Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு நிறக்குருடா?

உங்களுக்கு நிறக்குருடா?

உங்களுக்கு நிறக்குருடா?

“வெளியே கிளம்பும்போது நான் போட்டிருக்கும் உடையின் நிறங்கள் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகிறதாவென்று என்னுடைய மனைவி பார்ப்பாள்” என்று ராட்னி சொல்கிறார். அவர் மேலும் இவ்வாறு தொடர்கிறார்: “காலையில் உணவருந்தும்போது எனக்காக ஒரு பழத்தை அவளே எடுத்துக் கொடுப்பாள். ஏனென்றால், பழம் பழுத்துவிட்டதா என்று என்னால் கண்டுபிடிக்க முடியாது. அலுவலகத்திலும்கூட, கம்ப்யூட்டர் திரையிலுள்ள ஒவ்வொன்றும் நிறத்தால் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருப்பதால், எந்த இடத்தில் நான் கிளிக் செய்ய வேண்டும் என்று எப்போதுமே குழம்பிப்போய்விடுவேன். கார் ஓட்டிச்செல்லும்போதும் பச்சை விளக்குகள், சிவப்பு விளக்குகள் எல்லாமே ஒரே நிறமாகவே தெரிகின்றன; எனவே, மேலேயுள்ள விளக்கு எரிகிறதா, கீழேயுள்ள விளக்கு எரிகிறதா என்பதையே நான் எப்போதும் கவனிப்பேன். ஆனாலும், சில நேரங்களில் விளக்குகள் மேலே கீழேயில்லாமல் பக்கத்துப் பக்கத்தில் இருந்தால் நான் திணறிப்போவேன்.”

ஆம், ராட்னிக்கு நிறப்பார்வையின்மை இருக்கிறது. அது நிறக்குருடு என்றும் சொல்லப்படுகிறது. ஒளியை உணரும் கண்களின் உட்பகுதியான விழித்திரையைப் பாதிக்கும் ஒரு குறைபாட்டை அவர் மரபியல் வழியாகப் பெற்றிருந்தார். ராட்னியின் இந்தக் குறைபாடு ஐரோப்பிய முன்னோர்களின் பரம்பரையில் வந்தவர்களில் 12 ஆண்களில் ஒருவருக்கும் 200 பெண்களில் ஒருவருக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது. a இந்தக் குறைபாட்டால் அவதியுறும் பெரும்பாலானவர்களைப் போலவே ராட்னியாலும் கருப்பு வெள்ளை நிறங்களை மட்டுமல்ல, வேறு பல நிறங்களையும் பார்க்க முடிகிறது. ஆனால், இயல்பான பார்வையுடையவர்கள் சில நிறங்களை வேறுபடுத்திப் பார்க்கிறதுபோல, அவரால் பார்க்க முடியாது.

மனித கண்ணில் இருக்கும் விழித்திரை பொதுவாக நிறங்களைக் கிரகிக்கும் மூன்று விதமான கூம்பு வடிவ செல்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொருவித செல்லும் ஒளியின் வெவ்வேறு அடிப்படை நிறங்களான நீலம், பச்சை, அல்லது சிவப்பு ஆகியவற்றின் அலைநீளங்களைக் கிரகிக்கும் விதமாக உருவமைக்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு அலைநீளங்களையுடைய ஒளி அதனதனுடைய கூம்புகளைப் போய் எட்டி மூளைக்குத் தகவல் தெரிவிக்கிறது; இவ்வாறு நிறங்களை வகைபடுத்திப் பார்க்க ஒருவருக்கு உதவுகிறது. b ஆனால், நிறக்குருடு உடையவர்களுக்கு சில நிறங்களைக் கிரகிக்கும் சக்தியையுடைய கூம்புகள், ஆற்றல் குறைந்தவையாக இருக்கும் அல்லது அவற்றின் அலைநீளம் மாறியிருக்கும். அவ்வாறு இருப்பதால், நிறங்களை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. இவ்வாறு அவதியுறுகிறவர்களில் பெரும்பாலானோர் மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு, பழுப்பு ஆகிய நிறங்களை வகைப்படுத்தி பார்க்க கஷ்டப்படுவார்கள். எனவே, பழுப்பு நிற பிரெட்டில் அல்லது மஞ்சள் நிற சீஸில் பச்சை நிறத்தில் பூஞ்சணம் இருந்தால் அவர்களுக்கு அந்த நிறங்கள் எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் தெரியும்; நீல நிற கண்களையும் பொன்னிற முடியையும் உடைய நபருக்கும் பச்சை நிற கண்களையும் செந்நிற முடியையும் உடைய நபருக்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் தெரியாது. ஒருவருடைய சிவப்பு நிறத்தைக் கிரகிக்கும் கூம்புகள் ஆற்றல் குறைந்தவையாக இருந்தால் சிவப்பு ரோஜாக்கூட கருப்பு ரோஜாவாகத் தெரியும். இப்படி அவதியுறுகிறவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே நீல நிறத்தை உணர முடியாது.

