Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒருபென்சில் கொடுங்களேன்

ஒருபென்சில் கொடுங்களேன்

ஒருபென்சில் கொடுங்களேன்

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

அது மலிவானது, எளிதில் கிடைக்கும் ஒன்று, பாரமானதல்ல. பாக்கெட்டுக்குள் கச்சிதமாகப் பொருந்தும் ஒன்று. அதற்கு மின்சாரம் தேவையில்லை, ஒருபோதும் ஒழுகுவதில்லை, அதனுடைய தடங்களையும் எளிதில் அழித்துவிடலாம். அதைப் பயன்படுத்தி பிள்ளைகள் எழுத கற்றுக்கொள்கின்றனர், அதை வைத்து பிரபலமான ஓவியர்கள் தங்கள் கைவண்ணங்களை உருவாக்குகின்றனர், சில குறிப்புகளை அவ்வப்போது எழுதிவைக்க நம்மில் பெரும்பாலோர் அதை எப்போதுமே கையில் வைத்திருப்பதுண்டு. ஆம், அனைவராலும் வாங்க முடிந்ததும் உலகெங்கும் பரவலாக பயன்படுத்தப்படுவதுமான ஓர் எழுதுகோலாகிய பென்சிலே அது. அது பிறந்து வளர்ந்த கதை இங்கிலாந்தின் நாட்டுப்புறப் பகுதியில் தற்செயலாகத் துவங்குகிறது.

காரீயம்

வட இங்கிலாந்திலுள்ள லேக் மாவட்டத்தில் பாரோடேல் என்ற பள்ளத்தாக்கு இருக்கிறது. 16-⁠ம் நூற்றாண்டில், பாரோடேலின் மலையோரப் பகுதிகளின் கீழே கருப்பு நிறத்தில் விசித்திரமான கட்டிகள் கிடைத்தன. அந்தக் கனிமம் பார்ப்பதற்குக் கரியைப் போன்றிருந்தாலும் அது எரியக்கூடியதல்ல. எழுதுவதற்கேற்ற ஒரு பரப்பில் இந்தக் கனிமம் மினுமினுப்பான கருப்பு நிறத்தில் எளிதில் அழிக்க முடிகிற தடங்களைப் பொறித்தது. ஆரம்பத்தில் இந்தக் கனிமத்திற்கு காரீயம், வேட் (wad), ப்ளம்பேகோ (plumbago) என பல பெயர்கள் இருந்தன. ப்ளம்பேகோ என்பதற்கு “ஈயம்போன்ற தன்மையைக் கொண்டது” என்று அர்த்தம். அது வழுவழுப்பாக இருந்ததால், அதன் கட்டிகளை மக்கள் ஆட்டுத்தோலில் சுற்றி வைத்தார்கள் அல்லது அவற்றின் சிறு குச்சிகளைக் கயிற்றினால் கட்டி வைத்தார்கள். மரக்குச்சிகளுக்குள்ளே அதை முதன்முதலாக நுழைக்க நினைத்தது யார் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் 1560-களில் ஆரம்பகால பென்சில்கள் ஐரோப்பிய கண்டத்தை எட்டின.

அதைத் தொடர்ந்து காரீயம் வெட்டி எடுக்கப்படும் வேலை துவங்கியது, ஓவியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஏற்றுமதி செய்யப்பட்டது. 17-⁠ம் நூற்றாண்டில் பென்சில் எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பொருளாக ஆனது. அதே வேளையில், இன்னும் நல்ல எழுதுகோலை உருவாக்குவதற்காக பென்சில் தயாரிப்பாளர்கள் காரீயத்தை வைத்து பல ஆராய்ச்சிகள் நடத்தினர். பாரோடேலின் இந்தப் பொருள் கலப்படமற்றதாயும் எளிதில் பிரித்தெடுக்க முடிந்ததாயும் இருந்ததால், திருடர்களுக்கும் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கும் முக்கிய குறியாய் ஆனது. அதனால், 1752-⁠ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றியது. காரீயத்தைத் திருடுபவர்களைச் சிறையில் அடைக்கவோ தொலைதூர இடத்திற்கு கடத்தி காவலில் வைக்கவோ தண்டனை விதித்தது.

