Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘உண்மையான வாழ்வுக்கு’ கடவுள் உங்களை வழிநடத்தட்டும்

‘உண்மையான வாழ்வுக்கு’ கடவுள் உங்களை வழிநடத்தட்டும்

‘உண்மையான வாழ்வுக்கு’ கடவுள் உங்களை வழிநடத்தட்டும்

நம்பகத்தன்மை​—⁠இது ஒரு வழிகாட்டிக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத குணம். பைபிளின் நூலாசிரியரான யெகோவாவைப் பற்றி அறிந்தவர்கள், இந்த அண்டத்தில் அவரைவிட நம்பகமானவர் எவருமில்லை என்பதை உறுதியாக நம்புகிறார்கள். அவர் “பொய்யுரையாத தேவன்.” (தீத்து 1:3; 2 தீமோத்தேயு 3:16) கடவுள் வாக்குறுதி அளித்த தேசத்துக்கு இஸ்ரவேல் மக்களை வழிநடத்திச் சென்ற தேவ பயமுள்ள நபரான யோசுவா, யெகோவா நம்பத்தக்கவர் என்பதற்குச் சான்றளிக்கிறார். ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்கு அளித்த உரையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்: ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.’​—யோசுவா 23:⁠14.

யோசுவாவின் காலம் முதற்கொண்டு, பைபிளிலுள்ள இன்னும் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்கின்றன. இந்த உண்மை, இனி நிறைவேறவிருக்கிற தீர்க்கதரிசனங்களின்மீது பலமான விசுவாசம் வைக்க நமக்கு உறுதியான ஆதாரத்தைத் தருகிறது. பூமியும் கீழ்ப்படிதலுள்ள மனிதகுலமும் படைக்கப்பட்டதற்கான கடவுளுடைய நோக்கத்தைக் குறித்துச் சொல்லப்பட்டவையே இந்தத் தீர்க்கதரிசனங்களில் அதிகம்.

கடவுளுடைய வழிகாட்டுதலால் நீங்கள் பயனடைவீர்களா?

அன்பே உருவான யெகோவா தேவன் நாம் இன்றும் என்றும் சந்தோஷமாக வாழவேண்டுமென்று விரும்புகிறார். (யோவான் 17:3; 1 யோவான் 4:8) ஆம், நாம் “உண்மையான வாழ்வை,” அதாவது நித்திய ஜீவனை அனுபவிக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். (1 தீமோத்தேயு 6:12, 19; பொது மொழிபெயர்ப்பு) இதனால்தான், 60 லட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷத்தை’ தங்களுடைய அயலாருக்கு சந்தோஷமாக அறிவிக்கிறார்கள். (மத்தேயு 24:14) இன்று 235 நாடுகளில், கிட்டத்தட்ட உலக நாடுகள் அனைத்திலும் அவர்கள் இந்த வேலையை செய்து வருகிறார்கள்!

கடவுளுடைய ராஜ்யம் என்பது இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் பரலோக அரசாங்கமாகும். (தானியேல் 7:13, 14; வெளிப்படுத்துதல் 11:15) அவருடைய ஆட்சியில் கொடியவர்கள் அனைவரும் அதாவது, யெகோவாவின் நீதியான நெறிகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள். (சங்கீதம் 37:10; 92:7) அதற்குப் பின்பு “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல,” இந்த முழு பூமியும் “கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.”​—ஏசாயா 11:9.

பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கடவுளை “ஆவியோடும் உண்மையோடும்” வழிபட்டு, அவருடைய அன்பான அறிவுரைகளுக்கும் உன்னத நெறிகளுக்கும் மனப்பூர்வமாக கீழ்ப்படியும்போது நிலவுகிற சமாதானத்தையும் ஐக்கியத்தையும் சிந்தித்துப் பாருங்கள்! (யோவான் 4:24) கடைசியில், கடவுள் வாக்குறுதி அளித்த “உண்மையான வாழ்வை” மக்கள் அனுபவிப்பார்கள்!

இருந்தாலும், முன்னறிவிக்கப்பட்ட விதமாக சிலர் மட்டுமே கடவுளுடைய அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு ஜீவனைப் பெறுவார்கள். (மத்தேயு 7:13, 14) அவர்களில் ஒருவராய் இருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? விரும்புகிறீர்கள் என்றால், பைபிளை ஆழ்ந்து படிக்கும்படியும் கடவுளுடைய ஆலோசனைகளை வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளும்படியும் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு மனமார அழைப்பு விடுக்கிறார்கள். அவ்வாறு செய்யும்போது, யெகோவா உண்மையில் எவ்வளவு நல்லவர் என்பதை நீங்களே “ருசித்துப்” பார்ப்பீர்கள். (சங்கீதம் 34:8) பறவைகளுக்கு அவற்றின் தன்னியல்பு சரியான இடத்திற்கு வழிநடத்துவது எப்படியோ, அப்படியே யெகோவாவும் தம்முடைய உண்மையுள்ள மக்களை பரதீஸில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துவதும் நிச்சயம்.​—லூக்கா 23:⁠43.

[பக்கம் 8, 9-ன் படம்]

“சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.”​—⁠மத்தேயு 5:5

“சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.” ​—⁠சங்கீதம் 37:⁠11

“மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, . . . அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை.” ​—⁠வெளிப்படுத்துதல் 21:3, 4

“செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.” ​—⁠நீதிமொழிகள் 2:21, 22