நிறக்குருடும் பிள்ளைகளும்

நிறப்பார்வையில் குறைபாடுகள், பொதுவாக பெற்றோர் மூலமாக கடத்தப்படுவதால் பிறக்கும்போதே இருக்கின்றன. இந்தக் குறைபாட்டை உடைய பிள்ளைகள் பெரும்பாலும் தங்களை அறியாமலேயே அதைச் சமாளிக்க கற்றுக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, சில நிறங்களுக்கிடையில் உள்ள வித்தியாசத்தை அவர்களால் பார்க்க முடியாவிட்டாலும், அந்த நிறங்கள் மங்கலாக இருக்கின்றனவா, பளிச்சென இருக்கின்றனவா என்பதைப் பார்த்தே அவற்றின் வித்தியாசங்களைப் புரிந்துகொள்கிறார்கள்; அந்த வித்தியாசங்களை நிறங்களின் பெயரோடு சம்பந்தப்படுத்தி பார்க்கிறார்கள். அதோடு, பொருட்களை அவற்றின் நிறத்தை வைத்து அடையாளம் காண்பதைவிட, அவற்றின் மீதுள்ள வடிவத்தையும் அவற்றின் தன்மையையும் வைத்து அடையாளங்காண கற்றுக்கொள்கிறார்கள். சொல்லப்போனால், தங்கள் இளம் பருவம் முழுவதும் தங்களுக்கு இப்படிப்பட்ட குறை இருப்பதை உணராமலேயே அநேக பிள்ளைகள் இருந்துவிடுகிறார்கள்.

பள்ளிகளில், முக்கியமாக நர்சரியில் பல நிறங்களைக் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தி கற்றுக்கொடுக்கப்படுவதால், பெற்றோரும் ஆசிரியர்களும் நிறக்குருடுள்ள ஒரு பிள்ளை கற்கும் திறனில் குறைபடுகிறது என்று நினைக்கலாம், ஆனால் நிஜத்தில் அவன் நிறப்பார்வையில் குறைபடலாம். ஐந்து வயது பையன் ஒருவன் மேகங்களை இளஞ்சிவப்பிலும், ஆட்களை பச்சையிலும், மரங்களின் இலைகளை பழுப்பு நிறத்திலும் வரைந்ததால் ஒரு ஆசிரியை அவனை தண்டித்திருக்கிறார். நிறக்குருடுள்ள ஒரு பிள்ளைக்கு இந்த நிறங்கள் சரியானதாகவே தோன்றும். அதனால்தான் சிறு வயதிலிருந்தே அடிக்கடி நிறப்பார்வை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சில அதிகாரிகள் பரிந்துரைக்கிறார்கள்.

இந்தக் குறைபாட்டினைச் சரிசெய்ய எந்தவொரு நிவாரணமும் இதுவரை அறியப்படவில்லை; ஆறுதலான விஷயம் என்னவென்றால், வயது செல்ல செல்ல இந்தக் குறைபாடு அதிகமாவதுமில்லை, பார்வையில் வேறெந்த ஆபத்தை விளைவிப்பதுமில்லை. c இருந்தாலும், நிறக்குருடு என்பது எரிச்சலூட்டும் ஒரு குறைபாடே. ஆனாலும், கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் கடவுளுக்குப் பயந்து நடப்பவர்களிடம் காணப்படும் அபூரணத்தன்மையை இயேசு கிறிஸ்து சுவடு தெரியாமல் நீக்கிப்போடுவார். இவ்வாறு பார்வையில் எந்தவிதமான குறையை உடையவர்களும் யெகோவாவின் கைதேர்ந்த வேலையையும் அதன் அழகையும் தங்கள் கண்ணாரக் காண்பார்கள்.​—ஏசாயா 35:5; மத்தேயு 15:30, 31; வெளிப்படுத்துதல் 21:3, 4.

[அடிக்குறிப்புகள்]

a நிறக்குருடு அனைத்து இனத்தவர்களுக்கும் இருந்தாலும் வெள்ளை நிறத்தவர்களில்தான் இது அதிகமாக காணப்படுகிறது.

b நம்முடைய நிறப்பார்வையும் மிருகங்களின் நிறப்பார்வையும் வேறுபட்டதாக இருந்தாலும், அநேக மிருகங்களால் நிறங்களை வகைப்படுத்திப் பார்க்க முடியும். உதாரணத்திற்கு, நாய்கள் தங்கள் விழித்திரைகளில் இரண்டு விதமான கூம்புகளையே கொண்டிருக்கின்றன. ஒன்று நீல நிறத்தை கிரகிக்கவும் மற்றொன்று சிவப்புக்கும் பச்சைக்கும் இடைப்பட்ட ஒரு நிறத்தைப் பிரித்துப் பார்ப்பதற்கும் உதவுகின்றன. மறுபட்சத்தில், சில பறவைகள் நான்கு விதமான கூம்புகளை உடையதாயிருக்கும். அவை, மனிதர்களால் பார்க்க இயலாத புறஊதா ஒளியைக்கூடப் பார்ப்பதற்கு உதவுகின்றன.

c சில சமயங்களில் நோயின் காரணமாகவும் நிறக்குருடு ஏற்படலாம். உங்களுடைய நிறப்பார்வையில் ஏதேனும் மாற்றங்களை உணர்ந்தீர்கள் என்றால், ஒரு கண் மருத்துவரை அணுகலாம்.