காரீயம் ஈயமேயல்ல, அது கலப்படமற்ற கரியின் மிருதுவான வகையாகும் என்று 1779-⁠ல் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் வல்லுநரான கார்ல் டபிள்யூ. ஷேலா என்பவர் கண்டுபிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பத்து வருடங்கள் கழித்து ஜெர்மனியைச் சேர்ந்த நிலயியல் வல்லுநரான ஆப்ராஹாம் ஜி. வெர்னர் அதற்கு கிராஃபைட் என்று பெயரிட்டார். அது “எழுதுதல்” என்று பொருள்படும் கிராஃபீன் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. ஆம், பொதுவாக ‘லெட் பென்சில்’ என்று சொல்கையில், அதன் பெயரில் லெட், அதாவது ஈயம் என்ற சொல் இருந்தாலும் நிஜத்தில் கரிமுனை பென்சில்களில் கொஞ்சம்கூட ஈயம் கலந்திருப்பதில்லை!

பென்சிலின் காலப் பரிமாணம்

இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட கிராஃபைட் எவ்விதமான செயல்முறைகளுக்கும் உட்படுத்தப்படாமல் அப்படியே பயன்படுத்தும் அளவிற்கு கலப்படமற்றதாய் இருந்ததால், பல வருடங்களுக்கு பென்சில் தயாரிக்கும் ஆலைகளில் அதற்கு நல்ல மவுசு இருந்தது. ஐரோப்பிய கிராஃபைட், தரத்தில் குறைந்திருந்ததால் அங்கிருந்த பென்சில் தயாரிப்பாளர்கள் பென்சில் கரிமுனைகளின் தரத்தை உயர்த்த பல முறைகளைக் கையாண்டார்கள். கிராஃபைட் தூள்களைக் களிமண்ணோடு கலந்து அந்தக் கலவையைக் குச்சிகளாக வடிவமைத்து சூளையில் இட்டு சுட்டார், பிரெஞ்சு பொறியாளரான நிக்கலா-⁠ஷாக் கான்டே என்பவர். கிராஃபைட்டின் அளவையும் களிமண்ணின் அளவையும் அவ்வப்போது மாற்றும்போது அவரால் கருப்பு நிறத்தின் பல வண்ணச்சாயல்களில் கரிமுனைகளை உருவாக்க முடிந்தது. இந்தச் செய்முறை இப்போதும் கையாளப்படுகிறது. கான்டே 1795-⁠ல் தன்னுடைய இந்தக் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார்.

19-⁠ம் நூற்றாண்டில் பென்சில் தயாரிப்பது கொள்ளை லாபம் தரும் வியாபாரமாக ஆனது. சைபீரியா, ஜெர்மனி, தற்போதைய செக் குடியரசு உட்பட அநேக இடங்களில் கிராஃபைட் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் ஜெர்மனியிலும் பின்பு அமெரிக்காவிலும் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இயந்திரமயமாதலும் பேரளவிலான உற்பத்தியும் பென்சிலின் விலையைக் கணிசமாகக் குறைத்தன. 20-⁠ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் கைகளில்கூட பென்சில் உலாவத் தொடங்கியது. வண்ணம் தீட்டப்படாத அந்த மலிவான பென்சில்களை அமெரிக்காவில் “பென்னி பென்சில்கள்” என்று அழைத்தார்கள்.

நவீனகால பென்சில்

ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் உற்பத்தியாவதால், பென்சில் நேர்த்தியான பல்வகை பயனுள்ள எழுதுகோலாகவும் ஓவியம் தீட்ட பயன்படுத்தப்படும் கருவியாகவும் ஆகிவிட்டது. ஒரு சாதாரண மரப் பென்சிலால் 56 கிலோமீட்டர் நீளம் கோடு போட முடியும், 45,000 சொற்களை எழுத முடியும். உலோகத்தாலோ பிளாஸ்டிக்காலோ செய்யப்பட்ட இயந்திரப் பென்சில் கூர்மையாக்க வேண்டிய அவசியமில்லாத மெல்லிய முனைகளைக் கொண்டிருக்கும். பல விதமான நிறத்தையுடைய பென்சில்களில் கிராஃபைட்டுக்குப் பதிலாக சாயங்களும் நிறமிகளும் பயன்படுத்தப்படுகின்றன. அவை பல விதமான நிறங்களில் கிடைக்கும்.

பென்சில் பல்வகையில் பயனுள்ளதாயும் வலுவுள்ளதாயும் எளியதாயும் பயன்விளைவிப்பதாயும் இருக்கிறது. அது, ஒருபோதும் தூக்கியெறியப்படும் பயனற்ற பொருளாய் ஆவதற்கு வழியேயில்லை. இனி வரப்போகும் காலங்களிலும், நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி வேலை செய்யும் இடத்தில் இருந்தாலும் சரி யாராவது உங்களிடம் வந்து, “ஒரு பென்சில் கொடுங்களேன்” என்று கேட்டால் ஆச்சரியமே இல்லை.

