Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இறகுகள் ஓர் அற்புதமான வடிவமைப்பு

இறகுகள் ஓர் அற்புதமான வடிவமைப்பு

இறகுகள் ஓர் அற்புதமான வடிவமைப்பு

தன்னுடைய சிறகுகளைப் பலமாக கீழ்நோக்கி அடித்து வானில் எழும்புகிறது ஒரு கடற்காகம். மேலே எழும்பியவுடனே சிரமம் இல்லாமல் வளைந்து, நெளிந்து உயரப் பறக்கிறது. அந்தப் பறவை வாலையும் சிறகுகளையும் இப்படியும் அப்படியுமாக சிறிதளவே சரிசெய்துகொண்டு ஆடாமல் அசையாமல் அப்படியே அந்தரத்தில் மிதக்கிறது. இப்படி லாவகமாகவும் நேர்த்தியாகவும் பறப்பதற்கு எது அதற்கு உதவுகிறது? அதனுடைய இறகுகள்தான்.

இன்றிருக்கும் உயிரினங்களில் பறவைகளுக்கு மட்டும்தான் இறகுகள் வளருகின்றன. அநேக பறவைகளுக்கு விதவிதமான இறகுகள் இருக்கின்றன. நம்மால் பார்க்க முடிகிற வெளிப்புற இறகுகள் பறவைகளுக்கு வழவழப்பையும் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கும் வடிவமைப்பையும் தருகின்றன. பறப்பதற்கு அடிப்படையாய் இருக்கிற இந்த வெளிப்புற இறகுகளில் இறக்கையும் வால் இறகுகளும் அடங்கும். இதுபோன்ற இறகுகள், ஒரு தேன்சிட்டுக்கு கிட்டத்தட்ட 1,000-மும் ஓர் அன்னப்பறவைக்கு 25,000-⁠க்கும் அதிகமாகவும் உள்ளன.

இறகுகள் ஓர் அற்புதமான வடிவமைப்பு. இறகின் நடுத்தண்டு ராகஸ் என்றழைக்கப்படுகிறது; இது வளையும் தன்மையோடு, மிக உறுதியாக இருக்கிறது. இதன் இருபுறமும் மென்மையான இறகுப் படலமான வேன் உள்ளது; இதில் வரிசையாக ஒன்றையொன்று இணைக்கும் இறகிழைகள் எனப்படும் பார்புகள் உள்ளன. இந்த பார்புகள் ஒவ்வொன்றும், இறகு நுண்ணிழைகள் எனப்படும் பார்பியூல்களால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன; சிறியதாக, நூற்றுக்கணக்கில் காணப்படும் இந்த பார்பியூல்கள் அருகிலிருக்கும் பார்பியூல்களோடு கொக்கியிட்டு ‘ஜிப்’ போன்ற அமைப்பை உருவாக்குகின்றன. பார்பியூல்கள் பிரிந்திருக்கும்போது பறவை தன் இறகுகளைக் கோதிக்கொள்வதன் மூலம் சுலபமாக அவற்றை இணைத்து ‘ஜிப்’ போடுகிறது. பிரிந்திருக்கும் இறகை விரலிடுக்கில் மெதுவாகப் பிடித்து இழுப்பதன்மூலம் நீங்களும் அதேபோலச் செய்யலாம்.

விசேஷமாக, சிறகில் இருக்கும் பறக்க உதவுகிற இறகுகள் சமச்சீராக இருப்பதில்லை; அதாவது, பின் விளிம்பைவிட முன் விளிம்பில் வேன் குறுகலாக இருக்கிறது. பறக்க உதவும் ஒவ்வொரு இறகும் காற்றுத்துருத்தியின் வடிவமைப்பில் இருப்பதால் அவை ஒவ்வொன்றும் குட்டிச் சிறகுபோல செயல்படுகின்றன. மேலும், பறக்க உதவும் ஒரு பெரிய இறகை உற்றுப் பார்த்தால், அதன் நடுத்தண்டின் அடியில் வரிக்கோடு ஒன்றைக் காண்பீர்கள். எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அந்த வரிக்கோடு நடுத்தண்டை வலுப்படுத்துகிறது; முறிந்துவிடாமல் வளைவதற்கும் திருகி செயல்படுவதற்கும் உதவுகிறது.

