலைந்துபோகிறது, நிம்மதியாகக் கொஞ்சம் ஓய்வெடுக்கக்கூட முடியாமல் போகிறது. “வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது.” (பிரசங்கி 5:12) எல்லாவற்றுக்கும் மேலாக, பண ஆசை கடவுளுடைய வெறுப்பைச் சம்பாதித்துத் தருகிறது.​—யோபு 31:24, 28.

பைபிள் சரித்திரத்தையும் உலக சரித்திரத்தையும் புரட்டினால், பணத்துக்காக திருடியவர்கள், நீதியைப் புரட்டியவர்கள், விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், கொலை செய்தவர்கள், நம்பிக்கைத் துரோகம் செய்தவர்கள், பொய் சொன்னவர்கள் ஆகியோரின் பட்டியலைக் காணலாம். (யோசுவா 7:1, 20-26; மீகா 3:11; மாற்கு 14:10, 11; யோவான் 12:6) இயேசு பூமியில் ஊழியம் செய்த காலத்தில், தம்மைப் பின்பற்றி வரும்படி “அதிக ஐசுவரியமுள்ள” ஓர் இளம் அதிபதியை அழைத்தார். வருத்தகரமாக, இந்த அருமையான அழைப்பை அவன் நிராகரித்தான்; காரணம், அதை ஏற்றுக்கொண்டால் தன்னுடைய பணத்தை எல்லாம் இழக்க நேரிடும் என்று நினைத்தான். அதனால் இயேசு இவ்வாறு கூறினார்: “ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.”​—லூக்கா 18:23, 24.

இந்தக் “கடைசி நாட்களில்” கிறிஸ்தவர்கள் விசேஷமாகக் கவனமாய் இருக்க வேண்டும்; ஏனென்றால், முன்னறிவிக்கப்பட்டபடி, பொதுவாகவே மக்கள் ‘பணப்பிரியராய்’ இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, 2) தங்களுடைய ஆன்மீகத் தேவைகளைக் குறித்து உணர்வுள்ள உண்மை கிறிஸ்தவர்கள், பேராசையெனும் காட்டாறால் அடித்துச் செல்லப்படுவதில்லை. ஏனென்றால் பணத்தைக் காட்டிலும் அதிக மேம்பட்ட ஏதோவொன்று அவர்களிடம் இருக்கிறது.

பணத்தைக் காட்டிலும் சிறந்த ஒன்று

பணம் பாதுகாப்பைத் தருகிறது என்று சாலொமோன் ராஜா சொன்னதோடு, “ஞானம் கேடகம்” என்றும் குறிப்பிட்டார். ஏனென்றால், “அது தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்” என்று விளக்கினார். (பிரசங்கி 7:12) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவையும் கடவுள்மீதுள்ள பயபக்தியையும் அடிப்படையாகக் கொண்ட ஞானத்தையே அவர் அர்த்தப்படுத்தினார். இத்தகைய தெய்வீக ஞானம் பணத்தைவிட மேம்பட்டது; ஏராளமான படுகுழிகளிலிருந்தும் அகால மரணத்திலிருந்தும்கூட ஒருவரைப் பாதுகாக்க வல்லது. ஒரு கிரீடத்தைப்போல, மெய்யான ஞானம் அதை உடையவர்களை மேன்மைப்படுத்துகிறது; இன்னும், மதிப்பு மரியாதையையும் பெற்றுத் தருகிறது. (நீதிமொழிகள் 2:10-22; 4:5-9) மேலுமாக, கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற அது வழிவகுப்பதால், “ஜீவவிருட்சம்” என்று அழைக்கப்பட்டிருக்கிறது.​—நீதிமொழிகள் 3:⁠18.

அத்தகைய ஞானத்தைப் பெற மனதார விரும்புகிறவர்களும் அதோடு அதைத் தேடிக் கண்டுபிடிக்க மனமுள்ளவர்களும் அது எளிதாகக் கிடைப்பதை அறிந்து கொள்கிறார்கள். “என் மகனே, நீ . . . ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.”​—நீதிமொழிகள் 2:1-6.

உண்மை கிறிஸ்தவர்கள் பணத்தைக் காட்டிலும் ஞானத்தை அதிக மதிப்புமிக்கதாகக் கருதுவதால், ஓரளவு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கிறார்கள். இது எதுவுமே பண ஆசை பிடித்தவர்களுக்குக் கிடைப்பதில்லை. எபிரெயர் 13:5 இவ்வாறு சொல்கிறது: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று [கடவுள்] சொல்லியிருக்கிறாரே.” இதுபோன்ற பாதுகாப்பை பணத்தால் தரவே முடியாது!

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ பணம் எவ்வாறு பாதுகாப்பைத் தருகிறது?​—⁠பிரசங்கி 7:12.

◼ தெய்வீக ஞானம் பணத்தைக் காட்டிலும் ஏன் மேம்பட்டது?​—⁠நீதிமொழிகள் 2:10-22; 3:13-18.

◼ பண ஆசையை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?​—⁠மாற்கு 10:23, 25; லூக்கா 18:23, 24; 1 தீமோத்தேயு 6:9, 10.