[பக்கம் 13-ன் பெட்டி/படம்]

பென்சிலுக்குள் கரிமுனை எவ்வாறு நுழைகிறது?

பொடியாக அரைக்கப்பட்ட கிராஃபைட், களிமண், தண்ணீர் ஆகியவை கலந்த திரவத்தை ஒரு மெல்லிய உலோக குழாய் வழியாகச் செலுத்துவார்கள். அந்தத் திரவம் வெளியே வரும்போது நீளமான கெட்டியான கயிறுபோல வரும். அந்தக் கரிமுனை உலர வைக்கப்பட்டப் பின்பு அதை வெட்டி சூளையில் சுட்டு, சூடான எண்ணெயிலும் மெழுகிலும் முக்கி எடுப்பார்கள். பொதுவாக தேவதாரு மரம் எளிதில் சீவி கூர்மையாக்குவதற்கு ஏற்றதாக இருக்கும். எனவே, அந்த மரத்திலிருந்து சிறு மரத்துண்டுகளை வெட்டுவார்கள். அவை ஒரு பென்சிலின் நீளமும் அரை பென்சிலின் பருமனுமாக இருக்கும்படி அறுத்தெடுப்பார்கள். இவற்றைச் சமதளமாக்கி கரிமுனைகளை நுழைப்பதற்காக வரிப்பள்ளங்களை ஏற்படுத்துவார்கள். வரிப்பள்ளங்களை உடைய ஒரு மரத்தட்டில் கரிமுனைகள் நுழைக்கப்பட்டபின் வேறொரு மரத்தட்டை அதன் மேல் அழுத்தி வைத்து ஒட்டிவிடுவார்கள். பசை உலர்ந்தப் பிறகு, பென்சில்கள் தனித்தனியே வெட்டப்படுகின்றன. சரியான வடிவம் கொடுக்கப்பட்டப் பிறகு அதன் சொரசொரப்பை நீக்கி, பெயின்ட் அடித்து, தயாரிப்பாளரின் வாணிக உரிமைக்குறியோடு மற்ற தகவல்களையும் அச்சடிக்கின்றனர். எல்லாம் முடிந்ததும் எவ்வித பிசிரும் காணப்படாத அருமையான பென்சில் ரெடி. சில சமயங்களில், பென்சிலின் ஒரு முனையில் ரப்பர் பொருத்தப்படுகிறது.

[படத்திற்கான நன்றி]

Faber-Castell AG

[பக்கம் 14-ன் பெட்டி/படம்]

எனக்கு எந்தப் பென்சில் தேவை?

உங்களுக்குத் தேவையான பென்சிலைத் தெரிவு செய்ய, பென்சிலில் அச்சிடப்பட்டிருக்கும் எழுத்துக்களையோ எண்களையோ பாருங்கள். அவை அந்தப் பென்சிலின் கடினத்தன்மையையோ மிருதுவான தன்மையையோ குறிக்கும். மிருதுவான கரிமுனைகள் அதிக கருமையாக எழுத உதவும்.

HB பல்வகைப் பயனுள்ள நடுத்தரமான கரிமுனையாகும்.

B என்பது மிருதுவான கரிமுனைகளை குறிக்கும். 2B, 6B போன்ற எண்கள் மிருதுவான தன்மையின் அளவைக் குறிக்கும். பெரிய இலக்கமுள்ள எண் அதிக மிருதுவான தன்மையை உடையதாயிருக்கும்.

H என்பது கடினமான கரிமுனைகளை குறிக்கும். 2H, 4H, 6H போன்ற எண்கள் கடினத் தன்மையின் அளவைக் குறிக்கும். பெரிய இலக்கமுள்ள எண் அதிக கடினமான தன்மையை உடையதாயிருக்கும்.

F என்பது மெல்லிய கரிமுனையைக் குறிக்கும்.

சில நாடுகள் வெவ்வேறு முறைகளைக் கையாளுகின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் 2 என்ற எண்ணைக் கொண்டிருக்கும் பென்சில் ஒரு HB பென்சிலுக்குச் சமம். அந்த முறையில் பெரிய இலக்கமுள்ள எண் இருந்தால் கரிமுனை அதிக கடினமான தன்மையை உடையதாயிருக்கும்.