பல பணிகளைச் செய்கிற இறகுகள்

அநேக பறவைகளுடைய வெளிப்புற இறகுகளின் மத்தியில் ஃபிலோப்லும் எனப்படும் நீளமான, மெல்லிய இறகுகளும் தூள் இறகுகளும் இருக்கின்றன. இவற்றின் வேர்ப்பகுதியில் இருக்கும் உணர்விழைகள் (சென்ஸார்கள்) வெளிப்புற இறகுகளுக்கு ஏதாவது தொந்தரவு வரும்போது அதை பறவையின் கவனத்திற்குக் கொண்டுவருகின்றன; அதோடு, பறக்கும் வேகத்தைக் கணிக்கவும் பறவைக்கு உதவுவதாகக் கருதப்படுகிறது. தூள் இறகுகளில் உள்ள பார்புகள் உடைந்து தூள் தூளாகின்றன; இந்தத் தூள்கள் பறவையின் இறக்கையைத் தண்ணீரிலிருந்து பாதுகாப்பதாகக் கருதப்படுகின்றன. இந்தத் தூள் இறகுகள் மட்டுமே உதிராமல் தொடர்ந்து வளருகின்றன.

இறகுகளின் பிற பணிகளில், பறவைகளை உஷ்ணத்திலிருந்தும் பனியிலிருந்தும் புறஊதா கதிர்களிடமிருந்தும் பாதுகாப்பதும் அடங்கும். உதாரணமாக, கடல் வாத்துகள் கடுமையான குளிர்ந்த கடல் காற்று வீசினாலும் ஏராளமாய் பெருகுவதாகத் தெரிகிறது. எப்படி? கிட்டத்தட்ட, குளிர் ஊடுருவா உடைபோலிருக்கும் வெளிப்புற இறகுகளின் அடியில் மென்மையான, புசுபுசுவென்ற இறகுகள் அடர்ந்து காணப்படுகின்றன, இவை கீழ் இறகுகள் என்று அழைக்கப்படுகின்றன; இவை 1.7 சென்டிமீட்டர் அளவுக்கு மண்டிக்கிடக்கின்றன; இவை அந்தக் கடல் வாத்தினுடைய உடலின் பெரும்பாலான பகுதியை மூடியிருக்கின்றன. இயற்கையாகப் பெற்ற கீழ் இறகுகள் மிகவும் ஆற்றல் வாய்ந்த மின்கடத்தாப் பொருளைப்போல செயல்படுகின்றன; இவற்றுக்கு இணை இவையே.

பொதுவாக இறகுகள் கடைசியில் உதிர்ந்துவிடுகின்றன. இறகு உதிர்த்தல் மூலம் பறவைகள் தங்கள் இறகுகளைப் புதுப்பித்துக்கொள்கின்றன. அதாவது, பழைய இறகுகள் உதிர்ந்ததும் புதியவை வளருகின்றன. பெரும்பாலான பறவைகள் குறிப்பிட்ட காலத்தில், ஒழுங்கான கால இடைவெளியில் தங்களுடைய இறக்கை, வால் பகுதியிலுள்ள இறகுகளை உதிர்த்துவிடுகின்றன; அதனால் அவை எப்பொழுதுமே தங்கள் பறக்கும் திறனைக் காத்துக்கொள்கின்றன.

“மிகக் கச்சிதமானவை”

விமானங்கள் பாதுகாப்பானவையாய் இருக்க வேண்டுமென்றால் வடிவமைத்தல், பொறியியல் வேலை, கைதேர்ந்த தொழில் திறமை என வெகு கவனமாகச் செய்யும் வேலைகள் அவற்றில் உட்பட்டுள்ளன. பறவைகளையும் அவற்றின் இறகுகளையும்பற்றி என்ன சொல்லலாம்? இறகுகள் உருவானதற்குப் புதைபடிவ அத்தாட்சிகள் இல்லாததால் பரிணாமவாதிகள் மத்தியில் பலத்த கருத்து வேறுபாடுகள் உண்டாயிருக்கின்றன. இந்த வாக்குவாதம் முழுவதிலும், “அடிப்படைவாதிகளைப் போல கூச்சல் போடுவதும்,” “கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டுவதும்,” “புதைபடிவ ஆய்வாளர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பும்” காணப்பட்டது என்று சைன்ஸ் நியூஸ் பத்திரிகை கூறுகிறது. இறகின் பரிணாமம் பற்றிய தொடர்பேச்சிற்கு ஏற்பாடு செய்த பரிணாம உயிரியலாளர் ஒருவர் இவ்வாறு வெளிப்படையாகச் சொன்னார்: “எந்தவொரு விஞ்ஞானப்பூர்வ விஷயமும் இந்தளவுக்குக் கசப்பான அனுபவத்தைத் தருமென்றோ மோசமான, தனிப்பட்ட நடத்தைக்கு வழிவகுக்குமென்றோ நான் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை.” இறகுகள் பரிணமித்தன என்று தெளிவாகத் தெரிந்தால் அந்தக் கலந்துரையாடல்கள் ஏன் இந்தளவு படுமோசமானவையாக மாறின?

