Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மும்பையில் பயங்கரம் தப்பியவர்கள் தரும் தகவல்

மும்பையில் பயங்கரம் தப்பியவர்கள் தரும் தகவல்

மும்பையில் பயங்கரம் தப்பியவர்கள் தரும் தகவல்

இந்தியாவிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

மக்கள்தொகை மளமளவென்று அதிகரித்து வருகிற மும்பை மாநகரில் 1 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கிறார்கள். நகரத்தையும் புறநகர் பகுதிகளையும் இணைக்கும் பாலமாக ரயில்கள் செயல்படுகின்றன. அதிவேகமாக, அடிக்கடி வரும் இந்த ரயில்களிலேயே இந்நகரவாசிகளில் 60 முதல் 70 லட்சம் பேர் வேலை செய்யுமிடங்களுக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும், கடைவீதிகளுக்கும் அல்லது கண்டுகளிக்க பல்வேறு இடங்களுக்கும் பயணிக்கிறார்கள். ஒன்பது பெட்டிகளை உடைய இந்த ரயில்கள் ஒவ்வொன்றிலும், சாதாரணமாக 1,710 பேர் பயணிக்கலாம். ஆனால், ஜனநெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் இதில் சுமார் 5,000 பேர் நெருக்கியடித்துக்கொண்டு பயணிப்பார்கள். 2006-⁠ஆம் வருடம் ஜூலை 11-⁠ஆம் தேதி இதுபோன்ற ஒரு நெரிசல்மிக்க நேரத்தில்தான் மும்பை ரயில்களைத் தீவிரவாதிகள் குறிவைத்தார்கள். 15 நிமிடங்களுக்குள் மேற்கு ரயில்வேயின் வெவ்வேறு ரயில்களில் ஏழு குண்டுகள் வெடித்தன; இந்தச் சம்பவத்தில் 200-⁠க்கும் அதிகமானோர் பலியானார்கள், 800-⁠க்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.

மும்பையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய 22 சபைகள் உள்ளன; இங்குள்ள சாட்சிகளில் அநேகர் இந்த ரயில்களில் வாடிக்கையாகப் பயணம் செய்பவர்கள். அதோடு, குண்டு வெடித்த ரயில்களில் அவர்களில் சிலர் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரும் உயிரிழக்கவில்லை என்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால், பலர் காயமடைந்தார்கள். அனிதா என்பவர் வேலை முடிந்து ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அதில் கூட்டம் அலைமோதியதால் இறங்குவதற்கு வசதியாகக் கதவுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார். அந்த ரயில் விரைந்துகொண்டிருந்தபோது, திடீரென்று படுபயங்கரமான வெடி சத்தம் கேட்டது; அதோடு, அவர் இருந்த பெட்டியில் கரும்புகை மண்டியது. அவர் கதவுக்கு வெளியே வலப்பக்கமாக எட்டிப்பார்த்தபோது அடுத்த பெட்டியின் ஒருபகுதி அப்படியே பிளந்து 45 டிகிரி கோணத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. உடல்களும் உடல் உறுப்புகளும் அந்த இடுக்கு வழியாகத் தண்டவாளத்தில் வந்து விழுவதைப் பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே ரயில் நின்றுபோனாலும் அவருக்கோ அது பல யுகங்களாகத் தோன்றியது. உடனே, மற்ற பயணிகளோடு அவரும் தண்டவாளத்தில் குதித்து ரயிலைவிட்டு வெகு தூரத்திற்கு ஓடினார். தன் கணவர் ஜானை செல்ஃபோனில் அனிதா அழைத்தபோது நல்லவேளையாக, உடனே இணைப்புக் கிடைத்தது. கலவரமடைந்த மக்கள் ஒருவரையொருவர் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதால் கொஞ்ச நேரத்துக்குள் முழு நகரத்தின் தொலைபேசி இணைப்புகளும் ஸ்தம்பித்துவிட்டன. தன் கணவருடன் செல்ஃபோனில் பேசும்வரை அனிதா ஓரளவு தைரியமாக இருந்தார். அவருடன் பேசும்போதே அழத் துவங்கினார். நடந்தவற்றை அவரிடம் தெரிவித்ததோடு தன்னை வந்து அழைத்துச் செல்லும்படியும் கூறினார். தன் கணவரின் வருகைக்காக அவர் காத்திருந்தபோது, மழை கொட்டத் துவங்கியது. இது, புலன்விசாரணை செய்பவர்களுக்கு உதவியாய் இருந்திருக்கக்கூடிய பெரும்பாலான தடயங்களை அழித்துவிட்டது.

