உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
◼“அமெரிக்காவில் படுபயங்கரமான குற்றச்செயல்களில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதும் ஒன்று” என்று போக்குவரத்துத் துறையின் தற்காலிக செயலாளர் மரீயா ஸீனோ கூறினார். 2005-ல் அமெரிக்கா முழுவதிலும் வாகன விபத்தில் இறந்தவர்களுள் 39 சதவிகிதத்தினர் குடிபோதை காரணமாக இறந்திருக்கிறார்கள்.—ஐ.மா. போக்குவரத்துத் துறை.
◼“ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கு 18,000-க்கும் அதிகமான பிளாஸ்டிக் குப்பைகள் இன்று கடலில் மிதக்கின்றன.” —ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம்.
◼“ஒவ்வொரு வருடமும் அமெரிக்க ஊழியர்கள் வேலை நேரத்தில் 50 கோடி மணிநேரத்தைக் [கணினி] விளையாட்டுகளில் செலவழிக்கிறார்கள்; இதனால் உற்பத்தியில் 1,000 கோடி டாலர் நஷ்டமாகிறது.” இதில், “வேலை நேரத்தில் சொந்த பயன்பாட்டிற்காக இணையதளத்தை அலசும் நேரம்” சேர்க்கப்படவில்லை.—மேனேஜ்மென்ட் இஷ்யூஸ்.காம்.
வன்முறைக்குப் பலியாகும் பிள்ளைகள்
“வன்முறை அநேக பிள்ளைகளின் வாழ்க்கையில் அன்றாட சம்பவமாகிவிட்டது” என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலருடைய சமீபத்திய அறிக்கையின்படி, “2002-ல் உலக முழுவதும் கிட்டத்தட்ட 53,000 பிள்ளைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.” கூடுதலாக, லட்சக்கணக்கான பிள்ளைகள் கொத்தடிமைகள் ஆக்கப்படுகிறார்கள், விபசாரத்தில் அல்லது ஆபாசத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுபோன்ற அவலங்களைத் தடுக்க முடியுமா? பொதுச் செயலரின் அறிக்கை இவ்வாறு சொல்கிறது: “வீட்டிலும் வெளியிலும் பிள்ளைகளைப் பாதுகாக்க அநேக வழிகள் இருக்கின்றன; பெற்றோர் நல்ல போதனையையும் பாதுகாப்பையும் பிள்ளைகளுக்கு வழங்குவது, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பலமான பாசப்பிணைப்பை உருவாக்குவது ஆகியவற்றோடு வன்முறையைக் கையாளாத பலன்தரும் கண்டிப்பு முறைகளும் பிற முறைகளும் அவற்றில் அடங்கும்.”
நல்ல நண்பர்களும் நீடித்த வாழ்வும்!
நல்ல நண்பர்களின் வட்டாரம் இருப்பது ஒருவருடைய ஆயுள் காலத்தை நீடிக்கச் செய்யலாம் என நோயியல் மற்றும் சமுதாய சுகாதாரத்திற்கான பத்திரிகை (ஆங்கிலம்) கூறுகிறது. மனித உறவுகள் ஆயுள் காலத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்ற ஆய்வு சுமார் 1,500 ஆஸ்திரேலியர்களை வைத்து பத்தாண்டுகளுக்கு நடத்தப்பட்டது; இவர்கள் 70 அல்லது அதற்கும் அதிக வயதானவர்கள். ஒரு சில நண்பர்கள் உள்ள ஒரு நபரைவிட அநேக நண்பர்களை உடைய ஒருவரின் இறப்பு வீதம் 22 சதவிகிதம் குறைவாக இருந்தது. “மனச்சோர்வு, சுயதிறமை, சுயமதிப்பு, பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன், சுயகட்டுப்பாடு” போன்றவற்றில் நெருங்கிய நண்பர்களால் முதியவர்கள் மத்தியில் நல்ல பாதிப்பு ஏற்படுகிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கடன் சுமையில் மூழ்கும் பிரிட்டன்வாசிகள்
“பெரியவர்களில் மூன்றில் ஒன்று என்ற வீதத்திற்கும் அதிகமானோர் தங்களுடைய உடனடி பணத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள வைப்புக்கும் அதிகமாக வங்கியிலிருந்து எடுக்கப்படுகிற பணத்தையே சார்ந்திருக்கிறார்கள்” என்று லண்டனில் வெளியாகும் த டெய்லி டெலிகிராஃப் என்ற செய்தித்தாள் கூறுகிறது. அப்படி வைப்புக்கும் அதிகமாக வங்கியிலிருந்து எடுக்கப்படும் பணத்தை அவசரத் தேவைக்கு வங்கி வழங்கும் கடனாக எண்ணாமல் “முற்றிலும் இன்றியமையாதது” என்று 35 லட்சம் பிரிட்டன்வாசிகள் நினைக்கிறார்கள்; இவர்கள் எப்போதுமே வைப்புக்கும் அதிகமாகத்தான் வங்கியிலிருந்து பணம் எடுக்கிறார்கள். “ஆசைகளை உடனடியாகத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்ற வேட்கை நம்முடைய சமுதாயத்தைப் பீடித்திருப்பதே” அதற்குக் காரணம் என்று கிரெடிட் ஆக்ஷன் என்ற அறநிலையத்தின் செயற்குழுத் தலைவரான கீத் டான்டர் சாடுகிறார். “நம்மில் லட்சக்கணக்கானோர், வைப்புக்கும் அதிகமான பணத்தைச் செலவு செய்கிறோம், பணத்தைப் பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லை; நம்மில் அநேகர், நம்முடைய வாழ்க்கைப்பாணி எவ்வளவு செலவுமிக்கது, அதற்கு எவ்வளவு பணம் செலவழிக்கிறோம் என்பதைப்பற்றி எந்தவொரு சிந்தனையும் இல்லாமல் இருக்கிறோம்” என்று டான்டர் எச்சரிக்கிறார்.
இரவுநேர விமானங்களும் புவிச்சூடும்
ஜெட் விமானங்கள் ஏற்படுத்தும் உறைந்த நீராவித் தடங்கள் விண்வெளியிலேயே இருப்பது வளிமண்டல வெப்பத்தைப் பாதிப்பதாக சைன்டிஃபிக் அமெரிக்கன் என்ற பத்திரிகை கூறுகிறது. பகலில் இந்த உறைந்த நீராவித் தடங்கள் ஊடுருவும் சூரிய ஒளியைப் பிரதிபலிப்பதால் மொத்தத்தில் வளிமண்டலமே குளிர்ச்சியாய் ஆகிறது. என்றாலும், இரவிலோ அவை வெப்பத்தை வெளியேற விடுவதில்லை. “மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை பறக்கிற விமானங்களால் ஏற்படும் உறைந்த நீராவித் தடங்கள், 60 முதல் 80 சதவிகிதம்வரை சுற்றுச்சூழலை வெப்பமாக்குகின்றன. இத்தனைக்கும் வானில் பறக்கும் விமானங்களின் எண்ணிக்கையில் இது கால்பங்குதான்” என்று ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்கள் கண்டதாக அந்த அறிக்கை சொல்கிறது.