[பக்கம் 18-ன் பெட்டி/படங்கள்]

நிறக்குருடை கண்டறிவதற்கான பரிசோதனைகள்

ஒரு நபருக்கு இருக்கும் நிறக்குருடின் வகையையும் அளவையும் கண்டறியும் பரிசோதனைகளில் பல விதமான வடிவங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவ்வடிவங்களில் பெரும்பாலும் பல நிறங்களையும் அவற்றின் சாயல்களையும் உடைய புள்ளிகள் அடங்கியிருக்கும். அதிகமாக பயன்படுத்தப்படும் இஷிஹாரா பரிசோதனை, இதுபோன்ற 38 விதமான வடிவங்களைக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, இயல்பான பார்வையையுடைய ஒரு நபர், பகல் வெளிச்சத்தில் அந்த வடிவங்களில் ஒன்றை காணும்போது 42, 74 (இடப்பக்கம்) என்ற எண்களை காண்பார். ஆனால், சிவப்பு, பச்சை ஆகிய நிறங்களைப் பார்ப்பதில் குறைபாட்டை உடையவர்களில் ஒருவர் அதே வடிவத்தைப் பார்க்கையில் மேலிருக்கும் எண்ணை காண மாட்டார், கீழேயுள்ள எண் 21-ஆக தெரியும். இந்தச் சிவப்பு-பச்சை நிறங்களைப் பார்ப்பதில் குறைபாட்டைக் கொண்டிருப்பவர்களே அதிகம்.*

பரிசோதனை மூலமாக ஏதோ குறை இருப்பது தெரிய வந்தால், அது பெற்றோர் வழியாக வந்ததா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் வந்ததா என்பதை கண்டறிய ஒரு கண் மருத்துவர் வேறுசில பரிசோதனைகளையும் சிபாரிசு செய்யக்கூடும்.

[அடிக்குறிப்பு]

உதாரணத்திற்காக மட்டுமே இந்தப் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறைபாட்டைக் கண்டறிய தகுதியான ஒரு மருத்துவரிடமே பரிசோதனைகள் செய்ய வேண்டும்.

[படத்திற்கான நன்றி]

பக்கம் 18-⁠ல் நிறங்களைப் பரிசோதிக்கும் தகடுகள்: Reproduced with permission from the Pseudoisochromatic Plate Ishihara Compatible (PIPIC) Color Vision Test 24 Plate Edition by Dr. Terrace L. Waggoner/www.colorvisiontesting.com

[பக்கம் 19-ன் பெட்டி]

ஏன் முக்கியமாக ஆண்களுக்கு?

பெற்றோர் மூலம் கடத்தப்படும் நிறக்குறைபாடுகளை X குரோமசோம் எடுத்துச் செல்லும். பெண்களுக்கு இரண்டு X குரோமசோம்கள் இருக்கின்றன, ஆண்களுக்கோ ஒரு X குரோமசோமும் ஒரு Y குரோமசோமும் இருக்கும். எனவே, ஒரு பெண் தன்னுடைய ஒரு X குரோமசோமில் பார்வை கோளாறைப் பெற்றிருந்தால், அவளுடைய மற்றொரு குரோமசோமில் உள்ள குறைபாடில்லாத மரபணு அந்தக் கோளாறை ஈடு செய்துவிடும், அவளுடைய பார்வையில் எந்தக் குறைபாடும் இருக்காது. ஆனால் ஒரு ஆண் தன்னுடைய X குரோமசோமில் ஏதோவொரு கோளாறைப் பெற்றிருந்தால் அதை ஈடுசெய்ய அவனுக்கு வேறொரு X குரோமசோம் இருப்பதில்லை.

[பக்கம் 18-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

நாம் நிறங்களை எப்படி அடையாளம் காண்கிறோம்

பொருள்களிலிருந்து வரும் ஒளிகதிர் கருவிழிப்படலத்தின் வழியாகவும் லென்சுகளின் வழியாகவும் சென்று விழித்திரையில் போய் குவிகிறது

கருவிழிப் படலம்

லென்சு

விழித்திரை

தலைகீழாக பதியும் பிம்பத்தை மூளை நேராக்குகிறது

பார்வை நரம்பு பார்வை உணர்வுகளை மூளைக்கு கடத்துகிறது

விழித்திரை கூம்பு வடிவ செல்களையும் குச்சி வடிவ செல்களையும் கொண்டிருக்கிறது. இரண்டும் சேர்ந்தே தெளிவான பார்வையைக் கொடுக்கின்றன.

குச்சிகள்

கூம்புகள்

கூம்பு வடிவ செல்கள் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்களைக் கிரகிக்கின்றன

சிவப்பு

பச்சை

நீலம்

[படங்கள்]

இயல்பான பார்வையுள்ளவருக்கு

நிறப் பார்வை குறைபாடுள்ளவருக்கு