“இறகுகள் மிகக் கச்சிதமானவை, அதுதான் பிரச்சினையே” என்று ஏல் பல்கலைக்கழகத்தினுடைய பறவைகளின் தோற்றமும் செயல்பாடும்​—⁠பறவைகள் கையேடு (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. முன்னேற்றத்திற்கான தேவையை வெளிப்படுத்தும் எந்த அத்தாட்சியும் இறகுகளில் காணப்படுவதில்லை. உண்மையில், “பழங்கால புதைபடிவ இறகு என சொல்லப்பட்ட இறகு, இன்றைய பறவைகளின் இறகுகளிலிருந்து எந்த விதத்திலும் வேறுபடாமல் அவற்றைப் போலவே இருக்கிறது.” a பூர்வத்தில் இருந்த தோலின் செதில்கள் படிப்படியாக முன்னேற்றமடைந்து, இறகுகளாக மாறின என்று இன்னமும் பரிணாமக் கொள்கை கற்பிக்கிறது. மேலும், “இடைப்பட்ட எல்லா நிலையிலும் முன்னிருந்த நிலையைவிட பின் வந்த நிலை மேம்பட்டதாக இருந்திருக்க வேண்டும்; அப்படி இல்லாமல் இறகுகள் பரிணமித்திருக்க முடியாது” என்று அந்தக் கையேடு கூறுகிறது.

சுருங்கச் சொன்னால், கொள்கை அளவில்கூட ஓர் இறகை பரிணாமத்தால் உருவாக்க முடியாது. ஏனென்றால், இறகின் வடிவமைப்பில் நீண்ட காலமாய் குருட்டாம்போக்கில், வழிவழியாய் நிகழும் மாற்றங்களின் ஒவ்வொரு நிலையும் ஓர் உயிரினம் வாழ்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்வதாக பரிணாமக் கொள்கை கூறுகிறது. சிக்கலான, கச்சிதமாகச் செயல்படுகிற இறகு போன்ற ஓர் அமைப்பு இந்த விதத்தில் தோன்றியிருக்க வேண்டும் என்று கற்பனைகூட செய்ய முடியாதென அநேக பரிணாமவாதிகளும் உணருகிறார்கள்.

மேலுமாக, ஒரு நீண்ட காலப்பகுதியில் இறகுகள் படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்றால், இடைப்பட்ட நிலையில் உள்ள புதைபடிவம் இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அப்படியொன்று கண்டுபிடிக்கப்படவில்லையே; முழு வளர்ச்சியடைந்த இறகுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. “இறகுகள் மிக மிகச் சிக்கலானவை என்பதால் பரிணாமக் கொள்கைக்குப் போதாத காலம்தான்” என்று அந்தக் கையேடு சொல்கிறது.

பறப்பதற்கு இறகுகள் மட்டும் போதாது

கச்சிதமாக இருக்கிற இறகுகள் மட்டுமே பரிணாமவாதிகளுக்கு பிரச்சினையாக இல்லை; பறப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கிற பறவையின் ஒவ்வொரு பாகமும் பிரச்சினையாய் இருக்கின்றன. உதாரணமாக, மெல்லிய, உட்புற துளையுள்ள எலும்புகளும், அசாதாரணமான, அற்புத சுவாச மண்டலமும், சிறகடிக்கவும் தன்னுடைய இறக்கைகளை கட்டுப்படுத்தவும் உதவுகிற பிரத்தியேக தசைகளும் ஒரு பறவைக்கு இருக்கின்றன. ஒவ்வொரு இறகுகளின் நிலையையும் கட்டுப்படுத்துவதற்குக்கூட அதற்குத் தசைகள் இருக்கின்றன; ஒரேவொரு இறகைக் கட்டுப்படுத்துவதற்குக்கூட ஏராளமான தசைகள் இருக்கின்றனவென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இந்த ஒவ்வொரு தசையையும் சிறிய, அற்புதமான மூளையோடு இணைக்க நரம்புகளும் இருக்கின்றன; இந்த மூளை எல்லா மண்டலங்களையும் ஒரே சமயத்தில், தானாகவே, துல்லியமாகக் கட்டுப்படுத்துவதற்கு முன்னதாகவே புரோகிராம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ஆம், இறகுகள் மட்டுமல்ல, மிகவும் சிக்கல் வாய்ந்த இந்த எல்லா அம்சங்களுமே பறப்பதற்கு அவசியமாயிருக்கின்றன.