கிளாடியஸ் என்ற மற்றொரு யெகோவாவின் சாட்சி, அன்று அலுவலகத்திலிருந்து வழக்கத்தைவிட சீக்கிரமாகக் கிளம்பினார். சாயங்காலம் 5:18 மணிக்கு மேற்கு ரயில்வேயின் கடைசி ஸ்டேஷனான சர்ச்கேட் ஸ்டேஷனில் முதல் வகுப்பு பெட்டியில் அவர் ஏறினார். பயந்தர் ஸ்டேஷனுக்குச் செல்வதற்கு எப்படியும் ஒரு மணிநேரம் ஆகும் என்பதால் உட்காருவதற்கு இடத்தைத் தேடினார்; அப்போது, பக்கத்துச் சபையைச் சேர்ந்த ஜோசஃப் என்பவரைச் சந்தித்தார். இருவரும் பல விஷயங்களைக் குறித்து சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. பிறகு, வேலை அசதியால் ஜோசஃப் சற்று கண் அசந்தார். ரயிலில் நெரிசல் அதிகமாக இருந்ததால், கிளாடியஸ் கதவருகே செல்வதற்காக தான் இறங்க வேண்டிய இடத்துக்கு முந்தைய ஸ்டேஷனிலேயே எழுந்து சற்றே நகர்ந்தார். அந்த இடத்தில் அவர் நின்று கொண்டிருக்கையில் தூக்கம் கலைந்து எழுந்த ஜோசஃப் அவருக்கு ‘குட்பை’ சொல்வதற்காகத் தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்தபடியே சற்று திரும்பினார். அப்போது கிளாடியஸ் சற்று முன்னே போய் இருக்கையின் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு ஜோசஃப்பிடம் பேசுவதற்காகக் குனிந்தார். அதுதான் கிளாடியஸின் உயிரைக் காப்பாற்றியது எனலாம். திடீரென்று, பலத்த சத்தம் கேட்டது. அந்தப் பெட்டியே கிடுகிடுவென குலுங்கியது; அதோடு, புகைமூட்டத்தால் அது கும்மிருட்டானது. இருக்கைகளின் வரிசைக்கிடையே கிளாடியஸ் தரையில் தள்ளப்பட்டார்; அவருடைய காதுக்குள் “கொய்ங்” என்ற இரைச்சல் மட்டுமே கேட்டது; வேறு எதையும் அவரால் கேட்க முடியவில்லை. அவர் முன்பு நின்றிருந்த இடத்திலோ அகலமான ஓட்டை ஏற்பட்டிருந்தது. அவருக்கு அருகில் நின்றிருந்த மற்ற பயணிகள் தண்டவாளத்தில் தூக்கியெறியப்பட்டிருந்தார்கள் அல்லது இறந்து கிடந்தார்கள். பயங்கரங்கள் நிறைந்த அந்தச் செவ்வாய்க்கிழமை அன்று ரயில்வே அமைப்பையே உலுக்கிய ஏழு குண்டு வெடிப்புகளில் ஐந்தாவது வெடிப்பிலிருந்து அவர் தப்பியிருந்தார்.

கிளாடியஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய உடை எல்லாம் இரத்தமாக இருந்தது. அது, அந்த வெடிப்பில் பரிதாபமாகப் பலியான மற்ற பயணிகளின் உடலிலிருந்து தெறித்த இரத்தம்தான். அவருடைய செவிப்பறை கிழிந்துபோனது. ஒரு கையில் தீக்காயங்கள் ஏற்பட்டதோடு தலைமுடியும் பொசுங்கிவிட்டது. இப்படி லேசான காயங்களுடன் அவர் தப்பியிருந்தார். மருத்துவமனையில் ஜோசஃப்பையும் ஜோசஃப்பின் மனைவி ஏன்ஜலாவையும் பார்த்தார்; அதே ரயிலில் பெண்களுக்கான அடுத்த பெட்டியில் பயணித்த ஏன்ஜலா எந்தக் காயமுமின்றி தப்பித்திருந்தார். ஜோசஃப்பின் வலது கண்ணைச் சுற்றிலும் கன்றிப்போயிருந்தது; அதோடு, காதும் செவிடானது. உயிரோடிருப்பதற்காக இந்த மூன்று பேரும் யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த உலகில் ஒரு நொடியில் எதுவும் நடக்கலாம்; அப்படியிருக்க, பணத்தையும் பொருளையும் தேடி அலையாய் அலைவது எவ்வளவு வீண்!’ என்ற எண்ணம்தான் நினைவு திரும்பியவுடன் தனக்கு ஏற்பட்டதாக கிளாடியஸ் கூறுகிறார். தன்னுடைய கடவுளாகிய யெகோவாவுடன் உள்ள பந்தத்திற்கு வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் தந்திருப்பதற்காக அவர் அளவில்லா ஆனந்தம் அடைந்தார்!

ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் மும்பை மாநகரம், பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு, கலவரங்கள், இந்தக் குண்டுவெடிப்புகள் என பல சம்பவங்களால் அல்லாடிவிட்டது. இருந்தபோதிலும், அங்குள்ள 1,700-⁠க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் அருமையான மனப்பான்மையையும் பக்திவைராக்கியத்தையும் காட்டியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட எந்தக் கொடுமைகளும் இனி ஒருபோதும் நிகழாத, புதிய உலகைப் பற்றிய அற்புதமான நம்பிக்கையைத் தங்களுடைய அயலகத்தாருக்குத் தவறாமல் அறிவித்து வருகிறார்கள்.​—வெளிப்படுத்துதல் 21:1-4.

[பக்கம் 23-ன் சிறு குறிப்பு]

அவர் முன்பு நின்றிருந்த இடத்திலோ அகலமான ஓட்டை ஏற்பட்டிருந்தது

[பக்கம் 23-ன் படம்]

அனிதா

[பக்கம் 23-ன் படம்]

கிளாடியஸ்

[பக்கம் 23-ன் படம்]

ஜோசஃப், ஏன்ஜலா

[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]

Sebastian D’Souza/AFP/Getty Images