என்றோ ஒருநாள் வானில் சிறகடித்துப் பறப்பதற்கான இயல்புணர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான முழு அறிவுரைகளும் அடங்கிய ஒரேவொரு குட்டி அணுவிலிருந்துதான் ஒவ்வொரு பறவையும் உருவாகிறது என்பதையும் மனதில் வையுங்கள். சங்கிலிபோல் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சாதகமான இந்த எல்லா விஷயங்களும் தற்செயலாக நடந்திருக்க முடியுமா? அல்லது மிக எளிமையான விளக்கம் என்று சொல்லப்படுவதே மிக நியாயமானதாகவும் விஞ்ஞானப்பூர்வமானதாகவும் இருக்கிறதா? அதாவது, பறவைகளும் அவற்றின் இறகுகளும் படைப்பாளரின் உன்னத ஞானத்தைப் பறைசாற்றுகின்றனவா? ஆம், சான்றுகளே சாட்சி பகருகின்றன.​—ரோமர் 1:20.

[அடிக்குறிப்பு]

a அந்த இறகு ஒருகாலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஆர்க்கியாப்டிரிக்ஸ் என்ற உயிரினத்தின் புதைபடிவ இறகாகும். இந்த உயிரினம்தான் தற்போதுள்ள பறவைகளுக்கு மரபுவழியில் “விடுபட்ட இணைப்பு” என்று சொல்லப்பட்டது. என்றாலும், அநேக புதைபடிவ ஆய்வாளர்கள் இனியும் அதைத் தற்போதுள்ள பறவைகளின் மூதாதையாகக் கருதுவதில்லை.

[பக்கம் 24-ன் பெட்டி/படம்]

போலி “அத்தாட்சி”

மற்ற உயிரினங்களிலிருந்துதான் பறவைகள் வந்தன என்பதற்குச் சில புதைபடிவ “அத்தாட்சி” கிடைத்திருப்பதாக ஒருகாலத்தில் பெருமையடித்துக்கொள்ளப்பட்டது; ஆனால், அது பித்தலாட்ட வேலை என்பது பின்னர் தெரியவந்தது. உதாரணமாக, 1999-⁠ல் டைனோசரைப் போல வாலையுடைய, இறகுள்ள ஓர் உயரினத்தின் புதைபடிவத்தைப்பற்றி ஒரு கட்டுரையை நேஷனல் ஜியோகிராஃபிக் என்ற பத்திரிகை சிறப்பித்துக்காட்டியது. அந்த உயிரினம்தான் “டைனோசர்களையும் பறவைகளையும் இணைக்கும் சிக்கலான சங்கிலியின் உண்மையான விடுபட்ட இணைப்பு” என்று அந்தப் பத்திரிகை அறிவித்தது. என்றாலும், அந்தப் புதைபடிவம் போலி என்று கண்டறியப்பட்டது; அதில், இரு வித்தியாசமான விலங்குகளின் புதைபடிவங்கள் ஒட்டவைக்கப்பட்டிருந்தன. உண்மையில், அதுபோன்ற “விடுபட்ட இணைப்பு” கண்டு பிடிக்கப்படவே இல்லை.

[படத்திற்கான நன்றி]

O. Louis Mazzatenta/National Geographic Image Collection

[பக்கம் 25-ன் பெட்டி]

பறவையின் கண்​—⁠ஒரு கண்ணோட்டம்

பட்டொளி வீசுகிற, பல வண்ண இறகுகள் மனிதர்களைப் பரவசப்படுத்து​கின்றன. ஆனால், மற்ற பறவைகளுக்கும்கூட அவை அதிக ரசனைக்குரியவையாக இருக்கலாம். சில பறவைகளுக்கு நிறங்களைக் கண்டுபிடிக்கும் நான்கு விதமான கூம்பு செல்கள் கண்களில் உள்ளன; மனிதர்களுக்கோ இவை மூன்று மட்டுமே உள்ளன. இந்தக் கூடுதலான பார்க்கும் திறனால் மனிதர்களுக்குப் புலப்படாத புறஊதா கதிர்களைப் பறவைகளால் காண முடிகிறது. சில இனங்களிலுள்ள ஆண், பெண் பறவைகள் பார்ப்பதற்கு ஒரேமாதிரி இருக்கலாம்; ஆனால், பெண்ணுடையதைவிட ஆணுடைய இறகுகள் புறஊதா கதிர்களை வித்தியாசமாகப் பிரதிபலிக்கின்றன. இந்த வித்தியாசத்தைப் பறவைகளால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது; இது அவற்றுக்குச் சரியான இணைகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது.

[பக்கம் 23-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

பார்பு

பார்பியூல்

ராகஸ்

[பக்கம் 24-ன் படம்]

வெளிப்புற இறகுகள்

[பக்கம் 24-ன் படம்]

ஃபிலோப்லும்

[பக்கம் 25-ன் படம்]

தூள் இறகு

[பக்கம் 25-ன் படம்]

கீழ் இறகு

[பக்கம் 24, 25-ன் படம்]

கடற்காகம்